மனிதகுலத்தின் முன்னோடி நபிகள் நாயகம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பார்கள். குழந்தை, இளமை, முதுமை என்ற மூன்று பருவத்தைச் சந்திக்கின்ற மனிதன் தன்னைச் சுற்றி பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என மற்றவர்களின் உதவியோடும் ஒத்துழைப்போடும் தனது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டும் நிலையில் இருக்கிறான். அதன் காரணமாக மனிதன் அனைவரிடமும் அனுசரணையாக கண்ணியமான முறையில் வாழ வேண்டிய நிலை அவனுக்கு இருக்கிறது.

பெற்றோருக்குச் சிறந்த பிள்ளையாகவும் மனைவிக்குச் சிறந்த கணவனாகவும் பிள்ளைகளை நல்வழியில் நடத்தும் தந்தையாகவும் ஒரு சமூகத்தில் மக்களை நல்வழிப்படுத்தும் போது அவர்களின் நலம் நாடி, பொதுநல சேவை செய்யக்கூடிய சமூக ஊழியனாகவும் இருக்க வேண்டிய கடமை ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கிறது.

அனைவரையும் சார்ந்தும் இருக்க வேண்டும், அனைவருக்கும் தன்னளவில் ஒத்துழைப்பும் உதவிகளையும் வழங்குபவனாக இருக்க வேண்டும் என்றால் அவன் நல்ல குணம் படைத்தவனாக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் சமூகத்தில் அவன் சந்திக்கின்ற பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்ற வல்லவனாகவும் இருக்க வேண்டும்.

ஒரு நாணயத்தின் இரு பக்கத்தைப் போல நல்லவன், வல்லவன் என்கிற இரு தன்மைகளையும் உள்ளடக்கியவனாக வாழ்ந்தால் தான் சமூகத்தில் அவனால் காலத்தைக் கடத்த முடியும். நல்லவனாகவும் வல்லவனாகவும் வாழ்ந்த முன்னோடிகளின் வாழ்க்கை தான் நமக்குப் பாடமும் படிப்பினையுமாகும். இப்பொழுது அந்த முன்மாதிரியான வாழ்க்கையை எங்கிருந்து தேடுவது? யாரிடமிருந்து கற்றுக்கொள்வது?

கடந்த கால ஆட்சியாளர்கள், ஆன்மிகவாதிகள், சீர்திருத்தச் செம்மல்கள், படித்த பட்டதாரிகள், மாமேதைகள், அறிவியலாளர்கள் என்று பலதரப்பட்ட மக்களின் வரலாற்றை ஆய்வு செய்கிற பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவராக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

அதே நேரத்தில் ஒருவர் அறிவியலில் மிகப்பெரிய தேர்ச்சி உடையவராக இருந்தாலும் அவர் ஒரு தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றவராக இல்லை.
ஒருவர் ஆட்சி அதிகாரத்தில் திறமைசாலியாக இருந்தாலும் தனது குடும்பத்தில் ஒரு சிறந்த தலைவனாக வாழ்ந்தாரா என்ற கேள்விக்கு விடை இல்லை.

குடும்பத்தைக் கவனிப்பவராக இருக்கும் ஒருவர் ஆன்மீகவாதியாக, சமுதாய நலனில் அக்கறை கொண்டவராக வாழ்ந்தாரா? என்ற கேள்வி அவரை நோக்கி வருகிறது.
ஒருவர் ஆன்மீகவாதியாக இருக்கிறார் என்று வருகிறபோது அவர் சிறந்த ஒரு குடும்பத்தை வழி நடத்தினாரா? பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பொதுநல சேவைகள் புரிந்தாரா? என்ற கேள்வி அவரை நோக்கி வருகிறது. இப்படி ஒரு துறையில் கரை கண்டவர்கள் பல துறைகளைக் கண்டும் காணாதவர்களாக இருந்துள்ளார்கள்.

ஆனால் குடும்பம், ஆன்மீகம், ஆட்சி என அனைத்துத் துறைகளிலும் கரை கண்டு, அகில உலகத்திற்கும் முன்னோடியாகத் திகழ்ந்து விளங்கியவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தேடுபவர்களுக்கு விடைதான் முஹம்மது நபிகள் நாயகம் ஆவார்கள்.
இதை முஸ்லிம்கள் உயர்த்திச் சொன்னாலும் முஸ்லிம்கள் தங்கள் தூதரை முன்னிலைப் படுத்துவதற்காகச் சொல்கிறார்களோ என்ற ஒரு பார்வை பிற மத நண்பர்களுக்குத் தோன்றலாம்.

ஆனால் இதை நாம் சொல்வதை விட மைக்கேல் ஹார்ட் எனும் கிறிஸ்தவ அறிஞர் சொல்கிறார் இதோ பாருங்கள்!

சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர்.

இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து ‘த ஹன்ட்ரட்’ (The Hundred) என்ற நூலை மைக்கேல் ஹார்ட்  எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது ‘நூறு பேர்’ என்ற பெயரில் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.

மனித குலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அவர் வரிசைப்படுத்தும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் இடத்தை அளித்தார். முதல் சாதனையாளராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.
மைக்கேல் ஹார்ட் கிறிஸ்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தும் கூட ‘மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் முதலிடம் நபிகள் நாயகத்துக்குத் தான்’ என்று குறிப்பிடுகிறார்.

நபிகளாரை முதன்மைப்படுத்தியமைக்கு அவர் கூறும் விளக்கம் இதோ!
இந்த உலகத்தில் மிகப்பெரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும் மற்றும் சிலருக்கு “ஏன் அப்படி?” என்று வினாவும் எழலாம்.

ஆனால் ஆன்மீகம், அரசியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே ஆவார். எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கி, அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார். அவர் உயிர் நீத்து பதிமூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவரது தாக்கம் சக்திமிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

உலகத்தில் முஸ்லிம்களை விடக் கிறிஸ்தவர்கள் ஏறத்தாழ இரு மடங்கினராக இருந்தாலும் கூட, ஏசு நாதரை விட முஹம்மது நபியவர்களை முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று:

கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை உருவாக்கியதில் முதன்மையானவரும் அதன் பால் மக்கள் வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவரும் புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான பவுல் தான்.

ஆனால் இஸ்லாத்தின் இறைமையியல், அதன் அறநெறி, ஒழுக்கவியல் அனைத்தையும் எடுத்துரைத்தவர் முஹம்மது நபிதான். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்டாக அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனிதக் குர்ஆனின் போதகரும் அவர்தான்.

முஹம்மது நபியின் வாழ்நாளிலேயே இறைச்செய்திகள் பதிவுச் செய்யப்பட்டன. நபி அவர்கள் இறந்து சில ஆண்டில் அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துக்களும் போதனைகளும் கொள்கைகளும் குர்ஆனுடன் நெருக்கமானவை.

ஆனால் ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் (மூலாதாரத்துடன்) கிடைக்கவில்லை. கிறிஸ்தவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்குக் குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி ஏற்படுத்திய தாக்கம், மிகப்பெரும் அளவிலானதாகும்.

கிறிஸ்தவத்தின் மீது ஏசுநாதரும் தூய பவுலும் ஒருங்கிணைந்து ஏற்படுத்திய தாக்கத்தை விட முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம்.
சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது:

மேலும், ஏசுநாதரைப் போன்று அல்லாமல் முஹம்மது நபி ஆன்மீகத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்குப் பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார், எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் செல்வாக்கு மிக்கத் தலைவராக இடம் பெறலாம்.

இவ்வாறு அறிஞர் மைக்கேல் ஹார்ட் குறிப்பிடுகிறார்.

உலகளாவிய அளவில் 175 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் தங்கள் உயிரை விட மேலாக முஹம்மது நபி அவர்களை நேசித்துக் கொண்டிருந்தாலும், அவர்களது ஆட்சித் தலைமை, ஆன்மீகத் தலைமை, அழகிய குடும்ப வாழ்க்கை, அதிலிருந்து உலகத்திற்கு அவர் எடுத்துச் சொன்ன போதனைகள், அதனால் ஏற்பட்ட எழுச்சி, புரட்சிகள், அதை 14 நூற்றாண்டுகளாகப் பின்பற்றுகின்ற தலைமுறையினர் இவற்றை எல்லாம் பார்த்து மைக்கேல் ஹார்ட் போன்ற பல கோடிக்கணக்கான மக்கள் முஹம்மது நபி அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகக் கூறுகின்றார்கள்.

அந்த அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கை உலகத்திற்குப் பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் உள்ளடக்கியிருக்கின்றது.

புரட்சி மிக்க, புத்துணர்ச்சி மிக்க ஒரு தலைமுறையினரை உருவாக்கிட முஹம்மது நபியவர்களின் ஆன்மீகத் தலைமை பற்றியும் ஆட்சித் தலைமை பற்றியும் குடும்ப வாழ்வைப் பற்றியும் உலகத்திற்குச் சொல்ல வேண்டிய ஒரு சில முக்கியக் குறிப்புகளை இந்தத் தொடரில் இடம் பெறச் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

நபிகளாரின் வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர்: முஹம்மது

பிறப்பு: கி.பி. 571

ஊர்: சவுதி அரேபியாவில் உள்ள மக்கா.

குலம்: மிக உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குறைஷிக் குலத்தில் பிறந்தார்.                      குலப் பெருமையை ஒழித்தார்கள்.

நிறம்: அழகிய சிவந்த நிறம் கொண்டவர்கள். நிறவெறியை ஒழித்தார்கள்.

மொழி: தலைசிறந்த மொழியாகக் கருதப்பட்ட அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மொழிவெறியை ஒழித்தார்கள்.

கல்வி: பள்ளி சென்று படிக்கவில்லை. கல்லூரி, பல்கலைக் கழகங்கள் சென்று பட்டங்கள் பெறவில்லை. எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தபோதிலும் இயல்புடன், இனிமையுடன் அழகிய நடையில் அரபுமொழி பேசினார். அரபுலகத்தை வென்றார்கள்.

தாய்: ஆமினா

தந்தை: அப்துல்லாஹ்

தாயின் வயிற்றில் இருக்கும்போதே தன் தந்தை அப்துல்லாஹ்வை இழந்தார்கள்.
அனாதையாகப் பிறந்தார்கள். ஆறு மாதத்தில் தன் தாயையும் இழந்து ஆதரவற்று நின்றார்கள்.

அதற்குப் பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் அரவணைப்பிலும், அவருக்குப் பிறகு பெரிய தந்தை அபூதாலிபின் ஆதரவிலும் வளர்ந்தார்கள். சிறு வயதிலேயே யாருடைய ஆதரவையும் எதிர்பார்க்காமல் ஆடுகள் மேய்த்து, தமது வாழ்வாதாரங்களைத் தேடிக் கொண்டார்கள்.

போட்டி, பொறாமை, மோசடி, கொள்ளை, வழிப்பறிகளால் சூழ்ந்த அன்றைய அரபு தேசத்தில் இளமைக்காலத்தில் தன் பெரிய தந்தை அபூதாலிபுடன் சிரியா தேசம் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டார். உண்மையாளர் என்ற பெயரையும் பெற்றார்.

ஏழைகளுக்கு உதவி செய்வது, பாதிக்கப் பட்டோருக்குக் கை கொடுப்பது, அநீதி இழைக்கப் பட்டவனுக்காக ஆர்ப்பரிப்பது, சிக்கலான பல்வேறு பிரச்சனைகளில் தன்னிடம் முறையிடும் மக்களுக்கு நீதமான தீர்ப்புகள் வழங்கி சமநீதியை எடுத்துரைப்பது போன்ற பொதுநலச் சேவைகளை சிறந்த முறையில் செய்தார்.

விபச்சாரம் எனும் மானக்கேடான செயல்கள் மலிந்து காணப்பட்ட பூமியில் ஒழுக்க சீலராகவும் கற்புக்கரசராகவும் விளங்கினார். தமது 25ஆவது வயதில் கதீஜா எனும் விதவைப் பெண்ணை மணந்தார்.

தூய்மை, நேர்மை, ஒழுக்கம், தனக்கும் தன் குடும்பத்திற்கும் தன் நண்பர்களுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என்ற சமூக நலன், அனைத்து மக்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்ற சமூகநீதி, இப்படிப்பட்ட மனப்பான்மை உள்ள ஒருவரே ஒட்டுமொத்த உலகத்திற்கும் வழிகாட்டத் தகுதியானவர் என்ற நிலையில் இறைவனால் இறைத்தூதராக நியமிக்கப்படுகின்றார்.

நாற்பதாவது வயதில் மக்காவில் உள்ள ஹிரா என்ற மலை உச்சியில் தூதர் என்ற பொறுப்பை இறைவன் புறத்திலிருந்து பெற்றார். ஒரே ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் எனவும், கொலை, கொள்ளை, வட்டி, சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருட்கள், பொய், பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றுதல், போன்ற எல்லாத் தீமைகளிலிருந்தும் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும் என்ற செய்தியும் கடவுளிடமிருந்து தமக்கு வருவதாக அறிவித்தார்.

இந்த சீர்திருத்தப் பிரச்சாரத்தைத் தமது சொந்த ஊரான மக்காவில் பல்வேறு சிரமங்களுக்கிடையில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதிமூன்று ஆண்டுகள் எடுத்துரைத்தார்.
பிறகு மக்காவில் இந்த சமூக சீர்திருத்தம் மற்றும் சத்திய மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்ய இயலாத நெருக்கடிக்கு ஆளான பிறகு, வேறு வழியில்லாமல் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்று பத்தாண்டுகள் அங்கே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மக்காவில் முஹம்மது நபியவர்கள் எடுத்துரைத்த சத்திய மார்க்கம் மற்றும் சமூக சீர்திருத்தப் பிரச்சாரம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட தோழர்களும் மதீனா வந்தடைந்தார்கள்.

மதீனாவில் நபிகளாருடைய நேர்மையையும் ஒழுக்கத்தையும் சேவையையும் பார்த்த மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர். இறுதியில் மதீனா என்ற அந்தப் பகுதிக்கு முஹம்மது நபியவர்களை ஆட்சியாளராகவும் நியமித்தார்கள்.

13 ஆண்டுகாலம் தூதுத்துவப் பணியைச் செய்து ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம், இறுதிப் பத்தாண்டுகளில் ஆன்மீகத் தலைவர் என்ற பொறுப்புடன் ஆட்சித் தலைவர் என்ற பொறுப்பையும் பெற்று செவ்வனே செயலாற்றினார்கள்.
23 ஆண்டு கால பொது வாழ்க்கைக்குக் பிறகு 63ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.

ஆட்சித் தலைவர் நபிகள் நாயகம்

ஒரு நாட்டைப் பண்படுத்தவும் அதில் வளமான ஆட்சியை நிலைப்படுத்தவும் மற்ற எல்லா நாடுகளை விடவும் தனது நாட்டை வல்லரசு நாடாக மாற்றவும் அதிலும் குறிப்பாக சர்வாதிகாரம் இல்லாமல் சமநீதியோடும் நியதியோடும் உருவாக்கிட ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் பத்தே ஆண்டுகளில் இந்தச் சீர்திருத்தங்களை நபிகளாரால் கொண்டு வர முடிந்தது எப்படி? விடை அறிவோம், வாருங்கள்!

நல்ல தலைவன் என்பவன் எந்த வித பேதமும் இல்லாமல், யாரையும் சாராமல் நடுநிலையுடன் நியாயமான தீர்வு வழங்குபவனாக இருக்க வேண்டும். திறமையுடன் செயல்படுதல், அன்பால், அரவணைப்பால் பிறரைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல், ஒருமுறை முடிவெடுத்து செயல்படத் தொடங்கிவிட்டால் சற்றும் தயக்கம் காட்டாமல்,

முயற்சியிலிருந்து பின்வாங்காமல் உறுதியுடன் செயல்படுதல், எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், பய உணர்ச்சியுமில்லாமல் நடந்து கொள்ளுதல், வெற்றி என்றாலும் சரி, தோல்வி என்றாலும் சரி, அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் போன்ற பண்புகள் கொண்டவராக ஒரு தலைவர் இருக்க வேண்டும்.

ஒரு திட்டம் நீண்ட நாட்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் செயல்படுபவரே தலைவர். எதிர்கால விளைவுகளை ஓரளவு அனுமானிக்கும் ஆற்றல் கொண்டவராக இருப்பது அவசியம். பெரிய விஷயங்களை நன்கு கவனித்துச் செயல்படுத்தும் அதே வேளையில் சின்ன விஷயமாக இருந்தாலும் அக்கறை செலுத்தி, கவனத்துடன் செயல்படும் பாங்கு உள்ளவராக இருக்க வேண்டும்.

சிறந்த வல்லமை பெற்றவராக இருப்பதுடன் நேர்மை, நம்பிக்கை, நாணயத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். ஊழல் கறை படியாதவராக, ஆடம்பரத்தில் திளைக்காதவராக, லஞ்ச லாவண்யங்களில் புரளாதவராக இருப்பவரே மக்கள் எதிர்பார்க்கும் தலைவர்.

இந்த அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்மறையாகத் தான் தற்போதைய அரசியல்வாதிகள் திகழ்கிறார்கள். இதில் படித்த அரசியல்வாதி, படிக்காத அரசியல்வாதி என்ற பாகுபாடெல்லாம் இல்லை.

படிக்காத அரசியல்வாதிக்கும் படித்த அரசியல்வாதிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.
படிக்காதவன் கொள்ளை அடித்து மாட்டிக் கொள்வான். படித்தவன் மாட்டிக் கொள்ளாமல் கொள்ளை அடிப்பான். நாட்டையே மாற்றுபவன் அறிவாளி! நாட்டை ஏமாற்றுபவன் அரசியல்வாதி! வக்கற்ற அரசியல்வாதிகளால் வாடும் மக்களின் வயிறெரிந்த வார்த்தைகள் தான் இவை.

இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசியல்வாதிகள் இருந்தால் நாடு ஐந்து வருடமல்ல! ஐயாயிரம் வருடமானாலும் அது உருப்படப் போவதில்லை. ஒரு நாடு உருப்பட வேண்டுமென்றால் அதை ஆட்சி செய்பவன் உருப்படியாக இருக்க வேண்டும்.ஒரு நாடு வல்லரசு ஆக வேண்டுமென்றால் அந்த நாட்டில் நல்லரசு அமைய வேண்டும். நல்லதொரு ஆட்சியாளரே அந்த நாட்டை வல்லமை மிக்க நாடாக மாற்றுவார்.

அதன் முன்னோடியாகத்தான் நபிகளார் அரபுலகத்தில் நல்ல அரசை அமைத்து, பிறகு வல்லரசாக மாற்றினார்கள். இந்த அசுர மாற்றத்திற்கு நபிகளார் எடுத்துக் கொண்ட காலம் வெறும் பத்தாண்டுகள் தான். பத்தாண்டுகளில் நாடு வல்லரசாக அமைய நபிகளார் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.

துணிவு

துணிவு என்பது ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய முக்கியப் பண்பாகும். அன்பு, இரக்கம் என்று ஒரு புறமும் துணிவு, வீரம் என்று மறுபுறமும் ஒரு மனிதனிடம் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
தன் நாட்டைக் காக்கவும், எதிரிகளிடம் விவேகத்துடன் பல்வேறு பிரச்சனைகளை, சவால்களை எதிர்கொள்ளவும் ஓர் அரசனுக்கு இருக்கவேண்டிய பண்பு துணிவு.
அதற்கு நபிகள் நாயகம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழகு படைத்தவர்களாகவும், மிகப்பெரும் வீரராகவும் திகழ்ந்தனர். ஒருநாள் (ஏதோ ஒரு சப்தத்தினால்) மதீனாவாசிகள் திடுக்கிட்டனர். உடனே வீட்டை விட்டு வெளியேறி சப்தம் வந்த திசை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டு, அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரையில் எதிரில் வந்தனர். ‘‘அஞ்சாதீர்கள்! அஞ்சாதீர்கள்!’’ என்று கூறிக் கொண்டே வந்தனர். “(வேகத்தில்) இக்குதிரை கடலாக இருக்கிறது” எனவும் குறிப்பிட்டனர்.
(புகாரி: 2908, 2627, 2820, 2857, 2862, 2867, 2968, 2969, 3040, 6033, 6212)
சேணம் பூட்டாத குதிரையில் வேகமாக சவாரி செய்வதற்கு அதிகமான துணிச்சலும், உடல் வலுவும் அவசியம்.
ஒருவேளை எதிரிகள் வந்தால் தன்னந் தனியாகவே அவர்களை எதிர் கொள்வது என்ற தைரியத்துடன் தான் வாளையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள்.
அபூ தல்ஹாவின் வீடு, நபி (ஸல்) அவர்களின் எதிர் வீடாக இருந்தது. அவர் வசதி மிக்கவராகவும் இருந்தார். அவரிடம் உடனடியாகக் குதிரையை இரவல் வாங்கிக் கொண்டு, துணைக்கு அபூ தல்ஹாவைக் கூட அழைத்துக் கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றார்கள்.
எதிரிகள் படை திரண்டு வருகிறார்களா? என்பதை அறிவதற்கு நள்ளிரவில், தன்னந்தனியாக எவ்வளவு பெரிய வீரரும் போக மாட்டார்.
அதுவும் மாபெரும் தலைவராக, ஆட்சியாளராக இருப்பவர்கள் இதுபோன்ற ஆபத்தான பணியில் நேரடியாக இறங்க மாட்டார்கள்.
ஆயினும், தலைமை ஏற்பவர் சமுதாயத்தைக் காக்கும் பொறுப்பையும் சுமக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு, மற்றவர்களின் தூக்கத்தைக் கலைக்காமல் தாமே நேரடியாகக் களத்தில் இறங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கூறப்படும் ஒவ்வொரு சொல்லும் அந்த மாமனிதரின் மாவீரத்தைப் பறை சாற்றுகின்றன.

ஒன்றே குலம்!

அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரக் களத்தின் போது, அனைத்து மதத்தவர்களின், ஜாதிக்காரர்களின், பலதரப்பட்ட மொழி இன மக்களின், பல நிறத்தவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக ‘ஒன்றே குலம்’ என்ற வெற்றுக் கோஷத்தை எழுப்புவார்கள்.
ஆனால் தாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு தன் ஜாதியை, மதத்தை, இனத்தை, மொழியைச் சேர்ந்தவர்களுக்குச் சாதகமாக நடப்பவர்களாகவும் மற்றவர்களுக்கு அநியாயம் செய்பவர்களாகவும் நாடெங்கிலும் அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு நேர் முரணாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது சொல்லிலும் தமது ஆட்சிக் காலத்திலும் ‘ஒன்றே குலம்’ என்ற உண்மையைப் பறைசாற்றி, அனைத்துக் குலத்தவர்களையும், மதத்தவர்களையும், மொழியினரையும் சமமாக நடத்தினார்கள். அதுமட்டுமின்றி அன்றைய காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாகக் கருதப்பட்டவர்களுக்கு ஆட்சிப்பொறுப்பையும் வழங்கினார்கள்.
தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷி என்ற உயர்ந்த குலத்தவரின் குருட்டுக் கவுரவத்தை நபி (ஸல்) அவர்கள் உடைக்கின்றார்கள்.

அடிமை இனமாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(புகாரி: 3730)

மொழிவெறியை மாய்த்தவர்

மனிதர்களிடையே ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு வித்திடும் தீய சத்துக்களாக தேசப்பற்றும், மொழிவெறியும் திகழ்கின்றன.
இலங்கை பற்றி எரிந்ததற்கும், இலட்சக் கணக்கான உயிர்கள் பலியானதற்கும் இந்த மொழிவெறி தான் காரணம். நமது நாட்டிலேயே தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இந்த மொழிவெறி தான் காரணம்.
இந்தக் குறுகிய சிந்தனையை உள்ளத்திலிருந்து இஸ்லாம் கழற்றி விடுகின்றது. இஸ்லாத்தில் இருந்து கொண்டு யாராவது ஒருவர் மொழி, தேசியம் என்ற அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டார் என்றால், அந்தச் சண்டையில் உயிர் துறப்பார் என்றால் அவர் முஸ்லிமாக மரணிக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
“(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)
(முஸ்லிம்: 3440)

இரு சமுதாயங்களுக்கு மத்தியில் ஏதேனும் விவகாரம் ஏற்பட்டால் அந்த விவகாரத்தில் நியாயம், அநியாயம் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இவர் நம் இனத்தவர், இவர் நம் எதிரி இனத்தார் என்று பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்கின்ற அந்த உணர்வுக்குப் பெயர் தான் தேசியம், மொழி உணர்வு!
என் நாடு உயர்ந்தது, என் மொழி உயர்ந்தது என்ற சிந்தனையால் மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். தீமைக்கு வித்திடும் இந்தக் குறுகிய சிந்தனையை, தேசியம் மற்றும் மொழிவெறியின் குரல்வளையைப் பிடித்துத் திருக்குர்ஆன் நெறித்து விடுகின்றது.
எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும் உலகில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஆதமின் மகன் தான்; அவனும் உன் சகோதரன் தான். எனவே நீங்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஒரு குலத்தார் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான் என்று திருக்குர்ஆன் உணர்த்துகின்றது.
உங்களில் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவதால் ஒருவர் உயர்ந்தவர் ஆகி விட மாட்டார்.
“மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!”
(அஹ்மத்: 22391)

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழங்கி, அனைத்து மக்களையும் சமநிலைப்படுத்தினார்கள்.
மத உணர்வுகளை மதித்தவர்
ஒரு ஆட்சித் தலைவர் என்றால் அவருக்குக் கீழ் வாழும் மக்களின் உணர்வுகளை மதிக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.
எல்லா மதத்தவர்களும் தங்களுடைய மதக் கோட்பாடுகளை உயர்வாகக் கருதுவார்கள்.அவர்களின் மத சுதந்திரத்தைப் பறிப்பதோ தனது மத நம்பிக்கையை அவர்களிடம் திணிப்பதோ கூடாது. அதுமட்டுமில்லாமல் அனைத்து மதத்தவர்களுக்கும் சமமாக உரிமை வழங்கி அவர்களுக்குத் தேவையான உதவிகளை அள்ளிக் கொடுக்கக் கூடிய வகையில் ஒரு தலைவன் செயல்பட வேண்டும்.
தன்னுடைய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை, மற்ற மதத்தவர்களை பின்னுக்குத் தள்ளக் கூடிய பாரபட்சம் இருந்துவிடக்கூடாது. அடுத்த மதத்தவர்களை அடக்குமுறையில் ஆழ்த்தக்கூடாது.
அனைத்து மதத்தவர்களும் நிம்மதியாக எந்த ஆட்சித் தலைமையின் கீழ் வாழ்கிறார்களோ அந்த ஆட்சிக்குச் சொந்தக்காரனே தலைசிறந்த அரசனாவான்.
அதற்குச் சிறந்த முன்னோடி நபிகள் நாயகம் ஆவார்கள்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு வாரி வழங்கிய முஹம்மது நபி
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப் பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை.
இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, “என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று சொன்னார்.
(முஸ்லிம்: 4629)

மதங்களைக் கடந்த மனிதநேயம்

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் ‘நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா? நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.
நூல்: திர்மிதி 1866
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களில் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)யும் ஒருவர். அவர் தமது அண்டை வீட்டு யூதருக்கும் தமது வீட்டில் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இதற்கு நபிகள் நாயகம் ஸல்) அவர்களின் போதனையையே அவர் காரணமாகக் காட்டுகிறார்.

இறந்தவர் வேறு மதத்தவர்!

காதிஸிய்யா எனும் இடத்தில் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி), கைஸ் பின் ஸஃது (ரலி) ஆகிய இரு நபித்தோழர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அவர்களை ஒரு பிரேத ஊர்வலம் கடந்து சென்றது. உடனே அவ்விருவரும் எழுந்து நின்றார்கள். ‘இறந்தவர் வேறு மதத்தவர்’ என்று அவ்விரு நபித்தோழர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவ்விருவரும் பின்வருமாறு கூறினார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். ‘இது யூதருடைய பிரேதம்’ என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதுவும் ஓர் உயிர் அல்லவா?’ என்று கேட்டனர்.
(புகாரி: 1313)
இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் போது கலவரங்கள் நடப்பதைக் காண்கிறோம். எதிரி சமுதாயத்தவரின் உடல்களை எங்கள் தெரு வழியாகக் கொண்டு செல்லக் கூடாது என்று ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களே வெட்டுக் குத்துக்களில் இறங்குவதையும் காண்கிறோம்.
உயிருடன் இருக்கும் போது நடமாடுவதற்கு அனுமதியளித்தவர்கள் கூட இறந்த உடலுக்கு அந்த உரிமையை வழங்க மறுத்து வருவதைக் காண்கிறோம்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருக்கிறார்கள். யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் உடல் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் தயக்கமோ, அச்சமோ இன்றி கொண்டு செல்லப்படுகிறது.
முஸ்லிம்களின் ஆட்சியில், அதுவும் முஸ்லிம் அரசின் அதிபர் வசிக்கும் தெரு வழியாகப் பிரேதத்தை எடுத்துச் செல்ல சிறுபான்மை மக்களாக இருந்த யூதர்களுக்கு எந்த அச்சமும் இருக்கவில்லை.

முஹம்மதா? மூஸாவா? யார் சிறந்தவர்?

முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும், யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டனர். அப்போது ‘அகிலத்தாரை விட முஹம்மதைத் தேர்வு செய்த இறைவன் மேல் ஆணையாக’ என்று முஸ்லிம் குறிப்பிட்டார். ‘அகிலத்தாரை விட மூஸாவைத் தேர்வு செய்த இறைவன் மேல் ஆணையாக’ என்று யூதர் கூறினர். இதைக் கேட்டதும் முஸ்லிம், யூதருடைய முகத்தில் அறைந்து விட்டார். உடனே யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கும், முஸ்லிமுக்கும் இடையே நடந்ததைத் தெரிவித்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமை அழைத்து வரச் செய்து விசாரித்தனர். அவரும் நடந்ததைக் கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘மூஸாவை விட என்னைச் சிறப்பித்துக் கூறாதீர்கள். ஏனெனில் நியாயத் தீர்ப்பு நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாவார்கள். அவர்களுடன் நானும் மூர்ச்சையாவேன். நான் தான் முதலில் மூர்ச்சையிலிருந்து விழித்தெழுவேன். ஆனால் அப்போது மூஸா அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு நிற்பார். அவர் மூர்ச்சையடைந்து எனக்கு முன் விழித்தெழுந்தாரா? அல்லது அல்லாஹ் யாருக்கு விதிவிலக்கு அளித்தானோ அவர்களில் அவரும் ஒருவரா? என்பதை நான் அறிய மாட்டேன்’ என்று கூறினார்கள்.
(புகாரி: 2411, 2412, 308, 6517)
யூதரும் முஸ்லிமும் தகராறு செய்த போது தனது மதத் தலைவரும், நாட்டின் அதிபருமான நபி (ஸல்) அவர்களை முஸ்லிம் உயர்த்திப் பேசுகிறார். அவருக்குச் சற்றும் சளைக்காமல் அது போன்ற வார்த்தையை யூதரும் பயன்படுத்துகிறார்.
தனது நாட்டின் அதிபராக உள்ள நபிகள் நாயகத்தை விட, தனது மதத்தின் தலைவராகக் கருதப்பட்ட மூஸா நபியை அவர் சிறப்பித்து தைரியமாகக் கூறுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்லிமுக்கு உள்ள உரிமை தனக்கும் உண்டு என்று அவர் நினைக்கும் அளவுக்கு நேர்மையான ஆட்சி அமைந்திருந்ததால் தான் இவ்வாறு அவர் கூற முடிந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை விசாரித்து விட்டு, பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்கள் அனுசரித்து அல்லது அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக உடனே முஸ்லிமை அழைத்து வரச் செய்கிறார்கள்.
முஸ்லிம் தான் குற்றம் செய்திருக்கிறார் என்பது உறுதியானவுடன் தன்னை மூஸா நபியை விட சிறப்பித்துக் கூற வேண்டாம் என்று கூறுகிறார்கள். அது மட்டுமின்றி, ஒரு வகையில் மூஸா நபி என்னை விடச் சிறந்தவராக இருக்கிறார் எனக் கூறி யூதருடைய மனதையும் குளிரச் செய்கிறார்கள்.
மதச்சார்பற்ற நாடு என்று மார்தட்டிச் சொல்லிவிட்டு…
பசு அரசியல்
சமஸ்கிருத மொழித் திணிப்பு
யோகாசனம் செய்ய நிர்ப்பந்திப்பது
வந்தே மாதரம் சொல்லத் தூண்டுவது
பொது சிவில் சட்டம் என்ற போர்வையில் சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பறித்தல்
இதுபோன்ற காரியங்களில் நபிகளார் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.
ஒவ்வொரு மதத்தவர்களும் அவரவர் மத நம்பிக்கைக்கு ஏற்றவாறு வாழலாம். அதன்படி வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம். திருமணம், விவாகரத்து உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை தான் அவர்களது ஆட்சியில் இருந்தது.

 

நிர்வாகத் திறன் நிறைந்தவர்

ஒரு நாடு வளம்பெற வேண்டுமென்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருக்க வேண்டும்.
பொருளாதாரம் தேசத்தின் முதுகெலும்பாகும். நாடும் நாட்டு மக்களும் முன்னேற, பொருளாதாரம் இன்றியமையாதது.
உள்நாட்டு மொத்த உற்பத்தியை அதிகப்படுத்துவதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் நாட்டின் வளத்தைப் பெருக்கும்.
உள்நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி நாட்டை வளமான பாதையில் வழிநடத்துபவரே சிறந்த ஆட்சியாளர். நாட்டின் வளத்தின் மீது அக்கறை இல்லாமல் வெளிநாட்டின் இறக்குமதியை நம்பிப் பிழைப்பது நாட்டை அடைமானம் வைப்பதற்குச் சமம். இந்த நிலையில்தான் உலகின் பல நாடுகள் அடைமானத்தில் இயங்குகின்றன. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.
விவசாயம் தான் பொருளாதாரத்தை மேம்படுத்த அடிப்படையாக இருக்கிறது என்பதை உணரும் ஒவ்வொரு அரசனும் அந்த விவசாயத்தை வளர்ப்பதற்கும் விவசாயிகளை மகிழ்விப்பதற்கும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் பல்வேறு திட்டங்களை வகுப்பான்.
விவசாயிகள் ஆர்வமாகக் களத்தில் இருந்தால் தான் நாடு வளம் பெறும் என்பதை உணர்ந்த அறிவுள்ள ஒவ்வொரு அரசனும் இப்படித்தான் செயல்படுவான். ஆனால் நம்முடைய இந்திய நாட்டில், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த நாட்டில் விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. விளைச்சலுக்கு ஏற்றவாறு அறுவடை செய்வதற்குப் பொருளாதாரம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.
சுமார் 40 ரூபாய்க்கு மேலே விற்கப்படுகின்ற ஒரு கிலோ அரிசியை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் பொழுது ஒரு விவசாயிக்குக் கிடைப்பது கிலோவுக்கு சுமார் எட்டு ரூபாய் தான். ஆனால் விவசாயி கேட்பதோ 12 ரூபாய். தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு, தன்னுடைய அத்தியாவசியத் தேவைக்கு நான்கு ரூபாய் ஒரு கிலோவுக்கு அதிகரித்துக் கேட்கும் இந்த விவசாயியின் எதிர்பார்ப்புக்கு அரசு செவிசாய்க்கவில்லை.
அரசாங்கத்திடம் கடன் வாங்கும் நிலையில் தள்ளப்படும் விவசாயிகளின் கடனுக்குத் தள்ளுபடி இல்லை, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அதிகப்பட்ச சலுகைகள் இல்லை என்ற நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருக்கும் விவசாயக் குடும்பங்கள் இந்த நிலையில் இருந்து மீண்டு வர நாட்டின் பிரதமரைச் சந்திப்பதற்காகப் பலகட்டப் போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது. தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையே என்று எண்ணி வேதனையில் மூழ்கிய விவசாயிகள் தற்கொலை என்கின்ற தவறான முடிவில் விழுந்து விடுகிறார்கள்.
பசுமை இந்தியாவின் மூலதனம் விவசாயம்.விவசாயத்தை மேம்படுத்துவதிலும் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையும் கொள்கையாகக் கொண்டுள்ள மத்திய அரசு பசுமை இந்தியாவைப் பாலைவனமாக்கி வருகிறது.
இது ஒருபுறமிருக்க, நபிகளாரின் சிறந்த வழிகாட்டுதலால் பாலைவனமாக இருந்த அரேபியா சோலைவனமாக மாறிய வரலாறு உலகத்திற்கே முன்னோடியாக விளங்குகிறது.

செல்வச் செழிப்பில் சவுதி அரேபியா

தற்போது சவுதி அரேபியா என்று சொல்லப்படுகின்ற நபிகளார் வாழ்ந்த அரபு தேசம் பேரித்தம்பழம், கோதுமை ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் பூமி ஆகும்.
அன்றைய அரபுகள் பேரிச்சை, கோதுமை ஆகியவற்றின் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்து இருந்தனர்.
விவசாயம் செழித்தால் தான் அரபு மண்ணில் வாழ்பவர்களுக்கு அன்றாட உணவு கிடைக்கும், அண்டை நாட்டில் உள்ளவர்கள் இந்த பேரீச்சம் பழங்களையும் கோதுமைகளையும் இன்னபிற விளைச்சல் பொருட்களையும் பெற்று அதற்கு மாற்றாகத் தங்கம், வெள்ளிக் காசுகளாக அல்லது உடைகளாகக் கொடுத்து விட்டுச் செல்வார்கள்.
அன்றைய அரபுலக தேசத்தில் பேரிச்சம்பழங்களை விவசாயம் செய்தவர்கள், தாங்கள் அறுவடை செய்கின்ற பேரீச்சம் பழங்களின் விலை நிலவரங்களை விவசாயிகளே நிர்ணயித்தார்கள். கோதுமை கிலோ எத்தனை ரூபாய் எனவும் இன்னபிற விளைச்சலுக்கு என்னென்ன மதிப்பீடு எனவும் விவசாயிகளே முடிவு செய்து சந்தையில் விற்பனை செய்தார்கள்.

இதனால் அதை விலைக்கு வாங்கிய நுகர்வோர் அவ்வப்போது விவசாயிகள் தங்களுக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயம் செய்து, உயர்த்தியும் கூறுகிறார்களே! இதை ஏன் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்கக் கூடாது என்று கேட்டு நபிகளாரிடம் முறையிட்டார்கள். அப்போது விவசாயிகளின் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த நபிகளார், அதில் விலை நிர்ணயம் செய்வதில் அரசு தலையிடாது என்ற ஒரு அறிவிப்பைச் செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் விற்பவருடைய உரிமைகளையும் வாங்குபவருடைய உரிமைகளையும் கூறியுள்ளார்கள்.
ஒரு தடவை சிலர் நபியிடத்தில் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! பொருட்களுடைய விலை கூடி விட்டது. நீங்கள் விலையை நிர்ணயம் செய்யுங்கள்’’ என்றார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘‘அல்லாஹ் தான் உணவை விசாலமாகக் கொடுக்கக் கூடியவன். நான் ஆதரவு வைக்கிறேன். அதே நேரம் (விவசாயிகளின் விலையை நான் நிர்ணயித்து) அல்லாஹ்வைச் சந்திக்கும் போது உங்களில் யாரும் என்னிடத்தில் பொருளுடைய விஷயத்திலோ அல்லது உயிர் விஷயத்திலோ அநீதிக்குள்ளாகி (கியாமத் நாளில்) நீதிவேண்டி வராமல் இருப்பதை விரும்புகிறேன்’’
(நூல் –(அபூதாவூத்: 340)
உற்பத்தி செய்பவனுக்கே அதன் அருமை பெருமைகள் தெரியும். எனவே விலை நிர்ணயத்தை அவனே முடிவெடுக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார்கள். விவசாயிகளை அரபு தேசத்தில் நிம்மதியாக வாழ விட்டதன் விளைவாக, தனது நாடு முன்னேறிவிட்டது என விவசாயிகள் மகிழ்ந்தார்கள். விவசாயிகள் மகிழ்வுடன் அறுவடை செய்தார்கள். செழிப்பை நோக்கி சவுதிஅரேபியா மலர்ந்தது.

வரி எனும் பெயரில் வழிப்பறி செய்யாதவர்

நாட்டில் உள்ள அனைவருக்கும் தரமான கல்வி, வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கும் இலவச மருத்துவ சேவை செய்வதற்கும், ஏற்றுமதியைப் பெருக்கிட தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு வழங்குவதற்கும், தேசத்தை மற்ற நாடுகளிடமிருந்து ஏற்படுகிற பிரச்சினைகளிலிருந்து காப்பதற்கும் அரசாங்க நிதியாதாரம் போதுமானதாக இருக்க வேண்டும். அரசுக் கருவூலத்தில் பொருளாதாரம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். தற்காலத்தில் அரசு மக்களிடம் நிதியை எவ்வாறு திரட்டுகிறது எனப் பாருங்கள்.
முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு வசூலிக்கப்படும் வரி.
கலால் வரி (விற்பனைக்குரிய உற்பத்திப் பொருட்கள் அல்லது விற்பனைக்குரிய சில பொருட்களின் மீது வசூலிக்கப்படும் வரி).
விற்பனை வரி (வியாபார பரிவர்த்தனைகளின் மீதான வரி, குறிப்பாக விற்பனை மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் வரி).
மதிப்புக் கூட்டு வரி (விற்பனை வரியின் ஒரு வகையை சார்ந்தது)
குறிப்பிட்ட சேவைகளுக்கு விதிக்கப்படும் சேவை வரி.
சாலை வரி, சுங்க வரி, வாகனக் கட்டணம், பதிவுக் கட்டணம் போன்றவை.
பரிசுப்பொருட்கள் மீதான வரி.
இறக்குமதி மீதான வரிகள், சுங்க வரி விதிப்பு
பெருநிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரி (ஒருங்கிணைந்த நிறுவனங்கள்).
சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி
தனி நபர் வருமான வரி (தனிநபர்கள், இந்தியாவில் இந்து கூட்டுக் குடும்பம் போன்ற குடும்பங்கள், இணைக்கப்படாத சங்கங்கள், போன்றவை மீது விதிக்கப்படும் வரி).
உணவுப் பொருட்கள் மீதான வரி. உணவகத்தில் சென்று சாப்பிடும் பொருட்களுக்கும் வரி.

இத்தனை வகையான வரிகளின் பெயரால் செல்வம் சேர்க்கும் ஒவ்வொரு குடிமகனும் அரசாங்கத்தால் வழிப்பறி செய்யப்படுகிறான். அரசாங்கம் குடிமக்கள் மீது இத்தனை வகையான வரிகளைத் திணிப்பதால் தான் நாட்டில் வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்பவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள்.
தனது சரியான பொருளாதார நிலையை வெளியுலகத்திற்குச் சொல்லாமல் மூடி மறைக்கிறார்கள். இதற்குத் தீர்வு பலதரப்பட்ட வரி என்ற பெயரால் மக்களிடம் வழிப்பறி செய்வதை விட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சிக்காக, செல்வச் செழிப்புள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் ஒரு குறிப்பிட்ட அளவிலான வரிவசூல் செய்து விட்டால் மிகச்சரியான முறையில் ஒவ்வொரும் தன்னுடைய வருமானத்தைச் சரியான முறையில் கணக்குக் காட்டி வரி கட்டுவார்.
இதன் முன்னோடியாக விளங்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் மக்களிடத்தில் பொருளாதார அளவில் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டியவர்களிடம் ஸகாத் என்ற பெயரில் சொத்தில் இரண்டரை சதவீத வரியைப் பெற்றார்கள்.
முஸ்லிமல்லாத மக்கள் மக்களிடம் ஜிஸியா வரி என்கிற பெயரில் நாட்டின் வளர்ச்சி நிதியாக வரி வசூலித்தார்கள். ஜிஸியா வரி என்பது இஸ்லாமிய அரசின் கீழ் வாழ்ந்த முஸ்லிமல்லாத குடிமக்கள் மீது நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்கும் அரபுச் சொல் ஆகும். இவ்விதம் வரி செலுத்திய முஸ்லிமல்லாத ஒருவர் இஸ்லாமிய அரசின் கீழ் பாதுகாப்புப் பெற்று, ஏனைய முஸ்லிம் குடிமக்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் பெறுவார்.
ஆனால், ஜிஸ்யா வரி வழங்கிடும் ஒருவர் போர்களில் பங்கேற்க வேண்டியதில்லை. அதனால் அவர்கள் அமைதியாக வாழவும் முன்னேறவும் வழியேற்பட்டது. இந்த வரியைப் பெண்களும், ஏழைகளும், சிறார்களும் செலுத்த வேண்டியதில்லை. ஜிஸ்யா வரி செலுத்தியவர், நாட்டைப் பாதுகாக்கப் போர்ப்படையில் சேர்ந்து பணியாற்றினால், அவர் ஜிஸ்யா வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த வரியைக் காப்பு வரி என்றும் கூறுவர்.
ஒரு அரசாங்கம் தனது குடிமக்களின் நலன்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளது. தனது குடிமக்களில் வறியவர்களுக்கு உதவி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஒருவரது உரிமையை இன்னொருவர் பறித்துவிடாமல் காப்பதற்காகக் காவலர்களை நியமித்துக் கண்காணிக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அன்னியப் படையெடுப்பின் போது தனது குடிமக்களைக் காப்பதற்காக இராணுவத்தை அமைக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது. பொருளாதாரமின்றி, இந்தக் கடமைகளை எந்த அரசும் செய்ய முடியாது. மக்களிடமிருந்து வரி விதிப்பதன் மூலம் மட்டுமே அரசாங்கம் பொருள் திரட்ட முடியும்.
ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது?
முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகள், அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், அவர்கள் விளைவிக்கும் தானியங்கள், மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் விரும்பினால் செய்யலாம்; விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத். மாறாக, இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.
ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.
மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக் கீழ்க்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

· முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.
· முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது.
· முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறு வரி விதிப்பது.
இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.
முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.
வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.
முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர். மனரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.
தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.
இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.
ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.
இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும். இஸ்லாம், தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.
முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது.
அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.
ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துகளை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்ட முடியும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.
வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.
இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
ஜகாத் என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விடப் பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர். பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

பேரரசுகள், சிற்றரசுகள் மீது கப்பம் விதிப்பதும், கைப்பற்றிக் கொண்ட நாட்டு மக்கள் மீது அதிகப்படியான வரிகளைச் சுமத்துவதும் உலக வரலாற்றில் பரவலாக நடந்து வந்தது. இந்த அக்கிரமத்தையெல்லாம் ஜீரணித்துக் கொள்பவர்கள் மிகவும் நியாயமான முறையில் விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியைக் குறை கூறுவதற்கு இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தவிர வேறு காரணம் இருக்க முடியாது.
ஜிஸ்யா வரி விதிக்கும் போது கூட இஸ்லாம் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக இருந்துள்ளது. பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத முதிய வயதினர், பைத்தியக்காரர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. திடகாத்திரமான ஆண்கள் மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு சலுகை காட்டுவது அவசியமில்லாதிருந்தும் இவ்வாறு சலுகை வழங்கப்பட்டது.
சகட்டு மேனிக்கு இந்த வரி விதிக்கப்படாமல் மக்களின் பொருளாதார வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போதைய சூழலில் ஜிஸ்யா எனும் காப்பு வரியாக ஒரு தீனார் மட்டுமே நபியவர்களால் விதிக்கப்பட்டது. (ஆதாரம்: அபூதாவுத் 3038)
பிறகு உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தனிநபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியாவாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் எனவும் தனி நபர் வருவாய் குறைவாக உள்ள ஏமன் வாசிகளுக்கு தலைக்கு ஒரு தீனார் என்றும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.
பத்து நாட்கள் ஆடு மேய்ப்பவர்களுக்கு ஒரு தீனார் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. இதிலிருந்து தீனார் என்பது எவ்வளவு அற்பமான தொகை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த ஒரு தீனார் என்பது மிக மிகச் சாதாரண ஏழைக் குடிமகன் இந்தியாவில் அன்றாடம் செலுத்தும் வரியை விடப் பல மடங்கு குறைவானதாகும்.
சொத்துவரி, விற்பனை வரி, வருமானவரி, சாலைவரி, தண்ணீர் வரி, நுழைவு வரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை எதை வாங்கினாலும் இந்தியக் குடிமகன் இன்று வரி செலுத்துகிறான். இந்த வரியை விடப் பல மடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த ஜிஸ்யா வரி.
செலுத்துவதற்கு எளிதான தொகை யாகவும், செலுத்த இயலாதவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வரியை விட மிகவும் குறைவானதாகவும் தான் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.
அந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம் அதிகம் வரி செலுத்தும் முஸ்லிம்கள் பெற்று வந்த அத்தனை உரிமைகளையும் அவர்கள் பெற முடிந்தது. அவர்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட்டன. அவர்களின் ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. அவர்களின் சொத்துரிமை பேணப்பட்டது.
இதனால் நாட்டின் கருவூலம் நிறைந்தது நாட்டு மக்கள் பலன் அடைந்தார்கள். அவர்களின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தது. இறந்தவருக்குப் போர்த்துவதற்குக் கூட கருவூலத்தில் நிதி இல்லாத நிலை மாறி, இறந்தவர் விட்டு சென்ற கடனுக்கே பொறுப்பேற்கும் நிலை வந்தது.
எவர் மரணிக்கும்போது கடனை வைத்து விட்டு அதை அடைக்காமல் விட்டுச் செல்கிறாரோ அல்லது அவர் திக்கற்ற மனைவி மக்களை விட்டுச் செல்கிறாரோ அவர் என்னிடம் வரட்டும். நானே அவர்களுக்கு பொறுப்பாளன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 1105)

 

நீதியை நிலைநாட்டியவர்

ஒரு மனிதனின் நேர்மையை உரசிப் பார்ப்பதற்கு, ‘அனைவரையும் அவன் சமமாகக் கருதுகிறானா?’ என்பது முக்கியமான உரை கல்லாகும். குறிப்பாக ஆன்மீகத் தலைவர்களை இந்த உரை கல்லால் உரசிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும்.
தாமும் பக்குவப்பட்டு, மற்றவரையும் பக்குவப்படுத்துவதாகக் கூறிக் கொள்வோரின் கண்களுக்கு செல்வாக்கு மிக்கவனும், சாமானியனும் சமமாகவே தென்பட வேண்டும். இன்னும் சொல்வதென்றால் பலவீனர்களிடம் அதிகம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இந்த அளவுகோல் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு சதவீதம் தமது நடவடிக்கைகளை அமைத்திருந்தார்கள் என்பதற்கு மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம்.
குரைஷ் கோத்திரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தார்கள். இந்தக் கோத்திரம் அன்றைய மக்களிடம் மிக உயர்ந்த கோத்திரமாக மதிக்கப்பட்டது.
குரைஷ் கோத்திரத்தின் உட்பிரிவான மக்ஸுமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷ் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணின் திருட்டுக் குற்றத்திற்காகக் கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது) இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். ‘நபி (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபியவர்களிடம் பேச முடியும்’ என்று கருதினார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் உஸாமா (ரலி) இது பற்றிப் பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரைக்கிறீரா?’ என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள்.
‘உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்’ எனப் பிரகடனம் செய்தார்கள்.

(புகாரி: 3475, 3733, 4304, 6787, 6788)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பார்வையில் தமது குலத்தைச் சேர்ந்த பெண்மணியும், மற்றவர்களும் சமமாகவே தென்படுகிறார்கள். நபிகள் நாயகத்தின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவின் பரிந்துரையையும் கூட அவர்கள் ஏற்கத் தயாராகயில்லை.
மிகப்பெரிய காரியங்களில் மட்டுமின்றி அற்பமான காரியங்களில் கூட மக்களை அவர்கள் சமமாகவே நடத்தியுள்ளனர்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பாத்திரத்தில் பால் கொண்டு வரப்பட்டது. அதில் சிறிதளவு அவர்கள் அருந்தினார்கள். அவர்களின் வலப்புறத்தில் குறைந்த வயதுடைய ஓர் இளைஞர் இருந்தார். இடப்பக்கம் பெரியவர்கள் பலர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இளைஞரே! பெரியவர்களுக்கு முதலில் கொடுக்க எனக்கு அனுமதி தருகிறீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு இளைஞர் ‘உங்கள் மூலம் எனக்குக் கிடைக்கும் பாக்கியத்தை மற்றவருக்கு நான் கொடுக்க மாட்டேன்’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த இளைஞருக்கு முதலில் கொடுத்தார்கள், மற்றவர்களுக்குப் பின்னர் கொடுத்தார்கள்.
(புகாரி: 2351, 2366, 2451, 2602, 2605),
எதையும் பங்கிடுவதென்றால் தமது வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிமுறையாகக் கொண்டிருந்தார்கள்.
வலப் பக்கம் ஒரு இளைஞர் இருக்கிறார். இடப் பக்கமோ பிரமுகர்கள் இருக்கிறார்கள். பிரமுகர்கள் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இடப் பக்கத்தில் உள்ளவர்களுக்கு முதலில் பாலைக் கொடுத்திருக்க முடியும். ஆனாலும் தாம் வகுத்த நல்விதியை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை. அந்த இளைஞரின் அற்பத்திலும் அற்பமான உரிமையைக் கூட மதிக்கிறார்கள்.
நீ அனுமதி தந்தால் பெரியவர்களுக்குக் கொடுக்கிறேன். நீ அனுமதி தராவிட்டால் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று வேண்டுகிறார்கள். அவர் விட்டுத் தர விரும்பவில்லை என்ற போது இந்த அற்பமான விஷயத்திலும் அவரது முன்னுரிமையை நிலை நாட்டுகிறார்கள்.
அனஸ் (ரலி) வீட்டில் வளர்க்கப்பட்ட ஆட்டிலிருந்து பால் கறந்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அனஸ் (ரலி) வீட்டில் உள்ள கிணற்று நீர் அத்துடன் கலக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரம் தரப்பட்டது. அதை அவர்கள் பருகினார்கள். அவர்களின் இடப் புறம் அபூபக்ர் (ரலி) இருந்தார். வலப் பக்கம் ஒரு கிராமவாசி இருந்தார். அந்தக் கிராமவாசிக்கு நபிகள் நாயகம் (ஸல்) முதலில் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சிய உமர் (ரலி) ‘அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ருக்குக் கொடுங்கள்’ என்றார். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தமது வலப்புறம் இருந்த கிராமவாசிக்கு முதலில் கொடுத்தார்கள். மேலும் ‘வலப்புறம் வலப்புறமாகத் தான் கொடுக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார்கள்.

(புகாரி: 2352)
நபிகள் நாயகத்தின் தோழர்களில் முதலிடம் பெற்றவர்கள் அபூபக்ர் (ரலி). தமக்கு அடுத்து அபூபக்ர் தான் என்று பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டினார்கள். இதனால் தான் நபிகள் நாயகத்துக்குப் பின் அபூபக்ர் ஜனாதிபதியாகப் பொறுப்பு ஏற்க முடிந்தது.
நபிகள் நாயகத்துக்கு இடது புறத்தில் நபிகள் நாயகத்தின் உயிர்த் தோழர் அபூபக்ர் (ரலி) இருக்கிறார். வலது புறத்திலோ யாரெனத் தெரியாத கிராமவாசி இருக்கிறார். நபிகள் நாயகத்தின் அருகில் அமரத் தக்கவர்கள் என்ற தர வரிசை ஏதும் நபிகள் நாயகத்தால் வகுக்கப்படவில்லை. யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் நபிகள் நாயகத்தின் அருகில் அமரலாம். எவ்வளவு சாதாரணமானவராக அவர் இருந்தாலும் பிரச்சனையில்லை என்பது தான் அவர்கள் ஏற்படுத்திய நடைமுறை.
அந்த அடிப்படையில் வலது புறத்தில் கிராமவாசி அமர்ந்து கொண்டார். அபூபக்ர் (ரலி) இடது புறத்தில் தான் அமர முடிந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாலை விநியோகம் செய்யும் போது தமது நெருங்கிய தோழர் பக்கத்தில் இருக்கிறாரே என்பதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அபூபக்ருக்கு அடுத்த தகுதியைப் பெற்ற உமர் (ரலி) சுட்டிக் காட்டிய பிறகும் அதை ஏற்கவில்லை. வலது புறத்திலிருந்து தான் எதையும் துவக்க வேண்டும் என்ற மிகச் சாதாரண விஷயமானாலும் அதிலும் நான் எவருக்காகவும் வளைந்து கொடுக்க முடியாது என்று தாட்சண்மின்றி அறிவித்து விடுகிறார்கள்.

வலது புறத்தில் இருந்த கிராமவாசிக்குக் கொடுத்த பிறகாவது அபூபக்ருக்குக் கொடுத்தார்களா என்றால் அதுவுமில்லை. வலது புறம் வலதுபுறமாகத் தான் கொடுக்க வேண்டும் என்று கூறிவிடுகிறார்கள். அதாவது அந்தக் கிராமவாசிக்கு பின் அவரை அடுத்திருந்தவர், அதற்கடுத்தவர் என்ற முறையில் தான் கொடுப்பேன் என்கிறார்கள். இவ்வாறு கொடுத்தால் ஆகக் கடைசியில் தான் அபூபக்ருக்குக் கிடைக்கும். இதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை.
பத்ருப் போர் அன்று ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற அடிப்படையில் பயணம் செய்தோம். நபி (ஸல்) அவர்களுடன் அபூ லுபாபா, அலீ பின் அபீதாலிப் ஆகிய இருவரும் ஒட்டகத் தோழராக இருந்தனர். நபி (ஸல்) அவர்களின் முறை வந்த போது ‘உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம்’ என இருவரும் கூறினார்கள். ‘நீங்கள் என்னை விட வலிமையானவரும் அல்லர். நான் உங்களை விட (இறைவனின்) கூலியில் தேவையற்றவனும் அல்லன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அஹ்மத்: 3706, 3769, 3807, 3834)

இஸ்லாமிய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய போர் பத்ருப் போர். நபிகள் நாயகம் (ஸல்) தலைமை தாங்கி நடத்திய இந்த முதல் போர் மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் நடந்தது. முஸ்லிம்கள் மிகவும் வறுமையில் இருந்த நேரம். எண்ணிக்கையிலும் குறைவாக இருந்தனர்.
சுமார் 300 பேர் தான் நபிகள் நாயகத்தின் படையில் இருந்தனர். எதிரிகளின் படை மூன்று மடங்காக இருந்தது.
முன்னூறு பேருக்கும் சேர்த்து சுமார் நூறு ஒட்டகங்கள் மட்டுமே இருந்ததால் ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற அடிப்படையில் பயணம் செய்தனர்.
ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற விதியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துக் கொண்டிருந்தால் யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இஸ்லாமிய அரசின் தலைவராக இருந்தார்கள். இப்போரில் தளபதியாகவும் இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீகத் தலைவராகவும் இருந்தார்கள்.

இம்மூன்று தகுதிகளுக்காகத் தமக்கு மட்டும் தனியாக ஒரு ஒட்டகத்தை ஒதுக்கிக் கொள்வதை எந்த முஸ்லிமும் தவறாக நினைக்க மாட்டார்.
ஆனால் இந்த மாமனிதரோ மற்றவர்களுக்கு எவ்வாறு வாகன ஒதுக்கீடு செய்தார்களோ அதையே தமக்கும் ஒதுக்கிக் கொள்கிறார்கள்.
இன்றைக்கும் எத்தனையோ ஆன்மீகத் தலைவர்களைப் பார்க்கிறோம். அவர்கள் தமது ஆசனத்தில் சற்று ஒதுக்கி இன்னெருவருக்கு, இடம் தர மாட்டார்கள். அவர்கள் ஆசனத்தில் மட்டுமின்றி அவர்கள் ஆசனத்திற்குச் சம உயரத்தில் இன்னொருவருக்கு ஆசனம் அளிப்பதில்லை. மாறாக, தாம் மட்டும் உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்களைத் தாழ்வான இடத்தில் அமரச் செய்து ஆணவத்தைக் காட்டுவார்கள்.
எதிரில் இருப்பவர் ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் என்னை விடத் தாழ்வான இடத்தில் தான் அமர வேண்டும், ஏனெனில் அவர் பிறப்பால் என்னை விடத் தாழ்ந்தவர் என்று, இருக்கையில் கூட ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் ஆன்மீகத் தலைவர்களை நாம் சமகாலத்திலேயே பார்த்துள்ளோம்.
அற்பமான இந்தத் தலைவர்களே இப்படி நடக்கும் போது, உயிரையும் அர்ப்பணிக்கும் தொண்டர்களைப் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு உயரத்தில் அமர வேண்டும்? ஆனாலும் ஒரு ஒட்டகத்துக்கு மூவர் என்ற மற்றவர்களுக்குச் சமமான நிலையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் உள்ளம் பக்குவப்பட்டிருந்தது.
போர்த் தளவாடங்கள், தட்டுமுட்டுச் சாமான்களுடன் ஒரு ஒட்டகத்தில் மூவர் ஒரு நேரத்தில் பயணம் செய்ய முடியாது. எனவே இருவர் ஒட்டகத்தில் ஏறிச் செல்லும் போது ஒருவர் ஒட்டகத்தைப் பிடித்து வழிநடத்திச் செல்ல வேண்டும் எனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தொலைவு வந்ததும் நடப்பவர் ஒட்டகத்தில் ஏறிக் கொள்ள ஒட்டகத்தில் இருப்பவர் இறங்கிக் கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் முறை வந்த போது, மற்ற இருவரும் அதை ஆட்சேபிக்கின்றனர். ‘உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம். நீங்கள் ஒட்டகத்திலிருந்து இறங்க வேண்டாம்’ எனக் கூறுகின்றனர். இதை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை. மற்ற இருவரும் தத்தமது முறை வரும் போது எவ்வாறு நடந்தார்களோ அது போல் அவர்கள் இருவரையும் ஒட்டகத்தில் ஏற்றி விட்டு நடந்து செல்லும் இந்த அற்புத வரலாற்றைப் பார்க்கும் எந்த முஸ்லிமும் இம்மாமனிதரைத் தலைவராகப் பெற்றமைக்காக பெருமிதம் கொள்வார். இதற்காக மற்றவர்கள் முஸ்லிம்கள் மீது பொறாமைப்படும் அளவுக்கு அற்புதமான தலைவராகத் திகழ்கிறார்கள்.
அவர்கள் நடந்து சென்றது மட்டுமின்றி அதற்கு அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
யார் யார் எவ்வளவு சிரமப்படுகிறார்களோ அதற்கேற்பவே மறுமையில் இறைவனின் பரிசு கிடைக்கும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை.
பொதுவாக ஆன்மீகத் தலைவர்கள் எதைப் போதிக்கிறார்களோ அதில் மற்றவர்களை விட குறைவான நம்பிக்கையுடையவர்களாகத் தான் இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் ஆன்மீகத்தின் பின்னே சுய லாபம் மறைந்திருக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ எந்தச் சந்தர்ப்பத்திலும் தாம் போதித்த ஆன்மீக நெறியை மற்றவர்களை விட அதிகம் பின்பற்றக் கூடியவர்களாக இருந்தனர்.
மறுமையில் இறைவனிடம் பரிசு பெறும் போது உங்கள் இருவரையும் விடக் குறைவான தியாகம் செய்தவனாக நான் நிற்க மாட்டேன். எனவே உங்களைப் போலவே என் முறை வரும் போது நானும் நடந்து, உங்களுக்குக் கிடைக்கும் அதே பரிசைப் பெறுவேன் என்பது தான் அவர்கள் கூறிய காரணம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பழுக்கற்ற பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதை அனைவரும் அறிவர். சந்தேகத்தின் சாயல் கூடத் தம்மீது படியக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

நான் சரியாகத் தான் நடக்கிறேன், எவருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று சாதாரண இயக்கங்களுக்குத் தலைமை தாங்குபவர்களே நினைக்கிறார்கள். மக்களிடம் எது குறித்து சந்தேகம் நிலவுகிறதோ அதை நீக்கும் கடமை தமக்கு இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றி எந்தச் சந்தேகம் வந்தாலும் மக்களிடம் உடனே தெளிவுபடுத்துவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் கடைசி பத்து நாட்களில் பள்ளிவாசலிலேயே தங்கி விடுவார்கள். அப்போது அவர்களைக் காண அவர்களின் மனைவி சஃபிய்யா (ரலி) வந்தார். நபி (ஸல்) அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் புறப்படலானார். அவருடன் நபி (ஸல்) அவர்களும் உடன் வந்து பள்ளியின் வாசல் வரை வந்தனர். அப்போது இரண்டு மனிதர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறி விட்டுக் கடந்து சென்றனர்.
அப்போது அவ்விருவரையும் நோக்கி ‘அப்படியே நில்லுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘இவர் என் மனைவி ஸஃபிய்யா’ என்றார்கள். இது அவ்விருவருக்கும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘மனிதர்களின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தை விதைத்து விடுவான் என்று அஞ்சியே இதை உங்களிடம் கூறினேன்’ என்றார்கள்.
(புகாரி: 2035)
அவ்விருவரும் நபிகள் நாயகத்தைக் கண்டு ஸலாம் கூறிவிட்டுத் தான் சென்றார்கள். அவர்களின் மனதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. பின்னர் ஷைத்தான் தனது வேலையைக் காட்டுவான். நபிகள் நாயகம் பேசிக் கொண்டிருந்தார்களே அந்தப் பெண் யாராக இருக்கும் என்ற எண்ணத்தை விதைத்து விடுவான் என்று அஞ்சி தெளிவுபடுத்தி விடுகிறார்கள்.

சந்தேகத்தின் சாயல் கூடத் தம்மீது படியக் கூடாது என்பதில் இந்த அளவுக்குத் தூய்மையாக இருந்தார்கள்.
அன்று முதல் இன்று வரை ஆன்மீகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் எந்த அடிப்படையில் மதிக்கப்படுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தினால் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.
ஆணவம் எந்த அளவுக்கு அதிகமாகவுள்ளதோ அந்த அளவுக்குத் தலைவர்கள் மதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண மக்களிடம் வெறுக்கத் தக்கதாகக் கருதப்படும் ஆணவமும், மமதையும் தலைவர்களிடம் இருந்தால், வீரமெனவும், துணிச்சல் எனவும் வர்ணிக்கப்படுகிறது.
சாதாரண மக்களிடம் ஏமாற்றும் பண்பு இருந்தால் அதை வெறுக்கின்ற மக்கள், நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் பண்பு தலைவர்களிடம் இருந்தால் அதை ராஜதந்திரம் எனக் கருதுகின்றனர்.

சாதாரண மனிதனிடம் இருக்கக் கூடாது எனக் கருதப்படும் ஆடம்பரமும், படாடோபமும் தலைவர்களிடம் இருந்தால் அதுவே பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது.
தலைவர்கள் எதனால் மதிக்கப்படுகிறார்கள் என்று கவனித்தால் அவர்களிடம் காணப்படும் தீய பண்புகளால் தான் அதிகம் மதிக்கப்படுவதைக் காணலாம்.
தலைவர்களிடம் காணப்படும் லஞ்சம், ஊழல், விபச்சாரம் போன்ற எந்தத் தீய செயல்களின் காரணமாகவும் தலைவர்கள் வெறுத்து ஒதுக்கப்படுவதில்லை.
தீய செயல்களைச் செய்தாவது நூறு பேருக்குத் தெரிந்த முகமாக ஆவது மட்டுமே தலைவர்களுக்குரிய ஒரே தகுதியாக உள்ளது.
இதில் ஆன்மீகத் தலைவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடு பார்க்கப்படுவதில்லை.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே தமது நற்பண்புகளுக்காவும், நன்னடத்தைக்காகவும் பாராட்டப்படும் தகுதியைப் பெற்றுள்ளார்கள்.
தம்மைப் பாதிக்கும் விஷயமானாலும் நீதியை நிலை நாட்டத் தவறவில்லை. தனது நாட்டின் பிரஜையை ஒட்டகத்தில் ஏற்றி ஒட்டகத்தைப் பிடித்து நடந்து செல்வதற்குக் கொஞ்சமும் வெட்கப்படவில்லை. நபியர்களுக்கு நீதி என்றால் நீதி தான். இதில் எந்தச் சமரசமும் கிடையாது என்பதற்கு இது தெளிவான சான்றாக உள்ளது.