மது
மது, சூதாட்டம் போன்றவை மார்க்கம் தடை செய்துள்ளவை. அவை ஒருபோதும் நன்மை தராது. மேலும், மது அருந்தினால் அவர்களுக்கு சாட்டையால் அடித்து துன்புறுத்தவும் மேலும் அதனை தொடர்ந்தால் மரண தண்டனை கொடுக்க வேண்டும் நபி (ஸல்) அவர்கள் கட்டளை விதித்துள்ள அளவிற்கு மிகப்பெரிய குற்றமாகும்.
மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். ”அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன்: 2:219)➚
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே! ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(அல்குர்ஆன்: 5:90)➚
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல்பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டது உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்று கூறிவிட்டு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் இரகசியமாக என்ன சொன்னீர் என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் அதை விற்றுவிடச் சொன்னேன் என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதுவை அருந்துவதற்கு தடைவிதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான் என்றார்கள். உடனே அம்மனிதர் தோல்பையைத் திறந்துவிட அதிலுள்ளது (வழிந்தோடிப்) போனது.
அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி),(முஸ்லிம்: 3220) ➚
நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் இல்லை (மாற்றக்கூடாது) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(முஸ்லிம்: 4014) ➚
நபி (ஸல்) அவர்களிடம் தரிக் பின் சுவைத் (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள் மருந்துக்காகவே! அதைத் தயாரிக்கிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அது மருந்தல்ல! நோய் என்றார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி),(முஸ்லிம்: 4015) ➚
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதுபானத்தையும், அதை பருகுபவரையும், பிறருக்கு பருகக்கொடுப்பவரையும், அதை விற்பவரையும் அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்துகொடுப்பவரையும், (தானே) தயார் செய்துகொள்பவரையும், அதை சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),(இப்னு மாஜா: 3371) ➚
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் மதுவை தடை செய்துவிட்டான். எனவே தம்மிடம் மதுவில் வைத்திருப்பவரை இந்த வசனம் அடைந்தால் மதுவை அவர் அருந்தவும் வேண்டாம். விற்கவும் வேண்டாம். என்று சொன்னார்கள். உடனே மக்கள் தங்களிடமிருந்த மதுவுடன் மதீனாவின் சாலையை நோக்கிச் சென்று அவற்றைக் கொட்டிவிட்டனர்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),(முஸ்லிம்: 3219) ➚
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மதுக் குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். இதன் பிறகும் குடித்தால் அவர்களை கொன்றுவிடுங்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி),(அபூதாவூத்: 3886) ➚
நுஐமான் என்பவர் மதுகுடித்துவிட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரை அடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரை கைகளாலும் பேரித்தமர மட்டையாலும் செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.
அறிவிப்பவர்: உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி),(அஹ்மத்: 18610) ➚
இவ்வுலகில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கிணங்க நடந்தால் இன்ஷா அல்லாஹ் நாளை மறுமை நாளில் யாருக்கெல்லாம் சுவர்க்கம் கிடைக்குமோ அவருக்கெல்லாம் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட போதை தராத மது தரப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, இவ்வுலகில் எவையெல்லாம் தடை செய்யப்பட்டவையோ அவையெல்லாம் ஒளித்து நம்மை நரக நெருப்பிலிருந்து காத்து கொள்ள வேண்டும்.