மகிழ்ச்சியான மணவாழ்க்கை!
மதிப்பிற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே! சிறிய உரையாக இருந்தாலும் ஆழமான கருத்துக்களை உடைய , நேரிய சிந்தனைகளை உடைய, நல்ல விஷயங்களை நாம் இப்போது கேட்டு இருக்கின்றோம். சில நிமிடங்கள் அதை ஒட்டி குறிப்பாக இந்த திருமண ஒப்பந்தத்தை சந்திக்க இருக்கின்ற மணமகனுக்கும், மணமகளுக்கும் நம் எல்லோருக்கும் குடும்ப வாழ்க்கையில் பயன் தரக்கூடிய சில ஹதீஸ்களை சில மார்க்க அறிவுரைகளை நினைவூட்டி கொண்டு இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் திருமண ஒப்பந்தத்திற்கு செல்வோம் .
நாம் ஒரு பெரிய பாக்கியம் பெற்ற மார்க்கத்தை கொடுக்கப்பட்டிருக்கிறோம். எந்த ஒரு காரியத்திற்கும் அழகான தெளிவான வழிகாட்டுதலை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். அதே அந்த வழிமுறையில் தான் இந்த திருமண ஒப்பந்தத்தை செய்ய இருக்கின்ற மணமகன், மணமகள் திருமண வாழ்க்கையில் இருக்கின்ற எல்லா தம்பதிகளுக்கும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறி இருக்கின்ற அறிவுரைகள் அந்த அறிவுரைகளை நாம் பின்பற்றுவோமேயானால், கடைபிடிப்போமேயானால் கண்டிப்பாக ஒரு மகிழ்ச்சியான ஒரு திருப்தியான மன நிம்மதியான வாழ்க்கையை இந்த உலகத்திலே நாம் அனுபவிக்கலாம்.
அன்பு சகோதரர்களே! சகோதரிகளே! இன்று பிரச்சனைகள், குழப்பங்கள், சண்டைகள் மனக்கசப்பு வந்ததற்கு பிறகு அந்த பிரச்சனைகள், குழப்பங்கள், சண்டைகள் மனக்கசப்புகள் எப்படி வெளியேறுவது அவற்றை நாம் எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை தேடி அலைகிறார்கள்.
இதற்கு முன்பாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக்கூடிய வழிகாட்டுதலை அவர்கள் பின்பற்றி இருப்பார்களேயானால்! கண்டிப்பாக இத்தகைய பிரச்சனைகள் குழப்பங்களில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு ஆண் மகனுக்கு திருமணம் முடிக்க இருக்கின்ற அல்லது திருமணம் முடித்து வாழுகின்ற ஒரு ஆண் மகனுக்கு என்ன அழகான அறிவுரைகள் சொன்னார்கள்.
ஒரு சில அறிவுரைகளை பாருங்கள் இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள் உலகமே ஒரு இன்பம் தான், உலகமே ஒரு பொருள் தான், உலகமே ஒரு செல்வம் தான், ஆனால் அந்த உலக செல்வத்திலேயே சிறந்த செல்வம் ஸாலிஹான மனைவி என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம், எண் : 1467
இங்கே முதலாவதாக நம்முடைய நபி அவர்கள் நமக்கு சொல்கிறார்கள் ஆண்களாகிய நமக்கு சொல்கிறார்கள் உன்னிடத்திலே பெரிய வசதியான, ஆடம்பரமான, வீடு இருப்பதோ, வாகனம் இருப்பதோ, பதவி இருப்பதோ, உனக்கு ஒரு தொழில் இருப்பதோ, அது பெரிசல்ல உனக்கு சிறந்தது உன்னுடைய வாழ்க்கையில் ஸாலிஹான மனைவி அமைவது, அந்த ஸாலிஹான பெண்ணை மனைவியாக்க தேடு, அப்படி சாலிகான மனைவி அமைந்து விடுவாளேயானால் அவள் நீ பத்திரப்படுத்திக் கொள், பாதுகாத்துக்கொள், பேணிக் கொள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய அந்த இறுதி ஹஜ்ஜிலே அழகிய உபதேசங்கள் உடைய அந்த தொகுப்பை அரஃபா மைதானத்தில் வழங்குகிறார்கள். இமாம் புகாரி ரஹிமஹூல்லாஹ் அவர்கள் பதிவு செய்த அந்த அறிவிப்பிலே முதலாவதாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த அறிவுரையின் தொடக்கத்திலே சொன்னார்கள். அதைத் தொடங்கும் போதும் சொன்னார்கள். அதை முடிக்கும் போதும் சொன்னார்கள்.
உங்களது மனைவிமார்களுக்கு நன்மையை நாடுங்கள் அன்நிஸா என்றால் அரபியிலே பொதுவாக பெண்களுக்கும் சொல்லப்படும் குறிப்பாக மனைவிமார்களுக்கும் சொல்லப்படும். மனைவிமார்களுக்கு நன்மையை நாடுங்கள் உலகத்திலேயே பெண்களுக்கு தான் கட்டிய மனைவிக்கு நன்மையை நாடு, நன்மை செய் அவளை தொந்தரவு செய்யாதே, அவளை அடக்காதே என்று கூறிய ஒரு மார்க்கம் இருக்குமேயானால் நம்முடைய மார்க்கம் இஸ்லாம் தான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு ,(புகாரி: 3331)
அவர்களில் சிலரை (-பெண்களை) விட சிலரை (-ஆண்களை) அல்லாஹ் மேன்மையாக்கியிருப்பதாலும் (ஆண்கள்) தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்கு) செலவு செய்வதாலும் பெண்களை ஆண்கள் நிர்வகிப்பார்கள். ஆகவே, நல்ல பெண்கள் (அல்லாஹ்விற்கும்; பிறகு, கணவனுக்கும்) பணிந்து நடப்பார்கள்; (கணவன்) மறைவில் இருக்கும்போது (பெண்) எதை பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறினானோ அதை (-கணவனின் செல்வத்தையும் தமது கற்பையும்) பாதுகாப்பார்கள். இன்னும், (பெண்களில்) எவர்கள் (உங்கள் கட்டளைக்கு) மாறுசெய்வதை நீங்கள் பயப்படுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இன்னும், (அவர்கள் திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை அப்புறப்படுத்தி வையுங்கள். இன்னும், (அதிலும் அவர்கள் திருந்தாவிட்டால்) அவர்களை (காயமேற்படாதவாறு) அடியுங்கள். ஆக, அவர்கள் உங்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் அவர்கள் மீது (குற்றம் சுமத்த) ஏதேனும் ஒரு வழியைத் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாக, மிகப் பெரியவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்:) ➚
நான்காவது அத்தியாயத்தில் 34-வது வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான் நீங்கள் உங்கள் மனைவிமார்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு, பழி சுமத்துவதற்கு, வழிகளை தேடாதீர்கள் என்ன அழகான அறிவுரை பாருங்கள். அவர்களுடைய குற்றங்களை அவர்களுடைய தவறுகளை தேடாதீர்கள் இவையெல்லாம் பயன்படுத்தப்பட்டு இருக்குமேயானால் இவையெல்லாம் நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமேயானால் நாம் எவ்வளவு அழகான நிம்மதியான, சந்தோஷமான, வாழ்க்கையை அனுபவித்திருக்கலாம். யோசித்துப் பாருங்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
ஒரு முஃமினான நம்பிக்கை உள்ள கணவன் ஒரு நம்பிக்கையுள்ள மூஃமினான மனைவியை வெறுத்து வெட்டி விட வேண்டாம் என்ன அழகான ஆழமான வார்த்தையை பாருங்கள் சொன்னார்கள் அவளுடைய ஒரு குணம் உனக்கு பிடிக்காமல் இருக்கிறதா? அவளுடைய ஒரு குணத்தால் உனக்கு மன கஷ்டம் ஏற்படுகிறதா? இன்னொரு குணத்தை பார். அவளுடைய இன்னொரு பண்பை பார் நீ திருப்தி கொள்வாய் உனக்கு சந்தோஷம் ஏற்படும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 1469
இன்று சகோதரர்களே! குறைகளை மட்டுமே தேடுகின்ற ஆண்கள், மனைவியினுடைய தவறுகளை மட்டுமே பட்டியலிடக்கூடிய ஆண்கள், இது மாமியார்களுக்கும் பொருந்தும் மகள் என்றால் அங்கு வேறு ஒரு பார்வை, மருமகள் என்றால் அங்கே வேறு ஒரு பார்வை. வித்தியாசமான இரு பார்வைகள். இவையெல்லாம் ஏன் சமுதாயத்திலே இப்படி ஒரு பெரிய கலவரத்திற்கும், கழகத்திற்கும், குழப்பங்களுக்கும் காரணம் ஆகிவிட்டது என்றால் உஸ்தாதுகள் சொன்னது போன்று இறையச்சமின்மை, அல்லாஹ்வுடைய தக்வா இல்லை.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தெளிவாக சொன்னார்கள்: ஒன்று பிடிக்கவில்லையா அதையே நீ பார்த்துக் கொண்டிருக்காதே அதை சொல்லியே அவளை குத்திக் கொண்டிருக்காதே , அதை சொல்லியே அவளை மட்டம் தட்டிக் கொண்டிருக்காதே, இன்னொரு நற்குணத்தை பார்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 1469
நம்முடைய ரப்புல் ஆலமீன் சூரா பகராவிலே அனேகமாக 228 வது வசனம் அதுபோன்று நான்காவது அத்தியாயத்திலும் இந்த வசனம் இடம் பெறலாம்.
நம்பிக்கையாளர்களே! (இறந்தவரின் சொத்துடன் அவரின்) பெண்களை(யும்) பலவந்தமாக நீங்கள் சொந்தம் கொள்வது உங்களுக்கு ஆகுமாகாது. இன்னும், அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை நீங்கள் எடுத்துக் கொள்வதற்காக அவர்க(ளுடன் வாழ விருப்பமில்லாமல் அவர்க)ளை தடுத்து வை(த்துகொண்டு அவர்களாக உங்களிடமிருந்து விடுதலையை வேண்டி, நீங்கள் கொடுத்த மஹ்ரை திரும்ப கொடுக்கும்படி செய்வதற்கு அவர்களை நிர்ப்பந்தி)க்காதீர்கள். எனினும், வெளிப்படையான ஒரு மானக்கேடானதை அவர்கள் செய்தால் தவிர. (அப்போது, நீங்கள் கொடுத்த மஹ்ரில் சிலவற்றை நீங்கள் திரும்ப பெற்று அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் அவர்களை தடுத்து வைப்பதும் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதும் கூடும்). இன்னும், (உங்கள் மனைவிகள் ஒழுக்கமானவர்களாக இருந்தால்) அவர்களுடன் நல்ல முறையில் (கண்ணியமாக பரஸ்பர அன்புடன் உரிமைகளையும் கடமைகளையும் பேணி) வாழுங்கள். ஆக, நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மையை ஆக்கலாம். (அல்குர்ஆன்:) ➚
நீங்கள் உங்கள் மனைவிமார்கள் இடத்திலே மிக நேர்மையாக மிக அழகான முறையில் ஒரு கண்ணியமான முறையில் குடும்பம் நடத்துங்கள் என்று அல்லாஹூத்தஆலா வழிகாட்டுகிறான். இன்னும் என்ன சொல்கிறான்.
நீங்கள் ஒன்றை வெறுக்கலாம், அதுவோ உங்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் ஒன்றை விரும்பலாம், அதுவோ உங்களுக்கு தீமையானதாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன்:) ➚
நம்முடைய மனைவிமார்கள் விஷயத்திலே நீங்கள் ஒன்றை விரும்பலாம் அது உங்களுக்கு தீமையாக இருக்கலாம். நீங்கள் ஒன்றை வெறுக்கலாம் அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ஆகவே குடும்ப வாழ்க்கையில் அவசரப்பட்டு நீங்கள் உங்களது மனைவியை பிரிய வேண்டும் என்று முடிவெடுத்து விடாதீர்கள்.
சகிப்புக்கு, பொறுமைக்கு, அன்புக்கு, விட்டுக்கொடுத்தலுக்கு, மன்னித்தலுக்கு, பரஸ்பர அந்த புரிந்துணர்வுக்கு ,அல்லாஹூத்தஆலா வழிகாட்டுகின்றான். இதையெல்லாம் நாம் நினைத்து பார்க்க வேண்டும். நம்முடைய வாலிபப் பிள்ளைகளுக்கு இந்த அறிவுரைகளை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். நாமும் பின்பற்ற வேண்டும்.
பெண்கள் என்று எடுத்துக் கொண்டால், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த பெண்களுக்கு எவ்வளவு அழகான வழிகாட்டுதலை சொல்கிறார்கள் ஒரு பெண் தன் கணவனுக்கு மனைவியாக இருந்து அவருடைய திருப்தியை தேடுவதிலும் அவருக்கு பணிவிடை செய்வதிலும் அல்லாஹ்வுடைய இபாதத்தை அவன் பார்க்க வேண்டும்.
தன்னுடைய ரப்பை திருப்தி படுத்துவதனுடைய தன்னுடைய ரப்பை தன்னைப் படைத்த இறைவனை திருப்தி படுத்துவதனுடைய அம்சங்களிலே ஒன்று தன்னுடைய கணவனை திருப்திப்படுத்துவது, மகிழ்ச்சி படுத்துவது, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஸஹீஹான ஹதீஸ்.
சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுகின்ற அந்த உயர்ந்த சிறந்த சொர்க்கத்து பெண்மணியை பற்றி சொல்கிறார்கள். எந்தப் பெண் ஐந்து நேர தொழுகையை சரியாக தொழுவாளோ, ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பாளோ, தன்னுடைய செல்வத்துக்கு உண்டான ஜகாத்தை கொடுப்பாளோ, தன்னுடைய கணவனை திருப்திப்படுத்துவாளோ, தன்னுடைய கணவனுக்கு கீழ்படிந்து நடப்பாளோ நாளை மறுமையில் சொர்க்கத்தின் உடைய வாசல்களில் எந்த வாசல் வழியாக சொர்க்கத்தில் பிரவேசிக்க வேண்டும் என்று விரும்புகிறாளோ அந்த வாசல் வழியாக சொர்க்கத்திற்கு செல்வாள்.
அறிவிப்பாளர் : அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்னது அஹ்மத், எண் : 1661
எவ்வளவு ஒரு உயர்ந்த பதவி பாருங்கள் இங்கே பெண்கள் என்று வரும்பொழுது அல்லாஹூத்தஆலா நல்ல பெண்களுக்கு அழகான இலக்கணத்தை சொல்கிறான். ஹிஜாப் வேண்டும், தஹஜத் தொழுகை வேண்டும், நஃபிலான நோன்பு வேண்டும், தான் தர்மங்கள் வேண்டும் எல்லாம் வேண்டும். ஆனால், இவற்றிற்கெல்லாம் மேலாக ஒரு பெண் குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்றால், ஒரு இஸ்லாமிய சமூகத்தை தட்டி எழுப்ப வேண்டும் என்றால், ஒரு சிறந்த முன்மாதிரியான ஒரு நல்ல பெண்மணியாக அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் விரும்பக்கூடிய சமுதாயத்திற்கு தேவையான ஒரு சமுதாயத்தை உருவாக்கக்கூடிய ஒரு பெண்ணாக வேண்டும் என்றால் அல்லாஹ்வுடைய வழிகாட்டலை பாருங்கள் நான்காவது அத்தியாயத்தில் 34-வது வசனம்
அவர்களில் சிலரை (-பெண்களை) விட சிலரை (-ஆண்களை) அல்லாஹ் மேன்மையாக்கியிருப்பதாலும் (ஆண்கள்) தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்கு) செலவு செய்வதாலும் பெண்களை ஆண்கள் நிர்வகிப்பார்கள். ஆகவே, நல்ல பெண்கள் (அல்லாஹ்விற்கும்; பிறகு, கணவனுக்கும்) பணிந்து நடப்பார்கள்; (கணவன்) மறைவில் இருக்கும்போது (பெண்) எதை பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறினானோ அதை (-கணவனின் செல்வத்தையும் தமது கற்பையும்) பாதுகாப்பார்கள். இன்னும், (பெண்களில்) எவர்கள் (உங்கள் கட்டளைக்கு) மாறுசெய்வதை நீங்கள் பயப்படுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இன்னும், (அவர்கள் திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை அப்புறப்படுத்தி வையுங்கள். இன்னும், (அதிலும் அவர்கள் திருந்தாவிட்டால்) அவர்களை (காயமேற்படாதவாறு) அடியுங்கள். ஆக, அவர்கள் உங்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் அவர்கள் மீது (குற்றம் சுமத்த) ஏதேனும் ஒரு வழியைத் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாக, மிகப் பெரியவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்:) ➚.4)
எனக்கு பிரியமான ஸாலிஹான பெண் யார் தெரியுமா? எனக்கும் எனக்குப் பிறகு அந்தப் பெண்ணுடைய கணவனுக்கு பணிந்து நடக்கக் கூடியவள். இதற்கு மேல் என்ன ஒரு அறிவுரையை நமது பெண்கள் சமுதாயத்திற்கு சொல்ல வேண்டும் படைத்த ரப்பு சொல்கிறான். அவனுக்கு சுஜூது செய்வது உண்மை என்றால் நம்முடைய கலிமா உண்மையாக இருக்குமேயானால் நம்முடைய சமுதாயப் பெண்கள் இந்த கட்டளையை கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும்.
ஸாலிஹான பெண்கள் எப்படி இருப்பார்கள்? கணவனுக்கு பணிந்து நடப்பார்கள். கணவனுடைய செல்வத்தையும், தன்னுடைய கற்பையும் பாதுகாத்துக் கொள்வார்கள். ஒழுக்கத்தை பேணுவார்கள். இந்த இடத்திலே இன்னொரு விஷயத்தை அழுத்தமாக சொல்லிக் கொள்கிறேன். கற்பு என்பது, ஒழுக்கம் என்பது குர்ஆனுடைய பார்வையிலே பெண்களுக்கு மட்டும் அல்ல அல்லாஹ் சொல்லுகிறான்.
நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள், முஸ்லிமான பெண்கள், முஃமினான ஆண்கள், முஃமினான பெண்கள், (மார்க்க சட்டங்களுக்கு) கீழ்ப்படிந்து நடக்கும் ஆண்கள், கீழ்ப்படிந்து நடக்கும் பெண்கள், உண்மையான ஆண்கள், உண்மையான பெண்கள், பொறுமையான ஆண்கள், பொறுமையான பெண்கள், உள்ளச்சமுடைய ஆண்கள், உள்ளச்சமுடைய பெண்கள், தர்மம் செய்கிற ஆண்கள், தர்மம் செய்கிற பெண்கள், நோன்பாளியான ஆண்கள், நோன்பாளியான பெண்கள், தங்கள் மறைவிடங்களை பாதுகாக்கிற ஆண்கள், தங்கள் மறைவிடங்களை பாதுகாக்கிற பெண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற ஆண்கள், நினைவு கூர்கின்ற பெண்கள் – இவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான். (அல்குர்ஆன்:) ➚
தங்களுடைய மர்மஸ்தானவை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஆண்கள் தங்களுடைய மர்ம ஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெண்கள் என்று. இது மிக அடிப்படையான ஒன்று சகோதரர்களே அல்லாஹூத்தஆலா இப்படித்தான் சொல்கிறான். ஸாலிஹான பெண்கள் கணவனுக்கு பணிந்து நடப்பார்கள், அவர்கள் கணவனுடைய செல்வத்தை பாதுகாப்பார்கள், வீண்விரயம் செய்ய மாட்டார்கள், ஆடம்பர செலவு செய்ய மாட்டார்கள், கணவனுடைய வருவாய்க்கு மேல் அவனுக்கு செலவு வைத்து சிரமம் கொடுக்க மாட்டார்கள்.
இங்கு ஒரு விஷயத்தை நான் பதிவு செய்ய வேண்டும் இன்று நவீன தவ்ஹீதுகள் அதிகமாகி விட்டன குர்ஆன் சுன்னா உடைய தவ்ஹீத் என்பது வேறு, குதர்க்கவாதிகளின் நவீன தவ்ஹீத் என்பது வேறு. அது என்ன நவீன தவ்ஹீத் திருமணத்திலே உட்கார்ந்து கொண்டு பெண்ணிடத்தில் கேட்பார்கள் உனக்கு என்ன மஹர் வேண்டும் சொல்லு, நீ கேக்குற மஹர கேட்கலாம் உனக்கு ரைட்ஸ் இருக்கு,
அப்படித்தான் ஒரு கல்யாணத்துல என்னுடைய நண்பருடைய கல்யாணத்துல சொல்லி அந்த பொண்ணு ஒரேடியா தூக்கி போட்டுச்சு 40 பவுன் நகை வேணும் என்று இவரே மாதம் 15 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறவர் பயந்து போய் எந்திரித்துவிட்டார் நான் எப்படி 40 பவுன் கொடுக்கிறது என்று.
குர்ஆனிலும், ஹதீஸிலும் பெண்ணிடத்திலே உனக்கு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேள் என்று சொல்லக்கூடிய எந்த ஒரு ஆதாரத்தையும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள் அப்படி ரசூலுல்லாஹ் செய்ததே கிடையாது குர்ஆனிலே இருக்கிறதே அறிவாளிகளை குர்ஆனை படித்து பாருங்கள்
திட்டவட்டமாக இப்லீஸ் அவர்கள் மீது தன் எண்ணத்தை உண்மையாக்கினான். ஆகவே, அவர்கள் அவனை பின்பற்றினர், நம்பிக்கை கொண்ட பிரிவினரைத் தவிர. (நம்பிக்கையாளர்கள் இப்லீஸின் வழியில் செல்ல மாட்டார்கள்.) (அல்குர்ஆன்:) ➚
நீங்கள் தங்க குவியலை கொடுத்திருந்தாலும் என்றுதான் அல்லாஹ் சொல்கிறானே தவிர அவர்கள் தங்க குவியலை கேட்டிருந்தாலும் என்று சொல்லவில்லை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கையாவது பெண்ணிடத்தில் உனக்கு என்ன மஹர் வேண்டும் என்று கேட்டார்களா? புகாரியின் ஸஹீஹான ஹதீஸ்தான்.
நீ ஒரு இரும்பு மோதிரத்தை யாவது தேடி கொண்டு வா என்று அவருக்குத்தான் சொன்னார்களே தவிர, அந்தப் பெண்ணைப் பார்த்து உனக்கு என்ன மஹர் வேண்டுமோ அவரிடத்திலே கேள் நான் உனக்கு வாங்கி தருகிறேன் என்று சொல்லவில்லை.
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 5121, 5871 (குறிப்பு 2)
வசதியுடையவர் தனது வசதியிலிருந்து செலவு செய்யட்டும். எவர் ஒருவர் அவர் மீது அவருடைய வாழ்வாதாரம் நெருக்கடியாக இருக்கிறதோ அவர் தனக்கு அல்லாஹ் கொடுத்ததில் இருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் ஓர் ஆன்மாவிற்கு சிரமம் கொடுக்க மாட்டான், அவன் அதற்கு கொடுத்ததற்கே தவிர (அவன் அதற்கு கொடுத்த சக்திக்கு உட்பட்டே தவிர). சிரமத்திற்கு பின்னர் (-பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர்) அல்லாஹ் இலகுவை (செல்வ விசாலத்தை) ஏற்படுத்துவான். (அல்குர்ஆன்:) ➚
வசதி உள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவு செய்யனும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
அல்லாஹ், ஓர் ஆன்மாவை அதன் வசதிக்கு மேல் (-சக்திக்கு மேல்) சிரமப்படுத்த மாட்டான். அது செய்த நல்லது அதற்கே நன்மையாக இருக்கும். இன்னும், அது செய்த கெட்டது அதற்கே பாதகமாக இருக்கும். எங்கள் இறைவா! நாங்கள் மறந்தால் அல்லது தவறிழைத்தால் எங்களைத் தண்டிக்காதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நீ அதைச் சுமத்தியது போன்று எங்கள் மீது கடினமான (ஒப்பந்த) சுமையைச் சுமத்தாதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு அறவே ஆற்றல் இல்லாததை எங்களைச் சுமக்க வைக்காதே! இன்னும், எங்களை (பாவங்களை) முற்றிலும் மன்னிப்பாயாக! இன்னும், எங்களுக்கு (எங்கள் குற்றங்களை மறைத்து எங்களை) மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன், அரசன்) ஆவாய்! ஆகவே நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! (அல்குர்ஆன்:) ➚
யாருக்கும் அவரது வசதிக்கு மேல் அல்லாஹ் சிரமம் கொடுக்க மாட்டான்.
உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் தங்கும் இடத்தில் அவர்களை தங்க வையுங்கள்! (தங்குமிடத்தில்) அவர்கள் மீது நீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக (-அவர்களை வெளியேற்றுவதற்காக) அவர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள். அவர்கள் கர்ப்பம் உள்ள பெண்களாக இருந்தால் அவர்கள் தங்கள் கர்ப்பத்தை ஈன்றெடுக்கின்ற வரை அவர்களுக்கு செலவு செய்யுங்கள்! அவர்கள் உங்களுக்காக (உங்கள் பிள்ளைகளுக்கு) பாலூட்டினால் அவர்களின் ஊதியங்களை அவர்களுக்குக் கொடுங்கள்! உங்களுக்கு மத்தியில் நல்லதை ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்! (ஒருவர் கூறுகின்ற நல்லதை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளட்டும்.) நீங்கள் (கணவன், மனைவி இருவரும்) சிரமமாகக் கருதினால் அவருக்காக (கணவருக்காக அவரின் குழந்தைக்கு) வேறு ஒரு பெண் பாலூட்டுவாள். (அல்குர்ஆன்:) ➚
அவர்கள் மீது நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப செலவு செய்யுங்கள் என்று சொல்கிறான் அல்லாஹ் அதில் தான் மஹரும் வரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய காலத்திலே ரசூலுல்லாஹ் தங்களது மனைவிமார்களின் மஹரை அவர்கள் நிர்ணயித்தார்கள் யார் திருமணம் முடிக்கப் போவாரோ அவர் மஹரையும் நிர்ணயிப்பார்.
தன்னுடைய பொருளாதாரத்திற்கு ஏற்ப அப்படி இருந்தால்தான் ஒரு ஏழை ஒரு ராணியை கட்ட முடியும் அப்படித்தான் இஸ்லாமிலே கட்டி இருக்கிறார்கள் அப்படி இல்லை என்றால் ஒரு ராணியை ஒரு ஏழை கட்ட முடியுமா? ஒரு ராணி அவர் விரும்பியதை கேட்டால் எனக்கு ஒரு நாட்டை எழுதிவை என்று சொல்வார் எனக்கு நான்கு மஹரை எழுதி வை என்று சொல்வார்
அன்பு சகோதரர்களே! மார்க்கம் அப்படி சொல்லவில்லை அல்லாஹ் சொல்கிறான் நீங்கள் ஒரு தங்க குவியலை கொடுத்தாலும் சரியே என்று அதே நேரத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஹர் விஷயத்திலே வழி காட்டுகிறார்கள் எவ்வளவு எளிமையாக ஆடம்பரம் இல்லாமல் இருக்குமோ அத்தகைய ஒரு எளிமையான மஹரை தங்களுடைய மனைவிமார்களுக்கு கொடுக்க வேண்டும் அவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக.
இதைத்தான் நான் இங்கே நினைவு படுத்தி கொள்கிறேன் ஒரு ஆணிடத்திலும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருமண வாழ்க்கையில் இருக்கக்கூடிய திருமண வாழ்க்கையை சந்திக்கக்கூடிய ஆண்கள் எத்தகைய நற்குணமுடையவர்களாக பொறுமையாளர்களாக, சகிப்பாளர்களாக, விட்டுக் கொடுப்பவர்களாக, மன்னிப்பவர்களாக, எதிர்பார்ப்பற்றவர்களாக இருக்க வேண்டும்.
இன்றைய கலாச்சாரத்தில் இருப்பதைப் போல எதற்கெடுத்தாலும் மாமனார் வீட்டை டிபன்ட் பண்ணி இருப்பது சரியான ஒரு கேவலமான கலாச்சாரம் மோசமான கலாச்சாரம் ஒரு இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரானது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு மட்டுமல்ல மனிதநேயத்திற்கே எதிரானது நீ ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டால் அவளுடைய நல்லது கெட்டது அவளுடைய அத்தனை தேவைகளுக்கும் நீ ஒரு பொறுப்பாளன் நீ ஒரு கேவலத்தை, அவமானத்தை உணர வேண்டும். உன்னுடைய மனைவி நீ திருமணம் முடித்ததற்கு பிறகு உன்னுடைய மனைவி அவளுடைய தகப்பன் இடத்திலே நீ கேட்பது ஒரு கேவலமான பிச்சை எடுக்கக்கூடிய செயல் இதுவாகும்.
என்ன தெரியுமா ஆடம்பரத்தில் பெரிய வசதியான மணமகனை பார்த்து கட்டிக் கொடுத்துவிட்டு அதற்குப் பிறகு அவனது வசதிக்கேற்ப எல்லா செலவுகளையும் அந்தப் பெண்ணை பெற்ற தகப்பன் செய்து கொண்டிருக்கிறானே? இப்படிப்பட்ட திருமணங்களை நாம் சொல்வதுண்டு அதற்கு பதிலாக ஒரு எத்தீமுக்கு கட்டிக் கொடுத்து அவனுக்கு செலவு செய்து இருந்தால் உங்களுக்கு புண்ணியமாக இருந்திருக்கும். ஒரு ஏழைக்கு வீடு இல்லாதவனுக்கு கட்டிக் கொடுத்து அவனுக்கு நீங்கள் செலவு செய்திருந்தால் ஈருலகத்திலும் உங்களுக்கு புண்ணியமாக இருந்திருக்கும்.ஒரு குடும்பத்தை வளர்த்த உயர்த்திய ஒரு நாள் பாக்கியம் இருந்திருக்கும்.
இப்படி விட்டு விட்டு ஒரு அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே? என்ன அவமானம் இது, என்ன கேவலம் இது ஆகவே அல்லாஹ்வின் அடியார்களே! சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும் குறைவான விஷயங்களை நாம் கேட்டாலும் அதன்படி நம்முடைய வாழ்க்கையை அமல் செய்வோமேயானால் அதுதான் நம்முடைய வாழ்க்கையிலே நிறைவை, பரக்கத்தை, அல்லாஹ்வுடைய அருளை நமக்கு கொண்டு வரும் இறுதியாக நம்முடைய உஸ்தாது சொன்னது போன்று தக்வாவை அடிப்படையாக வைத்து கணவனும் சரி,
மனைவியும் சரி இரு விட்டார்கள் குடும்பத்தாரும் சரி தக்வாவை அடிப்படையாக வைத்து அல்லாஹ்வை பயந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு அவர்களுக்கும் அந்த அறிவுரையை நினைவூட்டிக் கொண்டு எனக்கும் அந்த அறிவுரையை இங்கு வந்திருக்கக் கூடிய எல்லோருக்கும் இந்த அறிவுரையை நினைவூட்டி இந்த திருமண உரையை நிறைவு செய்கிறேன்.
அல்லாஹூ சுபஹானஹூதஆலா இந்த திருமண வாழ்க்கை சந்திக்க இருக்கின்ற சகோதர, சகோதரிகளுக்கு அருள் புரிவானாக பரக்கத் செய்வானாக இங்கு வந்திருக்கும் நமக்கு எல்லோருக்கும் மகிழ்ச்சியான, சந்தோஷமான, திருப்தியான அல்லாஹ்வுடைய அன்பும் அல்லாஹ்வுடைய அருளும் பரக்கத்துகளும் நிறைந்த நல்ல சந்ததிகளுடைய வாழ்க்கை அமைத்து தருவானாக ஆமின்.