போர் நெறியும் புனிதக் குர்ஆனும்
அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
ஒட்டு மொத்த உலகமும் புனிதக் குர்ஆன் கட்டளைப்படி நடந்திருந்தால் உலகில் போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?
“போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்” என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.
அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்!
“எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
(போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
“எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!” என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
போருக்கு இது போன்ற பல்வேறு நிபந்தனைகளை இஸ்லாம் விதிக்கின்றது. அப்படியே போர் தொடுத்தாலும், நான்கு புனித மாதங்களில் போரை நிறுத்தி விட வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். “அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதை விடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, நான்கு மாதங்கள் போரை நிறுத்தினால், அந்த இடைவெளி நிச்சயமாக சண்டை செய்யும் நாடுகளுக்கு மத்தியில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்தி விடும். பொதுவாக மனிதன் செய்யும் காரியத்தில் ஓர் இடைவெளி ஏற்படும் போது அதை எளிதில் மீண்டும் துவக்கி விடுவது கிடையாது. அல்குர்ஆன் இந்த உளவியலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி ஒரு சமாதானத்தை ஏற்படுத்துகின்றது. இதையும் மீறி சண்டை தொடர்ந்தால் போர் தாக்குதலில் ஒரு வரம்பை நிர்ணயிக்கின்றது.
நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.
உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
தீமையின் கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.
போரின் போது புனிதக் குர்ஆன் கூறும் இந்த வரைமுறையை உலகில் எந்த ஒரு வேதமும், எந்த ஓர் அரசாங்கமும், ஆட்சியாளரும் கூறவில்லை. இந்த விதிமுறையை இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா மீறியதால் தான் உலக வரலாற்றில் மறக்க முடியாத ஹிரோஷிமா, நாகசாகி பேரழிவு நிகழ்ச்சி ஏற்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது நடுநிலை வகித்து வந்த அமெரிக்காவை வம்புக்கிழுப்பது போல், ஜெர்மனியின் நேச நாடான ஜப்பான், ஹிட்லரின் தூண்டுதலின் பேரில் அமெரிக்காவின் பியர்ல் துறைமுகத்தைத் தாக்குகின்றது. 1941ம் ஆம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி இந்தத் தாக்குதல் நடைபெற்றது. அந்தத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 அமெரிக்கப் போர்க் கப்பல்களையும், 200 போர் விமானங்களையும் ஜப்பானிய விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதில் 3000 அமெரிக்க வீரர்கள் பலியாயினர்.
அவ்வளவு தான்! அன்றே அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், ஜப்பான் மீதும் அதைத் தூண்டி விட்ட ஜெர்மனி மீதும் யுத்தப் பிரகடனம் செய்தார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும் குதித்தது. பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து நேச நாடுகளாகக் களத்தில் குதித்தன.
1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, கால் டிப்பெட் என்பவரின் தலைமையில் 11 பேர் அடங்கிய விமானப் பணிக்குழுவினர் ஜப்பான் ஹிரோஷிமாவின் அயியாயி என்ற பாலத்தைத் தகர்ப்பதற்காக விண்வெளியில் வட்டமடிக்கின்றனர்.
அழிவு சக்தி அமெரிக்காவின் விமானம் ஹிரோஷிமாவின் வானில் வட்டமடித்து அணுகுண்டைப் போடுகின்றது. அந்த அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய் – குட்டிப் பையன் என்பதாகும். பாலத்தைக் குறி வைத்துப் போடப்பட்ட அந்த அணுகுண்டு, கொஞ்சம் தவறி 800 அடி தள்ளி விழுகின்றது.
அவ்வளவு தான்!
மூன்று மீட்டர் நீளம், முக்கால் மீட்டர் விட்டம், நான்கு டன் எடை கொண்ட அந்த அணுகுண்டு முட்டை ஓர் அக்கினிக் குஞ்சைப் பொறிக்கின்றது. யுரேனியம், புளூட்டோனியம் உரசலில் நியூக்ளியஸ் இரண்டாக உடைந்து அது நியூட்ரான்களாக அக்னி சிறகு விரித்து பூமியை நோக்கிப் பறந்து வருகின்றது.
அணுகுண்டு முட்டையிலிருந்து அக்னிக் குஞ்சு வெளியான போது அதன் முதல் வெப்பம் 10,000 டிகிரி செல்சியஸ். அந்த சாப்பறைவை சாவகாசமாகத் தரையிறங்கிய போது அதன் வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ்.
அவ்வளவு தான். அந்த அக்னிக் குஞ்சு தின்று முடித்த உயிர்களின் எண்ணிக்கை ஒன்றே கால் லட்சம். சிதைந்தவர்கள் 30,524 பேர், காயம் பட்டவர்கள் 79,130 பேர், காணாமல் போனவர்கள் 3,622 பேர்.
ஆகஸ்ட் 9ம் தேதி பாக்ஸ் கார் என்ற விமானம், கேப்டன் ஸ்வீனி என்பவரது தலைமையில் ஜப்பானின் கோகுரா துறைமுகத்தின் மீது குண்டு போடுவதற்காகப் பறந்து கொண்டிருக்கிறது. அந்தக் குண்டின் பெயர் ஃபேட் பாய் – கொழுத்த பையன் அல்லது குண்டுப் பையன்.
கோகுரா துறைமுகம் சரியாகத் தெரியாததால் அந்தக் குண்டுப் பையனை நாகசாகி துறைமுகத்தில் நழுவ விடுகின்றார் அந்தக் கேப்டன். வெடித்த மறு கணத்திலேயே வெந்து போனவர்கள் 35,000 பேர். கதிரியக்கத் தாக்குதலில் கரிந்து போனவர்கள் 40,000 பேர்.
ஜப்பான் மட்டுமல்ல! மனித நேயமிக்க உலக மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த போது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமேன் சொன்ன அக்கினி வார்த்தைகள்:
“இது வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள்!”
வயோதிகர்கள், வாலிபர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் அழித்த ஒரு நாளை வரலாற்றில் முக்கியமான நாள் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறுகின்றார்.
பியர்ல் துறைமுகம் தாக்கப்பட்டதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, அதற்கு ஈடான ராணுவ வீரர்களைத் தாக்கினால் நியாயம்! ஆனால் அதற்குப் பதிலாக லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்லும் பேரழிவை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்?
இப்போது குர்ஆன் கூறும் போர் நெறியைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.
உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
உலகில் வேறு எந்த மதமாவது இப்படியொரு புனித நெறியைப் போதித்திருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள்.
மறுமை நம்பிக்கை தான் அவர்களை மனித மாணிக்கங்களாக ஆக்கியது. மறுமையில் தொடரும் மனித உரிமை விசாரணை அவர்களை இதுபோன்ற கொடுமைகள் நடத்துவதை விட்டும் தடுத்தது.
அல்குர்ஆன் இறங்குவதற்கு முன்னால் பெண்ணினம் ஒரு பேயினம்; அது ஓர் ஈன இனம் என்று உயிருடன் புதைத்துக் கொண்டிருந்தவர்கள் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்த அந்த அரபு மக்கள்!
என்ன பாவத்துக்காக கொல்லப் பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது…
திருக்குர்ஆனின் இந்த வசனம் அவர்களின் கல் மனதைக் கரைய வைத்தது. இன்றைக்குப் பெண்ணினத்திற்குப் பெருமதிப்பு கொடுக்கும் பேரன்பு மிக்கவர்களாக மாறி விட்டனர். அப்படி மனித உயிருக்கு மாண்பும், மரியாதையும் அளிக்கும் ஒரு சமுதாயமாக இஸ்லாமியச் சமுதாயம் பரிணமித்து விட்டது. இதற்கு அடிப்படையாக அமைந்தது மறுமை உலக நம்பிக்கை தான்.
பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் அந்த அரக்கர்களை, ஓர் இருபத்து மூன்று ஆண்டு கால வரலாற்றில் இரக்க குணமுடையவர்களாக மாற்றிய அல்குர்ஆன், அதைப் போதிக்கும் தூதர் வழியாக மனித உயிரைப் பற்றிய பிரகடனத்தை அறிவிக்கச் செய்கின்றது. அதன்படி அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது அறிவிக்கும் பிரகடனத்தைப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “விடை பெறும்‘ ஹஜ்ஜின் போது (ஆற்றிய உரையில்), “மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹஜ்) மாதம் தான்” என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த ஊர் (“மக்கா‘)தான்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹஜ் பத்தாம்) நாள் தான்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே அல்லாஹ் உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றைப் புனிதமாக்கியுள்ளான்” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா?” என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள், “ஆம்” என்று நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளித்தனர்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
மாநபியின் இந்த வேண்டுகோளை முஸ்லிம் சமுதாயம் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு சிலர் மீறியிருக்கலாம். ஆனால் மேற்கத்தியர்கள் மீறியது போன்று மீறியதில்லை. இதற்கு எடுத்துக் காட்டாக இரண்டு உலகப் போர்களைக் கூறலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சியில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் போட்டு போட்டு முன்னேறின. ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்து குவித்தன. இந்தப் பொருட்களை விற்பனை செய்ய பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பல காலனி நாடுகள் சந்தைகளாக விளங்கின. ஜெர்மனிக்கு அப்படிப்பட்ட காலனி நாடுகள் எதுவும் இல்லை. எனவே பிரஞ்சு, பிரிட்டானிய காலனி நாடுகளில் சிலவற்றையாவது கைப்பற்றினால் தான் ஜெர்மனியின் தொழில் முன்னேற்றம் சாத்தியம்; இதற்கு உலகப் போரைத் தொடங்குவது தான் வழி என்று ஜெர்மன் கருதியது. இதனால் ஆஸ்திரியாவுக்கும், செர்பியாவுக்கும் இடையே ஏற்பட்ட போரை உலகப் போராக மாற்றியது. செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யா போரில் குதித்தது அதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
1914ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தொடங்கி, 1918, நவம்பர் 11 அன்று முடிவடைந்த முதல் உலகப் போரின் இழப்புகளை வரலாற்றாசிரியர்கள் பின்வருமாறு கணித்துள்ளனர்.
இறந்து போன பொது மக்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம்.
ராணுவ வீரர்கள் நாடு வாரியாக,
ஜெர்மனி – 20,00,000
ரஷ்யா – 17,00,000
பிரான்ஸ் – 13,60,000
ஆஸ்திரியா, ஹங்கேரி – 12,00,000
பிரிட்டன் – 7,60,000
இத்தாலி – 6,50,000
துருக்கி – 3,75,000
பிரிட்டிஷ் சாம்ராஜ்ய நாடுகள் – 2,50,000
ஐக்கிய அமெரிக்கா – 1,26,000
இதில் காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், காயம் பட்டவர்கள் ஆகியோரின் தொகை சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மட்டும் மூன்றே முக்கால் கோடியைத் தாண்டும்.
51 மாதங்கள் நடைபெற்ற இந்த முதல் உலகப் போர் ஜெர்மனியின் சரணாகதியுடன் முடிவடைந்தது. மன்னர் கெய்ஸர் முடி துறந்தார். உலகத்தையே ரணகளமாக்கிய சர்வாதிகாரி ஒழிந்தார் என்று உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் அது தற்காலிகமானது தான் என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓர் உலகப் போர் தொடங்கியது. கெய்சரை விடப் பன்மடங்கு இனவெறியைத் தூண்டி விட்டுப் பேசி ஹிட்லர் இதைத் தொடங்கி வைத்தார்.
1945ம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனில் 2 கோடி பேர், போலந்து நாட்டில் 60 லட்சம் பேர் உட்பட உலகத்தின் 70 நாடுகளைச் சேர்ந்த ஐந்து கோடிப் பேர் பலியாயினர்.
இந்தப் போர்கள் உலகப் போர்கள் என்றால் சில ஆண்டுகளுக்கு முன் இராக்கின் மீது அமெரிக்கா தொடுத்த போர் ஓர் அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போராகும். ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியின்றி, இறையாண்மை மிக்க ஒரு அரசாங்கத்தின் மீது அமெரிக்கா நடத்திய காட்டுமிராண்டித்தனமான ஆதிக்கப் போர். இதற்கு அது காட்டிய காரணம், இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என்பது தான்.
மார்ச் 20ம் தேதி, 2003ம் ஆண்டு அமெரிக்க, பிரிட்டன் படைகள் இராக்கின் மீது படையெடுத்தன. ஆனால் இதுவரை அந்தப் பேரழிவு ஆயுதங்களை கண்டுபிடிக்கவில்லை.
இறுதியில் இராக் அதிபர் சதாமைக் கைது செய்து அவரைத் தூக்கில் போட்டு, அமெரிக்கா தனது வெறியைத் தணித்துக் கொண்டது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என சுமார் 6 லட்சம் மக்களைக் கொன்று குவித்தது.
லட்சக்கணக்கான மக்களை முடமாக்கியது.
லட்சக்கணக்கானோரை அகதிகளாக்கியது.
லட்சக்கணக்கான குழந்தைகளை அனாதைகளாக்கியது.
லட்சக்கணக்கானோரை சிறைபிடித்து சித்ரவதை செய்தது.
இவ்வாறு அமெரிக்க, பிரிட்டானியர்கள் செய்த இந்த அராஜகப் போர் இருபத்தோறாம் நூற்றாண்டின் மாபெரும் மனித உரிமை மீறலாகும்.
இஸ்லாமிய வரலாற்றில் எங்கேனும், ஏதேனும் ஓர் இடத்தில்; இது போன்ற மனிதப் பேரழிவுகளைக் காட்ட முடியுமா? இதற்குக் கடிவாளமாக, கவசமாக இருந்து இஸ்லாமிய சமுதாயத்தைக் காத்துக் கொண்டிருப்பது திருக்குர்ஆன் தான். அது ஊட்டுகின்ற, போதிக்கின்ற மறு உலக நம்பிக்கை தான். இப்படிப்பட்ட நம்பிக்கை மூலமாகத் தான் உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் அனைத்துத் தீமைகளுக்கும் தீர்வு காண முடியும்.
இன்று உலகை சீர்கேட்டிற்குக் கொண்டு போய்க் கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சனைகள்:
உலகில் நடக்கும் அனைத்துப் போர்களுக்கும் இது ஒரு மூல காரணமாக அமைந்துள்ளது.
எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும் உலகில் அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஆதமின் மகன் தான்; அவனும் உன் சகோதரன் தான். எனவே நீங்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் ஒரு குலத்தார் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான் என்று திருக்குர்ஆன் உணர்த்துகின்றது.
உங்களில் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவதால் ஒருவர் உயர்ந்தவர் ஆகி விட மாட்டார்.
“மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!”
என்று மொழி வெறி பிடித்த அரபியரைப் பார்த்து, உலக மக்கள் அனைவரும் கூடி நிற்கும் ஹஜ்ஜின் போது இந்தச் சகோதரத்துவ முழக்கத்தை, தீண்டாமை ஒழிப்புப் பிரகடனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்கின்றார்கள்.
இன்றைக்கும் இந்தியா தீண்டாமை எனும் தீயில் வெந்து கொண்டு தான் உள்ளது. இன்னும் ஒரு சில ஜாதியினருக்கு, தேனீர் விடுதிகளில் தனிக் குவளைகளில் தேநீர் பரிமாறப்படும் அவல நிலை! ஒரு சில ஜாதியினர் இன்னும் மலம் வாரும் பரம்பரைத் தொழிலை விட்டு மாறவில்லை. இப்படியொரு தீண்டாமை இந்தியாவில் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.
வளர்ந்து விட்ட அமெரிக்காவிலும் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவுக்கு எதிராக வெள்ளையர் இனம் இந்தச் சாக்கடை நீரை அள்ளி வீசுகின்றது. கருப்பர், வெள்ளையர் சாதியச் சண்டை அறிவியலின் உச்சியிலிருக்கும் அமெரிக்காவிலும் அகன்றபாடில்லை.
இன வெறி பற்றி இஸ்லாம்
குருட்டுக் கொடியின் கீழ் இன வெறிக்கு அழைப்பு விடுக்கவோ இன வெறிக்காக ஒத்துழைக்கவோ செய்து அதற்காகக் கொல்லப்படுபவர் அறியாமைக் கால மரணத்தையே சந்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி)
அறியாமைக் கால மக்களிடம் இருந்த மிகப் பெரிய பாவமான காரியம் இன வெறியாகும். தான் உயர்ந்தவன், தங்கள் குலம் உயர்ந்தது தன் குலத்தைச் சார்ந்தவன் தவறு செய்திருந்தாலும் அவனுக்காக நியாய அநியாயம் பார்க்காமல் போராடுவது. அதற்காகப் பலரைக் கொல்வது என்பது அவர்களிடம் ஊறிப் போன செயல்பாடாகும். இறையச்சத்தின் மூலமே ஒருவன் உயர்வடைய முடியும், குலத்தாலோ அல்லது நிறத்தாலோ அல்லது மொழியாலேோ ஒருவன் இன்னொருவனை விட உயர்ந்து விட முடியாது. என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
யாராவது இனவெறிக்காக மட்டும் அல்லது இனத்திற்காக நியாயமின்றிப் போர் செய்து. அதில் இறந்து விட்டால் அவர் இஸ்லாத்தின் கொள்கையை ஏற்றவராக மரணிக்கவில்லை என்று நபிகளார் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். எனவே யாரும் இனத்தை வைத்து நிறத்தை வைத்து, மொழியை வைத்து ஆட்டம் போடக் கூடாது.
இலங்கையில் இந்த மொழிவாதம் தான் இதுவரை 60,000க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக அமைந்தது. ஒன்றுபட்ட இந்தியாவிலேயே கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் தண்ணீர் தகராறு!
இப்படிப்பட்ட வேற்றுமைகளை எல்லாம் இந்தக் குர்ஆன் ஒரேயடியில் அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கி விடுகின்றது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
இதையெல்லாம் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது. மறுமை அச்சத்தின் மூலமாகத் தான் முடியும் என்பதை திருக்குர்ஆன் இந்த நூற்றாண்டு வரை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கின்றது.
இன்று உலகத்தில் இதுவரை தீராத, தீர்க்க முடியாத இதரப் பிரச்சனைகளுக்கும் இந்தத் திருக்குர்ஆன், மறுமை நம்பிக்கை எனும் ஒரு மாமருந்தை வைத்திருக்கின்றது.
ஆட்சி அதிகாரத்தில், நிர்வாகத் துறையில் லஞ்சம், ஊழல் நீதித்துறையில் ஊழல்
இன்று நிர்வாகத் துறையில் லஞ்சம், ஊழல் ஏற்பட்டால் அதை நீதித் துறை சரி செய்யும். மங்கைக்கு சூதகம் ஏற்பட்டால் கங்கையில் குளிக்கலாம்; அந்த கங்கையே சூதப்பட்டால் என்ன செய்ய முடியும்? என்று கேட்பார்கள். அது போன்று நிர்வாகத் துறையைச் சரி செய்ய வேண்டிய நீதித்துறை உலகெங்கிலும் லஞ்ச லாவண்யத்தில், ஊழலில் ஊறிப் போய்விட்டது.
நிதியை வாங்கி நீதியை விற்கும் நீர்த்துப் போன நீதித்துறை! இதற்கு அடிப்படைக் காரணம், சட்டம் என்ன செய்யும் என்ற தைரியம் தான். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து, “மனிதா! இறந்த பிறகு ஒரு விசாரணை இருக்கின்றது; அங்கு வா! அதிலிருந்து நீ தப்ப முடியாது’ என்று திருக்குர்ஆன் எச்சரிக்கை செய்கின்றது.
போதை மருந்து கடத்தல்
கலப்படம்
பதுக்கல்
பெண் சிசுக் கொலை
சினிமா, ஆபாசம்
ஓரினச் சேர்க்கை
ஆட்சியாளர்களின் அராஜகம்
அடுத்த நாட்டு ஆக்கிரமிப்பு
விவாக ரத்து
வரதட்சணை
பாகப்பிரிவினையில் மோசடி
வயதான பெற்றோரைப் புறக்கணித்தல்
நில மோசடி
சூதாட்டம், லாட்டரி
புகை பிடித்தல்
தனிநபர் ரகசியத்தை அம்பலப்படுத்துதல்
கற்பு நெறியுள்ள பெண்கள் மீது அவதூறு பரப்புதல்
சைபர் கிரைம்
இன்னும் என்னென்ன பாவங்கள், குற்றங்கள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் திருக்குர்ஆன் மட்டுமே தீர்வைத் தருகின்றது.
இஸ்லாம் இவற்றுக்கு இரு விதமான தீர்வுகளைத் தருகின்றது. ஒன்று சட்டத்தின் அடிப்படையில்! மற்றொன்று, மறுமை அச்சத்தின் அடிப்படையில்!
இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!