பைபிளில் இருந்து குர்ஆன் காப்பியடிக்கப்பட்டதா?

மற்றவை: மாற்றுமதத்தோரின் கேள்விகள்
கேள்வி

பைபிளுக்குப் பிறகு தான் குர்ஆன் வந்தது. பைபிளில் இருந்து சில வசனங்களை குர்ஆன் காப்பி அடித்துக் கூறியுள்ளது என்று கிறித்தவர்கள் சிலர் கேட்கிறார்கள். இதற்கு நாம் சொல்லும் பதில் என்ன?

பதில்

இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் முன்னுரையில் காலத்தால் முரண்படாதது என்ற உள் தலைப்பில் பின்வருமாறு விளக்கியுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் ஆய்வாளர்கள் யூத, கிறித்தவ சமுதாயமக்களின் வேதங்களிலிருந்து கற்று இவர் கூறுகிறார் எனக் கூறியதுண்டு. இன்றைக்கும் கூடசில கிறித்தவர்கள் இவ்வாறு கூறுவதுண்டு.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே திருக்குர்ஆனின் தரத்தைப் பார்த்து வியந்து யாரோ இவருக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர் என்று விமர்சனம் செய்தனர்.

ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன் வாழ்ந்த ஆதாம், நோவா, மோசே, யோவான், யோபு, தாவீது, ஸாலமோன், இயேசு போன்ற பல்வேறு இறைத்தூதர்கள் பற்றி யூத கிறித்தவ வேதங்கள் கூறுகின்றன. திருக்குர்ஆனும் இவர்களைப் பற்றிப் பேசுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முந்தைய வேதங்கள் வழியாக அறிந்து அதைக் கூறுகிறார் எனக் கூறுகின்றனர்.

பல காரணங்களால் இது தவறாகும்.

மேற்கண்ட நன்மக்களின் பெயர்களைத் தான் திருக்குர்ஆன் கூறுகிறதே தவிர யூத, கிறித்தவ வேதங்கள் கூறுவது போல் அவர்களைப் பற்றிக் கூறவில்லை.

மேற்கண்ட நன்மக்கள் குடி, விபச்சாரம், மோசடி போன்ற தீய பழக்க வழக்கங்கள் உடையோராக இருந்தனர் என்று மற்ற வேதங்கள் கூறுவது போல் திருக்குர்ஆன் கூறவில்லை. மாறாக அவர்கள் நன்மக்களாகத் திகழ்ந்தார்கள் என்று கூறுகிறது.

அவர்கள் வாழ்வில் நாம் படிப்பினை பெறத் தேவையான முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது. அதுவும் மற்ற வேதங்கள் கூறுவதற்கு எதிராகக் கூறுகிறது.

“இவர் அவரைப் பெற்றார்; அவர் இவரைப் பெற்றார்”என்று யூத, கிறித்தவ வேதங்களில் உள்ளது போல் தலைமுறைப் பட்டியல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை.

இவ்வாறிருக்க முந்தைய வேதங்களை முஹம்மது நபியவர்கள் காப்பியடித்து விட்டார்கள் எனக் கருத முடியாது.

யூத, கிறித்தவ வேதங்களில் பெருமளவுக்கு வரலாறுகளும், மிகக் குறைந்த அளவுக்கு மட்டுமே போதனைகளும் உள்ளன. வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அந்த வேதங்களில் எவ்வித வழிகாட்டுதலும் காணப்படவில்லை.

ஆனால், திருக்குர்ஆன் மனிதர்கள் படிப்பினை பெறத் தேவையான சில வரலாற்றுத் துணுக்குகளை மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும், மனிதன் சந்திக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளிலும் ஏற்கத்தக்க தீர்வையும் கூறுகிறது. இவை யூத, கிறித்தவ வேதங்களில் கூறப்படாதவை. எனவே, அவ்வேதங்களிலிருந்து திருக்குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவது அடிப்படையில்லாத குற்றச்சாட்டாகும்.

மற்ற சமுதாய மக்களைப் போலவே யூத, கிறித்தவ மக்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அதிக அளவில் நபிகள் நாயகத்தை இறைத்தூதராக ஏற்றனர். தங்கள் வேதங்களில் உள்ளதையே காப்பியடித்துக் கூறும் ஒருவரைத் தங்கள் வழிகாட்டியாக அம்மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.