பெல்ஜியம் நாட்டவர் நேரத்தைக் கணித்து தொழுவது சரியா?
பெல்ஜியம் நாட்டவர் நேரத்தைக் கணித்து தொழுவது சரியா?
நான் பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டில் வசித்து வருகிறேன். இங்கே உள்ள பள்ளியில் தொழுகை மற்றும் நோன்பு நேரங்களை அவர்கள் வசதிப்படி அமைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, ரமலான் மாதம் கோடையில் வந்தால் எங்களுக்கு மக்ரிப் தொழுகை இரவு பத்து மணிக்கு வரும், இதைக் கணக்கில் கொண்டால் எங்களின் ஒரு நாள் நோன்பின் கால அளவு சுமார் பதினான்கு மணி நேரம், இந்தச் சூழலில் இங்கே உள்ள பள்ளியில் சவூதி நேரத்தைப் பின்பற்றி நோன்பு திறத்தல் மற்றும் மக்ரிப் தொழுகையை அமைத்துக் கொள்கிறார்கள். ரமலான் அல்லாத நேரத்தில் கோடையில் மக்ரிப் தொழுகையை இரவு பத்து மணிக்கும, மக்ரிப் முடிந்த உடனே இஷா தொழுகையையும் நடத்துகிறார்கள். குளிர் காலம் என்றால் மக்ரிப் தொழுகை மாலை நான்கு மணிக்கும், இஷா இரவு ஏழு மணிக்கும் என்று நிர்ணயித்துள்ளார்கள். இவர்கள் செய்வது சரியா? இது போன்ற நாடுகளில் தொழுகை மற்றும் நோன்பை எந்த நேரப்படி பின்பற்றுவது? தெளிவான விளக்கம் தேவை.
ஆதம் முஹம்மத்.பெல்ஜியம்.
பதில் :
தொழுகை, நோன்பு ஆகிய இரு வணக்கங்களையும் எந்த நேரங்களில் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் தெளிவாகக் கூறியுள்ளது. தொழுகையை நிறைவேற்றுவதற்கு மார்க்கம் கூறியுள்ள நேரங்களைத் தவிர்த்து நமது வசதிக்கேற்ப வேறு நேரங்களைத் தேர்வு செய்யக் கூடாது.
தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا(103)4
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
தொழுகையைப் பிற்படுத்துவது தீயவர்களின் செயல் என்றும், கடமையான தொழுகைகளை குறிக்கப்பட்ட நேரத்திலேயே நிறைவேற்ற வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1027 حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ ح و حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَا حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا أَوْ يُمِيتُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا قَالَ قُلْتُ فَمَا تَأْمُرُنِي قَالَ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ وَلَمْ يَذْكُرْ خَلَفٌ عَنْ وَقْتِهَا رواه مسلم
அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “தொழுகையை அதன் நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?” என்று கேட்டார்கள். நான் (அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகையை அதன் நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்து கொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்” என்று கூறினார்கள்.
தொழுகைகளை அவற்றுக்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதையே அல்லாஹ் விரும்புகிறான்.
528حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ الصَّلَاةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي رواه البخاري
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்றார்கள்.
தொழுகை நேரங்கள்
சுப்ஹுத் தொழுகையின் நேரம்
சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரத்திலிருந்து சூரியன் உதிக்கத் துவங்கும் வரை உண்டு.
சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்பு வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
லுஹர் தொழுகையின் நேரம்
லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சியை விட்டு மேற்கு நோக்கிச் சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரை உண்டு. அதாவது சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் வரை லுஹர் நேரம் நீடிக்கும்.
லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகி அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
அஸ்ர் தொழுகையின் நேரம்
அஸ்ர் தொழுகையின் நேரம் ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போல ஒரு அளவு வந்ததிலிருந்து அதாவது சூரியன் உச்சி சாய்ந்து 80 நிமிடங்கள் கடந்துவிட்டால் அப்போதிருந்து சூரியன் மறையத் துவங்கும் வரை அஸர் நேரமாகும்.
ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். (முதல் தடவை) இமாமத் செய்யும் போது… ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
மக்ரிப் தொழுகையின் நேரம்
மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து மேற்கே செம்மை மறையும் வரை உண்டு.
மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மேகம் மறைவதற்கு முன்பு வரை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இஷா தொழுகையின் நேரம்
சூரியன் மறைந்து செம்மேகமும் மறைந்துவிட்டால் இஷாத் தொழுகையின் நேரம் ஆரம்பமாகி விடுகின்றது.
இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
தினமும் பெல்ஜியம் நாட்டில் சூரியன் உதிக்கிறது. ஆறுமாதம் பகலாகவும் ஆறுமாதம் இரவாகவும் உள்ள பகுதிகளில் தான் கணித்துக் கொள்ளலாம். பெல்ஜியம் நாட்டில் சூரியன் உதிப்பது, மறைவது, உச்சி சாய்வது ஆகிய நிலைகளை வைத்து தொழுகை நேரங்களை முடிவு செய்ய முடியும். ஒரு பருவத்தில் தொழுகை நேரம் நீண்ட நேரம் நீடிப்பதாலும், மற்றொரு பருவத்தில் குறைந்த நேரம் இருப்பதாலும் பிரச்சனை இல்லை. மேற்கண்ட நேரங்களை அடிப்படையாகக் கொண்டு உங்கள் தொழுகை முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பெல்ஜியம் நாட்டில் உள்ளவர்கள் இதற்கு மாற்றமாக சவூதி நேரங்களை அடிப்படையாகக் கொண்டு தொழுகை முறைகளை அமைத்துக் கொள்வது குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் எதிரான போக்காகும்.
நோன்பின் நேரம்
சுப்ஹ் நேரம் தொடங்கியதிலிருந்து சூரியன் முழுமையாக மறைகின்ற வரை நோன்புடைய நேரமாகும். பெல்ஜியம் நாட்டில் சுப்ஹ் நேரம் எப்போது வருகின்றது? சூரியன் எப்போது மறைகின்றது? என்பதைக் கவனித்து நோன்பு நோற்க வேண்டும்.
குளிர் காலங்களிலும் கோடை காலங்களிலும் இரவு பகலுடைய நேரங்கள் வித்தியாசப்படும். கோடை காலங்களில் பகற்பொழுது 14 மணி நேரமாக இருந்தாலும் 14 மணி நேரம் நோன்பு நோற்க வேண்டும்.
நேரம் கூடுகிறது என்பதற்காக சூரியன் மறைவதற்கு முன்பே நோன்பு திறந்துவிட்டால் அந்த நோன்பு ஏற்கப்படாது. அதே போன்று குளிர் காலங்களில் பகற்பொழுதின் நேரம் குறையும். இதற்காக சூரியன் மறைந்த பிறகும் நோன்பைத் தாமதப்படுத்துவது கூடாது. பகல் நீண்டாலும் சுருங்கினாலும் சூரியன் மறைவதைக் கணக்கில் கொண்டு நோன்பு துறக்க வேண்டும். இதற்கு மாற்றமாக சவூதியில் சூரியன் மறையும் நேரத்தைக் கணக்கில் கொண்டு நோன்பு துறந்தால் அது நோன்பாக அமையாது.
துருவப்பிரதேசத்தில் ஆறுமாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். இவர்கள் தினமும் சூரியன் உதிப்பதையோ, மறைவதையோ, உச்சி சாய்வதையோ காண முடியாது.
இவர்கள் ஒவ்வொரு 24 மணி நேரத்தை ஒரு நாள் எனக் கணக்கிட்டு அந்த நேரத்துக்குள் ஐந்து நேரத் தொழுகைகளைக் கணித்துக் கொள்ளலாம். அது தான் அவர்களுக்குச் சாத்தியமாகும்.
ஆறு மாதம் இரவாக இருக்கும் போது இரவிலேயே அவர்கள் லுஹர், அஸர் தொழுகைகளைத் தொழுவார்கள். ஆறு மாதம் பகலாக இருக்கும் போது பகலில் அவர்கள் சுப்ஹு, மக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளைத் தொழுவார்கள்.
இதற்கான ஆதாரம் வருமாறு
….அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும், அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)
நூல்: முஸ்லிம்
இந்த ஹதீஸில் கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
எப்போது கணிக்கச் சொன்னார்கள்? ஒரு நாள் ஒரு வருடம் போன்று நீண்டதாக (அதாவது ஆறு மாத அளவு பகலாகவும், ஆறு மாத அளவு இரவாகவும்) இருக்கும் போது தான் கணிக்கச் சொன்னார்கள். இந்த இடத்தில் கணிப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. இதே அடிப்படையில் துருவப் பிரதேசத்தில் ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். அங்கே மக்கள் வாழ்ந்தால் அவர்கள் ஒரு வருடம் முழுவதற்கும் ஐந்து வேளை மட்டுமே தொழ வேண்டும் என்று கூற முடியாது.
அவர்கள் கணித்துக் தான் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடியும்.
சந்திரனில் வாழ்கின்ற சூழ்நிலை இல்லை. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கணிப்பது தான்.
இது போன்ற நிலை பெல்ஜியத்தில் இல்லாத போது சவூதி நேரத்தை அடிப்படையாகக் கொண்டு வணக்கங்கள் செய்தால் அவை இறைவனால் ஏற்கப்படாது.