பெருமானாரின் பெருந்தன்மை
அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர் ஆவார்கள். அவர்கள் மனித சமுதாயத்தை அழகிய பண்பிலும் அருங்குணத்திலும் வார்த்தெடுத்தார்கள் என்றால் மிகையல்ல. அவ்வாறு நபி (ஸல்) அவர்களின் வாழ்வு நெடுங்கிலும் அழகிய பண்பாலும், நற்குணத்தாலும், நபியவர்கள் இருந்திருகின்றார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்க முடிகிறது. இந்த உரையில் நபிகளாரின் பெருந்தன்மை என்ற தலைப்பில் கீழ் சில செய்திகளை நாம் பார்க்கலாம்.
முஹம்மது நபியின் தோழர்களில் ஒருவரும் இஸ்லாமியக் குடியரசின் இரண்டாவது ஆட்சித் தலைவருமான உமர் (ரலி) அவர்களது அவையில் நடந்த ஒரு நிகழ்வு, அவர்கள் பாடம் பயின்ற பாசறையையும் அதன் அற்புத ஆசிரியரையும் படம் பிடித்துக் காட்டுகின்றது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்களின் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்.
உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா” என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்” என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.
உயைனா அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள்.
உடனே ஹுர்ரு அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!” (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்” என்று சொன்னார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.
நூல்: (புகாரி: 4642)
உமர் (ரலி) அவர்கள் கோபத்திற்கும், கொந்தளிப்பிற்கும் பேர் போனவர்கள். ஆனால் அவர்கள் தமது அவையில் உள்ள ஓர் இளைஞரின் வாயிலிருந்து வந்த ஒருசில மந்திரச் சொற்களில் அடங்கி, அமுங்கிப் போய்விடுகின்றார்கள். ஆர்த்தெழுந்த அந்த ஆவேசக்காரரை, ஆட்சித் தலைவரை அடக்கிய அந்த மந்திரச் சொற்கள் திருக்குர்ஆன் வசனத்தின் வரிகள் தான்.
பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!
இதற்குத் தான் அந்த இரும்பு மனிதர் போஅடங்கிப் கின்றார்.
முஹம்மது நபி (ஸலர்) அவர்களை வார்த்ததும் வடித்ததும் இந்த அல்குர்ஆன் தான். அந்தப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள் தான் உமர் (ரலி) அவர்கள். இந்த உமர் (ரலி) இப்படியென்றால் அன்னாரது ஆசான் நபி (ஸல்) அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதற்குக் கட்டியம் கூறுகின்ற நிகழ்வு தான் மேற்கண்ட நிகழ்வாகும்.
நபி (ஸல்) அவர்களுக்கும் இதே போன்ற ஒரு நிகழ்வு நடக்கின்றது.
பெருமானாரின் சுபாவத்திலேயே அமைந்த பெருந்தன்மை
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஃபதக்‘ நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள்.
அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) “அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்‘ இருந்தார். அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணை வைப்பாளர்கள், யூதர்கள், இறை நம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
(எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, “எங்கள் மீது புழுதி கிளப்பாதீர்” என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள்.
இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் நபி (ஸல்) அவர்களிடம் “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள்.
உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள்” என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்” என்றார்.
இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவிற்குச் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் “சஅதே! அபூ ஹுபாப் – அப்துல்லாஹ் பின் உபை – சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்” என்றார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன் மீதாணையாக! தங்களுக்குத் தான் அருளிய சத்திய (மார்க்க)த்தை அல்லாஹ் கொண்டுவந்து விட்டான்.
இந்த (மதீனா) ஊர்வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கிரீடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தனர். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கொப்ப இணைவைப்பவர்களையும் வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்களின்) நிந்தனைகளைப் பொறுத்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை)மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக்கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்றபோது அன்னாரின் மூலம் அல்லாஹ் குறைஷி இறைமறுப்பாளர்களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் அவருடனிருந்த இணைவைப்பாளர்களும், சிலைவணங்கிகளும் “(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. ஆகவே, இந்த(இறை)த் தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதி மொழியளித்து விடுங்கள்” என்று கூறி (வெளித்தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர்.
நூல்: (புகாரி: 4566)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவை ஆள்கின்ற ஆட்சித் தலைவர் ஆவார்கள். அந்த ஆட்சித் தலைவருக்கு சரிநிகர் போட்டியாளனாகக் காட்டிக் கொள்ள முனைகின்ற அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பவனை நபி (ஸல்) அவர்கள் கொன்றால் கூட இந்தத் தலைவரை எதிர்த்துக் கேட்க அரபுலகில் எந்தக் கொம்பனும் இல்லை. தண்டிக்க சக்தியிருந்தும் அவரை மன்னித்து, பெருந்தன்மைக்குப் பெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
பெருமானாரின் இதுபோன்ற பெருந்தன்மை தான், சுபாவத்திலேயே ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் கொண்ட உமர் (ரலி) அவர்களைப் பக்குவப்படுத்தியது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் பக்குவப்படுத்தியது பண்புகள் நிறைந்த திருக்குர்ஆன் தான். அதனால் தான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அன்னாரைப் பற்றிக் குறிப்பிடும் போது,
“குர்ஆன் தான் நபி (ஸல்) அவர்களின் குணமாக இருந்தது’ என்று கூறுகின்றார்கள்.
(முஸ்லிம்: 1357) (1233)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே – அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் – எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப் பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர.
நூல்: (புகாரி: 3560)
சுமாமா என்பவர் போர்க்கைதியாகப் பிடித்து வரப்பட்டு பள்ளிவாசல் தூணில் கட்டி வைக்கப்படுகின்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கொண்ட அணுகுமுறையைப் பின்வரும் ஹதீஸ் விவரிக்கின்றது.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்‘ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா‘ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, “(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், ஸுமாமாவே?” என்று கேட்டார்கள். அவர், “நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்.
(என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார்.
மறு நாள் வந்தபோது அவரிடம், “ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்” என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள்.
மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, “நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்” என்று சொன்னார்கள்.
உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை‘ என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், “முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்‘ என்றும் நான் உறுதி கூறுகிறேன்” என்று மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை.
ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது.
உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக்கொண்டு விட்டனர்” என்று சொல்லிவிட்டு, “மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள்.
அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், “நீ மதம் மாறிவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின்•தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது” என்று சொன்னார்கள்.
நூல்: (புகாரி: 4372)
இங்கு நபி (ஸல்) அவர்களிடம் மன்னிப்பு, தண்டிப்பு ஆகிய இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் மன்னிப்பையே தேர்வு செய்கின்றார்கள் என்பதை இந்தச் சம்பவத்தில் நாம் பார்க்கின்றோம். அவர்களது பெருந்தன்மை இங்கு வெளிப்படுகின்றது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிய போது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வுகொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள்.
மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தமது வாளை அந்த மரத்தில் தொங்க விட்டார்கள்.
நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருந்த போது இவர் எனது வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார்.
அந்த வாள் உருவப்பட்டு இவரது கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், “என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?’ என்று கேட்டார். நான், “அல்லாஹ்‘ என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்” என்று கூறினார்கள். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. (மன்னித்து விட்டுவிட்டார்கள்.)
நூல்: (புகாரி: 4135)
இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவருக்கு மரண தண்டனை அளிப்பதற்குரிய அனைத்து நியாயமும் இருந்தது. ஆனால் நபி (ஸல்) அவரைத் தண்டிக்காது மன்னிப்பளித்து, தமது பெருந்தன்மையைக் காட்டுகின்றார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைக்கு மக்காவில் எதிரிகள் விலை நிர்ணயம் செய்கின்றார்கள். அந்த இக்கட்டான கட்டத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது நண்பர் அபூபக்ர் (ரலி) அவர்களும் தப்பி மதீனாவுக்குச் செல்கிறார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) அவர்கள் வர (மக்காவிலிருந்து) மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள்….
….அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு (அவர்களுக்குப் பின்னால்) ஒரு குதிரை வீரர் (சுராகா) அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இதோ!) இந்தக் குதிரை வீரர் நம்மை (நெருங்கி) வந்தடைந்து விட்டார்” என்று கூறினார்கள்.
உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்து விட்டு, “இறைவா! அவரைக் கீழே விழச் செய்!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே குதிரை அவரைக் கீழே தள்ளிவிட்டது; பிறகு கனைத்துக் கொண்டே எழுந்து நின்றது. (உடனே சுராகா மனம் திருந்தி), “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பியதை எனக்கு உத்தரவிடுங்கள்” என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இங்கேயே நின்று கொள். எங்களை பின் தொடர்ந்து வரும் எவரையும் விட்டு விடாதே” என்று கூறினார்கள். இந்த சுராகா முற்பகலில் அல்லாஹ்வின் நபிக்கெதிராகப் போரிடுபவராக இருந்தார்; பிற்பகலில் நபியைக் காக்கும் ஆயுதமாக மாறினார்.
நூல்: (புகாரி: 3906) , 3911
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு அவர்கள் எதிரிகளிடமிருந்து தப்பியோடிய நிகழ்வு! அவர்களது தலைக்கு வலை வீசப்படுகின்றது; விலை பேசப்படுகின்றது. இந்தச் சூழ்நிலையில் தம்மைத் துரத்தி வந்த துரோகியை நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கிறார்கள் என்றால் அல்குர்ஆன் தான் அவர்களை அப்படி வார்த்தெடுத்தது.
وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.
(அல்குர்ஆன்: 41:34) ➚, 35.)
இந்தச் சம்பவத்திலும் இதற்கு முன்பு நாம் கண்ட சம்பவங்களிலும் நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனின் மேற்கண்ட போதனைகளைச் செயல்படுத்திக் காட்டி, பகையை வெல்லும் பாக்கியவான் என்பதை நிரூபிக்கின்றார்கள். பெருந்தன்மையுடன் நடந்து பெருந்தகையாகத் திகழ்ந்திருக்கின்றார்கள்.
நல்ல காரியத்திற்கு இப்படி ஈவு இரக்கம் காட்டுகின்ற இனிய நபியவர்கள், பாவமான காரியம் என்றால் தயவு தாட்சண்யம் பார்ப்பது கிடையாது.
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“அஸ்த்‘ எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (“ஸகாத்‘ வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்!” என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், “அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம்.
அவரோ நம்மிடம் வந்து “இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தமது பிடரியில் சுமந்துகொண்டு நிச்சயம் வருவார்.
அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்” என்று கூறிவிட்டு “(இறைவா! உனது செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்” என்று கூறினார்கள்.
நூல்: (புகாரி: 6636)
ஜகாத் நிதி என்பது ஏழை மக்களுக்குப் போய்ச் சேரவேண்டிய பொருளாகும். அந்தப் பொருளில் அநியாயம் நடக்கும் போது நபி (ஸல்) அவர்கள் கொதித்து, கொந்தளித்து எழுகின்றார்கள். மன்னிப்பது, மறப்பது, விட்டுக் கொடுப்பது எல்லாம் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிராக நடப்பவர்களிடம் கிடையாது என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.
இப்படி பாவமான காரியங்களைத் தவிர மற்ற காரியங்களில் நபி (ஸல்) அவர்கள் மிகப் பெருந்தன்மையுடனும், மன்னிக்கும் மனப்பான்மையுடனும் நடந்து காட்டியிருக்கின்றார்கள். இது அவர்களுக்கு இறைமறை போதித்த பண்பாகும். இப்படிப்பட்ட பண்புகள் கொண்டவர்களாக நாமும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.