பெண்கள் முகத்திரை அணிவது மார்க்கமா?
ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டுப் பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொதுவெளிகளில் வரும் பெண்கள் தங்கள் உடல்முழுவதையும் மறைக்கும் புர்கா வகை ஆடைகளை அணிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை முகத்தை மறைத்து திரையில் தோன்றும்படி அறிவுறுத்தியுள்ளன.
தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெண்கள் பொதுவெளியில் வரும் போது தமது முகத்தை மறைத்தாக வேண்டும் என்ற தாலிபான்களின் உத்தரவு மார்க்க அடிப்படையில் சரியானதா? என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
உலகின் பல நாடுகளிலும் இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களில் ஒரு பகுதியினர் வீட்டிலிருந்து வெளியேறும் போது தங்களுடைய முகங்களை மறைப்பதை மார்க்கக் கட்டளையாகக் கருதிப் பின்பற்றி வருகின்றனர்.
இவ்வாறு பெண்கள் முகத்திரை அணிவது உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனமாக முஸ்லிம் அல்லாதவர்களால் முன்வைக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் முகத்திரை அணிவதினால் பெண்களுடைய ஒழுக்க வாழ்விற்கும், சமுதாயத்திற்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை அன்றாட வாழ்வில் நாம் பார்த்து வருகின்றோம்.
இந்த முகத்திரை அணியும் கலாச்சாரம் நபியர்வகள் காட்டித் தந்த ஒரு வழிமுறை அல்ல. நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழியர்கள் யாரும் தம்முடைய முகத்தினை மறைத்திருக்கவில்லை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் நிறைந்துள்ளன.
ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், கை, கால் பாதம் தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலைபெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.
(குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் ஹிஜாப் என்பதன் நேரடிப் பொருள் “திரை” என்பதாகும். இதற்கான விளக்கத்தைப் பின்னால் பார்க்கவுள்ளோம். எனினும் இங்கு நாம் ஹிஜாப் என்று குறிப்பிடுவது இஸ்லாமிய வழக்கில் பயன்படுத்தப்படும் ஆடையைக் குறித்தே ஆகும்.)
முகத்தை மறைப்பது கட்டாயமா?
பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானது தான். அதைவிட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.
முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எல்லாப் பெண்களும் இப்படித்தான் என்று நாம் கூற வரவில்லை. எனினும் தவறுக்குத் துணிந்த பெண்ணைக் குறித்தே நாம் இங்கு பேசுகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.
மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.
பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக் கூடிய நிலமையும் ஏற்படலாம்.
எனவேதான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.
நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக் கொண்டதில்லை என்று ஏராளமான ஹதீஸ்களில் நாம் காணலாம்.
கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால்தான் இஸ்லாம் கைகளை மறைக்காமல் இருக்கலாம் என்பதற்கு அனுமதி வழங்குகிறது.
அது போன்று பெண்களின் கால் பாதமும் மறைக்காமல் இருப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.
இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.
நபியே! தமது தலைமுக்காடுகளைத் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு உமது மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் கூறுவீராக! அதுவே அவர்கள் அறியப்படுவதற்கும், தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்புடையது. அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
மேற்கண்ட வசனத்தில் “முக்காடுகள்” என்று நாம் மொழிபெயர்த்துள்ள அரபி மூலத்தில் “ஜலாபீப்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது “ஜில்பாப்” என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும்.
அதாவது அல்லாஹுத் தஆலா நபியுடைய மனைவியர், நபியுடைய பெண்மக்கள், மற்றும் அனைத்து இறைநம்பிக்கை கொண்ட இஸ்லாமியப் பெண்களுக்கும் தங்கள் மீது “ஜில்பாப்” என்ற துணியைத் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான். (நபியுடைய மனைவியருக்கு இதற்குப் பிறகு அதிகப்படியான சில சட்டங்களும் விதிக்கப்பட்டது. அது நபியின் மனைவியருக்கு மட்டும் உரிய சிறப்புச் சட்டமாகும். அது பற்றிய விபரங்களை இக்கட்டுரையின் இறுதியில் காணலாம்.)
இந்த “ஜில்பாப்” என்ற வார்த்தை, முகம் உட்பட உடலின் அனைத்துப் பகுதிகளையும் மறைக்கும் ஆடைக்குத்தான் குறிப்பிடப்படும் என சிலர் வாதிக்கின்றனர். ஆனால் இந்த வாதம் அறவே தவறானதாகும்.
அவர்கள் ஜில்பாபைத் தொங்கவிட்டுக் கொள்ளும்போது அவர்கள் அறியப்படுவார்கள் என்றும் அல்லாஹ் அதே வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.
ஜில்பாபுகளைத் தொங்க விடுவதின் நோக்கமே பெண்கள் அறியப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
குறிப்பிட்ட அடையாளத்துடன் ஒன்றை அறிதல் என்பது பார்த்து அறிவதைத்தான் குறிக்கும். மறுமைநாளில் ஒவ்வொரு மோசடிக் காரனுக்கும் அவனது பின்புறத்தில் ஒரு கொடி இருக்கும்.
அதன் மூலம் அவனது மோசடிக்காரன் என்பது அறிந்து கொள்ளப்படும் என்று நபிமொழிகளில் வந்துள்ளது. இது கண்களால் பார்த்து ஒருவனைப் பற்றி அறிந்து கொள்வதைத்தான் குறிக்கும்.
ஒரு பெண் தலைமுக்காடு எனும் அடையாளத்துடன் வரும் போது அவள் ஒரு பெண்தான் என்பதையும். முஃமினான பெண் என்பதையும், ஒழுக்கமான பெண் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும். இதைத்தான் மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது.
“ஜில்பாப்” என்பது முகத்தினையும் மறைக்கும் வகையில் உள்ள ஆடையாக இருந்தால் அல்லாஹ் இவ்வசனத்தில் “அறியப்படவேண்டும்” என்று கட்டளையிடுவது பொருளற்றதாகிவிடும்.
சிலர் இவ்வசனத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யும் போது “ஒழுக்கமான பெண்கள் என்று அறியப்படுவதற்காகவும்” என்றும், “கண்ணியமான பெண்கள் என்று அறியப்படுவதற்காகவும்” என்றும் அடைப்புக் குறிகள் இட்டு மொழி பெயர்த்துள்ளது கூடுதல் விளக்கத்துக்காகச் செய்ததாகும். முகம் அறியப்படுவதன் மூலமே ஒழுக்கமானவர்களும் அறியப்பட முடியும்.
ஒரு பெண் ஒழுக்கமான பெண் என்பதையும், கண்ணியமான பெண் என்பதையும் அவள் முகம் அறியப்படுவதின் மூலம்தான் கண்டறிய முடியும். முகம் அறியாமல் யாரையும் ஒழுக்கமானவர் என்றோ கண்ணியமானவர் என்றோ நாம் அறிய முடியாது.
ஏனெனில் இன்றைக்குப் பல ஒழுக்கம் கெட்ட பெண்கள் கூட, விபச்சாரம் செய்து கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் போது பெண்கள் தாம் யார் என்பது அறியப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முகத்தை மறைத்து நீதிமன்றங்களுக்கு வரக்கூடிய காட்சிகளை நாம் பார்க்கின்றோம்.
ஒரு பெண் முகத்திரை அணிந்து கொண்டு அந்நிய ஆண்களுடன் ஊர் சுற்றினாலும் அவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியாது. ஒரு ஆண் பெண்களைப் போல் ஆடையணிந்து முகத்தினை மறைத்துக் கொண்டு, முகத்தை மறைத்துள்ள பெண்களின் கூட்டத்திற்குள் நுழைந்தால் அவரை ஆண் என்று கண்டறிவது முடியாது.
மேலும் பிரபல கொள்ளைக்காரர்கள் கூட கொள்ளையடிக்கும் போது முகத்திரை அணிந்து கொண்டுதான் கொள்ளையடிக்கின்றனர். அவர்கள் முகத்திரை அணிவதன் நோக்கம் அவர்கள் யார் என்பது அறியப்பட்டுவிடக் கூடாது என்பதுதான். எனவே முகத்தினை மறைக்கும் போது ஒருவர் ஒழுக்கமானவரா, கண்ணியமானவரா என்பதை ஒருபோதும் அறியவே முடியாது.
அல்லாஹுத் தஆலா மேற்கண்ட வசனத்தில் “ஜில்பாபுகள்” அணிவதின் நோக்கமே அவர்கள் அறியப்பட வேண்டும் என்பதாகக் குறிப்பிட்டுள்ளான்.
எனவே “ஜில்பாப்” என்பது முகத்தையும் மறைக்கும் ஆடை என்று குறிப்பிடுவது திருமறைக்குர்ஆனின் கருத்துக்கு எதிரானதாகும்.
மேலும் நபியவர்கள் வாழும் காலத்தில் நபித்தோழியர் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகள் அணிந்ததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியும் கிடையாது. அதற்குரிய சான்றுகளையும் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். ஜில்பாப் என்பது முகத்தை மறைக்கும் ஆடை என்றால் அந்த இறைக்கட்டளைக்கு மாற்றமாக நபித்தோழியர்கள் கண்டிப்பாகச் செயல்பட்டிருக்க மாட்டார்கள் என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பெண்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பாக திருமறைக் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இரண்டாவது மிக முக்கியமான வசனம் ‘கிமார்’ பற்றிய வசனம் ஆகும்.
இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! அவர்கள், (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர தமது அலங்காரத்தில் வேறு எதையும் வெளிப்படுத்த வேண்டாம். தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின்மீது போட்டுக் கொள்ளட்டும்.
இவ்வசனமும் பெண்கள் முகத்தை மறைப்பது கூடாது என்பதற்குத் தெளிவான சான்றாகும். இதுபற்றி விபரமாகப் பார்ப்போம்.
பெண்கள் பார்வையைத் தாழ்த்துமாறு இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். பெண்களின் பார்வை அந்நிய ஆண்களின் மீது படும் என்பதினால்தான் அல்லாஹ் இவ்வாறு கட்டளையிடுகின்றான்.
ஆண்களின் முகம் திறந்திருக்கின்ற காரணத்தினால்தான் அல்லாஹ் பெண்களுக்கு இவ்வாறு கட்டளையிடுகின்றான் என்பதை நாம் இவ்வசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அதுபோன்றுதான் இதற்கு முந்தைய வசனத்தில் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று ஈமான் கொண்ட ஆண்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். இதுவே அவர்களுக்குத் தூய்மையானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்
தவறான எண்ணத்திலும் அந்நியப் பெண்களை ஆண்கள் பார்ப்பார்கள் என்ற காரணத்தினால்தான் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
பெண்களின் முகம் மறைக்கப்படாத ஒரு பகுதியாக இருக்கின்ற காரணத்தினால்தான் அல்லாஹ் ஆண்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்கின்றான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
“ஹிமார்” என்பது பெண்களின் முகத்தையும் மறைக்கின்ற ஒரு ஆடையாக இருக்குமென்றால் அல்லாஹ், ஆண்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இதிலிருந்தே “ஹிமார்” என்பது பெண்களின் முகத்தை மறைக்காது என்பது தெளிவாகிறது.
மேலும் முக்காடுகள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் குர்ஆனில் “கும்ரு” என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. “கிமார்” என்பது இதன் ஒருமைச் சொல்லாகும். கிமார் என்றால் முகம் உட்பட தலையை மறைக்கும் ஆடை எனக் கூறி இந்த வசனத்தையும் தங்களின் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.
இவ்வசனத்தில் முக்காடுகளைப் போட்டுக் கொள்ளுமாறு பொதுவாகக் கூறப்படாமல் மேற்சட்டைகளின் மீது போட்டுக் கொள்ள வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. முகத்தின்மீது போட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தால்தான் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டலாம். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை என்பதால் முகத்தை மறைப்பதற்குச் சான்றாக இவ்வசனத்தைக் காட்ட முடியாது.
பின்வரும் ஹதீஸ்களிலிருந்தும் “கிமார்” என்பது முகத்தை மறைக்கும் ஆடை அல்ல என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மாதவிடாய் (ஏற்படும் பருவத்தை அடைந்த) பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (அபூதாவூத்: 546), (திர்மிதீ: 344)
பெண்கள் தொழும்போது முக்காடுடன் தொழ வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. முக்காடு என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் கிமார் என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது. கிமார் என்றால் முகத்தை மூடும் ஆடை எனத் தவறான பொருளை இங்கே கொடுத்தால் பெண்கள் தொழுகையின்போது முகத்தை மூடுவது கட்டாயம் என்ற தவறான முடிவு ஏற்படும்.
பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்ற கருத்துடையவர்கள் தொழுகையின்போது பெண்கள் முகத்தை மூட வேண்டும் கூறுவதில்லை.
மேற்கண்ட ஹதீஸில் உள்ள கிமார் என்பதற்கு முகத்தை மறைக்கும் ஆடை என்று பொருள் கொடுப்பதில்லை. தலையை மறைக்கும் ஆடை என்றே பொருள் கொடுக்கின்றனர்.
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: எனது சகோதரி காலணி அணியாமலும் கிமார் (தலைத்துணி) அணியாமலும் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துள்ளார் என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (கூறி இது பற்றி) வினவினேன். அதற்கு அவர்கள், ‘உங்களுடைய சகோதரிக்கு நீங்கள் உத்தரவிடுங்கள். அவர் தலைத்துணி அணிந்து கொள்ளட்டும். வாகனத்தில் ஏறி வரட்டும். அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்’ என்று கூறினார்கள்.
நூல் : (அபூதாவூத்: 2865)
இந்த ஹதீஸில் கிமார் அணிய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் சகோதரிக்கு உத்தரவிட்டுள்ளார்கள். கிமார் என்பது முகத்தை மறைக்கும் ஆடையாக இருந்தால் முகத்தை மறைக்கக் கூடாது என்று தடுக்கப்பட்ட ஹஜ்ஜில் கிமாரை அணியுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள். கிமார் என்பது தலையை மட்டும் மறைக்கும் துணி என்பதாலே இதை ஹஜ்ஜின்போது அணியுமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தமது “கிமார்” முக்காட்டுத் துணியை தலையில் சுற்றிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மு சுலைமே! உமக்கு என்ன ஆயிற்று?’’ என்று கேட்டார்கள்.
நூல் : (முஸ்லிம்: 5073)
“கிமார்” அணிந்து வரும் உம்சுலைம் (ரலி) அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் “உம்மு சுலைமே! உமக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்கிறார்கள் என்றால் உம்மு சுலைம் (ரலி) அவர்களின் முகம் மறைக்கப்படவில்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
திருமறைக் குர்ஆன் வசனங்களை செயல்படுத்திக் காட்டிய சமுதாயம் நபியவர்களுடன் வாழ்ந்த நபித்தோழர்களின் சமுதாயம்தான். நாம் மேற்குறிப்பிட்ட இறைவசனங்கள் பெண்கள் முகத்தை மறைத்தாக வேண்டும் என்பதற்குரிய சான்றுகளாக இருந்தால் நபியவர்கள் வாழும் காலத்திலேயே நபித்தோழியர்களை முகத்திரை அணியுமாறு உத்தரவிட்டிருப்பார்கள். ஆனால் நபியவர்கள் வாழும் காலத்தில் நபித்தோழியர்கள் முகத்திரை அணிந்ததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியும் கிடையாது. அதற்கு மாற்றமாக அவர்கள் முகம் வெளிப்படும் வகையிலேயே இருந்துள்ளார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை சுருக்கமாகக் காண்போம்.
பெருநாள் தொழுகையில் கலந்து கொண்ட கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி நபியவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டதாக (முஸ்லிம்: 1607) வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.
கன்னங்கள் கருத்த பெண்மனி என்று குறிப்பிடுவதாக இருந்தால் அப்பெண்ணின் முகம் திறந்திருந்தாலே இது சாத்தியம்.
(புகாரி: 5030) வது செய்தியில் நபியும், நபித்தோழர்களும் அமர்ந்திருந்த சபைக்கு வந்த பெண்ணை நபியர்வகளும் பார்த்தார்கள், நபித்தோழர்களும் கண்டார்கள் என்ற கருத்து இடம் பெற்றுள்ளது.
(புகாரி: 1466) வது செய்தியில் ஸைனப் என்ற பெயர் கொண்ட இரண்டு பெண்கள் ஒரு சட்டம் தொடர்பாக நபியவர்களின் விளக்கத்தை நாடி வரும் போது வாயிற்காப்பாளராக இருந்த பிலார் (ரலி) அவர்களிடம் “நபியவர்களிடம் நாங்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டாம்” என கோரிக்கை வைக்கின்றனர். அந்த இரு பெண்களும் முகத்திரை அணிந்திருந்தால் தாங்கள் யார் என்பதை பிலால் அவர்களிடமே தெரிவிக்காமல் மறைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் முகத்தை வெளிப்படுத்தியவர்களாக வந்திருந்த காரணத்தினால்தான் பிலால் அவர்கள், அவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.
(புகாரி: 578) வதுசெய்தி, உம்மு சுஃபர் (ரலி) அவர்கள் தொடர்பாக இடம் பெற்றிருக்கும்(புகாரி: 565) வது செய்தி, உளூ தொடர்பாக வரும் (புகாரி: 193) வது செய்தி, இன்னும் இது போன்ற ஏராளமான செய்திகள் நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்திரை அணிந்திருக்கவில்லை என்பதற்குத் தெளிவான சான்றுகளாக உள்ளன.
இது தொடர்பாக பெண்கள் முகத்திரை அணியலாமா? என்ற நூலில் நாம் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளோம்.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் அணியும் பர்தாவிற்கு “ஹிஜாப்” என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் இதனை “ஹிஜாப்” என்று கூறமுடியாது.
(அல்குர்ஆன்: 33:54) ➚வது வசனத்தில் அல்லாஹ் நபியுடைய மனைவியருக்குக் கட்டளையிடும் “ஹிஜாப்” என்பது உடலை மறைக்கின்ற ஆடையல்ல. மாறாக உருவத்தையே மறைக்கின்ற திரையைத்தான் அல்லாஹ் “ஹிஜாப்” என்று குறிப்பிடுகின்றான்.
அதாவது திரைக்குப் பின்னால் இருப்பவர் வெளியில் இருப்பவரைப் பார்க்க முடியாது. அதுபோன்று வெளியில் இருப்பவர் உள்ளே இருப்பவரைப் பார்க்க முடியாது.
உதாரணமாக ஒரு மனிதரை அல்லது ஒரு பொருளை துணியால் முழுவதும் மறைத்திருந்தால், அவர் யார் என்பதை நாம் அறியாவிட்டாலும் அவர் ஒரு மனிதர் அல்லது ஒரு உருவம் அல்லது ஒரு பொருள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில் ஒருவர் சுவருக்குப் பின்னால் நின்றால் உருவத்தையே நாம் பார்க்க முடியாது.
அது போன்றுதான் அல்லாஹ் குறிப்பிடும் ஹிஜாப் என்பது மேனியை மறைக்கின்ற ஆடை அல்ல. மாறாக ஆளையே மறைக்கின்ற திரையைத்தான் அல்லாஹ் “ஹிஜாப்” என்று குறிப்பிட்டுள்ளான். தொடர்ந்து வரவிருக்கின்ற அந்த வசனத்திற்கான விளக்கத்தில் இதனை நாம் தெளிவாகப் பார்க்கவிருக்கின்றோம்.
இன்றைக்கு முகத்தை மறைத்து கொண்டு செல்லும் சில இஸ்லாமிய சகோதரிகள் நபியுடைய மனைவியர் முகத்தை மறைத்ததாக வரக்கூடிய ஹதீஸ்களைத்தான் தங்கள் செயலுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். அவர்களின் இந்த வாதம் தவறானதாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியுடைய மனைவியர் அல்லாத அனைத்துப் பெண்களும் தங்கள் முகத்தை மறைக்காத வகையில்தான் பர்தா எனும் ஆடையை அணிந்துள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகளை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். முகத்தை மறைக்காமல் இருப்பதுதான் நபியுடைய மனைவியர் அல்லாத அனைத்துப் பெண்களுக்கும் உரிய சட்டமாகும்.
இந்த “ஹிஜாப்” என்ற சட்டம் நபியுடைய மனைவியருக்கு மட்டும் உரியதாகும். நபியுடைய மனைவியர் எப்போதும் “ஹிஜாப்” எனும் திரைக்குப் பின்னால்தான் இருக்க வேண்டும். அவர்கள் தவிர்க்கவே முடியாத காரியங்களுக்காக திரையில் இருந்து வெளியே வரவேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்கள் தங்கள் முகத்தினை மறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு மார்க்கம் கட்டளையிட்டுள்ளது.
இவ்வாறு “ஹிஜாப்” எனும் திரைக்குள் இருப்பதும், வெளியே வந்தால் அந்நிய ஆண்கள் பார்க்க முடியாத வகையில் முகத்தினை மறைத்துக் கொள்வதும் நபியுடைய மனைவியர்களுக்கு மட்டுமே உரியது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
(நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒரு போதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.
நபியுடைய மனைவியரிடம் ஏதாவது கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே கேட்க வேண்டும் என அல்லாஹ் உத்தரவிடுகின்றான்.
இந்த வசனத்தின் அரபி மூலத்தில் “ஹிஜாப்” எனும் சொல் இடம் பெற்றுள்ளது. இங்கு “ஹிஜாப்” என்பது ஆளையே மறைக்கின்ற திரை ஆகும்.
இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
என் பால்குடித் தந்தை (அபுல் குஐஸ்) அவர்களுடைய சகோதரர் (அஃப்லஹ் என்பார்) வந்து என் வீட்டுக்குள்ளே வர அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதரிடம் கேட்காமல் அவருக்கு அனுமதியளிப்பதில்லை என்று நான் இருந்துவிட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நான் அது குறித்துக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் தாமே! அவருக்கு உள்ளே வர அனுமதி கொடு! என்று சொன்னார்கள். உடனே நான், அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பெண்தானே எனக்குப் பாலூட்டினார். இந்த ஆண் எனக்குப் பாலூட்டவில்லையே! (பாலுட்டிய தாயின் கணவரும் அவருடைய சகோதரரும் எனக்கு எந்த வகையில் உறவினர் ஆவார்கள்)? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் உன்னுடைய (பால் குடித்) தந்தையின் சகோதரர்தாம். எனவே, அவர் உன்னிடம் (உன் வீட்டுக்குள்) வரலாம் என்று சொன்னார்கள்.
-இது எங்களுக்கு ‘ஹிஜாப்’ சட்டம் விதியாக்கப்பட்ட பின்னால் நடந்தது.-
நூல்: (புகாரி: 5239)
நபியுடைய மனைவியருக்கு “ஹிஜாப்” உடைய சட்டம் விதியாக்கப்பட்ட பிறகு அவர்களை அந்நிய ஆண்கள் முகத்தைப் பார்த்துப் பேசுவது தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அந்நியரல்லாதவர்கள் வீட்டிற்குள் சென்று முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கு அனுமதியிருந்தது.
ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தை வீட்டிற்குள் சென்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பார்த்து பேசுவதற்கு அனுமதி கேட்கும் போது அவர் அந்நியர் என்று நினைத்து அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திரையைத் தாண்டி வீட்டிற்குள் வருவதற்கு அனுமதி மறுக்கின்றார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் அவர் பால்குடித் தந்தை என்பதை தெளிவு படுத்திய பிறகுதான் ஆயிஷா (ரலி) அவர்கள் உள்ளே வருவதற்கு அனுமதி கொடுக்கின்றார்கள்.
மேற்கண்ட ஹதீஸிலிருந்து நபியுடைய மனைவியருக்கு அல்லாஹ் விதியாக்கிய “ஹிஜாப்” என்பது இருபுறமும் பார்க்க முடியாதவாறு
அதுபோன்று எந்த அந்நிய ஆண்களும் ஹிஜாப் சட்டத்திற்குப் பிறகு நபியின் மனைவியரின் முகத்தை ஒரு போதும் கண்டதில்லை. விபத்தாக நடந்த ஒரு சில சம்பவங்களைத் தவிர. அது போன்று இவர்களால் நடந்து கொள்ள முடியுமா?
தம்மால் இயலாத ஒன்றைச் செய்வோம் என்று இவர்கள் வாதத்திற்காகப் பேசுவார்கள் என்றால் அவர்கள் பொய்யர்கள் என்பதும், இஸ்லாம் சுமத்தாத ஒன்றைத் தம்மீது சுமத்திக் கொண்டு அதை முறையாகப் பேணாமல் கேலி செய்கிறார்கள் என்பதுமே உண்மையாகும்.
இவை அனைத்தும் கூடுதல் விளக்கத்திற்காகச் சொல்லப்பட்ட வாதங்கள் தான். பெண்கள் முகத்தை மறைப்பது, நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுக்கு மாற்றமானது என்பதே முதன்மையான வாதமாகும்.
அல்லாஹ் இதுபோன்ற வழிகேட்டிலிருந்து நம்மைப் பாதுகாப்பானாக!