பெண்கள் ஆண்களுக்கு உரை நிகழ்த்தலாமா?
இஸ்லாத்தை மக்கள் முன்னிலையில் முழங்கக்கூடிய உரிமை அனைவருக்குமானதாகும். யாரோ ஒருவர் இன்னொருவருக்கு சத்தியத்தை தெளிவுப்படுத்தியதன் விளைவு தான் இன்று இஸ்லாம் பட்டித்தொட்டியெங்கும் படர்ந்துக்கிடக்கிறது. இத்தகைய மகத்துவமான பணியை ஆண்களுக்கு மட்டும் குறிப்பாக்குவது இஸ்லாத்தின் வழிகாட்டல் அல்ல.
இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் அவர்களில் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தைக் கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகின்றனர். இவர்களுக்குத்தான் அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
நன்மையை ஏவி, தீமையை தடுப்பதில் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் உற்றத் தோழர்கள் எனும் பொழுது ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் உரை நிகழ்த்தலாம் என்பது தெளிவாகிறது.
நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேத) அறிவுடையோரிடம் கேளுங்கள்!
நமக்கு தெரியாத மார்க்க அறிவுரைகள் ஆற்றப்படும் பொழுது அதனை கேட்டு அவதானிக்கவேண்டும் என்பதை தான் குர்ஆன் நமக்கு முன்மொழிகிறது. அது ஆணாக தான் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை இடவில்லை.
இன்னும் ஆண்களுக்கு முன்னிலையில் பெண்கள் பேசுவது போன்ற ஏராளமான நிகழ்வுகளை ஹதீஸ்களில் நம்மால் காண முடிகிறது.