பெண்கள் ஆண்களுக்கு உரை நிகழ்த்த லாமா?

கேள்வி-பதில்: பெண்கள்

இஸ்லாத்தை மக்கள் முன்னிலையில் முழங்கக்கூடிய உரிமை அனைவருக்குமானதாகும். யாரோ ஒருவர் இன்னொருவருக்கு சத்தியத்தை தெளிவுப்படுத்தியதன் விளைவு தான் இன்று இஸ்லாம் பட்டித்தொட்டியெங்கும் படர்ந்துக்கிடக்கிறது. இத்தகைய மகத்துவமான பணியை ஆண்களுக்கு மட்டும் குறிப்பாக்குவது முறையன்று.

இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் அவர்களில் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தைக் கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகின்றனர். இவர்களுக்குத்தான் அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.

(அல்குர்ஆன்: 9:71)

நன்மையை ஏவி, தீமையை தடுப்பதில் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் உற்றத் தோழர்கள் எனும் பொழுது ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் உரை நிகழ்த்துவது எவ்விதத்திலும் குற்றமாகாது.

நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேத) அறிவுடையோரிடம் கேளுங்கள்!

(அல்குர்ஆன்: 21:7)

நமக்கு தெரியாத மார்க்க அறிவுரைகள் ஆற்றப்படும் பொழுது அதனை கேட்டு அவதானிக்கவேண்டும் என்பதை தான் குர்ஆன் நமக்கு முன்மொழிகிறது. அது ஆணாக தான் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை இடவில்லை.

இன்னும் ஆண்களுக்கு முன்னிலையில் பெண்கள் பேசுவது போன்ற நிகழ்வுகளை ஹதீஸ்களில் நம்மால் காண முடிகிறது.

ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஅதீ(ரலி) கூறினார்,

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்த மக்களிடையே இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண்மணி (வந்து) நின்று, ‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக (-மஹ்ரின்றி மணந்துகொள்வதற்காக) வழங்கிவிட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்!” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதிலேதும் சொல்லவில்லை. பிறகு மீண்டும் எழுந்து நின்று ‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; என்று கூறினார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்கு பதிலேதும் சொல்லவில்லை. மூன்றாவது முறையாக அப்பெண்மணி எழுந்து ‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்” என்றார். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(இவருக்கு மஹ்ராகக் கொடுக்க) உம்மிடம் ஏதேனும் பொருள் உள்ளதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘நீர் சென்று (இவருக்கு மஹ்ராகச் செலுத்த) இரும்பினானலான ஒரு மோதிரத்தையாவது தேடுக” என்று கூறினார்கள். அவர் போய்த் தேடிவிட்டு பிறகு (திரும்பி) வந்து, ‘ஏதும் கிடைக்கவில்லை. இரும்பாலான மோதிரம் கூட கிடைக்கவில்லை” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘ஆம் இன்ன , இன்ன என்னிடம் (மனப்பாடமாக) உள்ளது” என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன், நீர் செல்லலாம்!” என்று கூறினார்கள்.

(நூல் : (புகாரி: 5149)

ஆண்கள் பலர் இருக்கும் சபையில், அனைவருக்கு முன்னிலையிலும் ஒரு பெண் நபியவர்களிடம் தனது மணவிருப்பத்தை தெரிவுத்துள்ளார்.

பல ஆண்களுக்கு முன்னிலையில் பெண்கள் பேசலாம் என்பதற்கு இது சான்றாக உள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக்கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.

நூல் : (முஸ்லிம்: 552)

மார்க்க விஷயம் குறித்து நபியவர்களிடம் அன்சாரி பெண்கள் சந்தேகம் கேட்டிருப்பது பெண்கள் ஆண்களுக்கு மார்க்கம் குறித்து உரையாற்றுவது தவறன்று என்பதனை உணர்த்துகிறது.

இப்படி எண்ணற்ற ஆதாரங்கள் பெண்கள் உரையாற்றுவது குறித்து உள்ளன.

ஆண்களுக்கு முன் பெண்கள் உரையாற்றவே கூடாதென்றால் பெருமானாரின் எண்ணற்ற பொன்மொழிகள் நம் கரங்களை தழுவாமலேயே போயிருக்கும். ஏனெனில் கணிசமான ஹதீஸ்களை நபித்தோழியர்கள் ஆண்களான அறிவிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளனர். பெண்கள் பயான் பேசக்கூடாது என்று சொல்பவர்கள் யாரும் இந்நிகழ்ச்சியை தவறுகாணுவதில்லை.

அடுத்ததாக, பெண்கள் ஆண்களுக்கு உரைநிகழ்த்தும் பொழுது ஆண்கள் பெண்களை சந்திக்கும் சூழல் ஏற்படுவதால் பெண்கள் உரை நிகழ்த்துதல் கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

பெண்கள் சொற்பொழிவாற்றுகையில் ஆண்கள் பெண்களை சந்திக்கும் சூழல் ஏற்படுவதைப் போன்றே ஆண்கள் உரைநிகழ்த்துகையிலும் ஒருவருக்கொருவர் பார்க்கும் நிலை ஏற்ப்படுகின்றது. அது கூடாதென்றால் இதுவும் கூடாது என்போமா?

பல கட்டங்களில் நபியவர்கள் பெண்களுக்கு உரையாற்றியுள்ளார்கள். அப்போது ஒருவருக்கொருவர் பார்க்கும் நிலைகள் ஏற்படவில்லையா?

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்; பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி)அவர்கள் மீது சாய்ந்து கொண்டு, இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மார்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, “தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்” என்று கூறினார்கள்.

அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து “அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டனர்.(முஸ்லிம்: 1607)

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர். எனவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு, ‘உங்களில், தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகிற பெண்ணுக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்’ என்றார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலுமா?’ என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, ‘ஆம்; இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும் தான்’ என்று நபி(ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள். (புகாரி: 7310)

இது போன்ற எண்ணற்ற தருணங்களில் நபியவர்கள் பெண்களுக்கு உரைநிகழ்த்தியதுண்டு. நபியவர்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்வித திரைகளும் அமைக்கப்படவில்லை. ஆண் பெண் ஒருவருக்கொருவர் பார்க்கும் நிலையே இருந்தது. எனினும் நபியவர்கள் அதை தடுக்கவில்லை.

எனவே, ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கக்கூடாதே ஒழிய தீய எண்ணமின்றி பயான்கள் நிகழ்த்தும் பொழுது ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வதில் குற்றமில்லை.

இவ்வாறு ஆண்களுக்கு முன்னிலையில் பெண்கள் உரையாற்றும் பொழுது பொதுவாக கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகளையும் பேணவேண்டும்.

முகம், முன்னங்கை, முன்னங்கால் போன்றவைகள் தவிர வேறேதுவும் வெளிப்படாமல் இருத்தல், லிப்ஸ் ஸ்டிக், வளையல், மருதாணி போன்ற அலங்காரங்களை வெளியே தெரியாமல் தவிர்த்தல், இறுக்கமான உடைகளை அணியாமல் இருத்தல், நளிமான குரலில் பேசுவதை தவிர்த்தல் போன்ற பொதுவான ஒழுங்குமுறைகளை பேணி பெண்கள் ஆண்களுக்கு உரையாற்றுவது எவ்விதத்திலும் குற்றமாகாது.