பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?

நியாஜுத்தீன்

பதில்

பெண்கள் ஆண்களுக்கு இமாமாக நின்று தொழ வைத்ததாக எந்த ஒரு சம்பவமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெறவில்லை. இதற்கு நேரடியான தடை மார்க்கத்தில் சொல்லப்படாவிட்டாலும் சில பொதுவான வசனங்களும், நபிமொழியும் இது கூடாது என்ற கருத்தைக் கொடுக்கின்றது.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.

(அல்குர்ஆன்: 4:34)

பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கி விட்டார்கள் எனும் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, “தம் காரியங்களுக்கு பெண்ணை பொறுப்பாளராக ஆக்கிக்கொண்ட சமுதாயம் ஒரு போதும் வெற்றிபெறாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)

(புகாரி: 4425)

மேலுள்ள வசனமும், நபிமொழியும் ஆண்களுக்கு பெண்கள் தலைமை ஏற்கக் கூடாது என்று கூறுகின்றது. ஆண்களுக்கு இமாமத் செய்வது ஒரு வகையான தலைமைப் பொறுப்பு என்பதால் இந்தப் பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்வது தடை செய்யப்பட்டதாகும்.

பெண்கள் தமது குடும்பத்தினருக்கு இமாமத் செய்யலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாகக் கருதப்படுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்ற போது உம்மு வரகா (ரலி) அவர்கள், “உங்களுடன் போருக்கு வர எனக்கு அனுமதி தாருங்கள். எனக்கும் ஷஹாதத் எனும் வீர மரணத்தை அல்லாஹ் தருவான்” எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீ வீட்டிலேயே இருந்து கொள். அல்லாஹ் உனக்கு வீர மரணத்தைத் தருவான்” எனக் கூறினார்கள். இதனால் அப்பெண்மணி வீர மரணத்தைத் தழுவுபவர் என்றே குறிப்பிடப்படலானார். அவர் குர்ஆனை ஓதத் தெரிந்தவராக இருந்தார். வயதான முதியவரை முஅத்தினாக ஏற்படுத்திக் கொண்டு தனது வீட்டாருக்கு இமாமத் செய்ய அனுமதி கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். அவரிடம் ஒரு ஆண் அடிமையும் ஒரு பெண் அடிமையும் இருந்தனர். தமது மரணத்திற்குப் பின் அவர்கள் விடுதலையாகலாம் என்று அவர் எழுதிக் கொடுத்திருந்தார். அவ்விருவரும் உமர் (ரலி) காலத்தில் அவரைக் கொன்றனர். (இதன் மூலம் வீர மரணம் அடைவார் என்ற முன்னறிவிப்பு நிறைவேறியது.) கொலையாளிகள் சிலுவையில் அறையப்பட்டனர்.

(அபூதாவூத்: 591, 592)

இந்தச் செய்தியை உம்மு வரகா (ரலி) அவர்களிடமிருந்து லைலா பின் மாலிக் என்ற பெண்ணும் அப்துர் ரஹ்மான் பின் கல்லாத் என்பவரும் அறிவிக்கின்றனர். இவ்விருவரும் நம்பகமானவர்கள் என்று அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்வதைத் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் தடை செய்கின்றன. பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்வதைத் தடை செய்யவில்லை. பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யக் கூடாது என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ மார்க்கத்தில் சொல்லப்படவில்லை.

அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தொழுவிப்பார். மக்கள் அனைவரும் சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்களில் நபி வழியை நன்கு அறிந்தவர் (தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சம அளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் (தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களின் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அனுமதியின்றி அமர வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்ஸாரீ (ரலி)

நூல்கள் :(முஸ்லிம்: 1192),(திர்மிதீ: 218)

எனவே இந்தப் பொதுவான ஆதாரத்தின் அடிப்படையில் பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்வது தவறல்ல.