2) பெண்களுக்கான தொழுகைச் சட்டங்கள்

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

பெண்களுக்கான தொழுகைச் சட்டங்கள்

தொழுகையின் பெரும்பாலான சட்டங்கள், தொழும் முறை ஆகியவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவையாகும்.

 وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

(புகாரி: 631)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படித் தொழுதார்களோ அப்படித்தான் ஆண்களும் பெண்களும் தொழ வேண்டும்.

எனது மனைவிமார்கள் தொழுவது போல் பெண்கள் தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனி வழியைக் காட்டவில்லை. ஆண்களுக்கும் அவர்கள் தான் வழிகாட்டி. பெண்களுக்கும் அவர்கள் தான் வழிகாட்டி.

தமிழக முஸ்லிம் பெண்கள் சிலர் சஜ்தா செய்யும் போது ஆமை போல் ஒடுங்கிக் கொண்டு ஸஜ்தா செய்கிறார்கள். இப்படிச் செய்வதற்கு எந்த ஆதாரமும் நபி வழியில் இல்லை. கைகளை வயிற்றில் அனைத்துக் கொண்டு ருகூவு செய்கிறார்கள். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

நிற்றல், ருகுவு செய்தல், ஸஜ்தா செய்தல், இருப்பில் அமர்தல் ஆகிய அனைத்தும் ஆண்களைப் போலவே பெண்களும் செய்ய வேண்டும்.

ஆயினும் சில சட்டங்கள் பெண்களுக்கு தனியாக உள்ளன. அவற்றைக் காண்போம்

 

பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை அவசியம் இல்லை.

ஐந்து வேளை தொழுகைகளைப் பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது ஆண்களுக்கு மட்டுமானது.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் இல்லை.

விரும்பினால் பள்ளிவாசலுக்கு வரலாம். விரும்பினால் வீட்டில் தொழுது கொள்ளலாம். பெண்கள் பள்ளிவாசலுக்கு வராமல் வீட்டில் தொழுவதே சிறந்தது. இதற்கான ஆதாரங்கள்

578 – كُنَّ نِسَاءُ المُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الغَلَسِ

நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்துகொள்ள முடியாது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(புகாரி: 578)

707 – إِنِّي لَأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

(புகாரி: 707)

 لَا تَمْنَعُوا نِسَاءَكُمُ الْمَسَاجِدَ، وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ

உங்களது பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகளே அவர்களுக்குச் சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: அபூதாவூத்

 

ஜுமுஆ தொழுகை பெண்களுக்கு கடமையில்லை.

ஜுமுஆ தொழுகை மிக முக்கியமான தொழுகை என்றாலும் பெண்களுக்கு ஜுமுஆ தொழுகை கடமையில்லை. அவர்கள் விரும்பினால் ஜுமுஆ தொழுகையில் கலந்து கொள்ளலாம். விரும்பினால் இருக்கும் இடத்திலேயே ஜுமுஆவுக்குப் பதிலாக லுஹர் தொழுகை தொழலாம்.

இதற்கான ஆதாரங்கள்
سنن أبي داود   – ” الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً: عَبْدٌ مَمْلُوكٌ، أَوِ امْرَأَةٌ، أَوْ صَبِيٌّ، أَوْ مَرِيضٌ

பெண்கள், அடிமைகள், நோயாளிகள், சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஜுமுஆ தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),

நூல் : அபூதாவூத்

صحيح مسلم  – عَنْ أُخْتٍ لِعَمْرَةَ، قَالَتْ: أَخَذْتُ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ مِنْ فِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ، وَهُوَ يَقْرَأُ بِهَا عَلَى الْمِنْبَرِ فِي كُلِّ جُمُعَةٍ

நான் வெள்ளிக்கிழமை அன்று காஃப் வல்குர்ஆனில் மஜீத் எனும் (50ஆவது) அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து பெற்றுக் கொண்டேன். ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் நின்று அந்த அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: அம்ரா பின்த் (ரலி) அவர்களின் சகோதரி,

நூல்: முஸ்லிம்

இதை அம்ரா என்ற பெண் அறிவிக்கிறார். பெண்ணாகிய இவர் ஜுமுஆ தொழுகையில் கலந்து கொண்டதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிய காஃப் அத்தியாயத்தையும் மனனம் செய்துள்ளார். பெண்கள் ஜுமுஆ தொழுகையில் பங்கு கொள்ளலாம் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

 

தொழுகையில் இமாமுக்கு தவறு ஏற்படும் போது சுட்டிக்காட்டலாம்

இமாமுக்கு மறதி ஏற்பட்டு தொழுகையில் கூடுதல் குறைவாகச் செய்யும் போது கைகளைத் தட்டி இமாமின் தவறுகளை பெண்கள் சுட்டிக் காட்டலாம்.

 عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: التَّسْبِيحُ لِلرِّجَالِ، وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 1203)

 

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?

பென்கள் ஆண்களுக்கு இமாமாக தொழுவிக்கக் கூடாது என்று தெளிவான தடை ஏதும் இல்லை. ஆயினும் மறைமுகமாக அக்கருத்தைச் சொல்லும் ஆதாரங்கள் உள்ளன.

ஜமாஅத் தொழுகையில் வரிசைகள் எப்படி அமைய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். முதலில் ஆண்களின் வரிசைகள், அது முடிந்ததும் சிறுவர்களின் வரிசைகள், அதன் பின் பெண்களின் வரிசைகள் என்று அமைய வேண்டும்.

 قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا، وَشَرُّهَا آخِرُهَا، وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا، وَشَرُّهَا أَوَّلُهَا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) , நூல்: முஸ்லிம்

பெண்கள் இமாமாக நிற்கும் போது ஆண்களை விட முந்தி நிற்கும் நிலை ஏற்படும். இது மேற்கண்ட ஹதீஸுக்கு முரணாகும்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.

(அல்குர்ஆன்: 4:34)

ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்ய வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது. கூட்டுத் தொழுகைக்குள் நிர்வாகம் அடங்கியுள்ளது. எனவே பெண்கள் ஆண்களுக்கு இமாமாக தொழுகை நடத்துவது இவ்வசனத்துக்கு எதிரானதாகும்.

 

பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாமா?

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழும் போது பெண்களில் ஒருவர் இமாமாக இருந்து தொழுவிக்கலாம்.

தொழுகை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறை பொதுவானதாகும். நபிகள் நாயகம் (ஸல்) செய்து காட்டிய எந்த ஒரு வணக்கமும் அனைவருக்கும் உரியதாகும்.

ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யும் போது குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் எதிராக அமையும். இது போன்ற காரணம் பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யும் போது ஏற்படுவதில்லை.

இமாமாக நிற்கும் பெண் எங்கே நிற்க வேண்டும்?

பெண்கள் இமாமத் செய்யும் போது ஆண் இமாமைப் போல் முன்னால் தனியாக நிற்கக் கூடாது என்றும், முதல் வரிசையின் நடுவில் வரிசையோடு வரிசையாக நிற்க வேண்டும் என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை. சில நபித்தோழியர்கள் இப்படி தொழுதுள்ளதாக ஆதாரம் காட்டுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இமாமாக நின்று வழிகாட்டியுள்ளனர். முன்னால் தனியாகத் தான் அவர்கள் நின்றார்கள். வரிசையோடு வரிசையாக நிற்கவில்லை. இதற்கு மாற்றமாக பெண்கள் நடக்க வேண்டும் என்றால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க வேண்டும்.

 

பெண்கள் வீட்டில் தொழும் போது பாங்கு இகாமத் சொல்ல வேண்டுமா?

பொதுவாக பாங்கு என்பது ஜமாஅத் தொழுகைக்கு மக்களை அழைத்தல் ஆகும். வீட்டில் தொழும் போது யாரையும் ஜமாஅத் தொழுகைக்காக அழைக்க வேண்டியதில்லை என்பதால் தனியாகத் தொழும் ஆண்களும் பெண்களும் பாங்கு சொல்ல வேண்டியதில்லை என்று கருத வாய்ப்பு உண்டு.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையும் அழைக்கும் நிலை இல்லாவிட்டாலும் பாங்கு சொல்ல வேண்டும் என வழிகாட்டியுள்ளனர்.

سنن النسائي – عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” يَعْجَبُ رَبُّكَ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ شَظِيَّةِ الْجَبَلِ يُؤَذِّنُ بِالصَّلَاةِ وَيُصَلِّي، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلَاةَ يَخَافُ مِنِّي، قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ ”

மலை உச்சியில் ஆடு மேய்த்துக் கொண்டு பாங்கு சொல்லி தொழுபவனைக் கண்டு உமது இறைவன் மகிழ்ச்சி அடைகிறான். எனது இந்த அடியானைக் காணுங்கள்! எனக்கு அஞ்சி பாங்கு சொல்லி தொழுகிறான். எனது அடியானை மன்னித்து அவனை சொர்க்கத்தில் நுழைப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : நஸாயீ

யாரையும் அழைக்க வாய்ப்பு இல்லாத இடத்தில் யாரையும் அழைக்கும் நோக்கமில்லாமல் தனியாக தொழும் அடியான் பாங்கு சொன்னதில் அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான். இதிலிருந்து தனியாகத் தொழுபவர் பாங்கு சொல்லி விட்டுத்தான் கடமையான தொழுகை தொழ வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

வீட்டில் தொழும் பெண்களுக்கும் இது பொருந்தும்.

 

ஆயினும் ஒரு பகுதியில் பாங்கு சொல்லி விட்டால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பாங்கு சொல்ல வேண்டியதில்லை.

سنن أبي داود  – أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” أَبْصَرَ رَجُلًا يُصَلِّي وَحْدَهُ، فَقَالَ: أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ ”

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன் ஒருவர் வந்தார். இவரோடு தொழுது இவருக்கு அதிக நன்மை கிடைக்கச் செய்பவர் யார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஒரு மனிதர் முன் வந்து அவருடன் தொழுதார்.

நூல்: அபூதாவூத்

தாமதமாக வந்தவரை பாங்கு சொல்லி விட்டு தொழுமாறு நபிகள் வழிகாட்டவில்லை. ஒரு பகுதியில் பாங்கு சொல்லி விட்டால் அதன் பிறகு தனியாக வீட்டில் ஒருவர் தொழுதால் அவர் பாங்கு சொல்லாமல் தொழலாம்.

ஒரு பகுதியில் பாங்கு சொல்லப்படாவிட்டால் அந்தப் பகுதியில் தனியாகத் தொழும் ஆண்களும் பெண்களும் பாங்கு சொல்லி விட்டுத் தான் தொழ வேண்டும்.

 

எல்லா தொழுகைகளுக்கும் இகாமத் சொல்ல வேண்டும்
السنن الكبرى للنسائي  – فَيَقُولُ اللهُ: انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ، وَيُقِيمُ لِلصَّلَاةِ يَخَافُ مِنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي، وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ ”

மலை உச்சியில் தனியாகத் தொழும் மனிதர் குறித்த மற்றொரு அறிவிப்பில் பாங்கு சொல்லி இகாமத் சொல்கிறார் அவரைக் கண்டு அல்லாஹ் மகிழ்கிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. (நஸாயீ அல்குப்ரா)

எனவே தனியாக தொழும் ஆண்களும், பென்களும் இகாமத் கூறி விட்டுத் தான் கடமையான தொழுகையைத் தொழ வேண்டும்.