புனிதம் காப்போம்
இந்த உலகில் இஸ்லாம் எனும் உன்னத மார்க்கத்தை ஏற்ற நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொர்க்கம் செல்வதற்குரிய காரணிகள் எதுவென எவற்றையெல்லாம் நமக்குச் சுட்டிக் கட்டினார்களோ அவற்றையெல்லாம் நம்மால் இயன்ற வரை நாம் செய்து வருகிறோம்.
காலையிலிருந்து மாலை வரை கால் கடுக்க நின்றோ, அல்லது வெயிலைப் பொருட்படுத்தாமல் இரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைத்தோ அல்லது ஏசி அறைக்குள் அமர்ந்தபடி எட்டு மணி நேரம் வேலை பார்த்தோ பொருளாதாரத்தைச் சம்பாதிப்பது ஒரு பொருட்டல்ல! அந்தப் பொருளாதாரத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற பொருளாதாரம் பற்றிய வழிமுறைகளை ஒருவர் அறியாமல் இருந்தால் அவனை மனிதன் என சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயங்கும்.
அதைப் போன்றே நாம் உடலாலும், நேரத்தாலும், பொருளாதாரத்தாலும் அதிகம் தியாகம் செய்து இறைவனுக்காகவே ஏராளமான அமல்களை அனுதினமும் செய்து வருகின்றோம்.
இப்படியான கடும் சூழல்களுக்கு மத்தியில் செய்கின்ற அமல்களைப் பாதுகாக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். அதில் ஒருக்காலும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது.
மனிதன் இறைவனுக்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் இணைவைப்பே! அது ஒரு மனிதனிடம் வந்துவிட்டால் இறைவன் அவனை ஒரு போதும் மன்னிக்கமாட்டன். அதே மனிதன் இறைவனுக்கு சின்னஞ்சிறு பாவங்கள் எத்தனை செய்திருந்தாலும் அதை நாடினால் மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.
தனி மனிதனுடைய மானத்தை, தனி மனிதனுடைய அந்தஸ்தை, தனி மனிதனுடைய உரிமையை யார் சேதப்படுத்தி விடுகிறாரோ அவரைப் பற்றிய நிலை என்ன? அவர் குறித்து இஸ்லாம் எச்சரிக்கும் எச்சரிக்கைகள் என்ன? என்பதை அறிந்து கொள்ள நாம் நிச்சயம் கடமைப்பட்டுள்ளோம்.
மனிதனின் கண்ணியத்தை உயர்த்தி வைத்திருக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! மனிதனை மனிதன் கண்ணியப்படுத்த வேண்டும். அவர் தெரிந்தவரோ, தெரியாதவரோ, விருப்பத்திற்குறியவரோ, வெறுப்பிற்குரியவரோ யாராக வேண்டுமானால் இருக்கட்டும்! அவரது உணர்வுகளையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாம் நமக்குக் கற்றுத்தரும் அழகிய வழிமுறை!
தன்னை விட ஒருவன் அழகிலோ, அந்தஸ்திலோ, அறிவிலோ இன்ன பிற விஷயங்களிலோ உயர்ந்துவிடுகிற பொழுது அவனை எப்படியெல்லாம் காயப்படுத்த இயலுமோ, எப்படியெல்லாம் வீழ்த்த இயலுமோ அப்படியான செயல்களை இன்றைக்கு நம்மில் சிலர் சர்வ சாதாரணமாய் செய்வதைப் பார்க்கலாம். ஆனால் இப்படியான செயல்களை இஸ்லாம் அடிப்படையில் வேரோடு பிடுங்கி எறிகிறது.
நபிகளார் மக்களை எல்லாம் அழைத்து இறுதிப் பேருரையில் தனது தூதுத்துவ வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தையும் மக்களுக்குச் சாறாய் பிழிந்து இரத்தினச் சுருக்கமாய் சொன்னார்கள். அதில் மிக முக்கியமான செய்தி இதோ…
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். ஒருவர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், ‘இது எந்த நாள்?’ என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘இது நஹ்ருடைய (துல்ஹஜ் மாதம் பத்தாம்) நாள் அல்லவா?’ என்றார்கள். அதற்கு ‘ஆம்’ என்றோம். அடுத்து இது ‘எந்த மாதம்?’ என்றார்கள். அந்த மாதத்துக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘இது துல்ஹஜ் மாதமல்லவா?’ என்றார்கள். நாங்கள் ‘ஆம்!’ என்றோம். அடுத்து “(புனிதமான) இந்த ஊரில், இந்த மாதத்தில், இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ, அதுபோன்று, உங்களின் உயிர்களும், உடைமைகளும், உங்கள் மானம், மரியதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று கூறிவிட்டு
‘இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இச்செய்தியைக் கூறி விடவேண்டும்; ஏனெனில், வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அச்செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: (புகாரி: 67)
மேலுள்ள செய்தியை வெறுமனே செய்தியாய் வாசித்து விட்டுக் கடந்து செல்லக் கூடாது. அந்தச் செய்தியை உணர்வுப்பூர்வமாக விளங்காத வரை இதன் மகத்துவத்தை அறிய முடியாது.
எத்தனை ஊர்கள் இருந்தாலும், எத்தனை பெரிய கட்டடம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தினாலும் அதை நாம் வியந்து பார்ப்போமே தவிர அதை மதிப்புக் கொடுத்துப் பார்க்க மாட்டோம். ஆனால், மக்கா நகர் இதைப் போன்றது இல்லை.
மக்கமா நகரில் அமைந்துள்ள கஅபா எப்படிப் புனிதமோ அதைப் போன்றே புனிதம் நிறைந்தது தான் பிறருடைய மானம். துல்ஹஜ் மாதம் எப்படிப் புனிதமோ அதைப் போன்றே புனிதம் நிறைந்தது தான் பிறருடைய மானம். ஹஜ் பெருநாள் தினம் எத்தகைய சிறப்பும் புனிதமும் வாய்ந்ததோ அதைப் போன்றே புனிதம் நிறைந்தது தான் பிறருடைய மானம். என்றைக்குப் பிறரது மானத்தை மதிக்காமல் இழிவாய் நினைக்கின்றோமோ அன்றைக்கே நாம் புனிதத்தைப் பாழ்படுத்திவிட்டோம். மக்கமாய் நகரை உடைத்துத் தரைமட்டமாக்கி விட்டோம் என்ற அளவிற்கு அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் மனிதனின் கண்ணியத்தைப் புண்ணியப்படுத்தியுள்ளார்கள். இன்றைக்கு நாம் கூட சில நேரங்களில் இதுபோன்ற பிறரது கண்ணியத்திற்கு இழுக்கை ஏற்படுத்துகிற செயல்களில் ஈடுபடுவதுண்டு. இதில் நாம் மிக மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் செயலால் பிற மனிதர்களைக் காயப்படுத்துவதைப் போன்றே சொல்லாலும் காயப்படுத்துவதுண்டு.
கல்லால் தாக்கிக் காயத்தை ஏற்படுத்துவது கூட நாட்பட்டால் சரியாகிவிடும். சொல்லால் அடிபட்ட ஒருவனின் உள்ளம் சரியாகாத வரை அந்த உள்ளக் காயம் ஒருபோதும் ஆறாது. அதன் ஆழத்தைத் தெரிவிப்பதுதான் இந்தச் செய்தி!
“ஓர் அடியார் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: (புகாரி: 6477)
நாம் பேசுகின்ற பேச்சுக்கள் விளைவை அறியாமல் பேசுவதினால் மற்றவரின் உள்ளத்தைப் பாதிப்பதோடு நின்று விடாமல் நாளை மறுமையில் அது நமக்கு நரகைப் பெற்றுத்தரும் என்ற எச்சரிக்கையையும் நபிகளார் நமக்கு விடுக்கின்றார்கள். இந்த எச்சரிக்கையில் நம்முடைய நிலை என்ன?
நம்மில் பலர் உள்ளத்தில் காயத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை சாதாரணமாய் பேசிவிட்டு, நான் விளையாட்டிற்குத்தானே பேசினேன் என்று எளிதாகச் சொல்லிச் செல்பவர்களும் உண்டு. சுக்குநூறாய் உடைந்து, சிதறிப் போன கண்ணாடியை ஒருபோதும் ஒட்டி அழகு பார்க்க இயலாது.
இதன் காரணத்தாலேயே இஸ்லாம் இப்படியான பேச்சுக்குத் தடை போடுகிறது.
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 6475)
நன்மையில் எச்சரிக்கை
நாம் சேர்க்கின்ற எல்லா அமல்களுக்கும் இறைவன் முழுமையான நன்மைகளைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அமல் செய்கின்றோம். ஆனால் நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கின்ற ஒரு சில பண்புகள் மூலமே நமது அமல்கள் ஒன்றுமில்லாமல் போகிறது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ, (திர்ஹம்) பொருட்களோ, இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்து விட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)” என்று கூறினார்கள்.
நூல்: (முஸ்லிம்: 5037)
மேலுள்ள இந்தச் செய்தியை நாம் சற்று உற்றுநோக்கிக் கவனிக்க வேண்டும். ஒருவர் பாடாய்பட்டுச் சேர்த்த அமல்கள் அனைத்தும் பிறருக்குச் சொல்லாலும், செயலாலும் செய்த சில தீமையான காரியங்களால், நமது நன்மைகள் அநீதியிழைக்கப்பட்டவர்களுக்குப் பிரித்து பங்கு வைக்கப்பட்டு, நம்மிடம் நன்மைகள் இல்லாமல் திவாலாகிப் போன பிறகு இன்னும் இவனால் அநீதியிழைக்கப்பட்டவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நிற்பார்கள். அப்போது இறைவன், பாதிக்கப்பட்டவர்களின் தீமைகளை எடுத்து அநீதியிழைத்தவனுக்குக் கொடுப்பானாம். சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் தூய்மையானவன்.
இந்த நிலை நமக்கு ஏற்படுவதை விட்டும் இறைவன் நம்மைக் காப்பாற்ற வேண்டும். யாருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது. இந்த நிலை எப்போது நமக்கு ஏற்படாது? நாம் பிறருக்குச் சொல்லாலும், செயலாலும் உள்ளத்தைக் காயப்படுத்துகின்ற செயல்களை விட்டும் தவிர்ந்திருக்கின்ற போதுதான் நாம் இந்த நிலையில் இருந்து தப்பிக்க இயலும்.