புடம் போடும் புறக்கணிப்புகள்
மீலாது விழா புறக்கணிப்பு!
மவ்லிது விழா புறக்கணிப்பு!
திருமண விழா புறக்கணிப்பு!
நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு!
பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு!
கத்னா விழா புறக்கணிப்பு!
இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு!
இணை வைத்த பெற்றோராயினும் ஜனாஸாத் தொழுகை புறக்கணிப்பு!
இந்நிகழ்ச்சிகள் நடக்கும் சபைகளில் மட்டுமல்ல! அவற்றின் சார்பாக நடக்கும் விருந்துகளிலும் புறக்கணிப்பு!
புது வீடு புகும் போது நடைபெறும் விருந்து அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கு மவ்லிது ஓதப்பட்டிருந்தால் அது இணை வைப்பு என்பதால் அதையும் புறக்கணிக்கும் நிர்ப்பந்தம்.
திருமணம் எனும் போது திருமண சபையில் ஓதப்படும் யாநபி பாடல், வாங்கப்படும் வரதட்சணை, வழங்கப்படும் பெண் வீட்டு விருந்து காரணமாக அதைப் புறக்கணிக்கும் நிர்ப்பந்தம்!
இவை அல்லாமல் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத மேடைகளிலும் புறக்கணிப்பு! அது இஸ்லாமிய அமைப்புகள், அல்லது பிற மத அமைப்புகள் பங்கு கொள்ளும் பொது மேடைகளாயினும் சரி! அல்லது அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பங்கு கொள்ளும் மேடைகளாயினும் சரி! நாம் புறக்கணிக்கவே செய்கிறோம்.
இதனால் உறவினர்களுக்கு மத்தியில் விரிசல்! நண்பர்களுக்கு மத்தியில் பகைமை! அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி போன்றவற்றைச் சந்திக்கிறோம்.
இவையெல்லாம் ஒரு தவ்ஹீதுவாதியின் உள்ளத்தில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு விதமான சலிப்பு, ஒரு விதமான சங்கடம் நம் உள்ளத்தை ஆட்கொள்கின்றது.
எங்கும் புறக்கணிப்பு! எதிலும் புறக்கணிப்பு! ஏன் இப்படி? என்ற கேள்விக் கணையை நம்முடைய மனம் தொடுக்கின்றது.
இவை அனைத்துமே ஒன்றே ஒன்றுக்காகத் தான். இறைவனுக்கு இணை வைக்கும் பாவத்திற்கு நாம் துணை போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் இந்தப் புறக்கணிப்புகள்!
மற்றவர்களுடன் நாம் பங்கேற்கும் மேடையில் நாம் பேசிய பின்பு வரும் பேச்சாளர் இணை வைப்பைப் பேசி விடும் போது, நாம் இருக்கும் போதே உருவப் படங்களைத் திறந்து வைக்கும் போது, நெருப்பைப் புனிதமாகக் கருதி குத்து விளக்கை ஏற்றும் போது இந்த இணை வைத்தல் நிகழ்ச்சியில் நாமும் பங்கெடுத்தவர்களாகி விடுகின்றோம்.
பிற மதத்தவர்களுடன் இந்த நிலை என்றால், இஸ்லாமிய அமைப்புகளுடனும் இதே நிலை தான். பல பேச்சாளர்கள் தங்கள் பேச்சைத் துவக்கும் போது, முஹ்யித்தீனை அழைத்துப் பிரார்த்திப்பார்கள். அல்லது உரையை முடிக்கும் போது, நபியவர்களைக் கனவிலும் நனவிலும் கண்டு களிப்போம் என்று கூறுவார்கள். இந்த இணை வைப்புக்கு நாம் சாட்சியாக முடியுமா?
எனவே இதில் நாம் எள்ளளவு கூட சமரசம் செய்யாமல் புறக்கணிக்கிறோம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது நம்மைக் கொள்கையில் முடமாக்கி விடுகின்றது. ஏன்? பிணமாகவே ஆக்கி விடுகின்றது. அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.
இந்த பாதுகாப்பு அரணைத் தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கையில் எடுத்தார்கள். இணை வைப்பு ஊரில் பகை கொண்டு குகை சென்ற குகைவாசி இளைஞர்கள் கையில் எடுத்தார்கள்.
உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
நாளை மறுமையில் அவரவர் வணங்கிய தெய்வங்களுக்குப் பின்னால் செல்லுங்கள் என்று ஒரு குரல் ஒலிக்கும். அவ்வளவு தான்! ஈஸா நபி, உஸைர் ஆகியோரது தோற்றத்தில் அமைந்த உருவங்களுக்குப் பின்னால் அவர்களை வணங்கிய கூட்டத்தினர் சென்று விடுவர். (முஹ்யித்தீன், காஜா முயீனுத்தீன், ஷாகுல் ஹமீது ஆகியவர்களை வணங்கியவர்களின் நிலையும் அதுதான்.) அவர்கள் அனைவரும் நரகத்தில் வீழ்ந்து விடுவர்.
ஆனால் ஒரு கூட்டம் மட்டும் யாருக்குப் பின்னாலும் செல்லாமல் அசையாமல் நிற்பர். இதைப் புகாரியில் இடம் பெறும் ஹதீஸில் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நால் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம்! மேகமே இல்லாத நண்பகல் வெச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், இல்லை என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், மேகமே இல்லாத பௌர்ணமி இரவின் வெச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் இல்லை என்று பதிலத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொள்ளாதது போலவே மறுமை நால் கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்: மறுமை நாள் ஏற்படும் போது அழைப்பாளர் ஒருவர் ஒவ்வொரு சமுதாயமும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும் என்றழைப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும், கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் (கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர்.
முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக்கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்கல் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்கடம் யாரை நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அவர்கள், அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம் என்று பதிலப்பார்கள். அப்போது அவர்கடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்படும். மேலும், இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கப்படும். அதற்கவர்கள் எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக! என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா? என (ஒரு திசையைச்) சுட்டிக் காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போலக் காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.
பிறகு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று அவர்கடம் கேட்கப்படும். அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) வணங்கிக் கொண்டிருந்தோம் என்று கூறுவர். அப்போது அவர்கடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியது போன்று இவர்களும் கூறுவர்.
இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்கடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்கல் (அடையாளம் கண்டு கொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்). அப்போது எதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வாரு சமுதாயமும் (உலகில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவைகளைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனரே! என்று கேட்கப்படும். அவர்கள், உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்கடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின் தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பதிலப்பர். அதற்கு அல்லாஹ், நானே உங்கள் இறைவன் என்பான். அதற்கு அவர்கள் நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவர்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
இந்தப் பதிலைச் சொல்பவர்கள் யார்? உலகத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் நிகழ்ச்சிகளை அவனுக்காகப் புறக்கணித்தார்களே – அவனுக்காக உறவுகளை, ஊர்களை, வரவுகளை, வாழ்க்கை வசதிகளைப் புறக்கணித்தார்களே இம்மக்கள் தான் இந்தப் பதிலைச் சொல்கின்றனர்.
இப்போது சொல்லுங்கள்! இணை வைப்பு நடக்கும் இடம் எங்கும் புறக்கணிப்பு, எதிலும் புறக்கணிப்பு என்பதில் சலிப்புத் தட்டுமா? என்று இப்போது சொல்லுங்கள்.
எனவே இணை வைப்பு நிகழ்ச்சிகளை, நிரல்களை, விருந்துகளைப் புறக்கணியுங்கள்.
அதிலும் குறிப்பாக இது மவ்லிதுக் காலம்! இந்த மவ்லிதுக் காலத்தில் மவ்லிதுப் பாடல்களைப் பாடுகின்ற சபைகளைப் புறக்கணியுங்கள். அதற்காகச் சமைக்கப்பட்ட நெய்ச் சோறு, புலவு, பிரியாணி போன்ற சாப்பாட்டுக்கு ஊர் வரி செலுத்தாதீர்கள்.
சாப்பாடு வேண்டாம்; ஆனால் ஊர்க் கட்டுப்பாட்டுக்காக வரியை மட்டும் செலுத்துகிறேன் என்று செலுத்தினாலும் அதுவும் இணை வைத்தலுக்குத் துணை போகும் செயல் தான். எனவே இது போன்ற மவ்லிதுகளுக்கு வரி செலுத்தியோ, அல்லது வரி செலுத்தாமல் இலவசமாகவே வருகின்ற உணவுகளையோ வாங்காதீர்கள். புறக்கணியுங்கள்! புறக்கணிப்பில் புடம் போட்ட தங்கமாக இருங்கள்!