11) பிற மத்தவர்களிடம் அன்பு
பிற மத்தவர்களிடம் அன்பு
மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு மகத்தான நற்பண்பு பிற மதத்தவர்களிடம் அவர்கள் நடந்து கொண்ட முறை எனலாம்.
பொதுவாக ஒரு மதத்தின் ஆன்மீகத் தலைவர்கள் வேறு மதத்தவர்களை இழிவாகவே கருதுவது வழக்கம். அது போல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்பவர் ஒரு மதத்தின் மீது ஆழ்ந்த பற்றுடையவராக இருந்தால் அவரும் பிற மதத்தவர்களை இழிவாகவே கருதுவார்.
ஏற்கனவே தமக்குக் கொடுமைகள் புரிந்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கும் என்றால் அவர் தமக்குக் கொடுமைகள் இழைத்தவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார். உலக வரலாற்றில் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து அனைத்து வகையான தீமைகளையும் எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளை அவர்கள் சம்பாதித்திருந்தனர். அந்த எதிரிகள் மூலம் ஏராளமான கொடுமைகளையும் சந்தித்தனர். பல தோழர்கள் எதிரிகளால் கொன்று குவிக்கப்பட்டனர். ஊரை விட்டே விரட்டியடிக்கப் பட்டனர். இத்தகையோர் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு சீக்கிரமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.
அவர்களைப் பழிவாங்கியிருந்தால் அதை யாரும் குறை காண முடியாத அளவுக்கு அதற்கு நியாயங்கள் இருந்தன. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கை முழுமையாக ஓங்கியிருந்த காலகட்டத்திலும் யாரையும் பழிவாங்கவில்லை. முஸ்லிமல்லாத மக்களுடன் நட்புறவுடனேயே அவர்கள் பழகி வந்தனர்.
முஸ்லிமல்லாத மக்களுடன் அவர்கள் நடந்து கொண்ட முறைக்கு ஹுதைபியா உடன்படிக்கையும், அப்போது நடந்த நிகழ்வுகளும் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.
கஃபா ஆலயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகளின் கைவசத்தில் இருந்தாலும் அங்கே ஹஜ் கடமையை நிறைவேற்ற யார் வந்தாலும் அவர்கள் தடை செய்யாமல் இருந்தனர். பல நாட்டவர்களும் ஹஜ் காலத்தில் சர்வ சாதாரணமாக வந்து சென்றனர்.
மேலும் உம்ரா எனும் வணக்கம் செய்ய வருவோரையும் மக்கா வாசிகள் தடை செய்வதில்லை. அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்ற வந்தனர். ஆனால் யாரையும் தடுக்காத அம்மக்கள் நபிகள் நாயகத்தை மட்டும் தடுக்க வந்தனர். அந்தச் சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலப் பிரயோகம் செய்து மக்காவுக்குள் நுழைய முடியும் என்றாலும் எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டு திரும்பி வந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவுக்குச் சென்று வணக்கம் செய்யக் கூடாது என்று எதிரிகள் வழிமறித்தனர். நபித்தோழர்கள் பலர் பலப்பிரயோகம் செய்தாவது மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்று கருதினார்கள்.
ஆனால் இந்த ஆண்டு திரும்பிச் சென்று விட்டு அடுத்த ஆண்டு வந்தால் தடுப்பதில்லை எனவும் அது வரை ஒரு வருட ஒப்பந்தம் செய்து கொள்வது என்றும் எதிரிகளுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமரசம் செய்தனர்.
பல நூறு மைல் தொலைவிலிருந்து பயணம் செய்து வந்தும் காரியம் கை கூடா விட்டால் அதை யாரும் சகித்துக் கொள்ள முடியாது. அதுவும் தமது சொத்து சுகங்களைப் பறித்துக் கொண்டு ஊரை விட்டே விரட்டியடித்தது மட்டுமின்றி தமது சொந்த ஊரில் வழிபாடு நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். மேலும், பல போர்களைச் சந்தித்து அனைத்திலும் தோல்வியைச் சந்தித்த கூட்டத்தினர், நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போரிட இயலாத பலவீனமான நிலைமைக்கு ஆளானோர் தடுக்கும் போது அதைப் பொருட்படுத்தாமல் உள்ளே புகுந்தால் எதுவும் நடந்திருக்காது.
ஆயினும் தமது கை முழுமையாக ஓங்கியிருந்தும் தம்மிடம் நியாயங்கள் இருந்தும் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய உடன் படிக்கையை மேற்கொள்ளச் சம்மதித்தனர்.
நபித்தோழர்கள் பலரும் இதை விரும்பவில்லை. ‘நாம் சரியான மார்க்கத்தில் இருக்கும் போது, தவறான கொள்கை உடையோருக்கு ஏன் பணிய வேண்டும்?’ என்று உமர் (ரலி) போன்ற நபித்தோழர்களே மறுப்புத் தெரிவித்தனர். ஆயினும் அதை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை.
இரத்தம் சிந்துவதைத் தவிர்க்க எதிரிகள் முன் வரும் போது அதை விட அதிகமாக நபிகள் நாயகம் (ஸல்) இறங்கினார்கள்
ஒப்பந்தம் எழுத ஆரம்பித்ததும் அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் பெயரால்… என்று நபிகள் நாயகம் (ஸல்) எழுதச் செய்தார்கள். அதை உடனே எதிரிகள் மறுத்தனர். அளவற்ற அருளாளன் என்பது எங்களுக்கு அன்னியமானது; அல்லாஹ்வின் பெயரால் என்று மட்டுமே எழுத வேண்டும் என்று அடம் பிடித்தனர். அதை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொண்டனர்.
அப்துல்லாவின் மகனும் அல்லாஹ்வின் தூதருமாகிய முஹம்மதும்… என்று ஒப்பந்த வாசகத்தை எழுதிய போதும் எதிரிகள் ஆட்சேபித்தனர். ‘அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று தான் குறிப்பிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் என்று குறிப்பிடக் கூடாது. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டிருந்தால் நமக்கிடையே ஒப்பந்தம் தேவையில்லேயே’ என்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நான் அல்லாஹ்வின் தூதர் தான்; ஆனாலும் ஒப்பந்தத்தில் அதை அழித்து விடுகிறேன்’ எனக் கூறி அலீ (ரலி) யிடம் அதை அழிக்கச் சொன்னார்கள். ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் நம்புவதால் அதை அழிக்க மாட்டேன்’ என்று அலீ (ரலி) மறுத்து விட்டார். அந்த இடம் எதுவென அறிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்அதைத் தமது கையால் அழித்தனர்.
‘எங்கள் ஊரைச் சேர்ந்தவர் இஸ்லாத்தை ஏற்று உங்களிடம் வந்தால், எங்களிடம் அவரைத் திருப்பி அனுப்பிட வேண்டும்’ என்று எதிரிகள் நிபந்தனை போட்டனர். நபித் தோழர்கள் இதை அறவே விரும்பாத போதும் நபிகள் நாயகம் (ஸல்) இதையும் ஏற்றனர்.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே அபூஜந்தல் என்பார் இஸ்லாத்தை ஏற்று நபிகள் நாயகத்திடம் ஓடி வந்தார். அவரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு எதிரிகள் கேட்டனர். இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை எதிரிகள் ஏற்கவில்லை. இதிலும் விட்டுக் கொடுத்து அபூஜந்தலை அவர்களிடம் அனுப்பினார்கள்.
இப்படி எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் சமாதானத்தையே விரும்பினார்கள் என்பதும் தமக்குக் கொடுமைகள் புரிந்த எதிரிகளை ஒழிக்க தக்க சந்தர்ப்பம் கிடைத்தும் விட்டுக் கொடுத்தார்கள் என்பதும் இந்த மாமனிதரின் மதம் கடந்த மனித நேயத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.
இஸ்லாமிய மார்க்கத்தில் ஸகாத் எனும் தர்மம் கட்டாயக் கடமை என்பதை முஸ்லிமல்லாத மக்களும் அறிவார்கள். செல்வந்தர்களிடம் திரட்டப்படும் இந்த நிதி எட்டு விதமான பணிகளுக்குச் செலவிடப்பட வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் நல்ணக்கம் வளர்வதற்காக அவர்களுக்காக வழங்குவதும் அப்பணிகளில் ஒன்று என இஸ்லாம் கூறுகிறது.
(பார்க்க(அல்குர்ஆன்: 9:60) ➚
முஸ்லிமல்லாத மக்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்வதை இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக நபிகள் நாயகம் (ஸல்) ஆக்கினார்கள்.
உலகத்தில் எந்த மதத்திலும் பிற மதத்தினருக்கு உதவுவது மார்க்கத்தில் கட்டாயக் கடமையாக ஆக்கப்பட்டதில்லை. எந்த மதத்திலும் இத்தகைய ஒரு சட்டத்தைக் காணவே முடியாது. சில தனிப்பட்ட நபர்கள் மதம் கடந்து மனித நேயத்துடன் நடந்து கொள்வார்கள். இத்தகையோர் குறைந்த எண்ணிக்கையில் எல்லா மதங்களிலும் இருப்பார்கள். இது அந்தத் தனிப்பட்ட நபர்களின் பெருந்தன்மையினால் ஏற்படும் விளைவு தானே தவிர அவர்கள் பின்பற்றும் மதத்தில் கடமையாக்கப்பட்டதால் அல்ல. ஆனால் நபிகள் நாயகமோ இவ்வாறு பிற சமய மக்களுக்கு வழங்குவதை இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாக ஆக்கினார்கள்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு இவ்வாறு முஸ்லிம் அரசின் கருவூலத்திலிருந்து கண்துடைப்பாக, அற்பமாக வழங்குவதா என்றால் நிச்சயம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!
‘இஸ்லாத்தின் பெயரால் எங்களுக்கு உதவுங்கள்’ என்று இஸ்லாத்தின் பெயரைச் சொல் யார் கேட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். ஒரு மனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தின் பெயரால் உதவி கேட்டார். இரு மலைகளுக்கிடையே அடங்கும் அளவுக்கு அவருக்கு ஆடுகளை வழங்கினார்கள். அவர் தனது சமுதாயத்திடம் சென்று ‘என் சமுதாயமே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில் நிதி நெருக்கடியைப் பற்றி அஞ்சாமல் முஹம்மத் வாரி வழங்குகிறார்’ எனக் கூறினார்.
இரு மலைகளுக்கிடையே அடங்கும் அளவுக்கு ஆடுகள்’ என்ற சொற்றொடர் மிக அதிகமாக வழங்கும் போது கூறப்படும் சொல் வழக்காகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத மக்களுக்கு அளவுக்கதிகமாக வாரி வழங்குவது எந்த அளவுக்கு இருந்தது என்றால் இதற்காகவே பலரும் இஸ்லாத்தை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பும் அளவுக்கு இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு வழங்கும் போது பலவீனமாகவோ, முஸ்லிமல்லாத மக்களின் தயவு தேவை என்ற நிலையிலோ இருக்கவில்லை. மாறாக முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். நபிகள் நாயகத்திடம் தான் ஆட்சியும் இருந்தது. முஸ்லிமல்லாத மக்களால் இடையூறுகள் ஏதும் ஏற்படும் என்று அஞ்சி அதைத் தவிர்ப்பதற்காக வழங்கவில்லை. மேலும் அனைத்து மதத்தவர்களிடமும் வசூலிக்கப்படும் வரியிலிருந்தும் இவ்வாறு வழங்கவில்லை. மாறாக முஸ்லிம்களிடம் வசூலிக்கப்படும் ஸகாத் நிதியிலிருந்து தான் முஸ்லிமல்லாத மக்களுக்கு வாரி வழங்கினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதம் கடந்த மனித நேயத்திற்குச் சான்றாக அமைந்த மற்றொரு நிகழ்ச்சியைக் காணுங்கள்!
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் ‘நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா? நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.
நூல் : திர்மிதி 1866
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களில் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)யும் ஒருவர். அவர் தமது அண்டை வீட்டு யூதருக்கும் தமது வீட்டில் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இதற்கு நபிகள் நாயகம் ஸல்) அவர்களின் போதனையையே அவர் காரணமாகக் காட்டுகிறார்.
அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணுமாறு வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதத்தின் அடிப்படையில் அண்டை வீட்டாருக்கு உதவுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்று விளக்கமளித்ததால் தான் அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழரால் இவ்வாறு நடந்து கொள்ள முடிகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மிடம் ஆட்சியும், அதிகாரமும் வந்த பின்பும் முஸ்லிமல்லாத மக்களிடம் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதற்கு மற்றொரு சான்றையும் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யூத மதத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் பணி செய்து வந்தார். அவர் ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார். உடனே அவரை விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றனர். அவரது தலைக்கருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். ‘இஸ்லாத்தை நீ ஏற்றுக் கொள்ளலாமே’ என்று அவரிடம் கூறினார்கள். அப்போது அந்த இளைஞரின் தந்தையும் அருகில் இருந்தார். அந்த இளைஞர் தமது தந்தையைப் பார்த்தார். ‘நபிகள் நாயகம் கூறுவதைக் கேள்’ என்று தந்தை கூறியதும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ‘இவரை நரகத்திலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறிக் கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை நாம் அறிந்து கொள்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் வாழ்ந்த யூதர்கள் பலவகையிலும் நபிகள் நாயகத்துக்கு இடையூறு செய்து வந்தனர். எதிரி நாட்டவருக்குத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டவர்களும் அவர்களில் இருந்தனர். இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களாக நடித்து ஏமாற்றியவர்களும் இருந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன் யூதர்கள் தான் பெரும்பான்மையாக இருந்தனர். அவர்களில் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் எஞ்சியவர்களுக்கு நபிகள் நாயகத்தின் மீது கடுமையான கோபம் இருந்தது.
இத்தகைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளராகச் சேர்த்துக் கொண்டார்கள். ஒரு சமுதாயத்தினர் எதிரிகளாக உள்ளதால் அச்சமுதாயத்தில் உள்ள நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அளவுக்கு அவர்களிடம் மனித நேயம் மிகைத்திருந்தது. இதனால் தான் எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் தமது ஊழியர்களில் ஒருவராக அவர்களால் சேர்த்துக் கொள்ள முடிந்தது.
அவ்வாறு ஊழியராக இருப்பதால் அவரது பலவீனமான நிலையைப் பயன்படுத்தி இஸ்லாத்தில் சேருமாறு அவர்கள் வலியுறுத்தவில்லை. மாறாக அவர் மரணத்தை நெருங்கிய போது ‘அந்த நிலையில் அவர் மரணித்தால் அவர் நரகம் சென்று விடக் கூடாதே’ என்பதற்காக கடைசி நேரத்தில் அவரை இஸ்லாத்திற்கு அழைக்கிறார்கள். அதையும் ஒளிவு மறைவாகச் செய்யாமல், அவரது தந்தைக்கு அருகில் வைத்துக் கொண்டே கூறுகிறார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றதும் நரகிலிருந்து அவரைக் காப்பாற்றிய இறைவனுக்கே நன்றி என்று கூறுகிறார்கள்.
இறக்கும் தறுவாயில் உள்ள ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதால் முஸ்லிம்களுக்கு எந்தப் பலமும் அதிகரிக்கப் போவதில்லை. எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதை விட மக்கள் நரகத்திற்குச் சென்று விடக் கூடாது என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
மேலும் இவ்வாறு அந்த இளைஞரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது, அருகில் இருந்த தந்தை அதை ஏற்கச் செய்கிறார் என்றால் அந்த மக்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு மனித நேயத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடந்திருப்பார்கள் என்பதை ஊகம் செய்யலாம்.
இத்தகைய பண்பாடுகளாலும், எல்லையற்ற மனித நேயத்தினாலும் தான் மனிதர்களை அவர்கள் வென்றெடுத்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்து எனும் பகுதிக்கு சிறு படையை அனுப்பினார்கள். அப்படையினர் பனூ ஹனீபா சமுதாயத்தைச் சேர்ந்த ஸுமாமா என்பவரைப் பிடித்து வந்தனர் அவரைப் பள்ளிவாசலின் ஒரு தூணில் கட்டி வைத்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து ‘ஸுமாமாவே! உம்மிடம் என்ன இருக்கிறது?’ என்று கேட்டனர். அதற்கவர் ‘முஹம்மதே! என்னிடம் செல்வம் இருக்கிறது. என்னை நீங்கள் கொன்றால் கொல்லப்படுவதற்குத் தகுதியானவனையே நீங்கள் கொன்றவராவீர்கள். நீங்கள் அருள் புரிந்தால் நன்றியுடன் நடப்பவனுக்கு அருள் புரிந்தவராவீர்கள்’ என்று கூறினார். அவரை அப்படியே விட்டு விட்டு நபிகள் நாயகம் (ஸல்) சென்று விட்டனர். மறு நாள் அவரிடம் வந்து முதல் நாள் கேட்டது போல கேட்டனர். அவரும் முதல் நாள் கூறிய பதிலையே கூறினார். மூன்றாம் நாளும் அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தனர். முதல் நாள் கேட்டது போலவே அவரிடம் கேட்டனர். அவரும் முதல் நாள் கூறிய பதிலையே கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்’ என்றார்கள். அவர் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள பேரீச்சை மரத் தோப்புக்குள் சென்று குளித்து விட்டு பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்று நான் உறுதி கூறுகிறேன். முஹம்மதே! இவ்வுலகில் உங்கள் முகத்தை விட எனக்கு வெறுப்பான முகம் ஏதும் இருந்ததில்லை. இன்று உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த முகமாக உங்கள் முகம் மாறி விட்டது. உங்கள் மாக்கத்தை விட எனக்கு வெறுப்பான மார்க்கம் ஏதுமிருக்கவில்லை. இன்று உங்கள் மார்க்கம் உலகிலேயே எனக்குப் பிடித்த மார்க்கமாக ஆகி விட்டது. உங்கள் ஊரை விட எனக்கு வெறுப்பான ஊர் எதுவும் இருந்ததில்லை. இன்றோ உலகிலேயே எனக்குப் பிடித்த ஊராக உங்கள் ஊர் மாறி விட்டது. உங்கள் படையினர் என்னைப் பிடித்து வந்து விட்டனர். நான் மக்கா சென்று உம்ரா நிறைவேற்ற நினைக்கிறேன். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்’ என்று கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்த்துக் கூறி உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சொன்னார்கள். அவர் மக்காவுக்கு வந்ததும் ‘நீரும் மதம் மாறி விட்டீரா?’ என்று மக்கா வாசிகள் கேட்டனர். ‘இல்லை; முஹம்மது அவர்களுடன் சேர்ந்து நானும் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் அனுமதியின்றி யமாமா’விலிருந்து ஒரே ஒரு கோதுமை கூட உங்களுக்கு இனிமேல் வராது’ என்று விடையளித்தார்.
யமாமா எனும் பகுதியில் அதிகாரம் செலுத்துபவராக ஸுமாமா இருந்தார். சிற்றரசராக இருந்த அவரைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் படையினர் பிடித்து வந்தனர். ஏன் பிடித்து வந்தனர் என்ற காரணத்தை இந்த நிகழ்ச்சியில் ஸுமாமாவின் வாக்கு மூலத்திருந்தே நாம் அறிந்து கொள்ளலாம். என்னை நீங்கள் கொல்வதென முடிவு செய்தால் அதற்கு நான் தகுதியானவனே என்று அவர் கூறினார்.
கொல்லப்படுவதற்குத் தகுதியான பல கொடுமைகளை முஸ்லிம்களுக்கு எதிராக அவர் நிகழ்த்தியவர் என்பது இதிலிருந்து தெரிகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக அவர் செய்த கொடுமைகள் காரணமாகவே அவருக்கு எதிராகப் படையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள்.
பொதுவாக இது போன்ற கொடுமை செய்த தலைவர்களும், சிற்றரசர்களும் மன்னிக்கப்படுவது அன்றைய வழக்கத்தில் இருந்ததில்லை. மன்னித்து விடுவதால் மேலும் பலத்தைப் பெருக்கிக் கொண்டு போருக்கு வருவார்கள் என்பதால் இவ்வாறு செய்வது அன்று வழக்கத்தில் இல்லை.
‘என்னைக் கொல்லவும் நியாயம் இருக்கிறது; மன்னித்தால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்’ என்று அவர் கோருகிறார். அதுவும் வேண்டிய அளவுக்குப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலை செய்தால் போதும் என்பது தான் அவரது கோரிக்கை.
கொல்லப்படுவதற்குரிய அத்தனை நியாயங்கள் இருந்தும், அதுவே அன்றைய உலகில் வழக்கமாக இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கொல்லவில்லை. மூன்று நாட்களாக அவரை விடுவிக்கவும் இல்லை. எடுத்த எடுப்பிலேயே முதல் நாளிலேயே அவரை அவர்கள் விடுவித்திருக்க முடியும்.
ஆயினும் முஸ்லிம்களின் கொள்கை, கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், அவர்களின் பண்பாடுகள் அனைத்தையும் அவர் காண வேண்டு மென்பதற்காகவே மூன்று நாட்கள் அவரைப் பள்ளிவாசலிலேயே கைதியாக வைத்தார்கள்.
மூன்றாம் நாளில் அவரிடம் எந்தப் பணத்தையும் கேட்காமலும், எந்த நிபந்தனையும் விதிக்காமலும், எந்த ஒப்பந்தமும் எழுதிக் கொள்ளாமலும், எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்தாமலும் அவிழ்த்துவிடச் சொல்கிறார்கள்.
உண்மை முஸ்லிம்களின் நடவடிக்கைகளையும், அவர்களின் கொள்கைகளையும், அவர்களின் அப்பழுக்கற்ற நேர்மையையும் நேரில் காண்பவர் நிச்சயம் எதிரியாக மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) நம்பியதால் தான் பயங்கரமான எதிரியைச் சர்வ சாதாரணமாக அவிழ்த்து விட்டார்கள்.
அவர்கள் எதிர் பார்த்தது போலவே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். அவர் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் நஞ்சென வெறுக்கும் நிலையில் தான் தூணில் கட்டப்பட்டார். மூன்றே நாட்களில் அவரது உள்ளம் தலைகீழ் மாற்றம் அடைந்தது. உலகிலேயே நபிகள் நாயகம் (ஸல்) தனது அதிக அன்புக்குரியவராக மாறியதாகக் கூறுகிறார்.
முஸ்லிமல்லாத எதிரிகளிடம் கூட நபிகள் நாயகம் (ஸல்) எந்த அளவு கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டார்கள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மூன்று நாட்களும் பள்ளிவாசலில் மக்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் அவர்களது எளிமை, அடக்கம் போன்ற எல்லாப் பண்புகளையும் அவர் உன்னிப்பாகக் கவனித்து ஆச்சரியப்படுகிறார்.
மாற்றுத் துணிக்குக் கூட வழியில்லாமல் இருக்கும் அந்தச் சமுதாயத்தையும் வெறும் பந்தல் போடப்பட்ட திடலே பள்ளிவாசலாகவும், நபிகள் நாயகத்தின் அரண்மனையாகவும் இருப்பதையும் அவர் காண்கிறார். மக்களை அடிமைகளாக நடத்தாமல் சக தோழர்களாக நபிகள் நடத்தும் விதத்தையும் காண்கிறார்.
இவ்வளவு கஷ்டமான நேரத்திலும் தம்மிடம் ஈட்டுத் தொகை வாங்க வேண்டும் என்று எண்ணாமல் நபிகள் நாயகம் விடுதலை செய்வதையும் அறிந்து பிறகு தான் இஸ்லாம் பற்றியும், நபிகள் நாயகம் பற்றியும் அவர் மனதுக்குள் கற்பனை செய்திருந்த தவறான எண்ணங்கள் விலகின.
இந்தச் சிறிய நிகழ்ச்சியிலிருந்து இத்தனை விஷயங்களையும் நாம் அறிந்து கொள்கிறோம்.
எதிரிகளிடம் கூட இத்தனை கனிவாக நடந்து கொண்டதால் தான் மக்களின் உள்ளங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வென்றெடுத்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இரும்புக் கவசத்தை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்து அவரிடமிருந்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்.
(புகாரி: 2096, 2252, 2509, 2513, 2068, 2200, 2251, 2386)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எளிமையான வாழ்வுக்குச் சான்றாக இதை முன்னரும் நாம் குறிப்பிட்டுள்ளோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் யூதர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தார்கள். மேலும் அவர்களில் பலர் தமது நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் நபிகள் நாயகத்தின் எதிரி நாட்டவர்களுக்குத் தகவல்கள் தந்து ஒத்துழைப்புச் செய்பவர்களாக இருந்தனர்.
நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் இரட்டை வேடம் போட்டு வந்த சமுதாயத்தவர்களை எந்த நாடும் மரியாதையுடன் நடத்துவதில்லை. ஆனால் யூதர்கள் பலவிதமான இடையூறுகள் அளித்த நிலையிலும் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் எந்த அளவு கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட்டனர் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
நாட்டின் அதிபதி அடைமானம் வைக்கக் கூடியவராகவும், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் அடைமானம் பெற்றுக் கொள்பவராகவும் இருந்தனர் என்பதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விசாலமான உள்ளத்தை அறிந்து கொள்ள முடியும்.
மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!
யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிட்டனர். உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம் என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.
நபிகள் நாயகத்திற்கு எதிரிகளாகவும், சிறுபான்மையினராகவும் இருந்த யூத இனத்துப் பெண்மணி விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொண்டு வந்து தந்த போது அதைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் பெருந்தன்மை இருந்தது. அவள் விஷம் கலந்த செய்தி தெரிந்தவுடன் அவள் பிடித்து வரப்பட்டாள். அவளைக் கொன்று விடலாமா? என்று நபித் தோழர்கள் கேட்ட போது, வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் நிலை என்னவென்றால் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு இரக்கம் காட்டக் கூடாது என்பது தான்.
இந்தச் சட்டத்தில் யாருக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) வளைந்ததில்லை. உயர்ந்த குலத்துப் பெண் ஒருத்தி திருடிய போது அவருக்காக பலரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பரிந்துரை செய்த போது என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை வெட்டுவேன் என்று திட்டவட்டமாக அறிவித்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
(புகாரி: 3475, 3733, 4304, 6787, 6788)
சட்டத்தை அமுல்படுத்துவதில் கடும் போக்கை மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய சொந்த விவகாரம் என்றவுடன் மன்னித்து விடுகிறார்கள்.
தமது குடிமக்களில் வேறு யாரையாவது அப்பெண் கொல்ல முயன்றிருந்தால் அவரைக் கடுமையாகத் தண்டித்திருப்பார்கள். கொலை முயற்சி தமக்கு எதிரானது என்பதால் தான் அப்பெண்ணை மன்னித்து விடுகிறார்கள்.
நேருக்கு நேர் நின்று மோதுவதை விட பெண்களை முன்னிறுத்தி கொல்ல முயல்வதும், உணவில் விஷம் கலந்து நம்பிக்கை துரோகம் செய்வதும் மிகவும் கடுமையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள்.
இவ்வாறு துணிவுடன் ஒரு பெண் விஷம் கலந்து கொடுக்கிறார் என்றால் அதற்குப் பலமான பின்னணி இருக்க வேண்டும். திட்டமிட்டவர் யார்? தூண்டியவர் யார்? யாருக்கெல்லாம் இதில் பங்கு உண்டு என்றெல்லாம் விசாரணை நடத்துவது தான் உலக வழக்கம். சாதாரண குடிமக்களுக்காக இவ்வாறு நடத்தப்படாவிட்டாலும் நாட்டின் தலைவர்களின் உயிரோடு விளையாடியவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் தான் எடுக்கப்படும்.
அந்தச் சதியில் சம்மந்தப்பட்டவர் யார் என்பதோடு கூட நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். மாறாகக் குற்றவாளியின் இனத்தைச் சேர்ந்த அப்பாவிகளையும் கூட கொன்று குவிப்பது தான் உலக வழக்கம்.
ஆனால் இந்த மாமனிதரோ, அப்பெண்ணையும் தண்டிக்கவில்லை; அப்பெண்ணுக்குப் பின்னணியில் இருந்தவர் யார் என்பதையும் விசாரிக்கவில்லை. அப்பெண் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவளோ அந்தச் சமுதாயத்தை – யூத சமுதாயத்தை – பழிவாங்கவும் இல்லை.
எதுவுமே நடக்காதது போல் அவர்கள் பதிலளித்ததைக் காணும் எவரும் இந்த மாமனிதரின் பெருந்தன்மைக்கும் மனித நேயத்திற்கும் ஈடானது ஏதுமில்லை என்பதை ஒப்புக் கொள்வார்.
மற்றொரு சான்றைப் பாருங்கள்!
காதிஸிய்யா எனும் இடத்தில் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி), கைஸ் பின் ஸஃது (ரலி) ஆகிய இரு நபித்தோழர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அவர்களை ஒரு பிரேத ஊர்வலம் கடந்து சென்றது. உடனே அவ்விருவரும் எழுந்து நின்றார்கள். ‘இறந்தவர் வேறு மதத்தவர்’ என்று அவ்விரு நபித்தோழர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவ்விருவரும் பின்வருமாறு கூறினார்கள்:-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். ‘இது யூதருடைய பிரேதம்’ என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதுவும் ஓர் உயிர் அல்லவா?’ என்று கேட்டனர்.
மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
எங்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. அதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் நின்றோம். ‘அல்லாஹ்வின் தூதரே! இது யூதருடைய பிரேதம்’ என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்’ எனக் கூறினார்கள்.
இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் போது இருபதாம் நூற்றாண்டில் கூட கலவரங்கள் நடப்பதைக் காண்கிறோம். எதிரி சமுதாயத்தவரின் உடல்களை எங்கள் தெரு வழியாகக் கொண்டு செல்லக் கூடாது என்று ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களே வெட்டு குத்துக்களில் இறங்குவதையும் காண்கிறோம்.
உயிருடன் இருக்கும் போது நடமாடுவதற்கு அனுமதியளித்தவர்கள் கூட இறந்த உடலுக்கு அந்த உரிமையை வழங்க மறுத்து வருவதைக் காண்கிறோம்.
இந்த மாமனிதரின் இந்த வரலாற்றைப் பாருங்கள்!
மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருக்கிறார்கள். அவர்களின் எதிரி சமுதாயமாக யூதர்கள் இருந்தனர். எதிரி சமுதாயத்தைச் சேர்ந்த – சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த – ஒருவரின் உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் தயக்கமோ, அச்சமோ இன்றி கொண்டு செல்லப்படுகிறது.
முஸ்லிம்களின் ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினர் வசிக்கும் பகுதி வழியாக, அதுவும் முஸ்லிம் அரசின் அதிபர் வசிக்கும் தெரு வழியாக பிரேதத்தை எடுத்துச் செல்ல சிறுபான்மை மக்களுக்கு எந்த அச்சமும் இருக்கவில்லை. சர்வ சாதாரணமாகப் பிரேதத்தை எடுத்துச் செல்கிறார்கள்.
முஸ்லிம்களின் மனித நேயத்தை அனுபவப் பூர்வமாக அறிந்திருந்ததால் தான் சிறுபான்மை சமுதாயத்தவரால் இப்படி நடந்து கொள்ள முடிந்தது.
பிரேதம் கடந்து செல்லும் போது உள்ளத்தில் வெறுப்பைச் சுமந்து கொண்டு வேண்டா வெறுப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் அமைதி காத்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த உடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியதன் மூலம் உளப்பூர்வமாகவே அனுமதித்தார்கள் என்பதை அறியலாம்.
உயிரோடு இருப்பவருக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்துவதை அடியோடு தடை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இறந்தவரின் உடலுக்கு மட்டும் எழுந்து நின்று மரியாதை செய்ய அனுமதித்துக் கட்டளையிட்டதன் மூலம் மனித நேயத்தை நிலைபெறச் செய்துள்ளனர்.
இந்த இடத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் சில பகுதிகளில் ஈடுபடும் நடவடிக்கைகளை நாம் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.
இறந்தவரின் சவ ஊர்வலம் முஸ்லிம்களின் தெரு வழியாகக் கொண்டு செல்லப்படுவதைக் கடுமையாக எதிர்க்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இனவெறியைத் தூண்டிவிட்டு ‘நமது தெருவில் அவர்களின் பிணம் செல்லலாமா?’ என்று மார்க்க அறிவு இல்லாத மக்களை உசுப்பேற்றி விடுகின்றனர். இதன் காரணமாக மற்ற மதத்தினர் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் நஞ்சென வெறுக்கும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்பட்டபின் அவர்கள் எப்படி இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவார்கள் என்ற குறைந்தபட்ச சிந்தனை கூட சில பகுதிகளில் இல்லாமல் போய்விட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்த ஒன்றைத் தடுப்பவர்களும், எதிர்ப்பவர்களும் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முஸ்லிமல்லாதவர்களின் சவ ஊர்வலம் செல்லும் போது தடை செய்வதற்கு நமக்கு அனுமதி இல்லை. பள்ளிவாசல் வழியாகக் கடந்து சென்றாலும் அதைத் தடுப்பது மார்க்கச் சட்டப்படி கடுமையான குற்றமாகும். நபிகள் நாயகத்தை உயிரினும் மேலாக மதிக்கும் யாரும் இது போன்ற செயல்களில் இறங்க மாட்டார்கள்.
பள்ளிவாசல்கள் உள்ள பகுதிகளில் தாரை தப்பட்டை அடித்துச் செல்கிறார்கள் என்றெல்லாம் காரணம் கூறி மக்களைத் தூண்டி விடுவோர் தங்கள் குடும்பத்து விழாக்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதைத் தான் முதலில் சிந்திக்க வேண்டும்.
திருமணம், உரூஸ், மீலாது விழா போன்ற ஊர்வலங்களிலும் ஆடல், பாடல், கூத்து கும்மாளம் அனைத்தும் நடக்கின்றன. பள்ளிவாலைக் கடந்தும் செல்கின்றன. தங்கள் குடும்பத்து விழாக்களிலும், ஊர் விழாக்களிலும், மார்க்கத்தின் பெயரால் நடத்தும் விழாக்களிலும் மார்க்கம் தடை செய்துள்ள காரியங்களைச் செய்பவர்கள் அதே காரியங்களை மற்ற மக்கள் நடத்தும் போது மட்டும் ஆத்திரப்பட எந்த உரிமையும் இல்லை.
முஸ்லிமல்லாத மக்களிடம் இது போன்ற இன வெறுப்பைக் காட்டாது இஸ்லாம் கற்றுத் தந்த மனித நேயத்தைக் காட்டினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது எதிரிகளின் உள்ளங்களை வென்றது போல் வெல்ல முடியும் என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனித நேயத்துக்கு எடுத்துக் காட்டாக அமைந்த மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பதிமூன்று ஆண்டுகள் கடுமையான துன்பங்களைச் சந்தித்தார்கள். பலவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இறுதியில் அவர்களைக் கொல்லவும் எதிரிகள் திட்டமிட்டனர்.
இந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் நெருங்கிய தோழர் அபூபக்கரும் இரகசியமாக மக்காவை விட்டு வெளியேறி மதினாவுக்குச் செல்ல திட்டமிட்டனர்.
வழக்கமான பாதையில் பயணம் மேற் கொண்டால் எதிரிகளிடம் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதால் குறுக்கு வழியில் மதீனா சென்றடைய வேண்டும் எனத் திட்டமிட்டார்கள்.
குறுக்கு வழியில் பல நூறு மைல்களைக் கடந்து செல்வதாக இருந்தால் பாதைகளைப் பற்றி நன்கு அறிந்த வழிகாட்டி ஒருவர் தேவை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரி சமுதாயத்தவர்களின் மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் தான் தம்மைக் குறுக்குப் பாதையில் அழைத்துச் செல்ல நியமனம் செய்து கொண்டார்கள். அவரை நம்பி தமது பயண ஏற்பாடுகளையும் ஒப்படைத்தனர்.
உயிருக்கு கடும் அச்சுறுத்தல் நிலவிய கால கட்டத்தில் மதத்தால் வேறுபட்டிருந்தாலும் தொழில் நேர்மையானவர் என்று நம்பப் பட்டவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதையைக் காட்டுபவராக நியமித்துக் கொண்டார்கள்.
இத்தகைய நெருக்கடியான நேரத்தில் எதிரி சமுதாயத்தைச் சேர்ந்தவரை இது போன்ற முக்கியப் பணியில் யாரும் அமர்த்த மாட்டார்கள். அவர் நினைத்தால் எதிரிகள் கையில் பிடித்துக் கொடுத்துவிட முடியும் என்ற நிலையிலும் அவரை நம்பி பொறுப்பை ஒப்படைத்தனர் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனித நேயம் எவ்வளவு ஆழமானது என்பதை அறியலாம்.
பணியில் அமர்த்தப்படுபவரின் நேர்மையையும், நாணயத்தையும் தான் அவர்கள் கருத்தில் கொண்டார்களே தவிர அவர் சார்ந்த மதத்தை நபிகள் நாயகம் (ஸல்) பார்க்கவில்லை என்பதை இந்நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.
அது போல் அமைந்த மற்றொரு வரலாற்றைக் காண்போம்.
முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும், யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டனர். அப்போது ‘அகிலத்தாரை விட முஹம்மதைத் தேர்வு செய்த இறைவன் மேல் ஆணையாக’ என்று முஸ்லிம் குறிப்பிட்டார். ‘அகிலத்தாரை விட மூஸாவைத் தேர்வு செய்த இறைவன் மேல் ஆணையாக’ என்று யூதர் கூறினர். இதைக் கேட்டதும் முஸ்லிம், யூதருடைய முகத்தில் அறைந்து விட்டார். உடனே யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கும், முஸ்லிமுக்கும் இடையே நடந்ததைத் தெரிவித்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமை அழைத்து வரச் செய்து விசாரித்தனர். அவரும் நடந்ததைக் கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘மூஸாவை விட என்னைச் சிறப்பித்துக் கூறாதீர்கள். ஏனெனில் நியாயத் தீர்ப்பு நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாவார்கள். அவர்களுடன் நானும் மூர்ச்சையாவேன். நான் தான் முதலில் மூர்ச்சையிலிருந்து விழித்தெழுவேன். ஆனால் அப்போது மூஸா அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு நிற்பார். அவர் மூர்ச்சையடைந்து எனக்கு முன் விழித்தெழுந்தாரா? அல்லது அல்லாஹ் யாருக்கு விதிவிலக்கு அளித்தானோ அவர்களில் அவரும் ஒருவரா? என்பதை நான் அறிய மாட்டேன்’ என்று கூறினார்கள்.
(புகாரி: 2411, 2412, 308, 6517, 6518, 7472)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் மக்கள் எத்தகைய உரிமைகள் பெற்று சுதந்திரத்துடன் வாழ்ந்தனர் என்பதற்கும், நபிகள் நாயகத்தின் எல்லையற்ற மனித நேயத்துக்கும் இந்நிகழ்ச்சியும் சான்றாக அமைந்துள்ளது.
யூதரும், முஸ்லிமும் வாய்ச் சண்டை போடும் போது தனது மதத் தலைவரும், நாட்டின் அதிபருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம் உயர்த்திப் பேசுகிறார். அவருக்குச் சற்றும் சளைக்காமல் அது போன்ற வார்த்தையை யூதரும் பயன்படுத்துகிறார்.
தனது நாட்டின் அதிபராக உள்ள நபிகள் நாயகத்தை விட தனது மதத்தின் தலைவராகக் கருதப்பட்ட மூஸா நபியை அவர் சிறப்பித்துக் கூறுகிறார்.
சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களுக்கு அடிமைகளாகவும், அவர்களுக்கு அஞ்சி வாழ்பவர்களாகவும் இருந்திருந்தால் இவ்வளவு தைரியமாக யூதர் இத்தகைய வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்லிமுக்கு உள்ள உரிமை தனக்கும் உண்டு என்று அவர் நினைக்கும் அளவுக்கு நேர்மையான ஆட்சி அமைந்திருந்ததால் தான் இவ்வாறு அவர் கூற முடிந்தது.
ஆயினும் முஸ்லிம் இதைச் சகித்துக் கொள்ளாமல் கை நீட்டி விட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான பிரச்சனை என்பதால் தான் கை நீட்டியது நபிகள் நாயகத்தால் கண்டிக்கப் படாது என்று அவர் நினைத்திருக்கிறார்.
ஆனால் அடி வாங்கிய யூதரோ உடனே பிரச்சனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்கிறார். நபிகள் நாயகம் எதிரிகளுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் நீதி வழங்கத் தவற மாட்டார்கள்; தவறு செய்தவர் தனது சகாவாகவே இருந்தாலும் நிச்சயம் அவரைத் தண்டிப்பார்கள் என்று அவர் நம்பியதால் தான் பிரச்சனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை விசாரித்து விட்டு பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்கள் அனுசரித்து அல்லது அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக உடனே முஸ்லிமை அழைத்து வரச் செய்கிறார்கள்.
முஸ்லிம் தான் குற்றம் செய்திருக்கிறார் என்பது உறுதியானவுடன் தன்னை மூஸா நபியை விட சிறப்பித்துக் கூற வேண்டாம் என்று கூறுகிறார்கள். அது மட்டுமின்றி ஒரு வகையில் மூஸா நபி என்னை விட சிறந்தவராக இருக்கிறார் எனக் கூறி யூதருடைய மனதையும் குளிரச் செய்கிறார்கள்.
முஸ்லிமுக்கு அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன தண்டனை அளித்தார்கள் என்பது கூறப்படாவிட்டாலும் அடிக்கு அடி உதைக்கு உதை என்பது தான் அவர்கள் கொண்டு வந்த சட்டம். இதை யாருக்காகவும் எப்போதும் அவர்கள் வளைத்ததில்லை. பாதிக்கப்பட்டவர் மன்னித்து விட்டால் குற்றவாளியைத் தண்டிக்காது விட்டு விடுவார்கள். பாதிக்கப்பட்டவர் மன்னிக்க மறுத்து விட்டால் அவர் எந்த அளவுக்கு அடித்தாரோ அது போல் திருப்பியடிப்பது தான் வழக்கமாக அவர்கள் வழங்கும் நீதி. இந்த நிகழ்ச்சியின் போதும் இரண்டில் ஒன்று தான் நடந்திருக்க முடியும்.
சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவரால் பாதிப்பு ஏற்படும் போது சாதாரண ஒரு மனிதர் நபிகள் நாயகத்தைச் சந்தித்து முறையிட முடிகின்றது; நியாயம் பெற முடிகின்றது என்பதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எல்லையற்ற மனித நேயத்தை அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரிமையியல் (சிவில்) வழக்குகளில் முக்கியமான சட்ட விதியைக் கடைப்பிடிப்பது வழக்கம்.
ஒருவரது கைவசம் உள்ள பொருளுக்கு இன்னொருவர் உரிமை கொண்டாடினால் உரிமை கொண்டாடுபவர் அதற்கான சான்றுகளைக் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
உரிமை கொண்டாடும் வாதியிடம் சான்று ஏதும் இல்லாவிட்டால் யாருடைய கைவசம் அப்பொருள் இருக்கிறதோ அவரை அழைத்து ‘இறைவன் மேல் ஆணையாக இது என்னுடையது தான்’ எனக் கூறச் சொல்வார்கள். அவ்வாறு கூறிவிட்டால் அப்பொருள் அவருக்குச் சொந்தமானது எனத் தீர்ப்பு அளிப்பார்கள். சத்தியம் செய்ய அவர் மறுத்தால் உரிமை கொண்டாடி வழக்குத் தொடுத்த வாதியிடம் அப்பொருளை ஒப்படைப்பார்கள்.
ஒரு முஸ்லிமுக்கும், யூதருக்கும் இடையே இது போல் உரிமையியல் தொடர்பான வழக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தது. அதன் விபரம் வருமாறு:-
ஒரு முஸ்லிமுடைய பொருளை அபகரிப்பதற்காக யார் பொய்யாகச் சத்தியம் செய்கிறாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் அல்லாஹ்வை சந்திப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள். அப்போது அஷ்அஸ் (ரலி) என்ற நபித்தோழர் ‘என் விஷயமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். ஒரு நிலம் தொடர்பாக எனக்கும், ஒரு யூதருக்கும் விவகாரம் இருந்தது. அவர் அதை எனக்குத் தர மறுத்தார். அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உன்னிடம் சான்று ஏதும் உள்ளதா?’ எனக் கேட்டார்கள். இல்லை’ என்று நான் கூறினேன். உடனே யூதரிடம் ‘நீ சத்தியம் செய்!’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். உடனே நான் குறுக்கிட்டு ‘அல்லாஹ்வின் தூதரே! இவன் சத்தியம் செய்து என் சொத்தை எடுத்துக் கொள்வான் எனக் கூறினேன். அப்போது 3:77 வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என்று அஷ்அஸ் கூறினார்.
(புகாரி: 2357, 2411, 2417, 2516, 2667)
பொதுவாக அன்றைய யூதர்கள் பொய்ச் சத்தியம் செய்வதற்கு கொஞ்சமும் கூச்சப்படாதவர்களாக இருந்தனர். முஸ்லிம்களோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நம்பியதால் நபிகள் நாயகம் (ஸல்) முன்னிலையில் பெரும்பாலும் பொய் சொல்ல மாட்டார்கள்.
இந்த நிலையில் யூதர் பொய்ச் சத்தியம் செய்யத் தயங்க மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாரபட்சமான தீர்ப்புக் கூறவில்லை. வழக்கமாக இரண்டு முஸ்லிம்களுக்கிடையில் இது போன்ற விவகாரம் எழுந்தால் எவ்வாறு தீர்ப்பு வழங்குவார்களோ அதே விதியின் கீழ் தான் யூதருக்கும் நீதி வழங்கினார்கள்.
தனது சமுதாயத்தவர், தனது எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று பேதம் பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீதி வழங்கியதில்லை என்பதற்கு இதுவும் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலை நகரமான மதீனாவுக்கு அருகில் கைபர் எனும் பகுதியில் யூதர்கள் தனி அரசு நடத்தி வந்தனர். அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நடந்த போரில் யூதர்கள் தோல்வியைத் தழுவினார்கள். தோல்வியடைந்த நாட்டில் தனி மனிதர்களுக்கு உடமையாக இல்லாத அனைத்தும் வெற்றி கொண்டவர்களைச் சேரும் என்பது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதன் படி கைபர் பகுதியில் உள்ள நிலப்பரப்புக்கள் இஸ்லாமிய அரசின் உடமையாக ஆயின.
ஆயினும் கைபர் பகுதியில் வாழ்ந்த யூதர்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக அந்த நிலங்களில் பயிர் செய்யும் உரிமையை யூதர்களுக்கு வழங்கினார்கள். அதில் உற்பத்தியாவதில் பாதி அரசுக்கும், பாதி உழைப்பவருக்கும் உரியது என்ற அடிப்படையில் அவர்களிடமே வழங்கினார்கள். (இதன் பின்னர் அவர்களின் சதி நடவடிக்கை காரணமாக உமர்(ரலி) ஆட்சிக் காலத்தில் அங்கிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள்.)
நபிகள் நாயகத்தின் கை முழுமையாக ஓங்கியிருக்கும் போது அந்த நிலங்களை முஸ்லிம்களுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்க முடியும். அல்லது அங்கே முஸ்லிம்களைக் குடியமர்த்தி இருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் யூதர்களின் அரசு செய்த நன்மையை விட யூத மக்களுக்கு அதிக நன்மை தரும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்கள்.
அசாதாரணமான நேரத்தில், குறிப்பாக யுத்த களத்தில் எதிரிகள் மீது யாரும் கருணை காட்ட மாட்டார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமக்கு எதிராக வன்முறையைப் பிரயோகம் செய்ய வந்தவர்களிடமும் இரக்கம் காட்டியதற்குப் பல சான்றுகள் உள்ளன.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நஜ்து எனும் பகுதிக்குப் போர் செய்யப் புறப்பட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரும்பிய போது நானும் திரும்பினேன். முள் மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் பகல் தூக்க நேரம் வந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கினார்கள். மக்கள் மரங்களின் நிழல் தேடிப் பிரிந்து விட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முள் மரத்தின் கீழ் தங்கினார்கள். தமது வாளை அம்மரத்தில் தொங்க விட்டனர். நாங்கள் சிறிது நேரம் தூங்கியிருப்போம், அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தனர். அங்கே அவர்களின் அருகில் கிராமவாசி ஒருவர் இருந்தார். ‘நான் தூங்கிய போது இவர் எனது வாளை எடுத்து விட்டார். நான் உடனே விழித்து விட்டேன், இவர் வாளை உருவிக் கொண்டு என்னை விட்டு உம்மைக் காப்பாற்றுபவர் யார்?’ எனக் கேட்டார். அல்லாஹ் என்று கூறினேன். அவர் உடனே வாளைக் கீழே போட்டு விட்டார்! என்று கூறினார்கள். அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை, என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(புகாரி: 2910, 2913, 4137, 4139)
தம்மைக் கொல்ல வந்த எதிரியைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்டிக்காது மன்னித்து விடும் அளவுக்கு அவர்களின் பெருந்தன்மை அமைந்திருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கு கொண்ட ஒரு போர்க்களத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுக் கிடந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டனர். பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தனர்.
போர் என்று வந்துவிட்டால் மனிதர்கள் மிருகங்களாகவே மாறிவிடுவதை உலகில் காண்கிறோம். அப்பாவிகளும், பெண்களும், சிறுவர்களும் போரில் எவ்விதத்திலும் பங்கு வகிக்காதவர்களும் கொல்லப்படுவதையும் காண்கிறோம். இதெல்லாம் போர்க்களத்தில் தவிர்க்க முடியாது என்று திமிருடன் நியாயப்படுத்துவதையும் காண்கிறோம்.
எதைத் தவிர்க்க முடியாது என்று போர் வெறியர்கள் கூறுகிறார்களோ அதைத் தவிர்த்தே ஆக வேண்டும் என்று தமது படையினருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிப்பான கட்டளை பிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கொல்லப்பட்டவர், போர்க் களத்திற்கு வராமல் வீட்டில் அமர்ந்திருந்தவர் அல்ல. மாறாக எதிரிப் படையினருக்கு உதவிகள் செய்வதற்காகவே களத்திற்கு வந்தவர், காயமடைந்தவர்களுக்கு உதவவும், உணவு போன்ற தேவைகளை நிறைவேற்றவும் பெண்கள் களத்திற்கு வருவது அன்றைய வழக்கம்.
இத்தகைய பெண்களும் கூட கொல்லப்படலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு போர்க்களத்திலும் புது நெறியை நிலை நாட்டினார்கள்.
உங்களில் யாரேனும் போர் செய்தால் முகத்தைத் (தாக்காது) தவிர்த்துக் கொள்ளட்டும் என்பதும் அவர்கள் தமது படையினருக்கு இட்ட கட்டளை.
போர்க்களத்தில் எதிரிகளை எந்த அளவு சின்னாபின்னமாக்க முடியுமோ, முகத்தைக் கோரப்படுத்த முடியுமோ அந்த அளவுக்குச் சிதைப்பது தான் போர்வெறியர்களின் வழக்கமாக அமைந்துள்ளது. ஆனால் எதிரியின் முகத்தைச் சிதைக்காதவாறு போரிடுமாறு கட்டளை பிறப்பித்ததன் மூலம் மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.
போர்க்களத்தில் கொள்ளையடிப்பதையும் இறந்த உடலைச் சிதைப் பதையும் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தார்கள்.
இன்று இன்னொரு நாட்டின் வளத்தைக் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே போர்கள் நடப்பதைக் காண்கிறோம். நியாயமான காரணத்துக்காக போர் செய்யும் போது கூட எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையடிப்பதையும் உடல்களைச் சேதப்படுத்துவதையும் கண்டிக்கிறார்கள்.
எதிரிகளை நெருப்பால் பொசுக்காதீர்கள் என்பதும் அவர்கள் இட்ட கட்டளை.
தீவைப்பதும் எதிரிகளை எரித்துக் கொல்வதும் போர் தர்மமாகக் கருதப்பட்ட காலத்தில் நெருப்பால் யாரையும் கொல்லக் கூடாது என்று கட்டளையிட்டார்கள்.
போர் திணிக்கப்படும் போது வாளாவிருந்தால் குடிமக்களைக் காக்கும் கடமையிலிருந்து விலகியவராக நேரிடும் என்பதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் செய்தார்கள். எதிரிகளைப் பழி தீர்ப்பதற்காக அவர்கள் போர் செய்ததில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தி நிலவட்டும் – எனக் கூறுவது இஸ்லாமிய முகமன் ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் சிறுபான்மையாக இருந்த யூதர்கள் இந்த வாசகத்தை வேறு விதமாக மாற்றிக் கூறி முஸ்லிம்களைப் புண்படுத்தி வந்தனர். நபிகள் நாயகத்திடமே இவ்வாறு பயன்படுத்தவும் துணிந்தனர்.
அஸ்ஸலாமு என்பதில் லா’ வை நீக்கி விட்டு அஸ்ஸாமு’ என்று கூறுவர். அஸ்ஸாமு அலைக்கும் என்றால் உங்களுக்கு நாசம் ஏற்படட்டும் என்று பொருள்.
அஸ்ஸலாமு என்று சொல்வது போல் பாவனை செய்து அஸ்ஸாமு எனக் கூறி வந்தனர்.
பொதுவாக இது போன்ற விஷமத்தனங்களைப் பெரும்பான்மை மக்கள் தான் சிறுபான்மை மக்களிடம் செய்வது வழக்கம். சிறுபான்மையினர் இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டால் அவர்கள் கடுமையான விளைவுகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது போன்ற சில்மிஷங்களுக்காகக் கோபம் கொள்ள மாட்டார்கள் என்று யூதர்கள் நன்றாக அறிந்திருந்ததால் தங்கள் வழக்கத்தில் நீடித்து வந்தனர்.
யூதர்களில் ஒரு கூட்டத்தினர் நபிகள் நாயகத்திடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு நாசம் ஏற்படட்டும்) எனக் கூறினார்கள். அவர்கள் கூறியது எனக்கு விளங்கியதால் ‘அலைகுமுஸ் ஸாமு (உங்கள் மீதும் அழிவு ஏற்படட்டும்) என்று நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆயிஷாவே! நிதானம் வேண்டும். அனைத்து காரியங்களிலும் மென்மையான போக்கையே அல்லாஹ் விரும்புகிறான்’ என்று என்னிடம் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே அவர்கள் கூறியது உங்கள் காதில் விழவில்லையா?’ என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘அலைகும் (உங்களுக்கும்) என்று நான் கூறி விட்டேனே’ என விடையளித்தார்கள்.
மாமன்னராகவும் மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் நபிகள் நாயகம் இருந்த போது சிறுபான்மைச் சமுதாயம் இப்படிக் கூறத் துணிந்தது எப்படி?
எவ்வித அச்சமும், தயக்கமும் இன்றி வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் யூதர்களுக்கு வழங்கப்பட்டதால் தான் இவ்வாறு அவர்களால் நடந்த கொள்ள முடிந்தது.
அவர்கள் சொன்ன அதே வார்த்தையைத் தமது மனைவி திரும்பிக் கூறியதைக் கூட இந்த மாமனிதர் கண்டிக்கிறார்.
உங்கள் மீதும் நாசம் ஏற்படட்டும் என்று பதில் கூறாமல், ‘உங்கள் மீதும்’ என்று மட்டும் பதில் கூறுமாறு வழிகாட்டுகிறார்கள். அவர்கள் பயன்படுத்திய அநாகரீக வார்த்தையைக் கூட அவர்கள் தவிர்க்கிறார்கள்.
மன்னராட்சியில் இது போன்று நடந்து கொண்டவர் உயிர் பிழைப்பதே அரிது என்ற நிலையுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால் நபிகள் நாயகத்தின் பெருந்தன்மை எத்தகையது என்பது விளங்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் பலரது உறவினர்களும் குடும்பத்தாரும் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்தனர்.
இஸ்லாத்தை ஏற்காத தங்களின் உறவினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யலாமா? என்று இஸ்லாத்தை ஏற்றவர்கள் கேட்டபோதெல்லாம் உறவினருக்கான கடமைகளைச் செய்தாக வேண்டும் என்பது தான் நபிகள் நாயகத்தின் அறிவுரையாக இருந்தது.
இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என் தாய் என்னிடம் வந்தார். அவரை என்னோடு வைத்துக் கொள்ளலாமா? என்று நபிகள் நாயகத்திடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் ‘ஆம்! கண்டிப்பாக உன் தாயை உன்னோடு சேர்த்துக் கொள்’ எனக் கட்டளையிட்டனர் என்று அஸ்மா (ரலி) அறிவிக்கிறார்.
ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீதும் மிகவும் கருணையுடன் நடந்து கொள்வது அவர்களின் வழக்கம். மனிதர்கள் புனிதமாக மதிப்பவை சிதைக்கப்படும் போது தான் அதிகமான கோபம் கொள்வது வழக்கம்.
முஸ்லிம்களைப் பொருத்தவரை பள்ளிவாசல் தான் மிகவும் புனிதமானதாகும். அதிலும் மூன்று பள்ளிவாசல்கள் அதிகமான புனிதம் கொண்டவை. அவற்றுள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது திருக்கரத்தால் கட்டிய பள்ளிவாசலாகும். அங்கே நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!
ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்கலானார். மக்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்! மென்மையாக நடந்து கொள்ளுமாறு தான் நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்! கடுமையாக நடந்து கொள்ளுமாறு கட்டளையிடப்படவில்லை என்றார்கள்.
…. அவர் சிறுநீர் கழிக்கும் வரை அவரை விட்டு விடுங்கள் என்றார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அவரை அழைத்தார்கள். ‘இது அல்லாஹ்வின் ஆலயம். இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது. தொழுகை நடத்துவதற்கும் இறைவனை நினைவு கூர்வதற்கும் உரியது என்று அறிவுரை கூறினார்கள்.
சிறுநீர் கழிப்பவர் அதை அடக்கிக் கொள்வதற்காகச் சிரமப்படக் கூடாது என்பதற்காக அவர் சிறுநீர் கழிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்து அறிவுரை கூறுகிறார்கள். குறைந்த பட்சம் கடுமையான வார்த்தைகளால் அவரை ஏசியிருக்கலாம். அல்லது அவரையே சுத்தம் செய்து தருமாறு கட்டளையிட்டிருக்கலாம். அறியாமையின் காரணமாக அவர் செய்வதை மென்மையான முறையில் போதனை செய்கிறார்கள்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் கோபம் வராத, நிதானம் தவறாதவர்களாக அவர்கள் இருந்தார்கள் என்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது.
ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர்
அன்று முதல் இன்று வரை பெண்களை அடிமைகளாகவே ஆண்கள் நடத்தி வருகின்றனர். சில குடும்பங்களில் இதற்கு நேர்மாறான நிலைமை இருக்கலாம். பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப் படுவதில்லை.
மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியரிடம் நடந்து கொண்ட முறை ஆண்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்று ஆயிஷா (ரலி)யிடம் நான் கேட்டேன். அதற்கவர், தமது குடும்பத்தினரின் பணிகளில் ஈடுபடுவார்கள். தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காகப் புறப்படுவார்கள் என விடையளித்தார்.
அறிவிப்பவர் : அஸ்வத்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று ஆயிஷா (ரலி)யிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், தமது (கிழிந்த) ஆடையைத் தைப்பார்கள், (பழுதுபட்ட) தமது செருப்பைச் சரி செய்வார்கள், மற்ற ஆடவர்கள் தமது வீட்டில் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வார்கள் என்று விடையளித்தார்.
அறிவிப்பவர் : உர்வா
நூல் : முஸ்னத்(அஹ்மத்: 23756, 24176, 25039)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தனிப்பட்ட வேலையைத் தாமே செய்து கொள்வார்கள் என்பதும், தமது மனைவியர் செய்யும் வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள் என்பதும் இவ்விரு நிகழ்ச்சிகளிலிருந்தும் தெரிகிறது.
மனைவியரின் வேலைகளில் ஒத்தாசையாக இருத்தல், காய்கறி நறுக்குதல், வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலைகள் என ஆண்களில் பலர் எண்ணுகின்றனர். இந்தப் பணிகளில் துணை செய்வது ஆண்மைக்கு இழுக்கு எனவும் நினைக்கின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டுப் பணிகள் அனைத்திலும் மனைவியருக்கு ஒத்தாசையாக இருந்துள்ளனர்.
அபீஸீனிய வீரர்கள் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, நபிகள் நாயகத்தின் பின்னால் நின்று நானும் பார்த்துக் கொண்டிருப்பேன். நானாகத் திரும்பும் வரை அவர்கள் எனக்குத் துணை நிற்பார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
என்னுடைய விளையாட்டுத் தோழிகள் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) வருவார்கள். அவர்களைக் கண்டதும் எனது தோழிகள் மறைந்து கொள்வார்கள். என்னுடன் விளையாடுவதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பி வைப்பார்கள் என்றும் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
ஒரு பயணத்தில் சென்ற போது நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் வைத்தோம். அதில் நான் முந்தி விட்டேன். பின்னர் நான் உடல் பருமனாக ஆன போது மற்றொரு முறை நடந்த ஓட்டப் பந்தயத்தில் அவர்கள் என்னை முந்தி விட்டார்கள். அப்போது ‘அதற்கு இது சரியாகி விட்டது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியை வாழ்க்கைத் துணைவியாகவும், தோழியாகவும் தான் நடத்தினார்களே தவிர அடிமையாகவோ, வேலைக்காரியாகவோ நடத்தவில்லை என்பதை இந்நிகழ்ச்சிகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
எளிமையான வாழ்க்கை!
ஏழ்மையில் பரம திருப்தி!
எதிரிகள் உட்பட அனைவருக்கும் சமநீதி!
அநியாயத்திற்கு அஞ்சாமை!
துணிவு!
வீரம்!
அனைவரையும் சமமாக மதித்தல்!
மிக உயர்ந்த இடத்தில் இருந்தும் அவர்கள் காட்டிய அடக்கம்!
பணிவு!
எல்லையற்ற பொறுமை!
மென்மையான போக்கு
உழைத்து உண்ணுதல்!
கொண்ட கொள்கையில் அசைக்க முடியாத உறுதி!
தாம் சொன்ன அனைத்தையும் முதலில் தாமே செய்து காட்டியது!
எதிரிகள் உள்ளிட்ட அனைவரையும் மன்னித்தல்!
பிற சமுதாய மக்களிடமும் நல்லிணக்கத்துடன் நடத்தல்!
தமக்கோ தமது குடும்பத்திற்கோ எந்தச் சொத்தையும் சேர்த்துச் செல்லாதது!
தமது உடமைகள் அனைத்தையும் அரசுக் கருவூலத்தில் சேர்த்தது!
அரசின் ஸகாத் நிதியை தாமும் தமது குடும்பத்தினரும் எக்காலத்திலும் பெறக் கூடாது என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டது!
மனைவியருடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தியது!
சிறுவர்களிடம் அன்பு காட்டுதல்!
என அனைத்துப் பண்புகளிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.
இப்பண்புகளில் ஒரு சில பண்புகளை இன்றைக்கும் கூட சிலரிடம் நாம் காண முடியும் என்றாலும் அனைத்துப் பண்புகளையும் ஒரு சேர எவரிடமும் காண முடியாது. நபிகள் நாயகம் தவிர வேறு எந்த வரலாற்று நாயகர்களிடமும் இவற்றைக் காண முடியாது.
இதன் காரணமாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் தமது உயிரை விடவும் அதிகமாக நேசிக்கிறார்கள். உலகம் அவர்களை மாமனிதர் என்று புகழ்ந்து போற்றுகிறது.