பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாது என்று குர்ஆன் கூறுகிறதா?
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும், அவர்களைக் கண்ட இடத்தில் கொலை செய்ய இஸ்லாம் கட்டளையிட்டதாகவும் முஸ்லிமல்லாதவர்களில் சிலர் தவறாக நம்புகிறார்கள். திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட சில வசனங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
இவர்கள் கருதுவது போல் திருக்குர்ஆன் கூறுகிறதா என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.
திருக்குர்ஆனின் சில வசனங்களில் முஸ்லிமல்லாதவர்களை உற்ற நண்பர்களாக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. இது யாரைக் குறித்து எந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கம் திருக்குர்ஆனிலேயே உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்து இஸ்லாம் என்ற கொள்கையைச் சொன்ன காரணத்தால் மக்காவில் இருந்து விரட்டப்பட்டார்கள். இதனால் மதீனா எனும் நகருக்கு அடைக்கலம் தேடிச் சென்றார்கள். அங்குள்ள மக்களில் பெரும்பாலோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையை ஏற்று முஸ்லிம்களாக ஆனதால் அவர்களே ஆட்சித் தலைவர்களாகவும் ஆனார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சிப் பகுதியைச் சுற்றி வாழ்ந்த முஸ்லிமல்லாதவர்கள் இரு வகையினராக இருந்தனர்.
ஒரு சாரார் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி போருக்கு வந்து கொண்டு இருந்தவர்கள்.
இன்னொரு சாரார் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் இஸ்லாமிய நாடாகிய மதீனா மீது தாக்குதல் ஏதும் நடத்தாமல் அவர் மார்க்கம் அவருக்கு நமது மார்க்கம் நமக்கு என்று வாழ்ந்தவர்கள்.
உற்ற நண்பர்களாக ஆக்க வேண்டாம் என்ற கட்டளை முதல் சாராரைப் பற்றி சொல்லப்பட்டதாகும். உலகில் உள்ள எந்த நாடாக இருந்தாலும் தன்னை அழிக்க வரும் எதிரிகளுடன் நட்பு பாராட்ட மாட்டார்கள். இது தான் இயற்கை நியதியாகும்.
இந்த முதல் சாரார் குறித்துத் தான் மேற்கண்ட கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இது இஸ்லாத்துக்கு நற்பெயர் கிடைக்க நாம் சுயமாக அளிக்கும் விளக்கம் அல்ல. திருக்குர்ஆனே இதைத் தெளிவாகக் கூறுகிறது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.
ஒட்டு மொத்தமாக முஸ்லிம் அல்லாதவர்களைப் பகைக்குமாறு இஸ்லாம் கூறவில்லை என்பதற்கும், அவர்களுக்கு நீதி செலுத்த வேண்டும்; உதவிகள் செய்ய வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்பதை இவ்வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாம் கொல்லச் சொல்கின்றதா?
முஸ்லிமல்லாதவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு குர்ஆன் கூறுகிறது எனவும் வாதிட்டு சில வசனங்களை எடுத்துக் காட்டுகின்றனர்.
உதாரணமாக
சந்திக்கும்போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.
முஸ்லிமல்லாதவர்களைச் சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுவதாகச் சொல்லி தவறான பிரச்சாரம் செய்கின்றனர்.
அவர்களைக் கொல்லுங்கள் என்ற சொல்லில் அவர்கள் என்பது யாரைக் குறிக்கிறது என்பதை முன் வசனத்தில் காணலாம். இவர்கள் எடுத்துக் காட்டும் வசனம் இரண்டாம் அத்தியாயம் 191 வது வசனம். ஆனால் 190 வனத்தைப் பார்த்தால் இது யாரைக் குறித்து சொல்லப்பட்டது என்பது விளங்கும்.
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
முஸ்லிம்கள் அமைதியாக இருக்கும் போது எதிரி நாட்டவர் படை திரட்டி வந்தால் அவர்களை எதிர்த்துப் போரிடுங்கள் என்று இவ்வசனம் கூறி விட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று சொன்னால் அதன் பொருள் என்ன? போருக்கு வரும் எதிரி நாட்டவரைத் தானே குறிக்கும்? முஸ்லிமல்லாதவரைக் கொல்லுங்கள் என்ற பொருள் இதில் உண்டா என்று நடு நிலையாளர்கள் சிந்திக்கட்டும். அப்போது கூட வரம்பு மீறாதீர்கள் என்ற எச்சரிக்கையும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ளவும்.
மேலும் முஸ்லிமல்லாத மக்கள் நபிகள் நாயகம் ஆட்சியில் கொன்று குவிக்கப்பட்டார்களா என்ற வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இணை கற்பிப்போரில் (முஸ்லிமல்லாதவர்களில்) யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
சொந்த நாட்டு மக்கள் மட்டுமின்றி அந்நிய நாட்டு முஸ்லிமல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு உடனே அடைக்கலம் வழங்கி அவருக்கு பாதுகாப்பான இடம் அமையும் வரை அவரைப் பாதுகாக்குமாறு இவ்வசனம் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெரும் எதிரிகளாக இருந்த யூத சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளர்களில் ஒருவராக வைத்திருந்தார்கள்.
(பார்க்க :(புகாரீ: 1356)
ஒரு சமுதாயத்தினர் எதிரிகளாக உள்ளதால் அச்சமுதாயத்தில் உள்ள நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அளவுக்கு நபிகள் நாயகத்திடம் மனிதநேயம் மிகைத்திருந்தது.
இதனால்தான் எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் தமது ஊழியர்களில் ஒருவராக அவர்களால் சேர்த்துக் கொள்ள முடிந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர்.
பார்க்க :(புகாரீ: 2096, 2252, 2509, 2513, 2068, 2200, 2251, 2386, 2916)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் யூதர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தார்கள். மேலும் அவர்களில் பலர் தமது நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரி நாட்டவர்களுக்குத் தகவல்கள் தந்து ஒத்துழைப்புச் செய்பவர்களாக இருந்தனர். அப்படி இருந்தும் அவர்களிடம் நபிகள் நாயகம் அடைமானம் வைத்து கடன் வாங்கும் அளவுக்கு பொருளாதாரச் செழிப்பை பெற்று இருந்தனர்.
யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிட்டனர். உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம் என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். ‘இது யூதருடைய பிரேதம்‘ என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதுவும் ஓர் உயிர் அல்லவா?’ என்று கேட்டனர்.
யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்துள்ளனர்.
(பார்க்க :(புகாரீ: 2412, 2417)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாத மக்கள் எந்த அளவு கண்ணியத்துடன் நடத்தப்பட்டனர் என்பதற்கு இவை போதிய சான்றுகளாகும்.
அகில உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கையில் முழு அளவுக்கு இஸ்லாம் உறுதியாக நிற்கின்றது.
ஆனாலும் முஸ்லிமல்லாதவர்கள் தெய்வமாக நம்புவோரைப் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதோ, ஏசுவதோ கூடாது என்றும் திட்டவட்டமாக இஸ்லாம் அறிவிக்கிறது.
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
முஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவுதான் வம்புக்கு இழுத்தாலும் அவர்கள் புனிதமாகக் கருதுவோரை எக்காரணம் கொண்டும் ஏசக் கூடாது எனக் கூறி பலசமய மக்களிடையே நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கிறது.
பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய அறிவுரையை திருக்குர்ஆன் கூறுகிறது.
“எங்கள் இறைவன் அல்லாஹ்வே’’ என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஆனால் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதத்தினர் மதிக்க மாட்டார்கள். இது இயல்பான ஒன்று தான்.
இரு மதத்தவர்கள் மத்தியில் கலவரம் நடக்கும்போது எதிர்மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் தான் முக்கியமாகத் தாக்கப்படுகின்றன. அறிவுபூர்வமாகச் சிந்திக்காமல் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களால் இந்த நிலை ஏற்படுகிறது.
ஒவ்வொரு மதத்தினரும் தமது வழிபாட்டுத் தலங்களை, தமது சொத்துகளை விடப் பெரிதாக மதிப்பதால் தங்களின் வழிபாட்டுத் தலம் தாக்கப்படும்போது அது போன்ற எதிர்த்தாக்குதலில் இறங்குகிறார்கள்.
எனவே, பிறமத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதல் உண்மையில் நம் வழிபாட்டுத் தலங்கள் மீது நாமே நடத்தும் தாக்குதலாக அமைந்து விடுகிறது.
‘உங்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் பள்ளிவாசல்கள் உட்பட அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களும் தகர்க்கப்பட்டு விடும்‘ என்ற அறிவுபூர்வமான வழிகாட்டுதலை இவ்வசனம் நமக்கு வழங்குகிறது.
கோவில்களோ, சர்ச்களோ, முஸ்லிம்களின் பார்வையில் வழிபாட்டுத் தலங்களாக இல்லாதபோதும் அவற்றைத் தாக்கும் உரிமை கிடையாது என்பதைக் காரணத்துடன் இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.