பித்ராவை வேறு ஊரில் விநியோகிக்கலாமா?
வினியோகிக்கலாம்.
ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.
ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள்.
((புகாரி: 1395) , 1496 , 4347)
“அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் எந்தப் பகுதியில் திரட்டப்பட்டதோ அங்கு தான் விநியோகிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இது நோன்புப் பெருநாள் தர்மத்தைப் பற்றிய ஹதீஸ் அல்ல. ஜகாத் பற்றிய ஹதீஸாகும் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.
அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?
முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இரண்டுக்கும் இடம் தரக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது.
இரண்டாவது கருத்தில் தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூசுலைம் கோத்திரத்தினரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். “இது உங்களுக்கு உரியது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது” என்று அவர் கூறினார்…
பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம். எனவே, ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.
மேலும் ஏழைகளுக்கு உணவாகப் பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். வசதிபடைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக்கும் பகுதிக்கு அனுப்பினால் தான் ஃபித்ராவின் இரண்டு நன்மைகளையும் பெற முடியும்.
ஃபித்ராவைத் திரட்டி வழங்கும் பணியில் பல இயக்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர். ஃபித்ரா என்பது மார்க்கக் கடமையாக உள்ளதால் எந்த இயக்கம் ஃபித்ராவைத் திரட்டி ஃபித்ராவுக்குத் தகுதியானவர்களுக்கு முழுமையாகவும், முறையாகவும் விநியோகிக்கிறதோ அந்த இயக்கத்தில் தான் கொடுக்க வேண்டும்.
எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு திரட்டப்பட்டது என்ற முழு விபரத்தையும், எந்தெந்த ஊருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்ற விபரத்தையும் வெளியிடாமல் எங்களிடம் கணக்கு உள்ளது வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுவோரிடமும், விபரம் இல்லாமல் 20 லட்சம் வந்தது 1000 பேருக்குக் கொடுத்தோம் என்று ஏமாற்றுவோரிடமும், எந்தக் கணக்கையும் யாரிடமும் தெரிவிக்கத் தேவையில்லை என்று நடந்து கொள்வோரிடமும் ஃபித்ராவைக் கொடுத்தால் ஃபித்ரா கொடுத்த நன்மை கிடைக்காது. அக்கடமை நிறைவேறாது. தெரிந்து கொண்டே இவ்வாறு செய்வது இக்கடமையை அலட்சியம் செய்ததாக ஆகிவிடும். TNTJ-யினரைப் பொருத்தவரை வரவும், செலவும் முழுமையாக வெளியிடப்படும் என்று உறுதி கூறுகிறோம்.