பாவமன்னிப்பு
மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு பரிகாரம் தான் அல்லாஹ்விடம் கேட்கும் பாவமன்னிப்பாகும். அவ்வாறு பாவமன்னிப்பு கேட்பது இறைவனுக்கு மிகவும் பிடித்த செயலாகும். அதற்குரிய நேரங்களையும், வரைமுறைகளை பின் வரும் செய்திகளில் அறியலாம்.
திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” (அல்குர்ஆன்: 2:222)➚
நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன்: 4:31)➚
”உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன்: 11:90)➚
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவு படுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். ”எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவர். (அல்குர்ஆன்: 66:8)➚
(முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. (அல்குர்ஆன்: 8:33)➚
திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர. அவர்களது தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார். (அல்குர்ஆன்: 25:70-71)➚
உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்” என்று கூறினேன். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காகச் சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான். (அல்குர்ஆன்: 71:10-12)➚
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி விபசாரம் புரிவதில்லை. (திருடன்) திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடுவதில்லை. (மது அருந்துபவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோருதல் பின்னர்தான் ஏற்படுகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 6810) ➚
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்:
இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒருநாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகிற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுகிற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)’ என்று கூறினர்.
அப்போது, ‘(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது) என்று அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை; மேலும் விபசாரம் செய்வதில்லை’ எனும் (அல்குர்ஆன்: 25:68)➚வது) வசனம் அருளப்பெற்றது. மேலும், ‘(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்’ எனும் (அல்குர்ஆன்: 39:53)➚வது) வசனமும் அருளப்பெற்றது.(புகாரி: 4810) ➚
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.) (அல்குர்ஆன்: 3:17)➚
இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள். (அல்குர்ஆன்: 51:18)➚
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! ”இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான்.
அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான் . நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 63:10-11)➚
தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் ”நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்” எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன்: 4:18)➚
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன்: 39:53)➚
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),(புகாரி: 5575) ➚
மேலும், பாவமன்னிப்பு இறைவனுக்கு மிகவும் பிடித்த செயலாகும். ஒரு பாவத்தை செய்து விட்டு அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டு மறுமுறை அந்த பாவத்திற்குரிய செயலை செய்தல் கூடாது. மாறாக, அதன் மூலம் படிப்பினை பெற்று அச்செயலை செய்யாமல் இருத்தல் வேண்டும். மனிதர்கள் செய்யும் அணைத்து பாவங்களுக்கும் பாவமன்னிப்பு உண்டு. அல்லாஹ்விற்கு இணை வைத்தால் கூட அவர் உயிருடன் இருக்கும் போது அதனை நன்கு விளங்கியப் பின்னர் இணைவைத்ததற்காக வல்ல அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டால் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான். இதுவே, இணைவைத்தவர் இறந்த பின்பு அவருக்காக பாவமன்னிப்பு கேட்பது அல்லாஹ்வுடைய தூதருக்கே அனுமதி கிடையாது. ஆகவே, உயிருடன் வாழும் போது நாம் செய்த பாவச்செயலுக்காக பரிகாரம் தேடலாம்.