பாடம் 9 நபிகளாரின் பரிந்துரை
கேள்வி 1 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நமக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்கும்படி நாம் யாரிடம் கேட்க வேண்டும்?
பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நமக்காகப் பரிந்துரை செய்ய அனுமதியளிக்கும்படி அல்லாஹ்விடம் தான் நாம் கேட்க வேண்டும்.
பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவீராக!
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான்.
ஒவ்வொரு திருத்தூதருக்கும் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட பிரார்த்தனை செய்ய அனுமதி உண்டு. அந்தப் பிரார்த்தனையை எல்லா இறைத் தூதர்களும் இம்மையிலேயே பயன்படுத்திக் கொண்டு விட்டார்கள். நானோ எனது சமுதாயத்தவரில் எவர்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காதவர்களாக இறந்திருக்கிறார்களோ அவர்களுக்காக மறுமையில் பரிந்துரை செய்வதற்காக அந்தப் பிரார்த்தனையைப் பத்திரப்படுத்தியிருக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
.கேள்வி 2 : உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் எதற்காவது பரிந்துரை செய்யும்படிக் கேட்கலாமா?
பதில் : உலக விவகாரங்களில் பரிந்துரை செய்யும்படி உயிருடனிருப்பவர்களிடம் கேட்கலாம். ஏனெனில்
அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
என்று அல்லாஹ் அனுமதியளித்துள்ளான்.
தோழர்களே பரிந்துரை செய்யுங்கள். அதற்கான நன்மை அளிக்கப்படுவீர்கள்.
(புகாரி: 1432, 6027, 6028, 7476)
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதியளித்திருக்கிறார்கள்.
கேள்வி 3 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதில் நாம் வரம்பு மீறலாமா?
பதில் : நபிகள் நாயகம் (ஸல) அவர்களைப் புகழ்வதில் நாம் எல்லை மீறவே கூடாது. ஏனெனில்
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான்.
மேலும் கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈசா (அலை) அவர்களைப் புகழ்வதில் வரம்பு மீறி விட்டதைப் போல என்னையும் நீங்கள் வரம்பு மீறிப் புகழ்ந்து விடாதீர்கள். நான் ஓர் அடியான் தான். எனவே என்னைப் பற்றி அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றே கூறுங்கள். என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.