பாடம் 8 இறைவனை இறைஞ்சிட துணைச் சாதனம் தேவையா?
கேள்வி 1 : இறைவனை இறைஞ்சிட துணைச் சாதனம் தேவையா?
பதில் இறைவனிடம் இறைஞ்சிட அனுமதிக்கப்பட்ட துணைச் சாதனம், அனுமதிக்கப்படாத துணைச் சாதனம் என இரண்டு வகைகள் உண்டு.
அல்லாஹ்வின் திருநாமங்கள் அவனது பண்புகள் நாம் செய்யும் நல்லறங்கள் ஆகியவற்றை நமது பிரார்த்தனைகளில் துணைச் சாதனங்களாக்கி இறைஞ்சுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில்
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்!
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்.
என்று இறைவன் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.
அந்தத் துணைச் சாதனம் அல்லாஹ்வின் வழிபாடும் அவனுக்குப் பிடித்த நல்லறங்களுமாகும் இறைவா உனக்குரிய அனைத்துத் திருநாமங்களின் பொருட்டாலும் உன்னிடம் நான் கேட்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
சுவனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் பெரும்பேற்றை வேண்டிய தன் அன்புத் தோழர் ஒருவரிடம், இறைவனிடம் உமது கோரிக்கை ஏற்கப்பட வேண்டுமாயின் அதிகமாகத் தொழுது எனக்கு உதவுவீராக என்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளுரை பகர்ந்ததாக நபிமொழிப் பேழை முஸ்லிமில் (754) காணப்படுகிறது.
குகையில் மாட்டிக் கொண்ட மூவர் தமது வாழ்நாளில் செய்திருந்த நல்லறங்களைத் துணைச் சாதனமாக்கி இறைவனிடம் இறைஞ்சியதும் அதன் பொருட்டால் இறைவன் அவர்களின் சிரமத்தை அகற்றிக் காப்பாற்றியதும் நம்பத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழி மூலம் தெரிய வரும் சம்பவமாகும்.
(புகாரி: 2272, 2215, 2333, 3465, 5974),
இன்று முஸ்லிம்களிடையே சர்வ சாதாரணமாக நிலவி வரும் இறந்தவர்களை அழைக்கும் பழக்கமும் அவர்களிடம் தேவைகளை நிறைவேற்றக் கோருவதும் இணை வைக்கும் பாவத்தின் பெரிய வகையாகும்.
மேலும் இது இறைவனிடம் இறைஞ்சிட இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத துணைச் சாதனமாகும். ஏனெனில்
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
என்று இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே இது பற்றி எச்சரித்திருக்கிறான்.
இறைவா முஹம்மத் (ஸல்) அவர்களின் கண்ணியத்தின் பொருட்டால் எனது நோயைக் குணப்படுத்து என்பது போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தைத் துணைச் சாதனமாக்கி இறைவனிடம் பிரார்த்தனை செய்வது (பித்அத்) புதுமைப் பழக்கமாகும்.
மேலும் இறந்தவர்களைத் துணைச் சாதனமாக்கிப் பிரார்த்தனை செய்வது சில வேளைகளில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் பெரும் பாவத்திற்கு நம்மை இட்டுச் சென்று விடுகின்றது. அதாவது மன்னர்களிடமும் அதிகாரிகளிடமும் நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமானால் அவருக்கு மிக நெருக்கமான ஒருவரைத் துணைச் சாதனமாக்கி அவர் மூலம் நமது கோரிக்கையைச் சமர்ப்பிப்பது போன்று இறைவனுக்கும் ஒரு மனிதர் இடைத் தரகராகத் தேவைப்படுகிறார் என்று எண்ணும் போது படைப்பாளனாகிய அவனது படைப்புகளுக்கு ஒப்பிட்டு விடும் இணை வைத்தல் என்று பெரும் பாவம் நிகழ்ந்து விடுகின்றது.
கேள்வி 2 : அல்லாஹ்விடம் ஒன்றை வேண்டுவதற்கு யாராவது ஒரு மனிதரின் இடைத் தரகு (துணை) தேவையா?
பதில் : இறைவனிடம் கையேந்துவதற்கு யாரையும் துணைச் சாதனமாகவோ இடைத் தரகராகவோ ஆக்கவோ அவசியம் இல்லை. ஏனெனில்
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரர்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)
என இறைவன் கூறுகின்றான்.
(நண்பர்களே) நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது (யாவற்றையும்) செவியுறுபவனையும் (உங்களுக்கு) மிக நெருக்கமானவனையுமே நிச்சயம் அழைக்கின்றீர்கள். அவன் (தனது பேரறிவால் எப்பொழுதும்) உங்களுடனையே இருக்கின்றான்.
(புகாரி: 4605, 6384, 6610, 7386)
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குப் பிரார்த்தனையின் ஒழுக்கங்களைக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
கேள்வி 3 : உயிருடனிருப்பவர்களிடம் நமக்குப் பிரார்த்தனை செய்யும்படிக் கேட்கலாமா?
பதில் : தாரளமாகக் கேட்கலாம், ஏனெனில் இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி
(முஹம்மதே!) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான்.
என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான்.
கேள்வி 4 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கும் இறைவனுக்குமிடையே எந்த வகையில் துணைச் சாதனமாக நடுவில் இருப்பவராகிறார்கள்?
பதில் : இறைவனின் தூதுத்துவத்தை நம்மிடம் சமர்ப்பிக்கும் வகையில் தான் அவர்கள் நமக்கும் இறைவனுக்கும் இடையில் ஒரு துணைச் சாதனமாகப் பயன்பட்டிருக்கிறார்கள். அல்லாஹ்வும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக!
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை நோக்கி நண்பர்களே நான் எனக்கு இறைவனால் அருளப் பெற்றதை உங்களிடம் அப்படியே அறிவித்து விட்டேனா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபிகளே நீங்கள் நிச்சயம் அப்படியே அறிவித்து விட்டீர்கள் என்பதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம் என்று தோழர்கள் பதிலளித்தனர். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் இறைவா நீயும் இதற்கு சாட்சியாக இரு என்று கூறினார்கள்.
(புகாரி: 105, 1739, 1741, 2597, 4403, 4406, 5550, 6785, 6979, 7087, 7174, 7197, 7447)
இதுவும் நபிகளாரின் மேற்கூறப்பட்ட நிலைக்குச் சான்றாகத் திகழ்கிறது.