பாடம் 6 இணை வைத்தலின் கேடுகள்

நூல்கள்: இஸ்லாமியக் கொள்கை

கேள்வி 1 : இணை வைத்தலின் பெரிய வகையினால் விளையும் கேடு என்ன?

பதில் : இணை வைத்தலின் பெரிய வகையினால் நிரந்தரமாக நரகத்தில் கிடந்து வேக நேரிடும்.

அல்லாஹ்வுக்கு *இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என அல்லாஹ் எச்சரிக்கிறான்.

(அல்குர்ஆன்: 5:72)

அல்லாஹ்வுக்கு ஏதாவதொன்றை இணை கற்பித்தவனாக எவன் அவனைச் சந்திக்கிறானோ அவன் நரகத்திற்குத் தான் போவான்.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பற்றி மிக வன்மையாக எச்சரித்திருக்கிறார்கள்.

(முஸ்லிம்: 136)

கேள்வி 2 : அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவத்துடன் செய்யும் எந்த நல்லறங்களாலும் பயன் உண்டா?

பதில் : அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவத்துடன் செய்யும் எந்த நல்லறங்களாலும் புண்ணியமில்லை. ஏனெனில்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

(அல்குர்ஆன்: 6:88)

என்று தனது நபிமார்களைப் பற்றியே இவ்வாறு எச்சரித்திருக்கும் போது மற்றவர்கள் இணை கற்பித்தால் அவர்கள் நிலை என்னவாகும் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம் மேலும்,

எனக்கு இணையானவர்கள் என இவர்களால் கருதப்படுபவர்கள் அனைவரையும் விட நான் எவன் தயவும் தேவையும் அற்றவன். இணை கற்பிக்கும் பாவத்துடன் இவர்கள் புரியும் நல்லறங்கள் எனக்கு அனாவசியமானவை. என்னுடன் மற்றவரையும் இணைத்துக் கொண்டு எவன் ஒரு நல்லறம் புரிவானோ (அது எனக்குத் தேவையில்லை) அவனை அவனது இணை கற்பிக்கும் பாவத்துடன் (எப்படியோ தொலைந்து போகட்டும் என்று) விட்டு விடுவேன்.

என இறைவன் எச்சரித்திருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

(முஸ்லிம்: 5300)