பாடம் 4 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் இரண்டு வடிவங்களில் மிகப் பெரும் வடிவம்

நூல்கள்: இஸ்லாமியக் கொள்கை

கேள்வி 1 : அல்லாஹ்விடம் மிகப்பெரும் பாவமாகக் கருதப்படுவது எது?

பதில் : அல்லாஹ்விடம் மிகப் பெரும் பாவமாகக் கருதப்படுவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவமாகும்.

என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 31:13)

என்று லுக்மான் அவர்கள் தமது மகனுக்கு அறவுரை கூறியதாக இறைவன் குறிப்பிட்டிருப்பது இதற்கு மிகப் பெரும் சான்றாகும்.

பாவங்களில் மிகப் பெரியது எது? என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது அல்லாஹ் உம்மைப் படைத்திருக்க அந்த அல்லாஹ்வுக்கு நிகராக வேறொன்றை நீர் இணையாக்குவதாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

(புகாரி: 4477, 4761, 6001)6811

கேள்வி 2 : அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் மிகப் பெரும் வகை யாது?

பதில் : நமது வணக்கங்களை அல்லாஹ் அல்லாதவற்றுக்காகச் செய்வதே இணை கற்பித்தலின் மிகப்பெரும் வகையாகும். அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் பிரார்த்தித்தல், இறந்தவர்களிடமோ உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் நமக்கு எதிரில் இல்லாதவர்களிடமோ பாதுகாவல் தேடுதல் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!

என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.(அல்குர்ஆன்: 4:36)

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவங்களுக்கெல்லாம் பெரும்பாவத்தைச் சார்ந்ததாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பற்றியே எச்சரித்திருக்கிறார்கள்.

(புகாரி: 2653, 7654, 5976, 5977, 6273, 6675, 6870, 6871, 6919, 6920)

கேள்வி 3 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தவர்களிடையே இணை கற்பித்தல் எனும் பெரும்பாவம் காணப்படுகிறதா?

பதில் : ஆம் காணப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை. என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

(அல்குர்ஆன்: 12:106)

எனது சமுதாயத்தவர்களில் சில பிரிவினர் இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு சிலைகளை வணங்கும் அளவுக்குப் போகும் வரை இறுதித் தீர்ப்பு நாள் வராது என்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

நூல் : திர்மிதி 2145

இவையிரண்டும் இதற்கு மிகப்பெரும் ஆதாரங்களாகும்.

கேள்வி 4 : இறந்தவர்களிடமும், நம் எதிரில் இல்லாதவர்களிடமும் பிரார்த்திப்பதைப் பற்றி இஸ்லாத்தின் விதி என்ன?

பதில் : இறந்தவர்களிடமும், நம் எதிரில் இல்லாதவர்களிடமும் பிரார்த்திப்பது இணை வைத்தலின் மிகப் பெரும் வகையைச் சார்ந்த பெரும் பாவமாகும்.

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

என்று அல்லாஹ் கூறுகின்றான்.

(அல்குர்ஆன்: 10:106)

அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு நிகராகக் கருதி அவற்றிடம் பிரார்த்தித்த நிலையில் எவன் மரணிக்கின்றானோ அவன் நரகத்திற்கே போவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக அது பற்றி எச்சரித்துள்ளார்கள்.

(புகாரி: 6683)

கேள்வி 5: பிரார்த்தனை புரிவதே ஒரு வணக்கமா?

பதில் : ஆம் பிரார்த்தனையே ஒரு வணக்கம் தான்.

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். என்று அல்லாஹ் கூறுகின்றான்.

(அல்குர்ஆன்: 40:60)

பிரார்த்தனை தான் வணக்கம்.

நூல் : திர்மிதி 2895

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனையை வணக்கம் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

கேள்வி 6 : பிரார்த்தனைகளைச் செவிமடுக்கும் ஆற்றல் இறந்தவர்களுக்கு உண்டா?

பதில் : இல்லை. பிரார்த்தனைகளைச் செவிமடுக்கும் ஆற்றல் அவர்களுக்குக் கிடையாது.

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

(அல்குர்ஆன்: 27:80)

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

(அல்குர்ஆன்: 35:22)

அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள்.

என்று இறைவன் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

(அல்குர்ஆன்: 35:13),14