பாடம் 2 ஏகத்துவத்தின் வகைகளும் அதன் பயன்களும்
கேள்வி 1 : அல்லாஹ் திருத்தூதர்களை எதற்காக அனுப்பினான்?
பதில் : தன்னை வணங்கும்படி மக்களை அழைப்பதற்காகவும் தனக்கு இணை கற்பிக்கும் பாவத்திலிருந்து அவர்களைத் தடுப்பதற்காகவுமே அல்லாஹ் திருத்தூதர்களை அனுப்பினான்.
அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.
என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
கேள்வி 2 : படைத்துப் பரிபாலனம் செய்வதில் இறைவனை ஏகத்துவப்படுத்துவது என்றால் என்ன?
பதில் : படைத்துப் பரிபாலிப்பது, நிர்வகிப்பது போன்ற அல்லாஹ்வின் செயல்களில் யாரையும் அவனுக்கு இணையாக்கிவிடாமல் அவனை ஏகத்துவப்படுத்துவதே படைத்துப் பரிபாலிப்பதில் ஏகத்துவம் எனப்படும்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
இறைவா நீயே வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்துப் பரிபாலனம் செய்பவன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனையே குறிப்பிடுகிறார்கள்.
(புகாரி: 1120, 6317, 7385, 7442, 7499)
கேள்வி 3 : வணக்கத்தில் இறைவனின் ஏகத்துவத்தை ஏற்றுச் செயல்படுத்துவது என்றால் என்ன?
பதில் : பிரார்த்தனை செய்வது, பிராணிகளைப் பலியிடுவது, நேர்ச்சை செய்வது போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்வது வணக்கத்தில் ஏகத்துவம் எனப்படும்.
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
என்று இறைவன் கூறுகின்றான்.
வணங்கப்படுவதற்குரிய தகுதி படைத்தவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவனுமில்லை என்பதை ஏற்க அவர்களை நீங்கள் அழைப்பது உங்கள் முதல் வேலையாக இருக்கட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 1458, 7372)
கேள்வி 4 : அல்லாஹ்வின் திருநாமங்களிலும் அவனது பண்புகளிலும் அவனை ஏகத்துவப்படுத்துவது என்றால் என்ன?
பதில் : அர்ஷின் (இறை அரியணை) மீது அமர்தல், இறங்கி வருதல், கைகளிருப்பதாகச் சொல்லுதல் போன்ற திருக்குர்ஆனில் தன்னைப் பற்றி இறைவன் குறிப்பிடும் பண்புகளையும் நம்பத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழிகளில் நபிகளாரால் இறைவனுக்கிருப்பதாகச் சொல்லப்படும் பண்புகளையும் மாற்றியோ, கூட்டிக் குறைத்தோ பொருள் கொள்ளக் கூடாது. உருவகப்படுத்தக் கூடாது. மனிதக் கற்பனைகளுக்கேற்ப பொருள் கொள்ளக் கூடாது. அவை இல்லையென்று மறுத்துரைக்கக் கூடாது. அவனது நிறைவான தகுதிக்கேற்ப அவற்றில் கூறப்பட்டுள்ளபடி அப்படியே உண்மையாகவே நம்ப வேண்டும். இதற்குத் தான் இறைவனை அவனது திருநாமங்களிலும், பண்புகளிலும் ஏகத்துவப்படுத்துதல் என்று கூறப்படும்.
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
என்று அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.
அதாவது தனது படைப்புகளில் எவருக்கும் ஒப்புவமையாகாத விதத்திலும், அவனது கண்ணியத்திற்குத் தகுந்த விதத்திலும் அவன் இறங்கி வருகிறான் என்றே இதற்கு நாம் பொருள் கொள்ள வேண்டும்.
கேள்வி 5 : அல்லாஹ் எங்கே இருக்கிறான்?
பதில் : அல்லாஹ் வானத்தின் மீதுள்ள அர்ஷின் மீதிருக்கிறான்.
அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.
நிச்சயமாக இறைவன் (படைப்புகளின் விதிப் பயன்களைப் பற்றி) ஒரு நூல் எழுதினான்,அது அவனிடமே அர்ஷின் மீதிருக்கிறது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 3194, 7404, 7553, 7555)
கேள்வி 6 : அல்லாஹ் நம்முடனிருக்கிறான் அல்லவா?
பதில் : ஆம், நம்மைப் பார்த்துக் கொண்ருப்பதன் மூலமும், நமது சொற்களைச் செவியுறுவதன் மூலமும் நம்மைப் பற்றி அறிந்து வைத்திருப்பதன் மூலமும் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.
அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன் என்று அவன் கூறினான்.
என்று இறைவன் கூறுகின்றான்.
அவன் நம்முடனிருக்கிறான் என்பதற்கு என்ன பொருள் என அவனே விளக்கமளித்திருக்கிறான்.
நிச்சயமாக நீங்கள் (யாவற்றையும்) செவியேற்பவனை (உங்களுக்கு) அருகில் உங்களுடனேயே இருப்பவனை அழைக்கிறீர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 2992, 4305, 6384, 6409, 6610, 7386)
அதாவது உங்களைப் பற்றி அவன் அறிந்து வைத்திருப்பதன் மூலம் அவன் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறான்
கேள்வி 7 : ஏகத்துவத்தால் விளையும் பயன் என்ன?
பதில் : மறுமையின் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெறுதலும், இம்மையில் நேர்வழி நடக்கும் பெரும்பேறும், குற்றங்கள் மன்னிக்கப்படுதலும் ஏகத்துவத்தின் பயன்களாகும்.
நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர் வழி பெற்றோர்.
என ஏகத்துவத்தின் பயன்களைப் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்
அல்லாஹ்வின் அடியார்களில் யார் எதனையும் அவனுக்கு இணையாக்கவில்லையோ அவரைத் தண்டிக்காமலிருப்பதை இறைவன் தனது அடியார்களுக்குச் செய்யும் கடமையாக்கிக் கொண்டான்.
(புகாரி: 2856, 5967, 6267, 6500, 7373)
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தின் பயனை விளக்கியுள்ளார்கள்.