பாடம் 13 நபிகளாரின் வாழ்வும், வாக்கும், அதன்பின் தோன்றிய புதுமைப் பழக்க வழக்கங்களும்

நூல்கள்: இஸ்லாமியக் கொள்கை

கேள்வி 1 : மார்க்கத்தில் புகுந்துள்ள அனாச்சாரங்களில் நல்லவை, அழகானவை என்று ஏதேனும் உண்டா?

பதில் : மார்க்கத்தில் புகுந்துவிட்டுள்ள அனாச்சாரங்கள் அனைத்துமே வழிகேடானவை தான். அவற்றில் அழகானவை நல்லவை என்று எதுவுமே கிடையாது. ஏனெனில்

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

(அல்குர்ஆன்: 5:3)

என்ற திருவசனத்தில் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டு விட்டதாக இறைவன் பிரகடனப் படுத்தி விட்டான்.

எனவே அதில் புதுமைகளை (பித்அத்களைப்) புகுத்துவதற்கு எவருக்கும் அதிகாரமில்லை. மேலும் மார்க்கத்தில் அவ்வாறு புதுமையாகப் புகுத்தப்படும் அனாச்சாரங்களைப் பற்றி ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் (பித்அத்தும்) வழிகேடு தான். வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்குத்திற்குரியவை தான்.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

நூல் : நஸயீ 1560

கேள்வி 2 : மார்க்கத்தில் புதுமைப் பழக்க வழக்கங்களைப் புகுத்துதல் என்றால் என்ன?

பதில் : மார்க்கத்தில் இல்லாததை மார்க்கத்தினுள் புகுத்தி அதைக் கூட்ட முயலுவதும் அல்லது இருக்கின்றவற்றை அதிலிருந்து அகற்றி அதைக் குறைக்க முயலுவதும் மார்க்கத்தில் புதுமைகளைப் புகுத்துதல் (பித்அத்) எனப்படுகின்றது. அவ்வாறு புதுமைப் பழக்க வழக்கங்களைப மார்க்கத்தில் புகுத்திப் புகுத்தி நாளடைவில் இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களாக மாறிப் போனவர்களைப் பற்றி பின்வருமாறு அல்லாஹ் கேட்கிறான்.

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும்.

(அல்குர்ஆன்: 42:21)

நமது மார்க்கத்தில் இல்லாதவற்றை அதில் எவன் புதுமையாகப் புகுத்துகின்றானோ அவை ஏற்கத்தக்கவை அல்ல.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனைக் கண்டித்திருக்கிறார்கள்.

(புகாரி: 2697)

கேள்வி 3 : முஸ்லிம்கள் அல்லாஹ்வின் உதவியைப் பெற எப்போது தகுதி உடையவர்களாவார்கள்?

பதில் : முஸ்லிம்கள் தமதிறைவனின் திருவேதத்திற்கும் தங்கள் திருநபியின் நெறிமுறைகளுக்கும் ஏற்ப வாழ வேண்டும். ஏகத்துவத்தைப் பரப்பும் திருப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இறைவனுக்கு இணை கற்பிக்கும் பாவத்தின் பல்வேறு வகைகளிலிருந்தும் முற்றாக தாமும் விலகி மக்களையும் விலக்க வேண்டும். தமது பகைவர்களை முறியடிப்பதற்கான முன்னேற்பாடுகளில் தங்களால் முடிந்தவரை முழுமூச்சுடன் முனைந்து செயல்பட வேண்டும். இப்படிச் செய்வார்களானால் அவர்கள் தங்கள் இறைவனுடைய உதவியைப் பெறத் தகுதி படைத்தவர்களாகி விடுவார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

(அல்குர்ஆன்: 47:7)

என்று இறைவன் கூறுகின்றான்.

அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

(அல்குர்ஆன்: 24:55)

அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

(அல்குர்ஆன்: 24:55)

என்றும் இறைவன் மேற்கண்ட இரு வசனங்களிலும் இதைத் தான் வலியுறுத்துகிறான்.