பாடம் 12 திருமறையிலும் நபிமொழி நெறியிலும் வாழுதல்
அ.திருக்குர்ஆன், ஹதீஸ்
கேள்வி 1 : அல்லாஹ் எதற்காக நமக்குத் திருக்குர்ஆனை அருளினான்.
பதில் : அதன் வழியில் நடப்பதற்கே அல்லாஹ் திருக்குர்ஆனை அருளினான்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்!
என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.
திருக்குர்ஆனைப் படியுங்கள். அதன்படி நடங்கள். அதைக் கொண்டு (பிழைப்பு நடத்திச்) சாப்பிடாதீர்கள்.
(அஹ்மத்: 14981, 14986, 15110, 15115, 15117)
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார்கள்.
கேள்வி 2 : நம்பத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழிகளின் படி நடப்பதைப் பற்றி இஸ்லாத்தின் முடிவு என்ன?
பதில் : அந்த நபிமொழிகளின் படிச் செயல்படுதல் நம் மீது கடமையாகும். ஏனெனில்
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.
கேள்வி 3 : திருக்குர்ஆனை மட்டுமே நமது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளைப் புறக்கணிக்கலாமா?
பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளைப் புறக்கணிப்பது அறவே கூடாது. ஏனெனில் திருக்குர்ஆனுக்கு விளக்கம் தர வேண்டிய பொறுப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையதே என இறைவன் குறிப்பிடுகிறான்.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அறிந்து கொள்ளுங்கள். நான் நிச்சயமாகத் திருக்குர்ஆனையும் அதனுடன் அதுபோன்றதையும் வழங்கப்பட்டிருக்கிறேன்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
கேள்வி 4 : அல்லாஹ்வின் சொல்லையும், அவனுடைய திருத்தூதரின் சொல்லையும் விட மற்றவர்களின் சொல்லுக்கு நாம் முதலிடம் தரலாமா?
பதில் : அல்லாஹ்வின் சொல்லையும், அவனுடைய திருத்தூதரின் சொல்லையும் விட யாருடைய சொல்லுக்கும் நாம் முதலிடம் அளிக்கவே கூடாது. ஏனெனில்
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
என்று அல்லாஹ் ஆணையிடுகின்றான்.
படைத்தவனுக்கு மாறாக எந்தப் படைப்புக்கும் கீழ்படிதல் கிடையாது.
நூல் : தப்ரானி 15091
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
கேள்வி 5 : நமக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றினால் அதனை எப்படித் தீர்த்துக் கொள்ள வேண்டும்?
பதில் : அவ்வாறான சமயங்களில் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று அவனது திருவேதத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு கண்டிருக்கிறார்கள் என்று அவர்களின் பொன்மொழிகளையுமே நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்வரும் திருவசனத்தில் மூலம் அல்லாஹ் நமக்கு அப்படித் தான் கட்டளையிட்டிருக்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு வியத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.
ஆ. இறைநேசமும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அன்பும் கேள்வி 6 :அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும் நாம் எவ்வாறு நேசிக்க வேண்டும்.
பதில் : அவர்களுக்குப் கீழ்ப்படிதல், அவர்களின் கட்டளைகளைப் பின்பற்றுதல் ஆகியவையே அவர்கள் மீது நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பதற்குச் சான்றாகும். ஏனெனில்
நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுவீராக!
என்று அல்லாஹ் கூறுகின்றான்.
உங்களில் ஒருவருக்கு அவரது பெற்றோர் மக்கள் ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் மிகவும் அன்புக்குரியவனாகும் வரை அவர் நம்பிக்கை கொண்டவராக மாட்டார்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வலியுறுத்திருக்கிறார்கள்.
இ.விதியும், முயற்சியும்
கேள்வி 7 : விதியன் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டு நமது முயற்சிகளைக் கைவிடலாமா?
பதில் : விதியை நம்ப வேண்டும். ஆனால் நமது முயற்சிகளை ஒரு போதும் கைவிட்டு விடவே கூடாது. ஏனெனில்
உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது. யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி,நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதியானதற்கு வழியை எளிதாக்குவோம்.
(அல்குர்ஆன்: 92:4) ➚,5,6,7
என்று நமது முயற்சிகள் சிறந்தவையாயிருந்தால் சுவனத்திற்கான வழி இலகுவாக்கப்படுகிறது என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
விதியை நம்பிச் (சோம்பியாருக்காதீர்கள்) செயல்படுங்கள், ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் எதற்காகப் படைக்கப்பட்டீர்களோ அதற்கான வழிகள் எளிதாக்கித் தரப்படும்.
(புகாரி: 4945, 4946, 4947, 4949, 6217, 6605, 7551, 7552)
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்படும்படி வலியுறுத்தியிருக்கிறார்கள்.