பாடம் 1 அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை
கேள்வி 1 : அல்லாஹ் நம்மை எதற்காகப் படைத்திருக்கிறான்?
பதில் : அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அவனையே வணங்க வேண்டுமென்பதற்காக அவன் நம்மைப் படைத்தான்.
என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) ஜின்னையும், மனிதனையும் நான் படைக்கவில்லை.(அல்குர்ஆன்: 51:56) ➚
அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை, அவனுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அவனையே அவர்கள் வணங்குவதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(புகாரி: 2856, 5967, 6267, 6500, 7373)
கேள்வி 2: வணக்கம் என்றால் என்ன?
பதில் : பிரார்த்தனை செய்தல், தொழுதல், பிராணிகளைப் பலியிடுதல் போன்ற இறைவனுக்கு விருப்பமான சொற்களுக்கும், செயல்களுக்கும் பொதுவான பெயரே வணக்கம் என்பதாகும்.
எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்று கூறுவீராக!
என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
(அல்குர்ஆன்: 6:162) ➚, 163
எனது அடியான் மீது நான் கடமையாக்கியிருப்பவற்றைச் செய்து என்னை நெருங்குவதை விட எனக்கு மிக விருப்பமான வேறொன்றைச் செய்து அவன் என்னை நெருங்கி விட முடியாது என்று இறைவன் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
கேள்வி 3 : அல்லாஹ்வை நாம் எவ்விதம் வணங்க வேண்டும்?
பதில் : அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் நமக்குக் கட்டளையிட்டிருப்பது போன்றே அவனை நாம் வணங்க வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.
நமது உத்தரவின்றி எவன் ஒரு செயலைச் செய்கிறானோ அது தள்ளப்பட வேண்டியதே என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கேள்வி 4 : அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சியும், அல்லாஹ்வின் சன்மானத்திற்கு ஆசைப்பட்டும் அல்லாஹ்வை நாம் வணங்கலாமா?
பதில் : ஆம் அப்படித் தான் அவனை நாம் வணங்க வேண்டும். ஏனெனில்
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். என்று ஏகத்துவ நம்பிக்கையாளர்களை அல்லாஹ் வர்ணிக்கிறான்.
நான் அல்லாஹ்விடம் சுவனத்தை வேண்டுகிறேன். நரகத்தை விட்டு அவனிடம் காவல் தேடுகிறேன். என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தித்திருக்கிறார்கள்.
கேள்வி 5 : வணக்கத்தில் சிறந்த முறை எது?
பதில் : வணக்கத்தில் சிறந்த முறை அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் எனும் எண்ணத்துடன் அவனை வணங்குவதாகும்.
நீர் நிற்கும் நேரத்திலும், ஸஜ்தாச் செய்வோருடன் நீர் இயங்கும் போதும் அவன் உம்மைப் பார்க்கிறான். என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
(அல்குர்ஆன்: 26:218) ➚,219
வணக்கத்தில் சிறந்த முறை அல்லாஹ்வை நீர் (நேரில்) பார்ப்பதைப் போன்று வணங்குவதாகும். அவனை நீர் பாக்கவில்லை என்றாலும் நிச்சயம் அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.