பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா?
நாம் படுத்துக் கிடக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் உடனே எழுந்து உட்கார வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக உள்ளது. இது சரியா?
பதில்
கிடக்கலாம்
இந்த நம்பிக்கைக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடந்து விட்டு பாங்கு சொல்லி முடிந்தவுடன் எழுந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
626-حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير أن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا سكت المؤذن بالأولى من صلاة الفجر قام فركع ركعتين خفيفتين قبل صلاة الفجر بعد أن يستبين الفجر ثم اضطجع على شقه الأيمن حتى يأتيه المؤذن للإقامة
ஃபஜ்ரு தொழுகையின் பாங்கை முஅத்தின் சொல்லி முடித்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவார்கள். ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(புகாரீ: 626)
பாங்கு சொல்லி முடியும் வரை படுத்துக் கிடந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லி முடித்தவுடன் எழுந்துள்ளதால் பாங்கு சொல்லும் போது படுத்துக்கிடப்பதில் எந்தத் தவறும் இல்லை.
அதே நேரம் பாங்கு சொல்லும் போது அதே போல் நாமும் திருப்பிச் சொல்ல வேண்டும் என்ற கட்டளை உள்ளது.
நீங்கள் பாங்கு சப்தத்தைச் செவியுற்றால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்றே நீங்களும் சொல்லுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களை திக்ருகளை படுத்துக்கொண்டு எப்படி சொல்ல முடியும் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே இந்தக் கருத்து விதைக்கப்படுகின்றது.
ஆனால் படுத்துக் கொண்டும் இறைவனை திக்ர் செய்யலாம் என்று திருக்குர்ஆனும், நபிவழியும் கூறுகின்றன.
அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” (என்று அவர்கள் கூறுவார்கள்)
நீங்கள் தொழுகையை முடித்ததும் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்! நீங்கள் அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை (முழுமையாக) நிலைநாட்டுங்கள்! நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
நான் மாதவிடாயுடன் இருக்கும் போதும் எனது மடியில் தமது தலையை வைத்தபடி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)