பள்ளிகளில் பிறமதத்தவர்களுக்கு ஓதிப்பார்க்கலாமா?

கேள்வி-பதில்: மற்ற கேள்விகள்

அல்லாஹ்வும் ரசூலும் கற்றுக்கொடுத்துள்ள அத்தியாயங்கள் மற்றும் துஆக்ககளை ஓதி உள்ளங்கையில் ஊதி, உடல்களில் தடவிக்கொள்ளும் ருக்யா எனும் நபிகளார் ஓதிப்பார்த்த முறைக்கு மார்க்கத்தில் இடமுண்டு.

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்,

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் படுக்கைக்குச் சென்றால் குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தம் முகத்தையும், தம் இரண்டு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்றபோது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள்.

நூல் : (புகாரி: 5748)

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் (எங்களிடம்), “நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்லிக்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப்பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை” என்று கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 4427)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால்’ அல்லது நோயாளி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டால்’ அவர்கள், அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன் என்று பிரார்த்திப்பார்கள்.

பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.

நூல்கள்: (புகாரி: 5675), (முஸ்லிம்: 4411)

இந்த ஹதீஸ் மூலம் ஓதிப்பார்க்கும் வழிமுறைகளில் சில முக்கிய விஷயங்களையும் நாம் அறிந்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

ஓதிப்பார்ப்பதற்கென்று குர்ஆன் ஹதீஸில் என்னன்ன வார்த்தைகள் கற்றுத்தரப்பட்டுள்ளதோ அவைகளை கொண்டு மட்டும் தான் ஓதிப்பார்க்கவேண்டும். நாமாக ஒரு துஆவை தயார் செய்து ஓதக்கூடாது.

ஓதி பார்க்கும் வாசகங்களில் இணைவைத்தல் சார்ந்த வார்த்தைகள் இருக்கக்கூடாது.

ஓதிப்பார்ப்பவர்கள் மேற்படியுள்ள அம்சங்களை கடைபிடிக்க வேண்டும்.

பள்ளிகளில் பிறமதத்தவர்களுக்கு ஓதிப்பார்க்கலாமா?

ஓதிப்பார்ப்பதற்கென்று தனி இடமோ, நபரோ இருக்கவேண்டும் என்று மார்க்கத்தில் எதும் வரையறுக்கப்படவில்லை. ஓதத்தெரிந்த யாராக இருந்தாலும் எந்த இடமாக இருந்தாலும் யாருக்கு வேண்டுமானாலும் ஓதிப்பார்கலாம். அது மாற்றார்களாக இருந்தாலும் சரியே! இதனை பின்வரும் நபிமொழி நமக்கு தெரியப்படுத்துகிறது.

அபூ ஸயீத்(ரலி) அறிவிக்கிறார்,

நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது.

அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!’ என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து ‘கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?’ என்று கேட்டனர்.

அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ‘ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!’ என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர்.

நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..’ என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். ‘இதைப் பங்கு வையுங்கள்!’ என்று ஒருவர் கேட்டபோது, ‘நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!’ என்று ஓதிப் பார்த்தவர் கூறினார்.

நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டுவிட்டு, ‘நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

(நூல் : (புகாரி: 2276)

இந்த ஹதீஸில் ஓதிப்பார்க்கப்பட்டவர் முஸ்லிமுமல்ல, அவர்கள் பள்ளிவாசலிலுமல்ல. எனினும் அந்த மருத்துவம் அவருக்கு நிவாரணமளித்துள்ளது. அதனை நபியவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். எனவே மாற்றுமதத்தவர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் ஓதிப்பார்க்கலாம். அனால், ஓதிப்பார்க்க ஊதியம் பெறுவதாக இருந்தால் அந்த மருத்துவம் அவர்களுக்கு நிவாரணமளித்தப் பின்னரே கூலி பெறவேண்டும்.

பள்ளிவாசலில் தொழுவிட்டு வந்தவர் ஓதி பார்த்தால் அதற்கு அதிகம் நிவாரணம் உண்டு என்ற நம்பிக்கை இருந்தால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.