படைத்தவனின் ஆற்றலுக்கு முன்னால் படுதோல்வி அடையும் மனிதன்
‘‘ஒரு மனிதனைப் பொறுத்தவரை சிறிய காலடிதான் இது. ஆனால், மனித குலத்தைப் பொறுத்தவரை இது பெரும் பாய்ச்சல்”
இவை நிலவில் கால் வைத்தவுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்ன வாசகங்கள்.
“செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கும்பட்சத்தில், இந்நூற்றாண்டு இறுதிக்குள் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வசிப்பதற்கான சூழலை ஏற்படுத்த முடியும்”
இவை உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சொன்ன வாசகங்கள்.
சென்னையிலிருந்து நெல்லைக்கும், நெல்லையிலிருந்து சென்னைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் விடுவதைப் போல சூரிய குடும்பத்தில் உள்ள சந்திரன், செவ்வாய் கோள்களின் வட்டப்பாதைகளில் ஆய்வு செய்வதற்காக நீந்திச் செல்லும் செயற்கைக் கோள்களை, விண்கலங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகள் விண்வெளியை நோக்கிப் படையெடுத்து, பாய்ச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றன.
நெல்லையிலிருந்து சென்னைக்குத் தூரம் 600 கிலோ மீட்டர்கள் தான். வந்தே பாரத் ரயிலில் 8 மணி நேர தூரம். அதே சமயம் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு பத்து மாத காலமாகும். தூரம் 66 கோடி கிலோமீட்டர்கள். இந்தியாவின் மங்கள்யான் ஆய்வுக்களம் இவ்வளவு தூரம் சென்று தான் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கின்றது. நவம்பர் 5, 2013 அன்று மண்வெளியிலிருந்து தனது பயணத்தை அல்ல, பாய்ச்சலைச் தொடங்கிய மங்கள்யான், பத்து மாத காலத்தில் இலக்கை அடைந்து விட்டது. இதன் மூலம் இந்தியா விண்வெளி ஆய்வு மையம் புகழின் உச்சிக்குப் பறந்தது.
இது ஒருபுறமிருக்க, 2014, பிப்ரவரி மாதம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் திருவிழாவின் போது மங்கள்யான் வெற்றிக்காக அம்மன் அருளை நாடி ஒரு பொங்கல்(யான்) நடத்தியபோது, மூட நம்பிக்கையும் ஒரு முரட்டு வேகத்தில் இன்னொரு பக்கம் பயணத்தை அல்ல, பாய்ச்சலை நடத்திக் கொண்டிருக்கின்றது என்பதை உணரலாம்.
இதன் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்துடன் கூடவே இந்தியாவின் இந்தப் புகழும் கொடிகட்டிப் பறந்தது என்றால் அந்த சுவாரஸ்யமான செய்தியை நாம் பார்க்காமல், படிக்காமல் செல்ல முடியுமா? இப்படி மூட நம்பிக்கையின் முடை நாற்றம் எடுக்கும் ஒரு நாட்டில் அறிவியல் புரட்சி, விண்வெளியை நோக்கி படை நடத்திக் கொண்டிருக்கின்றது என்பதை குறிப்பிடுவதற்காக இடையே இந்தச் சிறிய எடுத்துக்காட்டு.
இன்று இந்தியாவில் ஓர் இண்டு இடுக்கில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை அமெரிக்காவில் உள்ளவர் நேரலையில் கண்டு ரசிக்கின்றார் என்றால் அதற்குக் காரணம் என்ன? ஏவுகணையில் ஏற்றி வழியனுப்பி வைக்கப்பட்டு, வான் மண்டலத்தின் வட்டப்பாதைகளில் வலம் வருகின்ற செயற்கைக் கோள்கள் செய்கின்ற சித்து விளையாட்டுகள் அல்லாமல் வேறென்ன?
அவ்வளவு ஏன்? அரபிய்யாவில் அல்லது ஐரோப்பாவில் இருக்கும் தன் மகனை தொலைபேசியில் அழைத்துப் பேசிய காலம் மலையேறிப் போய், அலைபேசியில் அழைத்துப் பேசிய காலம் மலையேறிப் போய், இப்போது வாட்ஸ் அப்பில் நேரலையில் அழைத்து, பெற்றோர்களும் மற்றோர்களும் இணைந்து பரஸ்பரம் பார்த்துப் பார்த்துப் பேசுகின்ற ஒரு யுகப்புரட்சி ஏற்பட்டிருக்கின்றதே அதற்குக் காரணம் என்ன? கவிஞர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால், ‘வானம் வசப்பட்டிருக்கின்றது’ என்பது தானே? அதனால் தான் “வானம் எங்களுக்கு வசப்பட்டு விட்டது” என்ற ஆணவ வசனத்தை உணர்ச்சி வசப்பட்டு, பரவசப்பட்டு மண்ணின் மைந்தர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் உண்மை நிலைமை என்ன? அறிவியலில் புரட்சி படைத்திருக்கும் மனித இனம் மண்வெளியில் ஒரு மழைக்குக் கூட தாக்குப் பிடிக்கவில்லை என்பது தான் யதார்த்தம். வானிலிருந்து பொழியும் மழையின் முன்னால், அதிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் மூலம் மனிதன் படுதோல்வி அடைந்து கிடக்கின்றான். அவனது தொழிற் புரட்சி, அறிவியல் புரட்சி, தொலைத் தொடர்பு தகவல் துறையில் அவன் கண்ட வெற்றி, புரட்சி எல்லாமே மண்ணைக் கவ்வி டிசம்பர் 3, 4 தேதிகளில் சென்னையிலும் டிசம்பர் 17, 18 தேதிகளில் தென்மாவட்டங்களான குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் பெய்த மழை வெள்ளத்தில் மளமளவென்று அடித்து இழுத்துச் செல்லப்பட்டன. வானம் வசப்பட்ட அந்த அறிவியல் மாமனிதனின் மானம் மழைவெள்ளத்தில் கப்பலேறிய அந்தத் தோல்வி வரலாறுகளைத் தொகுத்து இப்போது இங்கே பட்டியிலிடுவோம்:
வானத்தில் பூமியின் வட்டப்பாதையில் வளைத்து விடப்பட்டிருக்கும் செயற்கைக் கோள்களின் புண்ணியத்தில், தரை மார்க்கத்தில் தண்டவாளத்தில் விரைந்து செல்லும் ரயில்கள் ஒவ்வொரு நிலையத்திலும் அதன் வருகையையும், புறப்பாட்டையும் நொடிக்கு நொடி செயலிகளால் முன்னறிவிப்பு செய்ய முடிகின்றது. ஆனால் மழையின் வருகையை முன்னறிவிப்பு செய்யமுடியவில்லை. மனிதன் கண்டுபிடித்திருக்கும் வானிலை மையம் மழை வருகையைக் கண்டுபிடித்துச் சொல்லத் தவறி விடுகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் தோல்வியை அறிவுசார் மாநிலத்தின் தலைமைச் செயலாளரே போட்டு உடைக்கின்றார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களிடம் பேசிய போது, வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்தார். “பெருமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துச் சொல்லவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகியுள்ளது. கணிப்பு சரியாக இருந்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அதற்கு ஏற்ப சரியாக இருந்திருக்கும்” என்று குறிப்பிட்டார்.
“ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என்று மட்டுமே வானிலை ஆய்வு மையம் சொன்னது. நாங்கள் அதி கன மழையை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தோம். ஆனால் காயல்பட்டிணத்தில் 31 மணி நேரத்தில் 116 செ.மீ. மழையும், திருச்செந்தூரில் 92 செ.மீ. மழையும் பெய்துள்ளது. வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகப் பெரிய வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது” என்றும் தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் ரமணன் இதுபற்றிக் கூறும்போது,
“வானிலை ஆய்வு பொறுத்த வரை துல்லியம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் வானிலை என்பது தினம் தினம் அல்ல, நொடிக்கு நொடி மாறக்கூடியது. சில தரவுகள், முன் அனுபவங்கள் மூலம் மட்டுமே கணிக்க முடியும். பல்வேறு கிளைமேட் மாடல்கள் இருக்கின்றன. இவற்றில் நாம் பிரதானமாகப் பின்பற்றுவது அமெரிக்க கிளைமேட் மாடலையும் ஐரோப்பிய கிளைமேட் மாடல்களையும் தான்” என்று கூறுகிறார்.
ஆனால் இந்தக் கிளைமேட் மாடல்கள் சொல்லும் தகவல்களை அப்படியே நம்ப முடியாது என்றும், அந்தத் தகவல்களோடு இஸ்ரோ தரும் தகவல்களையும் ஒப்பிட்டு, சிலவற்றைத் துணிச்சலாக நிராகரித்து, சிலவற்றைச் சொல்வது தான் வானிலை முன்னறிவிப்பு என்றும் தெரிவிக்கின்றார்.
2021ல் நவம்பர் 6 அன்று சென்னையில் மழையின் பாதிப்பைப் பற்றி ஜனவரி 11, 2022 அன்று வெளியான மழை குறித்த ஒரு கட்டுரையில் தமிழ் இந்து நாளேடு கொட்டித் தீர்த்த வேதனை மழை இதோ:
இந்த மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. வானிலை மையங்களால் கணிக்க முடியவில்லை. மக்களிடையே பிரபலமான வெதர்மேன்களாலும் முன்னுணர முடியவில்லை. அவர்கள் அனைவரும் மழை கொட்டித் தீர்த்ததும் அதைப் புரிந்துகொள்ள முயன்றனர். மேக வெடிப்பு என்றனர் சிலர். பருவநிலை மாற்றம்தான் காரணம் என்றனர் சிலர்.
இதுபோன்ற திடீர்ப் பெருமழை கடந்த ஆண்டில் உலகின் பல நகரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 2021 ஜூலை 25 அன்று மாலை மூன்று மணிக்கும் ஐந்து மணிக்கும் இடையில் லண்டனில் கொட்டிய மழையினால் நகரின் பிரதான சாலைகளின் போக்குவரத்து நின்று போனது. அதே மாதம் சீனாவின் ஜெங்ஜாவ் நகரத்தில் 24 மணி நேரத்தில் கொட்டிய மழையின் அளவு 62 செமீ; அந்த மழை நாளில் ரயில் சுரங்கமொன்றில் சிக்கிய 12 பேரைச் சடலங்களாகத்தான் மீட்க முடிந்தது. அதே மாதம் ஜெர்மனியில் இரண்டு மணி நேரத்தில் கொட்டிய மழை ஜூலை மாதம் முழுவதும் அங்கு பெய்யக் கூடிய மழையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது; அதனால் 600 கி.மீ. ரயில் தடங்களும் 80 ரயில் நிலையங்களும் நீரில் மூழ்கின; 180 உயிர்கள் பலியாயின.
இதில் எந்தப் பெருமழையையும் வானிலை மையங்களால் கணிக்க முடியவில்லை. சூழலியர்கள் பருவநிலை மாற்றத்தின் கெடுவிளைவுகள் இவை என்கிறார்கள்.
இது தெரிவிப்பது என்ன? வானிலை மையங்கள், வானிலையாளர்கள் முன்னுணர முடியவில்லை. முன்னுரைக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக இந்தியாவை விட அறிவியல் வளர்ச்சியில் பன்மடங்கு பரிமாணங்களைக் கண்ட, முன்னேறிய லண்டன், ஜெர்மன், சீனா போன்ற நாடுகளில் நடந்தேறிய அவலங்கள் இவை. இந்தியாவைச் சொல்லவேண்டுமா? மொத்தத்தில், வானிலை ஆய்வு மையங்களின் மழை பற்றிய கணிப்பு, முன்னறிவிப்புகள் பொய்த்துப் போய் விட்டன.
கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அன்று வெளியான தமிழ் இந்து நாளேட்டில், “2023 வெள்ளம் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியது ஏன்?” என்ற தலைப்பில் சா. கார்த்திகேயன் எழுதிய தனது ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
வானிலை ஆய்வு மையம் டிச.1-ம் தேதியே அதிகனமழை எச்சரிக்கையை வழங்கவில்லை. 3, 4 தேதிகளுக்கு ஒரு நாள் முன்னதாக ஒருசில இடங்களில் மிக கனமழை, ஓரிரு இடங்களில் அதிகனமழை எச்சரிக்கையே விடப்பட்டது. ஆனால் இரு நாட்களில் பரவலாக அதிகனமழை பெய்துள்ளது. இதை சென்னை வானிலை ஆய்வு மையம் நிச்சயம் கணித்திருக்கும். தமிழக அதிகாரிகள் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள்.
ரேடார் இயக்குவதில் பிற மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு திறன் பெற்றுள்ளனர். ஆனால் அத்துறையில் டெல்லியின் அதிகாரம் திணிக்கப்படுவதும், அவர்கள் கணிப்பதையே மண்டல வானிலை மையங்கள் அறிவிக்க வேண்டும் என்ற மனப்பான்மையும் நீண்டகாலமாக மேலோங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் கூட அதிகனமழை அறிவிப்பை சென்னையால் கொடுக்க முடியாமல் போயிருக்கலாம்.
இதுதான் அவர் வானிலை ஆய்வு மையம் குறித்து எழுப்பியிருக்கும் ஐயமாகும். மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு என்ன சதி வேலையை வேண்டுமானாலும் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அப்படியே தமிழக அதிகாரிகள் என்ன தான் திறமையானவர்களாக இருந்தாலும் நூறு சதவிகிதம் துல்லியமாக அறிவிப்பதற்கு சாத்தியமில்லை. காரணம் இந்தியாவை விட அறிவியலில் கொடிகட்டிப் பறக்கும் பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகள் இதில் விழிபிதுங்கி நிற்கின்றன என்பதை நாம் மேற்குறிப்பிட்ட செய்திகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
காலையில் தொலைக்காட்சிகளைத் திறந்தால் சோதிடக்காரர்களின் அலப்பறைகள், பில்டப்புகள், பீலாக்கள் தாங்க முடியவில்லை. ராசி பலன் என்ற பெயரில் அவர்கள் அடித்து விடும் சரடுகள் ரசிக்கும்படியும் இல்லை சகிக்கும்படியும் இல்லை.
முஸ்லிம்களில் உள்ள சோதிடக்காரர்களின் ஆட்டங்களும் பிற சமுதாய சோதிடர்களுக்கு சளைத்ததாக இல்லை. முஸ்லிம் சோதிடக் காரர்களுக்குப் பெயர் மட்டும் தான் வேறு. ஹஜ்ரத், லெப்பை என்று அழைக்கப்படுகின்றார்கள். ஏமாற்று வேலைகளில் இவர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாடும் பாகுபாடுமில்லை.
இவர்களில் எவரும் 2015 வெள்ளத்தைப் பற்றியோ. 2023 வெள்ளத்தைப் பற்றியோ முன்னறிவிப்பு செய்ய முடியவில்லை. இவர்களது சோதிடம் அத்தனையும் சுத்தமான வடிகட்டிய பொய் என்பதை இந்த வெள்ளம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நிரூபித்து விட்டது.
வானிலை ஆய்வு மையமாவது அறிவியல் வரம்பில் நின்று பேசுகின்றது. ஆனால் இந்த சோதிடக்காரர்கள் வாய்க்கு வந்தபடி வாந்தி எடுக்கின்றனர். இவை அத்தனையும் பிதற்றல்கள் என்று இந்த மழை வெள்ளம் பளிச்சென்று அடித்துச் சொல்லி விட்டது. வாஸ்து பார்த்து கட்டிய வீடுகளிலும் வெள்ளம் வீறு கொண்டு சென்று வாஸ்து பேர்வழிகளையும் நாறடித்து விட்டது.
வானிலை மையத்திற்கும், வாய்க்கு வந்தபடி உளறும் சோதிடர்களுக்கும் சேர்த்துச் சொல்கின்றோம். ஐந்து விஷயங்களை எல்லாம் வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமுடியாது என்று ஆணித்தரமாக கூறுகின்றோம்.
அல்லாஹ்விடமே உலகம் அழியும் நேரத்தைப் பற்றிய அறிவு இருக்கிறது. அவனே மழையைப் பொழிவிக்கிறான். அவனே கருவறைகளில் உள்ளவற்றை அறிகிறான். நாளை எதைச் சம்பாதிக்கப் போகிறோம் என்பதை எவரும் அறிய மாட்டார். எந்த இடத்தில் மரணிப்போம் என்பதையும் எவரும் அறிய மாட்டார். அல்லாஹ்வே நன்கறிந்தவன்; நுட்பமாக அறிபவன்.
என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான். மழை வரும் அளவைத் துல்லியமாகவோ, தோராயமாகவோ கணிக்கும் மனிதன், அதன் முன் மண்டியிட்டு தோற்று விடுகின்றான் என்பதை இதுவரை கண்ட சான்றுகளிலிருந்து உறுதியாக விளங்கிக் கொள்ளலாம்.
இருகரைகள் என்ற வரைகளுக்குள் பவ்யமாகவும் பணிவாகவும் சாந்த சொரூபியாக ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆறு டிசம்பர் 17, 18, 19 தேதிகளில் ஆர்த்தெழுந்து, ஆர்ப்பரித்துப் போர் முரசு கொட்டி, வேலி தாண்டிய வெள்ளாடாகக் கரைகளை உடைத்துக் கொண்டு வெளியே சாடிப் பாய்ந்த மாத்திரத்தில் கரை ஊர்கள் வெள்ளக்காடாக மாறிப் போனது. சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. தண்டாவாளங்கள் அரித்துச் செல்லப்பட்டன. அதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. இரு ஊர்களை இணைக்கின்ற பாலங்கள் இருப்பிடம் தெரியாமல் இடம் பெயர்த்து இழுத்துச் செல்லப்பட்டன. இதனால் கார், பஸ், ரயில் போக்குவரத்து வாகனங்கள் முடங்கிப் போயின. ஃபோன் தொடர்பு, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தொலைத் தொடர்பு வலைத் தளங்கள் அறுந்து போயின. இயல்பு வாழ்க்கை முடங்கியது. வீடுகளில் வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது ஆனால் குடிப்பதற்குக் குடி தண்ணீர் இல்லை. உணவு இல்லை. மின்சாரம் இல்லை.
இத்தனையும் உரத்துக் கூறும் ஒரு செய்தி என்ன? மனிதன், மழை வெள்ளத்திற்கு முன்னால் முற்றிலும் தோற்றுப் போய் விட்டான் என்பதைத் தான். இதை இந்த மழை வெள்ளம் நமக்கு விவரமாகப் பாடம் நடத்தியிருக்கின்றது. சுற்றி வளைத்துச் சூழ்ந்த நின்ற வெள்ளத்தில் மனிதன் கையறு நிலையில் ஆகி விடுகின்றான். காசு இருந்து என்ன? பணம் இருந்து என்ன? பசி! பசி! வழியெல்லாம் தண்ணீர்! விழியெல்லாம் கண்ணீர்! ஆண்டி முதல் அரசன் வரை வெள்ளத்தின் முன் சமம். இயலாமையில், இல்லாமையில் இருவரும் ஒரே இனம். எங்கு தப்பி ஓட முடியும்? விரட்டி அடிக்கும் வெள்ளத்திற்கு முன்னால் அதை எதிர்கொள்ள மனிதனிடம் ஒரு புரட்சியும் இல்லை.
எங்கும் நீர்! எதிலும் நீர்! குற்றவாளிகளின் வீடுகளில் இரவோடு இரவாக ரெய்டு நடத்தும் காவல்துறையினரின் காவல் நிலையத்தில் வெள்ளம் வெள்ளந்தியாக ‘ரெய்டு’ நடத்தியது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நுழைந்து தூசியேறிக் கிடந்த ஆவணங்களை ஓர் அலசு அலசி விட்டுத் திரும்பியது.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் அடித்த மழையில் பொத்துக் கொண்டு புறப்பட்ட வெள்ளம் சென்னை விமான நிலையத்தில் ஜெகஜோதியாகப் புகுந்து வானில் ஒய்யாரமாகப் பறந்து செல்லும் விமானங்களை, பொம்மைகளைப் போல் மிதக்க விட்டு வேடிக்கை பார்த்தது.
நீ என்ன தான் வானில் சிறகடித்துப் பறந்தாலும் நீ சரணாகதி ஆவதும் அடைவதும் மண்ணில் தான் என்று வெள்ளம் விமானத்தை நோக்கி மானசீகமாகப் பேசியது.
புறநகரங்களில் ஒரு கரையிலிருந்து மறுகரையைக் கடப்பதற்குப் பயன்படுகின்ற படகுகள், பரிசல்கள் போன்றவை தலைநகர் சென்னை மக்களுக்கு அந்நியப்பட்ட வாகனங்கள். அவர்கள் அறியாத நீர்நிலைகளின் போக்குவரத்து சாதனங்கள். சென்னை நகர மக்கள் அறிந்து வைத்தவை பஸ்கள், கார்கள் தான். அவை அனைத்தும் அடித்துச் செல்லும் வெள்ளத்தில் ஆடிக் கொண்டிருந்தன. இவற்றில் செல்வந்தர்கள் கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய ஆடிக் காரும் உள்ளடக்கம்.
இப்போது சென்னையில் ஓடிய வெள்ளத்தில் ஓடி ஓடி மக்களின் உயிர்களைக் காக்க உதவியவை மீனவர்களின் மரக்கலங்கள், படகுகள் புறநகர் மக்கள் பயன்படுத்தும் பரிசல்கள் தான். நமது ஜமாஅத் தொண்டர்கள் படகுகளை அமர்த்தித் தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை தொய்வின்றி மேற்கொண்டார்கள்.
சரி! இத்தனையும் எத்தனை நாட்களுக்கு? ஒரு சில நாட்களுக்கு தான். இதைத் தாண்டியும் வெள்ளம் தொடர்ந்தால் மனிதன் நிலை என்ன? மனிதன் எங்கு ஓடுவான்? எங்கு ஒளிவான்? வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியதை நினைத்தே மனிதன் பிரமித்துப் போய் நிற்கின்றான். ஆனால் இறைத்தூதர் நூஹ் நபி (அலை) காலத்தில் அடித்த வெள்ளம் போல் அடித்தால் மனிதன் என்ன செய்வான்? அதுபோன்று ஒரு வெள்ளம் வந்தால் சென்னையில் இருக்கும் உயரமான கட்டடங்கள், கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம் எல்லாமே சூழ்ந்து மூழ்கி விடும்.
உலகின் முதல் இறைத்தூதர் நூஹ் நபி (அலை) அவர்கள் மக்களிடம் ஓரிறைக் கொள்கையை ஏற்று நடக்குமாறு தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றார்கள். அவர்களது பிரச்சாரம் ஓராண்டு ஈராண்டு காலங்கள் அல்ல. ஏன்? நூறாண்டு காலங்கள் என்ற அளவிலும் அல்ல! ஒன்பது நூற்றாண்டுகளுக்கு மேல்! முடிவில் இறைவன் அவர்களை தண்டிக்கப் போவதாக அறிவித்து விடுகின்றான். அவர்களும் மக்களுக்கு அறிவித்து விட்டு கட்டாந்தரையில் ஒரு கப்பலைக் கட்ட ஆரம்பிக்கின்றார்கள். கப்பல் கட்டும் அவர்களைப் பார்த்து அவர்களது சமுதாய மக்கள் கேலியும் கிண்டலும் செய்கின்றார்கள். அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு எடுத்துச் சொல்கின்றது.
அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்தார். அவரது சமுதாயப் பிரமுகர்கள் அவரைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால், (இப்போது) நீங்கள் கேலி செய்வதைப் போன்று (விரைவில்) நாங்களும் உங்களைக் கேலி செய்வோம். இழிவுபடுத்தும் தண்டனை யாருக்கு வரும் என்பதையும், நிலையான தண்டனை யார்மீது இறங்கும் என்பதையும் அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று அவர் கூறினார்.
இறுதியில் இறைத்தூதர் எச்சரித்தது போன்று வெள்ளம் வந்து விட்டது.
முடிவில் நமது கட்டளை வந்து, நீரூற்று பொங்கியபோது, “ஒவ்வொன்றிலும் உள்ள ஆண், பெண் கொண்ட ஜோடியையும், யார்மீது வாக்கு முந்திவிட்டதோ அவர்களைத் தவிர உமது குடும்பத்தினரையும், இறைநம்பிக்கை கொண்டோரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக!” என்று கூறினோம். அவருடன் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள்) இறைநம்பிக்கை கொள்ளவில்லை.
“இதில் ஏறிக் கொள்ளுங்கள்! இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயரால்தான். எனது இறைவன் மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்” என்று அவர் கூறினார்.
அக்கப்பல் மலைகளைப் போன்ற அலைகளில் அவர்களைக் கொண்டு சென்றது. ஒதுங்கிய இடத்திலிருந்த தனது மகனை நூஹ் அழைத்து, “என் அருமை மகனே! எங்களுடன் ஏறிக்கொள்! இறைமறுப்பாளர்களுடன் நீ ஆகிவிடாதே!” என்றார்.
“இந்தத் தண்ணீரிலிருந்து என்னைக் காப்பாற்றும் ஒரு மலையில் ஒதுங்கிக் கொள்வேன்” என அவன் கூறினான். “இன்றைய தினம் அவனது கட்டளையிலிருந்து காப்பாற்றுபவர் யாருமில்லை. யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்தானோ அவரைத் தவிர!” என்று அவர் கூறினார். அவ்விருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டது. அப்போது அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகிவிட்டான்.
இது உலகில் ஏற்பட்ட முதல் வெள்ளப் பெருக்கும் பிரளயமும் ஆகும். தரையில் கப்பல் கட்டும் பணியை மேற்கொண்ட போது இறைத்தூதரைப் பார்த்து அந்தச் சமூகம் கேலி செய்து சிரித்தது. அவர்கள் குறிப்பிட்டது போன்று இப்போது அவர்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லும் மக்களைப் பார்த்து கேலியும் கிண்டலும் செய்யும் நேரம் வந்தது. ஆனால் நிலைமை சற்று வித்தியாசமாக இருந்தது.
வெள்ளம் பெருகுகின்றது. பெருகிய வெள்ளம் சென்னை பெருநகர் வெள்ளம் போன்றோ அல்லது நெல்லை மாநகர், புறநகர் வெள்ளம் போன்றோ அல்ல! மலையளவு அலை அடிக்கும் அளவிற்குரிய ஒரு மாபெரும் வெள்ளம். நூஹ் (அலை) அவர்களின் மனம் கிண்டல் அடிக்கும் நிலையில் இல்லை. மாறாக தனதுக் கொள்கையை ஏற்காமல் மறுத்த மகன் நீரில் மிதந்து செல்வதைக் கண்டு மனம் உருகுகின்றது. தன் மகனை அழைக்கின்றார்கள். அவன் ஏற மறுக்கின்றான். இறுதியில் ஓர் அலை தான். அவன் மறைந்து போய் விட்டான். இல்லை மரணித்தே விட்டான்.
வெள்ளம் பெருக்கெடுத்தால் மலையளவு அலை அடிக்கும் அளவுக்கு, மலையையே மூழ்கடிக்கும் அளவுக்கு வானளாவ உயர்ந்து விண்ணை முட்டும் என்பதை இந்த வசனங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
“பூமியே! உனது தண்ணீரை விழுங்கிக் கொள்! வானமே! நீயும் நிறுத்திக் கொள்!” என்று கூறப்பட்டது. தண்ணீர் வடிந்தது. காரியம் முடிக்கப்பட்டது. அக்கப்பல் ஜூதி மலைமீது நிலை கொண்டது. “அநியாயக்காரக் கூட்டத்தாருக்கு அழிவுதான்!” என்று கூறப்பட்டது.
வெள்ளம் வற்றியது, வடிந்தது. கப்பல் நிலை கொண்டது மலையில்தான் என்று இந்தத் திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது. நூஹ் (அலை) அவர்கள் ஓர் இறைத்தூதர் என்பதால் இறைவன் முன்னறிவிப்பு செய்து, முன்னேற்பாடுகளை செய்யச் சொல்லியிருந்தான். அதனால் மிதக்கும் கப்பலில் பிழைத்தார்கள். வெள்ளம் வற்றுகின்ற வரை வடிகின்ற வரை தாக்குப்பிடிக்க முடிந்தது.
ஆனால் இன்று இதுபோன்று வெள்ளம் ஏற்பட்டால் அறிவியல் புரட்சி மனிதன் தாக்குப் பிடிப்பானா? அதிலும் நூஹ் (அலை) அவர்களும் அவர்கள் சமுதாய மக்கள் அறுபதடி உயரம் கொண்டவர்கள். அவர்களையே மூழ்கடிக்கும் வெள்ளம் என்றால் வெள்ளத்தின் பிரம்மாண்டம் என்ன? அது ஏற்படுத்தும் பிரமிப்பு என்ன? என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
இவை உணர்த்துவது என்ன?
என்னதான் மனிதன் சந்திர மண்டலத்தில், செவ்வாய் கிரகத்தில் குடியமரப் போகும் அளவுக்குக் கனவு கண்டாலும் அதற்கான விண்கலங்களைப் படைத்து ஏவுகணைகள் மூலம் விண்ணில் ஏவினாலும் அவன் வாழும் மண்ணில் மழைக்கு முன்னால் செல்லாக்காசாக, விலை இல்லாப் பொருளாக ஆகி விடுகின்றான். இதைத் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
மனிதன் பலவீனமானவனாகப் படைக்கப் பட்டுள்ளான்.
வெள்ளப் பெருக்கை மனிதன் எதிர்கொள்ளும் போது அவன் ஏற்படுத்திய செயற்கைக் காரணங்களை அவன் சரிசெய்யலாம். நீர் நிலைப் பகுதிகளை குடியிருப்புப் பகுதிகளாக மாற்றியது, சதுப்பு நிலங்களை வணிகத்தலங்களாக மாற்றியது, நீர் நிலைப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்வது போன்றவை மனிதன் ஏற்படுத்திய செயற்கைத் தடைகளாகும். இவற்றை அவன் ஒரு பேச்சுக்குச் சரி செய்து விடலாம். ஆனால் இயற்கைத் தடைகளை அவன் எப்படிச் சரி செய்யமுடியும். மழைப் பெருக்கெடுத்து ஓடும் போது ஆற்றில் கலக்கும். வெள்ள நீரைச் சுமந்து வரும் கொள்ளை நீரை தாராளமான உள்ளத்தோடு முகத்துவாரத்தில் கடல் உள்வாங்க வேண்டும். ஆனால் சென்னை வெள்ளத்தின் போது கடல் உள்வாங்கவில்லை.
இதற்குக் காரணம் என்ன? காற்றழுத்தத் தாழ்வுநிலைக் காலங்களில், கடலில் அலைகள் உயரும். அப்போது ஆறு கொண்டு வரும் மழைநீரைக் கடல் உள்வாங்காது. அது போன்று பவுர்ணமி இரவின் போதும் அலைகள் உயரும். அப்போது மழை நீரைச் சுமந்து வரும் ஆற்று நீரைக் கடல் நீர் உள்வாங்காது. இதை எதிர்த்து மனிதன் என்ன முடியும்?
இதற்கு ஒரே ஒரு பதில், “மனிதன் பலவீனமானவனாகப் படைக்கப்பட்டுள்ளான்” என்ற (அல்குர்ஆன்: 4:28) ➚ வசனம்தான்.
மனிதன் இயற்கையை எதிர்த்து ஒருபோதும் எதிர் நீச்சல் போடமுடியாது என்பதையே இது தெரிவிக்கின்றது. இதுதான் இந்த வெள்ளம் படித்துத் தரும் பாடமாகும்.
அத்துடன் இந்த வெள்ளம் படித்துத் தருகின்ற மற்றொரு முக்கியமான பாடம், இந்த உலகம் நிரந்தரமானதோ, நித்தியமானதோ அல்ல என்ற பாடமாகும். பெருகும் வெள்ளத்தில் அவன் கட்டிய காங்கிரீட் கட்டடம் சரிந்து விழுகின்றது. கடன் அட்டை, தவணை மூலமாகச் சேர்த்து வைத்து வாங்கிய ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், தொலைக்காட்சிப் பெட்டிகள் எல்லாவற்றையும் வெள்ளம் விழுங்கி விட்டுச் செல்கின்றது. இத்தனையும் அவன் கண்ணெதிரே நடக்கின்றது.
இது தெரிவிக்கும் செய்தி இதுதான்:
இதோ குர்ஆன் கூறுகின்றது..
இவ்வுலக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு, வானிலிருந்து நாம் இறக்கி வைக்கும் தண்ணீரைப் போன்றது. அதனுடன் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் உண்ணுகின்ற பூமியின் தாவரங்கள் கலக்கின்றன. இறுதியில் தன் அலங்காரத்தைப் பெற்று பூமி செழிப்பானதும், தாம் அதன்மீது (அறுவடை செய்ய) சக்தி பெற்றவர்கள் என அதன் உரிமையாளர்கள் எண்ணியபோது, இரவிலோ பகலிலோ நமது கட்டளை அதை வந்தடைந்தது. எனவே, நேற்றைய தினம் இல்லாததைப் போன்று அறுவடை செய்யப்பட்டதாக அதை ஆக்கி விட்டோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு நமது சான்றுகளை இவ்வாறே விவரிக்கிறோம்.
இந்த உலகம் ஒரு கானல் நீர். அது நிலைக்காமல் நீடிக்காமல் மறைந்து மாயமாகி விடும். இந்த உலகம் ஓர் நீர்க்குமிழ். அது சிறிது நேரத்தில் வெடித்துத் தடம் தெரியாமல் ஆகி விடும். அதனால் இந்த உலகத்தில் அமைதி என்பது நிரந்தரம் கிடையாது. நாம் வாழ்கின்ற வீடு அமைதி வீடு கிடையாது. ஆபத்து நிறைந்த அமர்க்களமான வீடு, அபாயமிக்க வீடு என்பதை நமக்கு உணர்த்தி விட்டு, எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அடுத்த வசனத்தில் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
அமைதி இல்லத்தை நோக்கி அல்லாஹ் அழைக்கிறான். தான் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்.
இவ்வுலக வாழ்வுக்கான உதாரணத்தை அவர்களிடம் கூறுவீராக! (அது) வானிலிருந்து நாம் இறக்கிய மழையைப் போன்றது. அதனுடன் பூமியின் தாவரங்கள் கலந்தன. பின்னர் அவை (காய்ந்து) சருகுகளாக ஆயின. அவற்றைக் காற்று அடித்துச் செல்கிறது. ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
இவ்வசனத்திலும் இவ்வுலக வாழ்க்கை அற்ப ஆயுள் கொண்டது என்று கூறிவிட்டு, இதை அடுத்து வரும் வசனத்தில் ‘நற்செயல்களே அழியாத அமல்கள்; பலன்கள்; பாக்கியங்கள்’ என்று கூறுகின்றான்.
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் அலங்காரமே! நிலைத்து நிற்கும் நற்செயல்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், ஆதரவு வைப்பதில் சிறந்ததுமாகும்.
எனவே, மனிதன் மறு உலக வாழ்வில் நம்பிக்கை கொண்டு நல்லமல்கள் செய்தால் அதுவே ஓர் அழியாத, நிரந்தரமான வாழ்க்கையாகும். மனிதன் இந்த வெள்ளத்தின் மூலம் உள்ளம் திறக்கப்பட்டு, மறுமை வாழ்க்கையை நோக்கித் தனது பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அமைத்துக் கொண்டால் இழப்பு இந்த உலகத்துடன் முடிந்து போய் விடும். இல்லையென்றால் இரு உலக வாழ்க்கையும் இழப்பாகி விடும். மாபெரும் மழை வெள்ளத்தில் மனித சமுதாயம் இதை உணர்ந்து படிப்பினையும் பாடமும் பெறுமா? அந்தக் காலம் கனியுமா? காத்திருப்போம்.