நோன்பின் சட்டங்கள்
நோன்பின் சட்டங்கள் மற்றும் நோன்பினால் ஏற்படும் நன்மைகள் என்ன என அணைத்து செய்திகளையும் இங்கு தொகுத்து கூறப்பட்டுள்ளது.
நிய்யத் என்பதன் பொருள் மனதால் நினைப்பதாகும்.
எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி),(புகாரி: 1) ➚
பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1903) ➚
நோன்பு நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால், அறியாமையாக நடந்து கொண்டால், ஏசினால், நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1894) ➚
”ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாகச் சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1933) ➚,(முஸ்லிம்: 2126) ➚,(அஹ்மத்: 8773) ➚,(திர்மிதீ: 654) ➚,(இப்னு மாஜா: 1664) ➚
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டு குளிக்காமல் நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காகக் குளிப்பார்கள் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன.
ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில் ) நோன்பும் நோற்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி),(புகாரி: 1926) ➚,(முஸ்லிம்: 2030) ➚,(அஹ்மத்: 24627) ➚
தொழுகையை நிறைவேற்றத் தான் குளிப்பது அவசியமே தவிர நோன்புக்காக குளிக்க வேண்டியதில்லை. நோன்பு நோற்றவர் நோன்பு துறக்கும் முன் குளிக்கக் கூடாது என்று சிலர் எண்ணுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன்” என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.
நூல்: அஹ்மத், அபூதாவூத், நஸாயீ
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் நறுமணம் பூசுவதைத் தடை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பாளிக்கு இத்தகைய தடை எதனையும் பிறப்பிக்கவில்லை.
ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். அப்போது இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர் என்று கூறினார்கள். இதன் பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: தாரகுத்னீ (பாகம்: 2, பக்கம்: 182)
”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்றவர் இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுத்தது உண்டா?” என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ”(இதனால்) பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதை நாங்கள் வெறுத்தோம்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ,(புகாரி: 1940) ➚
நோன்பு நோற்றவர் உடலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதை ஆதாரமாகக் கொண்டு உயிர் காக்கும் அவசியத்தை முன்னிட்டு இரத்த தானம் செய்வதால் நோன்பு முறியாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில் கிடைக்கின்ற பாக்கியம் அந்த ஒரு நாளில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன்: 97:15)➚
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 35) ➚
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான்.
நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். ”லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),(புகாரி: 49) ➚, முஅத்தா மாலிக்-615
லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன. ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 2017) ➚,(முஸ்லிம்: 1997) ➚
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, ”அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல் விட்டு, ”யார் அதில் ஈமானோடும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின்ஸாமித் (ரலி),(அஹ்மத்: 20700) ➚
இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள்.
(முஸ்லிம்: 2007) ➚
இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம். ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுகைக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம். அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி),(புகாரி: 2018) ➚
ஆயிஷா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன். (சுருக்கம்)
(புகாரி: 2033) ➚
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி) வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். ”இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?” என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 2034) ➚
பள்ளிவாசல் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது
பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
(அல்குர்ஆன்: 2:187)➚
தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது
ஆயிஷா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது தமது தலையை வீட்டிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள்.
(புகாரி: 2029) ➚