நைட் ஷிஃப்டில் வேலை செய்யலாமா?
நைட் ஷிஃப்டில் வேலை செய்யலாமா?
கேள்வி:
இரவு நேரங்களில் மூன்று காரணங்களுக்காகவே தவிர விழித்திருக்கக் கூடாது என்று ஹதீஸ்களில் உள்ளதே? ஆனால் சில கம்பெனிகளில் இருபத்தி நான்கு மணிநேரமும் வேலை நடக்கிறதே? விளக்கம தரவும்.
பதில்:
மூன்று காரணங்களுக்காக தவிர அல்லது இரண்டு காரணங்களுக்காக தவிர இரவில் விழித்திருக்கக் கூடாது என்ற கருத்தில் வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன.
இது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் (அஹ்மத்: 3421, 3722, 4023, 4187) (திர்மிதீ: 2654) மேலும் இன்னும் பல நூற்களில் இடம் பெற்றுள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இரவில் நின்று) தொழுபவர், பயணி ஆகிய இருவரைத் தவிர (வேறு யாருக்கும்) இரவு நேரப் பேச்சு என்பது கூடாது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்: அஹ்மத்
இதை அப்துல்லாஹ்பின் மஸ்வூத் வழியாக அறிவிப்பவர் ஒரு மனிதர் என்று சொல்லப்பட்டுள்ளது. அவரது பெயரோ, விபரமோ கூறப்படவில்லை. எனவே இது ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல.
மேற்கண்ட(அஹ்மத்: 3722, 4187)ஆகிய ஹதீஸ்களில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் வழியாக கைஸமா அறிவிப்பதாக உள்ளது. கைஸமா என்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் காலத்தவர் அல்ல.
இவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூதிடம் எதையும் செவியுறவில்லை என்று அஹ்மத் பின் ஹம்பல் மற்றும் அபூஹாத்தம் ஆகியோர் கூறுகின்றனர்
எனவே இது ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத பலவீனமான செய்தியாகும்.
இதே செய்தி வேறோரு அறிவிப்பாளர் வரிசையில் தப்ரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
المعجم الأوسط –
மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஹபீப் பின் அபீ ஸாபித் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.
இவர் முதல்லிஸ் ஆவார். அதாவது தன்னுடைய ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்திகளைக் கேட்டதைப் போன்று அறிவிப்பார்.
இப்னு ஹஜர் அவர்கள் இவர் முதல்லிஸ் என்பதைத் தம்முடைய தக்ரீபுத் தஹ்தீப் நூலில் (பாகம் 1 பக்கம் 150) தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
எனவே மேற்கண்ட செய்தியும் பலவீனமானதாகும்.
மேலும் இதே செய்தி ஆயிஷா (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக முஸ்னத் அபீயஃலா நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இரவு நேரப் பேச்சு மூன்று வகையினருக்குரியதாகும். 1. புது மாப்பிள்ளை 2. பயணி 3. இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்
நூல்: முஸ்னத் அபீ யஃலா பாகம்
இந்தச் செய்தி நபியவர்கள் கூறியது கிடையாது. இது ஆயிஷா (ரலி) அவர்களின் சொந்தக் கரு்த்தாகும்.
மேற்கண்ட செய்திகள் பலவீனமாக இருந்தாலும் பொதுவாக இஷாத் தொழுகைக்குப் பிறகு பேசிக் கொண்டிருப்பதை நபியவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.
இஷாத் தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை பிற்படுத்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; (அதை விரும்புவார்கள்.) இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும், இஷாத் தொழுகைக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாவிற்கு முன்னால் தூங்கியதும் இல்லை. இஷாவிற்குப் பிறகு இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபட்டதும் இல்லை.
நூல் : இப்னு மாஜா
மேற்கண்ட ஹதீஸ்களில் பொதுவாக இஷாவிற்குப் பிறகு இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபடுவதை நபியவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று வந்திருந்தாலும் இது வீணாகப் பேசிக் கொண்டிருப்பதைத்தான் குறிக்கும்.
ஏனென்றால் நபியவர்கள் சில முக்கிய விசயங்களுக்காக ஸஹாபாக்களுடன் இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
முஸ்லிம்களுடைய விசயம் தொடர்பாக நபியவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். நானும் அவ்விருவருடன் இருந்தேன்.
அறிவிப்பவர் : உமர் (ரலி)
நூல் : திர்மிதி
நபியவர்கள் ஆட்சித் தலைவராக இருந்த காரணத்தினால் மக்களுடைய நிலை தொடர்பாகவும், போர்கள் தொடர்பாகவும், தேவையான பல விசயங்கள் தொடர்பாகவும் முக்கியமான ஸஹாபாக்களுடன் இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை நாம் மேற்கண்ட செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.
இதிலிருந்து இஷாத் தொழுகைக்குப் பிறகு வீணான பேச்சுகளில் ஈடுபட்டிருப்பதுதான் நபிகள் நாயகம் வெறுத்த விசயமே தவிர அவசியமான காரியங்களுக்காக விழித்திருப்பதில் தவறில்லை என்பதை அ\ரியலாம்.
இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தினர் இரவின் பெரும் பகுதியினை வீணான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், கேளிக்கைகளிலும், வீணான காரியங்களிலும் கழிப்பது மார்க்கத்திற்கு எதிரானது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. நபியவர்கள் விரும்பாத இத்தகைய செயல்களைக் கைவிடுவதே நாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் என்பதற்கு அடையாளமாகும்.
அது போன்று இரவு நேரங்களில் நாம் நமக்காகச் சம்பாதிப்பதும், உழைப்பில் ஈடுபடுவதும் இறைவன் அனுமதித்ததே. பின்வரும் இறைவசனங்கள் அதற்குச் சான்றாகும்.
நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது.
இரவிலும், பகலிலும் நீங்கள் உறங்குவதும், அவனது அருளைத் தேடுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. செவியுறும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
மேற்கண்ட வசனத்தில் இரவிலும், பகலிலும் இறைவனுடைய அருளைத் தேடுவது இறைவனுடைய அத்தாட்சிகளில் உள்ளது என்றும், இறைவனுடைய அருள் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
இறைவனுடைய அருளைத் தேடுவதில் நாம் நம்முடைய வாழ்க்கைக்காகச் சம்பாதிப்பதும் உள்ளடங்கும்.
எனவே இரவு நேரங்களில் வியாபாரம் மற்றும் தொழிற் துறைகளில் ஈடுபடுவது மார்க்கத்திற்கு எதிரானது அல்ல. அதே நேரத்தில் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் பாதிப்பு ஏற்படாதவாறு நம்முடைய காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.