நேர்வழியின் மகிமை
மனித குலத்திற்கு இறைவன் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருக்கிறான். அவைகளில் பலவற்றை நாம் கண்கூடாகப் பார்த்தும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தும் வருகிறோம்.
ஆனாலும் இறைவன் கொடுத்த அருட்கொடைகளில் பல முஸ்லிம்கள் உணராமல் இருக்கும் மாபெரும்
இன்றைய சூழலில் ஏராளமான மதங்களும் கோட்பாடுகளும் இவ்வுலகில் நிரம்பி இருக்கின்றன.
அவைகளில், இஸ்லாம் என்ற நேர்வழிக்கு நம்மை இறைவன் தேர்வு செய்திருக்கிறான்.
கேள்விகளைக் கேட்க ஊக்கப்படுத்தி சிந்தனையைத் தூண்டக்கூடிய, உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் துல்லியமாகத் தீர்வு கூறக்கூடிய, மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து நெறிமுறைகளையும் வழிகாட்டும் மாபெரும் மார்க்கம் இஸ்லாம்.
இவ்வளவு சிறப்புகளையும் மகிமைகளையும் பெற்றிருக்கும் இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிமாக நாம் இருப்பதே, மகத்தான இறையருள் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் அவனை மட்டும் வணங்கி, அவன் மனித குலத்திற்குக் கூறிய வஹி செய்தியை மட்டும் பின்பற்றும் இந்தச் சத்தியம் எத்தகையது என்பதை அல்லாஹ் சில உதாரணங்கள் மூலமாகத் தன் திருமறையில் விளக்குகிறான்
தூய (ஏகத்துவக்) கொள்கைக்கு அல்லாஹ் எவ்வாறு எடுத்துக்காட்டு கூறுகிறான் என்பதை நீர் சிந்திக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றது. அதன் வேர் உறுதியானது; அதன் கிளையோ வானளவில் உள்ளது. அது, தன் இறைவனின் நாட்டப்படி ஒவ்வொரு காலத்திலும் தனது கனியைத் தருகிறது. மனிதர்கள் சிந்திப்பதற்காக அவர்களுக்கு அல்லாஹ் எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறான்.
(அல்குர்ஆன்: 14:24-25)➚
இஸ்லாம் என்ற இறைக் கொள்கை, மக்களுக்கு அறிவுரீதியாகவும், சமூக நலனை வலியுறுத்தும் நெறிமுறைகள் மூலமும் ஏராளமான பலன்களைத் தருகிறது. எவ்வளவு எதிர்ப்புகள், அவதூறுகள் வந்தாலும் எதற்கும் அசையாமல் மென்மேலும் தலை தூக்கிக் கொண்டு இருக்கிறது.
அதனால் தான் அக்கொள்கையைப் பல பயன்களைத் தரும், வேர்ப் பகுதி ஆழமான பலம் வாய்ந்த மரத்திற்கு ஒப்பாக அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் இந்தத் தூய கொள்கையை ஏற்றவர்களுக்கும் அத்தகைய மரத்தையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உவமையாகக் கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
‘இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்றதாகும். அதன் இலை உதிர்வதில்லை; (அதன் இலைகள்) ஒன்றோடொன்று உராய்வதில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
நூல்: ஸஹீஹ்(புகாரி: 6122) ➚
எவ்வளவு பெரிய புயல் அடித்தாலும் சூறாவளி சுழற்றினாலும் அசையாமல் ஒரு மரம் நிற்கும். எவ்வளவு சோதனைகள் அந்த மரத்திற்கு வந்தாலும் அந்த மரத்திலிருந்து ஒரு இலை கூட கீழே விழாது.
அதே போல இந்தக் கொள்கையை முறையாகப் புரிந்து ஏற்று கடைப்பிடிக்கக்கூடிய ஏகத்துவவாதியும் எத்தகைய எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து நிற்கும் மிக வலிமை படைத்தவராக இருப்பார்.
ஒரு துளி கூட எதற்காகவும் தனது கொள்கையில் இருந்து பின்வாங்கி விட மாட்டார்.
இன்னும் இந்த ஏகத்துவக் கொள்கை ஒருபோதும் அழியாத சக்தி என்பதால், அணையாத ஒளியையும் இறைவன் இதற்கு உதாரணம் கூறுகிறான்.
அவர்கள் தமது வாய்களால் அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட விரும்புகின்றனர். இறைமறுப்பாளர்கள் வெறுத்தபோதும், அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் இருக்கப் போவதில்லை.(அல்குர்ஆன்: 9:32)➚
இந்த சத்தியக் கொள்கை அணையாத விளக்கு என்பதை இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் இறைவன் வேறு ஒரு இடத்திலும் சொல்லிக் காட்டுகிறான்.
அல்லாஹ் வானங்களுக்கும் பூமிக்கும் ஒளியாக இருக்கிறான். அவனது ஒளிக்கு எடுத்துக்காட்டு, ஒரு மாடத்தைப் போன்றதாகும். அதில் ஒரு ஒளிவிளக்கு இருக்கிறது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் இருக்கிறது. அக்குடுவை, மின்னும் நட்சத்திரத்தைப் போன்றது. அது கிழக்கையோ மேற்கையோ சாராத, பாக்கியமிக்க ஸைத்தூன் மரத்திலிருந்து எரிக்கப்படுகிறது. அதில் நெருப்பு தீண்டாவிட்டாலும் அதன் எண்ணெயே ஒளி வீச முற்படும். (இவ்வாறு) ஒளிக்கு மேல் பேரொளியாக இருக்கிறது.
(அல்குர்ஆன்: 24:35)➚
இந்த வசனத்தை நன்கு கவனத்துடன் சிந்தித்துப் பாருங்கள்.
எந்த நிலை வந்தாலும் இறைவனின் கொள்கை மேலோங்கவே செய்யும் என்பதை அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான்.
இத்தகைய சக்திவாய்ந்த கொள்கையில் இறைவன் நம்மை சங்கமிக்கச் செய்திருப்பது எத்தகைய பேரருட்கொடை!!!
நேர்வழிக்கு ஒளியை இறைவன் உதாரணமாகக் கூறுவதோடு வழிகேடுகளுக்கு இருள்களையும் உதாரணமாகக் கூறுகிறான்.
இறைநம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் பாதுகாவலன். அவர்களை இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் அவன் கொண்டு செல்கின்றான். ஆனால் இறைமறுப்பாளர்களுக்கோ ஷைத்தான்களே பாதுகாவலர்கள். அவர்கள், அந்த இறைமறுப்பாளர்களை ஒளியிலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு செல்கின்றனர். அவர்களே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(அல்குர்ஆன்: 2:257)➚
பலவிதமான மூடநம்பிக்கைகளிலும், தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளும் மடமை செயல்பாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டு, கல், மண், மரம், செடி, கொடி தாயத்து, தட்டு, தகடு, தர்கா போன்ற அற்பமானவைகளையெல்லாம் இறைவனுக்கு இணையாகக் கருதி இறைவன் வழிகாட்டிய மார்க்க நெறிக்கு அப்பாற்பட்டு ஏராளமான அனாச்சாரங்களைச் செய்து வரும் மக்கள் இருக்கிறார்கள். இதுபோன்று குர்ஆனையும் ஹதீஸையும் சிந்திக்காமல் இறைச் செய்தியிலிருந்து விலகி பலதரப்பட்ட வழிகேடுகளில் சிக்கித் தவிக்கும் நிலை இருள்களுக்கு ஒப்பானது.
வழி அறிய முடியாமல் தட்டுத்தடுமாறி, அறியாமையில் தவழும் நிலை இருள்களில் ஏற்படும்.
அப்படிப்பட்ட ஆபத்தான இழி நிலையில் இருந்து இறை நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் காப்பாற்றி தெளிவான ஒளி வீசும் வழியிலே பயணிக்கச் செய்தது மிகப்பெரும் பேரருள் தான்!!!!
பல தனித்துவங்கள் கொண்ட இத்தகைய ஒளிமயமான கொள்கையை ஏற்பவர்கள் யார் என்பது மனிதர்களால் முடிவு செய்யப்படுவதில்லை.
படைப்பாளன் அல்லாஹ் தான் அவர்களைத் தேர்வு செய்கிறான்.
அல்லாஹ், தான் நாடியோருக்குத் தனது ஒளியின் பக்கம் வழிகாட்டுகிறான்.(அல்குர்ஆன்: 24:35)➚
இறைச் செய்தியை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற இந்த சத்தியக் கொள்கையை அறிவதற்கு யாருடைய உள்ளத்தை அல்லாஹ் விரிவுபடுத்துகிறானோ, அவர்தான் அந்த வெளிச்சமான நேர்வழியில் இருப்பவர்.
எவர்களுடைய உள்ளங்கள் அந்த இறைமார்க்கத்தை அறிவதற்கும் அதை நியாயமான முறையில் சிந்திப்பதற்கும் முன்வராமல் இறுகிப் போய்விட்டதோ அவர்கள் வழிகேட்டிலேயே இருப்பார்கள்.
இஸ்லாத்திற்காக எவரது உள்ளத்தை அல்லாஹ் விரிவுபடுத்தி விட்டானோ அவரா (வழிகேட்டில் இருப்பவர்)? அவர் தமது இறைவனுடைய ஒளியின் மீதிருக்கிறார். யாருடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் இறுகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். அவர்களே பகிரங்கமாக வழிகேட்டில் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன்: 39:22)➚
அல்லாஹ் யாரைத் தேர்வு செய்கிறானோ அவரை மட்டுமே இந்த நேர்வழியில் செலுத்துவான்.
அல்லாஹ், தான் நாடியோரை வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.
(அல்குர்ஆன்: 35:8)➚
இறைவனுக்கு இணை கற்பிக்காமல் அவனது இறைச் செய்தியை மட்டும் பின்பற்றுபவர், அந்த பாக்கியத்திற்கு இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.
ஒருவர் நேர்வழியைப் பெறுவதும் பெறாமல் இருப்பதும் இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.
யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாருமில்லை.
யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவரை வழிகெடுப்பவர் யாருமில்லை.
(அல்குர்ஆன்: 39:36-37)➚
நேர்வழியை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களாக இருந்தாலும் அவர்களும் தாங்கள் விரும்பக்கூடிய நபர்களுக்கு நேர்வழியை கொடுக்க முடியாது.
(நபியே!) அவர்களை நேர்வழியில் செலுத்தும் பொறுப்பு உம்மீது இல்லை. மாறாக, அல்லாஹ்வே தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.(அல்குர்ஆன்: 2:272)➚
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தனது பெரிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு இந்த நேர்வழி கிடைக்க வேண்டும் எனும் ஆசையில் ஏராளமான முயற்சிகள் செய்தும் அவைகள் நிறைவேறவில்லை.
முஸய்யப் இப்னு ஹஸ்ன் இப்னி அபீ வஹ்ப்(ரலி) அறிவித்தார்.
அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்துவிட்டபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி(ஸல்) அவர்கள், ‘என் பெரிய தந்தையே! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று சொல்லுங்கள். இச்சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்’ என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், ‘அபூ தாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், ‘(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)’ என்று அவர்களிடம் கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று) எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை’ என்று கூறினார்கள். அப்போதுதான், இணைவைப்போர் நெருங்கிய உறவினராக இருந்தாலும், அவர்கள் நரகவாசிகள் என்பது தமக்குத் தெளிவான பிறகு, அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவது நபிக்கும், இறைநம்பிக்கை கொண்டோருக்கும் தகுதியானதல்ல! என்னும் (அல்குர்ஆன்:)➚ திருக்குர்ஆன் வசனமும, ‘(நபியே!) நீர் விரும்பியவர்களை நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது. மாறாக, அல்லாஹ்வே தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். அவனே நேர்வழி பெற்றவர்களை மிக அறிந்தவன் என்னும் (அல்குர்ஆன்: 28:56)➚ திருக்குர்ஆன் வசனமும அருளப்பட்டன.
நூல்: ஸஹீஹ்(புகாரி: 3884) ➚
நபிகளாரின் தாய்க்கும் இந்த நேர்வழி கிடைக்காததால், அவர்கள் தன் தாய்க்குப் பாவமன்னிப்புத் தேடுவதையும் இறைவன் அனுமதிக்கவில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
நூல்: ஸஹீஹ்(முஸ்லிம்: 1777) ➚
நூஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தவர்களில் சத்தியத்தை ஏற்க மறுத்தவர்களை வெள்ளத்தில் அல்லாஹ் மூழ்கடித்தான். மூழ்கடிக்கப்படும் கூட்டத்தில் தன் மகன் இருப்பதை மனம் ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்தக் கடைசி தருணத்திலும் நூஹ் நபி தனது புதல்வனை நேர்வழிக்கு அழைத்தார்கள். இருந்தும் அவன் அதை ஏற்கவில்லை ஒதுங்கிய இடத்திலிருந்த தனது மகனை நூஹ் நபி அழைத்து, “என் அருமை மகனே! எங்களுடன் ஏறிக்கொள்! இறைமறுப்பாளர்களுடன் நீ ஆகிவிடாதே!” என்றார்.
“இந்தத் தண்ணீரிலிருந்து என்னைக் காப்பாற்றும் ஒரு மலையில் ஒதுங்கிக் கொள்வேன்” என அவன் கூறினான். “இன்றைய தினம் அவனது கட்டளையிலிருந்து காப்பாற்றுபவர் யாருமில்லை. யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்தானோ அவரைத் தவிர!” என்று அவர் கூறினார். அவ்விருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டது. அப்போது அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகிவிட்டான்.
(அல்குர்ஆன்: 11:42-43)➚
இறைவனின் உற்றத் தோழர் எனும் புகழாரம் சூட்டப்பட்ட நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தந்தைக்கும் இந்த நேர்வழி கிடைக்கவில்லை. மாறாக இந்த இறை மார்க்கத்தை எதிர்ப்பவராகவே இப்ராஹீம் நபியின் தந்தை இருந்தார்.
“என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்குத் தண்டனை ஏற்படுவதையும், நீர் ஷைத்தானின் கூட்டாளியாக ஆவதையும் நான் அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்.)
“இப்ராஹீமே! என்னுடைய கடவுள்களைப் புறக்கணிக்கிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் அடித்துக் கொல்வேன். காலமெல்லாம் என்னை விட்டுப் பிரிந்து விடு!” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன்: 19:45-46)➚
இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது தந்தை மரணித்த பிறகு அவருக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்க முற்பட்டார்கள். ஆனால் இறைவன் அதற்கு அனுமதியளிக்கவில்லை.
இப்ராஹீம் தமது தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியது, அவருக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியின் காரணமாகவே தவிர வேறில்லை. அவர் அல்லாஹ்வின் எதிரி என்று தமக்குத் தெளிவான பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் இரக்கமுடையவர்; சகிப்புத் தன்மை மிக்கவர்.
(அல்குர்ஆன்: 9:114)➚
நபிமார்களாக இருப்பினும் அவர்களது உறவினர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் மரணித்த காரணத்தினால் அவர்களுக்காகப் பாவமன்னிப்பு தேடுவது அனுமதிக்கப்படவில்லை.
நபிமார்களின் உறவினர்கள் சத்தியத்தை ஏற்க மறுத்தவர்களாக இருந்ததைப் போல, இறை மறுப்பாளர்களுக்கு முன்மாதிரி என்னும் மிக மோசமான நிலையிலும் இருந்திருக்கின்றனர்.
இறைமறுப்பாளர்களுக்கு எடுத்துக்காட்டாக நூஹின் மனைவியையும், லூத்தின் மனைவியையும் அல்லாஹ் எடுத்துரைக்கிறான். அவ்விரு பெண்களும் நமது நல்லடியார்களான இரு அடியார்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். அப்பெண்களோ அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவர்களால் அல்லாஹ்விடமிருந்து அப்பெண்களைச் சிறிதும் காப்பாற்ற இயலவில்லை. “நரகத்தில் நுழைவோருடன் நீங்களிருவரும் நுழையுங்கள்” என்று (அப்பெண்களிடம்) கூறப்பட்டது.(அல்குர்ஆன்: 66:10)➚
இறைச் செய்தியோடு தொடர்பில் இருந்த நபிமார்களின் குடும்பத்தவர்களுக்குக் கிடைக்காத நேர்வழி, நமக்கு கிடைக்குமாறு, நம்மை அல்லாஹ் தேர்வு செய்திருப்பது இறைவன் நமக்கு செய்த மிகப்பெரிய அருட்கொடை!!
மரணத்திற்குப் பிறகும் சத்தியவாதிகளின் பாவமன்னிப்பு பிரார்த்தனையை பெற முடியாத அவல நிலையிலிருந்து இந்த நேர்வழி தான் நம்மை பாதுகாத்திருக்கிறது.
நேர்வழிக் கொள்கையின் மூலம் பல கொள்கை உறவுகளை இறைவன் நமக்கு ஏற்படுத்துகிறான். இரத்த பந்த சொந்தம் இல்லாத, வியாபார ஒப்பந்ததாரியாக இல்லாத, முன்பின் பழக்கம் இல்லாத நபர்கள் கூட நம்மோடு ஒன்றிணைந்து, நெருங்கிய உறவினரைப் போல் பழகுவதும், நமது இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதும் இறைவன் தந்த மிக பெரும் அருள்.
அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) பகைவர்களாக இருந்தீர்கள். அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையில் இணைப்பை உண்டாக்கினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். நீங்கள் நரகப் படுகுழியின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான். இவ்வாறே நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தனது சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.(அல்குர்ஆன்: 3:103)➚
பகைவர்களாக இருப்பவர்களைக் கூட இந்தச் சத்தியத்தின் மூலம் இறைவன் நெருங்கிய கொள்கைக் சகோதரர்களாக மாற்றி விடுகிறான்.
நன்மையும், தீமையும் சமமாகாது. மிக அழகானதைக் கொண்டு (தீமையைத்) தடுப்பீராக! அவ்வாறு செய்தால் உமக்கும், எவருக்குமிடையே பகைமை இருக்கிறதோ அவர் நெருங்கிய நண்பரைப் போல் ஆகிவிடுவார்.
(அல்குர்ஆன்: 41:34)➚
இறைவன் மனித குலத்திற்குக் கொடுத்திருக்கும் அனைத்து அருட்கொடைகளுக்காகவும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதைப் போல, ஹிதாயத் – நேர்வழி என்னும் அருட்கொடைக்காகவும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்த வேண்டும்.
உங்களுக்கு அல்லாஹ் எளிதையே நாடுகிறான். உங்களுக்கு அவன் சிரமத்தை நாடவில்லை. நீங்கள் எண்ணிக்கையை முழுமைப்படுத்துவதற்கும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி, நன்றி செலுத்துவதற்காகவும் (இச்சலுகையை வழங்கினான்.)
(அல்குர்ஆன்: 2:185)➚
இவ்வசனத்தில் ரமலான் நோன்பின் சட்டங்கள் குறித்துப் பேசும் போது, அவன் நமக்கு நேர்வழி காட்டியதற்கு அவனைப் பெருமைப்படுத்துவதையும் வலியுறுத்துகிறான். நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனை நினைவு கூருங்கள்.
(அல்குர்ஆன்: 2:198)➚
முந்தைய அறியாமை நிலையை நம்மை விட்டும் நீக்கி தெளிவை ஏற்படுத்திய இறைவனை துதித்து, புகழ்வோம்! போற்றுவோம்!