02) இஸ்லாமிய நிர்வாகம்
கைஸான் எனும் ஜப்பானிய நிர்வாகவியல் தான் உலகில் முறைப்படுத்தப்பட்ட கல்வியாக முதன்முதலில் வரையறுக்கப்பட்டது என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இஸ்லாம், நிர்வாகவியலை தனித் துறையாக, கல்வி முறையாக அதை முறைப்படுத்தி உலகிற்குத் தரவில்லை என்றாலும் 1450 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்கள் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிய நிர்வாக அமைப்புகள் இன்று வரை உலகில் நடைமுறையில் இருப்பதைக் காண முடிகின்றது.
ஒரு நாட்டை நிர்வாகம் செய்வதற்கென கிராம நிர்வாகம், நகர நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் (தாலுகா), மாவட்ட நிர்வாகம் (ஜில்லா), மாநில நிர்வாகம், மத்திய அரசு, நீதிமன்ற முறைகள், நீதித் துறையை ஒரு நாட்டின் தனித் துறையாக்கியது என உலகின் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் இந்த நிர்வாக அமைப்பு, முஸ்லிம்கள் தங்களது நடைமுறையில் தோற்றுவித்ததாகும். இவை அனைத்தும் இஸ்லாம் இந்த உலகிற்கு வழங்கிய அருட்கொடைகள்.
ஒரு குடும்பத்திற்கு யார் தலைவன்? எதனால் அவன் தலைவன்? குடும்ப நிர்வாகம் செவ்வனே நடக்க அந்தக் குடும்பத் தலைவன் என்ன செய்ய வேண்டும்? என இஸ்லாம் வழங்கும் நிர்வாகவியல் கல்வி, மார்க்கக் கடமையாக இன்றும் நடைமுறையில் இருக்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற வாழ்க்கையின் அத்துணை துறைகளுக்குமான முன்மாதிரிகளில் நிர்வாகவியல் முன்மாதிரியும் பரந்து விரிந்து கிடக்கின்றது. அதில் மிகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில்,
எந்த நிலையிலும் கொள்கை, குறிக்கோளிலிருந்து ஒரு இம்மியளவும் இறங்காமை; அந்தக் குறிக்கோளை அடைவதற்காக அவர்கள் எதைப் பிரச்சாரம் செய்தார்களோ அதன்படி முதலில் நடந்து காட்டியது ஆகியவை நபியவர்களின் முன்மாதிரியிலிருந்து நாம் சுருக்கமாகப் புரிய வேண்டிய அடிப்படை அம்சம்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
ஒரு தலைவர், நிர்வாகி எப்படி இருக்க வேண்டும்? மொழியைக் கையாள்வதில் வல்லவராக, கலை அறிவியல் பொறியியல் அறிவுள்ளவராக, சுருங்கச் சொன்னால் எதைக் கேட்டாலும் தெரியாது என்று கூறாதவராக இருக்க வேண்டும் என்பது ஒரு தலைவனைப் பற்றிய பொதுக் கருத்து.
ஆனால் ஒரு தலைவன் பல நிபுணர்களை வழி நடத்தும் திறமை, ஆற்றல் கொண்டவனாக இருக்க வேண்டும். அவருக்கு கட்டுப்பட்ட மருத்துவர், மொழி அறிஞர், ஆய்வாளர், பொறியாளர் போன்ற துறை சார்ந்த நிபுணர்களை எப்போது எப்படிப் பயன்படுத்த வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையையும் பாராட்டுக்களையும் முறையாக செலுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
அதுபோல் ஒரு நிபுணன் தலைமைத்துவ தகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமுமில்லை. ஆனால் அதற்குத் தடையுமில்லை. உதாரணமாக, ஒரு மருத்துவர் அல்லது பொறியாளர் திறமை வாய்ந்த தலைவராகத் திகழ முடியும். ஆனால் மருத்துவர்கள், பொறியாளர்கள் எல்லாம் அனைத்து தலைமைத்துவ தகுதிகளோடும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நபி (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் திருக்குர்ஆனை எழுதவும், பிற நாட்டு ஆட்சியாளர்களைத் தொடர்பு கொள்ளவும், கடிதங்களை எழுதவும் தமது தோழர்களைப் பயன்படுத்திய விதத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு மனிதனை மற்றவர்களிலிருந்து பிரித்துக் காட்டும் குண நலன்கள், உடல் தோற்றம் பண்புகள் என ஒரு பரந்த பொருள் கொண்ட சொல்.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளால் இந்தக் குண நலன்கள் நிரம்பப் பெற்றவர்களாக இருந்தாலும் (அல்குர்ஆன்: 68:4) ➚ தமது தோழர்களை குணத்தின் குன்றுகளாக உருவாக்கினர்கள். அவர்களின் அந்த நடவடிக்கையை பின்பற்றுமாறு நாமும் பணிக்கப்பட்டிருக்கின்றோம். அந்த ஆளுமை பண்புகளைப் பெற நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும்.
தனது பலம் மற்றும் பலவீனங்களைத் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். இது ஒரு நிர்வாகிக்கு, ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முதல் முக்கியப் பண்பாகும். சிலர் தனது பலவீனங்களையும் பலம் என எண்ணத் தொடங்குவார்கள். அது அவரை அறியாமலே பல இடைஞ்சல்களை நிர்வாகத்தில் ஏற்படுத்தி விடும். ஒரு நிர்வாகத்தை தோல்வியடையச் செய்யும் காரணங்களில் தற்புகழ்ச்சி, நான் குறைகள் இல்லாதவன் என்ற எண்ணம் முன்னிலை வகிக்கின்றது.
ஒருவர் தன்னை குறைகளற்றவர் என எண்ண ஆரம்பித்து விட்டால் இனி நாம் கற்றுக் கொள்வதற்கு, திருந்துவதற்கு எதுவுமில்லை என்ற நிலை ஏற்படும். குறைகளை, தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களை எதிரிகளாக எண்ணுவர். சில நேரங்களில், “நீங்கள் சொல்வது சரிதான்’ என வார்த்தையளவில் சொன்னாலும் சுட்டிக் காட்டுபவர்கள் மீது வஞ்சம் வைத்து நேரம் பார்த்துக் காத்திருப்பர். இப்படியே அந்த நிர்வாகியும் அவர் சார்ந்த நிர்வாகமும் நாளடைவில் கூளங்கள் நிறைந்த குப்பைத் தொட்டி போல் மாறிவிடும்; மக்கள் செல்வாக்கை இழக்கும்.
மிகையான தன்னம்பிக்கை, தனது திறமைகளைக் கூடுதலாக மதிப்பிட்டு வைத்திருப்பது, சம காலத்தைப் பற்றிய போதிய அறிவில்லாமை ஆகியவற்றால் இந்நிலை ஏற்ப்படும். இதனால், தான் கற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை என்ற முடிவுக்கு வந்து மற்றவர்களின் குறைகளைப் பார்ப்பதே (முழுநேர) பணியாக மாறிவிடும்.
ஒரு காரியத்தைச் செய்து விட்டால் பாராட்டுக்கள் குவிய வேண்டும் என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும் மிகையான தன்னம்பிக்கையின் வெளிப்பாடே. இந்தக் குண நலன்கள் குடி கொண்ட ஒரு நிர்வாகி தானும் அழிந்து, தான் சார்ந்த நிர்வாகத்தையும் அழித்து விடுவார்.
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்களைக் கொண்டு அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்குப் பாடம் புகட்டினான். கண் தெரியாத நபித்தோழரான அவர் புறக்கணிக்கப்பட்டார் என 80வது அத்தியாயம் 1 முதல் 12 வரை உள்ள வசனங்களில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றான்.
அதன் பின்னர் எப்போது உம்மி மக்தூம் (ரலி) அவர்களைப் பார்த்தாலும் நபி (ஸல்) கண்ணியப்படுத்துவார்கள். “இவரால் தான் எனக்கு இறைவன் திருந்திக் கொள்ள வாய்ப்பளித்தான்’ என நினைவு கூர்வார்கள். இது தான் முன்மாதிரி நிர்வாகியின் முன்மாதிரி.
ஒரு நிர்வாகி தனக்கிருக்கும் மக்கள் செல்வாக்கைப் பராமரித்தல், பாதுகாத்தல், அதன் மூலம் பதவியில் தொடர்ந்து நீடித்தல் போன்ற குறிக்கோளைக் கொண்டு இயங்க ஆரம்பித்தால் நிர்வாகம் அதன் குறிக்கோளிலிருந்து மாறி வேறு திசையில் செல்ல ஆரம்பிக்கும்.
ஏனெனில் மிதமிஞ்சிய பதவி மோகத்தால் அவர் எடுக்கும் எல்லா முடிவுகளும் அவர் பதவியில் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகவே இருக்கும். அவர் சார்ந்த நிர்வாகத்தின் கொள்கை, குறிக்கோள்களிலிருந்து மாறிச் செல்ல இத்தகைய பலவீனமுள்ள நிர்வாகிகள் காரணமாக அமைவார்கள்.
தனது புகைப்படங்களைப் பிரசுரிப்பதில் அதிக அக்கரை காட்டுவது, சபைகளில் அனைவரும் கவனிக்கும் இடத்தைப் பிடிப்பது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது பெயரை விளம்பரம் செய்து கொள்வது இவையெல்லாம் சுய செல்வாக்கை நிலை நிறுத்த முயல்பவர்களின் வெளிப்படையான அடையாளங்கள்.
ஒரு நிர்வாகி அவர் துறை சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்வது மிக அவசியம். முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவருக்கு இஸ்லாம் தெரியாவிட்டால்? நிறைய பேருக்குத் தெரியாது.
ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவன நிர்வாகிக்கு மென்பொருள் என்றால் என்ன என்பதே தெரியாவிட்டால் அவரால் என்ன நிர்வாகம் செய்ய இயலும்? குறிக்கோளை நோக்கி எப்படி வழி நடத்துவார்? சிலர் நிர்ப்பந்தம் காரணமாக சில பொறுப்புகளுக்கு வந்து விடுவர்கள். அதன்பின் அவர் பொறுப்பேற்றுள்ள துறை சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்வது மிக அவசியம். இல்லை எனில் திசை தெரியாத காட்டில் குருடன் போன்ற நிலையில் ஆகிவிடும்.
ஒரு நிர்வாகி, தான் தலைமை தாங்கும் நிர்வாகத்தின் கொள்கை குறிக்கோளிலிருந்து எந்த நிலையிலும் விலகி விடாமல் உறுதியுடன் இருக்க வேண்டும். கொள்கையிலிருந்து விலகி விடும் அளவுக்குச் சம கால நிகழ்வுகள் அவரைப் பாதிக்காமல் நடந்து கொள்ள வேண்டும். இன்னும் சொன்னால் அதில் பிடிவாதமாக நடந்து கொள்ள வேண்டும். நாம் நமது கொள்கைப்படி வாழ்ந்தால் தான், சொல்வதைச் செய்தால் தான் நம்மைப் பின்பற்றுவோரும் அப்படி செய்வார்கள்.
நம் கொள்கை குறிக்கோளில் உள்ள உறுதிக்காக சிலர் நம்மைக் கேலி செய்வார்கள். பலர் நேரடியாக எதிர்ப்பார்கள். சிலர் மறைமுகமாக எதிர்ப்பார்கள். அதனால் அவர்களுக்குத் தோதாக நடந்து, கொள்கை குறிக்கோளிலிருந்து விலகிவிடக்கூடும்.
இத்தகைய வெளி சக்திகளின் தாக்கத்தால் சில நிர்வாகிகள் தன்னை அறியாமலேயே கொள்கை குறிக்கோள்களிலிருந்து விலக ஆரம்பித்து விடுவார்கள். இதன் வெளிப்படையான அடையாளம், ஆலோசனைகளுக்குப் பிறகு ஒரு முடிவு எடுத்த பின் அந்த முடிவைச் செயல்படுத்தாமல் வேறொரு முறையில் செயல் நடந்து முடிந்திருக்கும்.
பொதுவாகவே இத்தகைய நிர்வாகிகள் அடிக்கடி தங்கள் கருத்துக்களையும் நிலைபாட்டையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். உள்ளம் மாறக் கூடியது. அதை மாறாமல் பாதுகாப்பது அல்லாஹ்வின் கையில் உள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயொரு உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்” என்று கூறி விட்டு, “இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
அல்லாஹ்வும் இந்தப் பிரார்த்தனையைக் கற்றுத் தருகின்றான்.
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.
இந்தப் பிரார்த்தனை மிக அவசியம். நாமும் நல்வழியில் சென்று மக்களையும் வழி நடத்த இந்தக் குணம் அவசியம்.
ஒரு நிர்வாகி, தனது சக நிர்வாகிகளின் நம்பிக்கையைப் பெற்றிருப்பது மிக அவசியம். இல்லை என்றால் அந்த நிர்வாகத்திற்கிடையில் ஏற்படும் சண்டையைத் தீர்ப்பதிலேயே எல்லா ஆற்றலையும் வளங்களையும் செலவு செய்ய நேரிடும்.
அதே நேரத்தில் ஒரு நிர்வாகத்தின் கொள்கை, குறிக்கோள்களில் நம்பிக்கை இல்லாதவர் உள்ளே புகுந்து அந்த நிர்வாகத்தின் கொள்கையிலிருந்து மாற்ற முயற்சித்தால் அதில் சமரசம் செய்ய கூடாது.
சில தலைவர்கள் தங்களைச் சுற்றி சில இளைஞர்கள் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்வர்கள். இவர்களுக்கு “ஊதா நிறக்கண்ணர்கள்’ என மேலை நாட்டு நிர்வாகவியல் நிபுணர்கள் பெயரிட்டுள்ளனர். அந்த நிர்வாகம் எடுக்கும் எல்லா முடிவுகளும் இந்த இளைஞர்கள் முக்கியத்துவம் பெறும் வகையில் அமைந்திருக்கும். இது ஓர் இஸ்லாமிய நிர்வாகத்திற்கு அழகல்ல!
அடுத்த தலைமுறை தலைவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அத்தகைய அடுத்த தலைமுறை அவர்களின் கடின உழைப்பு, ஈடுபாடு, அறிவு போன்றவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். தலைவருக்குக் கூடவே இருப்பவர் என்ற காரணத்தால் அல்ல. குறிப்பிட்ட நிர்வாகிக்கு முக்கியத்துவம், ஒரு சார்பு நடவடிக்கை போன்றவை நிர்வாகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.