06) குழுப்பணியின் அவசியம்
ஒருவர் மிகச் சிறந்த திறமைசாலியாக இருப்பார். தனியாக அவரது பணிகளைச் சிறப்பாகச் செய்வார். அதே பணியை விரைந்து முடிப்பதற்காக அல்லது அதிகப்படுத்துவதற்காக அந்தத் துறை சார்ந்த ஐந்து பேருடன் சேர்ந்து அதே வேலையைச் செய்யச் சொன்னால் மற்றவர்கள் மீது புகார் கூறுவார். இது நமக்கு ஒத்து வராது என்பார். இப்படித் தான் இன்று நம்மில் பெரும்பாலோர் அவதிப்படுகிறார்கள்.
குழு உணர்வு நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. நாம் சார்ந்திருக்கும் ஒரு நிறுவனத்தை, இயக்கத்தை, குடும்பத்தை மற்றவர்கள் ஏளனம் செய்தால் அதைத் தாங்காமல் வாதம் செய்வோம்; அவருடன் சண்டை போடுவோம். ஆனால் நமக்குள் இயங்கும் போது நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வோம். குழு உணர்வு மட்டும் போதாது குழுப் பணியாக இருக்க வேண்டும்.
மனிதனை சமூகப் பிராணி என்பார்கள். அவன் சார்ந்து வாழும் நிலையிலேயே படைக்கப்பட்டுள்ளான். இந்த நிலை மூன்று விதங்கள்.
- சார்பு நிலை
- சுய சார்பு நிலை
- சமூகச் சார்பு நிலை
சார்பு நிலையில், குழந்தைகளாகப் பெற்றோர்களைச் சார்ந்து வளர்கின்றோம். சுய சார்பு நிலையில் நமது பெற்றோர்கள் நம்மைச் சார்ந்திருப்பார்கள். சமூகச் சார்பு நிலையில் நமது தேவைகளை நிறைவேற்ற சமுதாயமாக, ஜமாஅத்தாக, தெருவாக, ஊராக வாழ்கின்றோம்.
ஆகையால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எவ்வளவு திறமைகள் இருந்தாலும் சிறந்த குழுப் பணியாளனாக நீங்கள் இல்லை என்றால் எதையும் சாதிக்க இயலாது.
நிறுவனங்களின் பயிற்சிகள் மூலம், இயக்கங்களின் தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சிகள்) மூலம் சிறந்த தனி மனிதர்கள் உருவாக்கப்படுவது போல் சிறந்த குழு உணர்வும், குழுப்பணிக்கான தயாரிப்புகளும் உள்ளதா என்றால் இல்லை.
ஒரு நிர்வாகம் வெற்றியடைய, தகுந்த திறமையுடைய தனி நபர்களைக் கண்டறிந்து அவர்களைக் குழுப்பணி மீது நம்பிக்கை உடையவர்களாக, கடமையுணர்வு உடையவர்களாக மாற்ற அதன் தலைவர் முயற்சி செய்ய வேண்டும். அவர்களை ஒன்றுபட்டு நிற்பவர்களாக மாற்ற வேண்டுமெனில் அவர்களிடம் கொள்கையாலும் குறிக்கோளாலும் ஒரே மாதிரியான சிந்தனையை, புரிதலை ஏற்படுத்துவது அவசியம்.
சிலர் இயற்கையிலேயே திறமையானவர்களாயிருப்பார்கள். ஆனால் குழுவில் இணைந்து பணியாற்றுவதை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்குக் குழுப் பணியின் அவசியத்தை உணர்த்த வேண்டும். அதற்காகப் பயிற்றுவிக்க வேண்டும். குழு உணர்வு வளர்வதற்கு வெற்றிகளையும், தோல்விகளையும் குழுவின் அங்கத்தினர் சரி சமமாகப் பார்க்க வேண்டும். முயற்சி செய்யும் எல்லாக் காரியங்களிலும் இரண்டையும் எதிர்பார்க்க வேண்டும்.
தனக்குக் கிடைக்கும் பாராட்டுக்கள் தனது திறமையால் அல்ல! குழுப்பணியால், குழுவால், ஜமாஅத்தால் கிடைத்தது என்று அனைவரும் உறுதியாக நம்ப வேண்டும். அந்தப் பாராட்டுக்களும் புகழும் ஜமாஅத்தைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே உழைக்கின்றோம் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஏற்பட்டு விட்டால் நீங்கள் சிறந்த குழுப்பணியாளர்.
நாம் உடல் ரீதியாக இணைந்து பணியாற்றுவது குழுப் பணியாகாது. மாறாக உள்ள ரீதியாக இணைய வேண்டும். ஒரு குழுவில் அங்கமாக இருந்து கொண்டு ஆலோசனை (மஷுரா) இல்லாமல், தான் நினைப்பதை அவரவர் செய்வது தான் குழு உடைவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. அந்தப் பணி உங்கள் குழுவுக்கு எவ்வளவு பெரிய நன்மையை ஈட்டித் தந்தாலும் சரியே! ஆகையால் ஆரோக்கியமான குழுப்பணிக்கு அவரவர் சிந்தனையும் ஆலோசனையும் மிக அவசியம்.
எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் அதை நிர்வாகம் ஆலோசனை செய்து, சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து, உங்கள் சிந்தனையை நடைமுறைப்படுத்தவோ நிராகரிக்கவோ குழுவுக்கு அதிகாரம் உண்டு என்பதை ஆழமாகப் பதிய வைத்து நடைமுறைப்படுத்துதல் தான் குழுப்பணியின் அச்சாணியாகும்.