நான்கு சாட்சிகள் சாத்தியமற்றதா?
விபச்சாரத்துக்கு மரண தண்டனை கொடுக்க நான்கு சாட்சிகள் அவசியம். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.
இதைச் செவியுற்ற போது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? ” இது தெளிவான அவதூறு” என்று கூறியிருக்கக் கூடாதா? இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.
விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்துவோர் விபச்சாரம் செய்ததைக் கண்ட நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கூறுவது பொய் என எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் வழிகாட்டுகிறான்.
நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும் என அல்லாஹ் கூறியதற்கு மாற்றமாக நான்கு சாட்சிகளைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்று பீஜே கூறியுள்ளார். குர்ஆன் கூறும் சட்டத்தையே சாத்தியமற்றது எனக் கூறி விட்டார் என்று பரவலாக விமர்சனம் செய்யப்படுகிறது.
பீஜே என்ன கூறினார் என்பதை முதலில் சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.
அல்தாபி குறித்தும், ஜமாஅத் பைலா குறித்தும் விளக்கும் போது பீஜே அவர்கள் ஒரு வாசகத்தைச் சொன்னார்.
அதாவது விச்சாரம் செய்ததை நான்கு பேர் பார்க்க வேண்டும். அப்போது தான் இஸ்லாம் வழங்கும் தண்டனை அளிக்க முடியும். ஒரு ஆணும், பெண்ணும் தனித்து இருந்ததை நாற்பது பேர் பார்த்தாலும் அது விபச்சாரத்துக்கான சாட்சியாக ஆகாது. தனித்து இருந்தார்கள் என்பதற்குத் தான் அது சாட்சியாகும்.
விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது நாலு பேர் பார்க்கும் படி செய்ய மாட்டார்கள். எனவே சாட்சிகள் மூலம் விபச்சாரத்தை நிரூபிக்க முடியாது.
ஒரு வீட்டுக்குள் இருவர் இருப்பதை நான்கு பேர் பார்த்தாலும்,
ஒரு ஆண் மட்டும் இருக்கும் வீட்டுக்குள் ஒரு பெண் நுழைவதையும் சில மணி நேரங்கள் கழித்து வெளியேறுவதையும் பார்த்தாலும்
அது விபச்சாரத்துக்கான சாட்சியமாகாது. தனித்து இருந்தார்கள் என்பதற்குத் தான் அது சாட்சியமாகும்.
இதன் காரணமாகவே விபச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ள வகையில் தனித்து இருந்தாலே அதற்கு நடவடிக்கை என்று ஜமாஅத் விதியில் உள்ளது என்று பீஜே குறிப்பிட்டார்.
விபச்சாரத்துக்கு நடவடிக்கை என்று ஜமாஅத் விதி இருக்குமானால் ஒருவரையும் தண்டிக்க முடியாது.
இது தான் பீஜே கூறிய விஷயத்தின் சாராம்சம்.
பீஜேயின் கருத்துக்களில் குறை கூறுவதையே வழக்கமாகக் கொண்ட சிலர் விபச்சாரத்துக்கு நான்கு சாட்சிகள் வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் பீஜே அல்லாஹ் கூறுவது சாத்தியமே அற்றது என்று கூறி அல்லாஹ்வின் கூற்றில் பிழை காண்கிறார் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
பீஜே சொன்னதைக் குறை சொல்பவர்கள் தாங்கள் மதிக்கும் அறிஞர்கள் இது போல் கூறியுள்ளதை அறியாமல் இப்படி உளறுகின்றனர்.
சாட்சிகள் மூலம் விபச்சாரத்தை நிரூபிப்பது சாத்தியமற்றதாகும். ஏனெனில் ஆணுடைய உறுப்பு பெண்ணின் உறுப்பில் நுழைவதைப் பார்க்கும் சாட்சிகள் இருப்பது சிரமமான காரியமாகும்.
இஸ்லாம் துவங்கிய காலம் முதல் எனது காலம் வரை சாட்சிகள் கூறியதன் அடிப்படையில் ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதில்லை. ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே விபச்சாரத்துக்காக தண்டிக்கப்பட்டனர். ஏனெனில் இதற்கு சாட்சிகள் இருப்பது சிரமமாகும்; இதைப் பின்னர் விளக்கியுள்ளோம் என்று இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதை சமகால சவூதி அறிஞர் உஸைமீன் அவர்களும் எடுத்துக் காட்டுகிறார்கள்.
ஆணும், பெண்ணும் இருவரும் ஆடையின்றி இருந்ததை நாங்கள் பார்த்தோம் என்று நான்கு பேர் கூறினாலும் இது ஏற்கப்படாது.
ஒரு கணவன் தன் மனைவியிடம் எப்படி இருப்பானோ அப்படி இருக்கக் கண்டோம் என்று கூறினாலும் அந்த சாட்சியமும் போதாது.
இவனது உறுப்பு அவளது உறுப்புக்குள் இருப்பதைப் பார்த்தோம் என்று சொல்ல வேண்டும். இது முற்றிலும் சிரமமானதாகும் என்றும் கூறுகிறார்.
தன் மனைவியுடன் கணவன் இருப்பது போல் கண்டோம் என்று நால்வர் சாட்சி சொன்னாலும், அவர்கள் நேர்மையான சாட்சிகளாக இருந்தாலும் அவர்கள் அவதூறுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்.
இது சாத்தியமற்றதாக இருந்தும் நான்கு சாட்சிகளை அல்லாஹ் விதியாக ஆக்கியுள்ளதன் முழு ஹிக்மத்தை நுணுக்கமான ஞானத்தை அல்லாஹ்வே அறிவான். நாலு பேர் பார்க்கும் படி வெளீப்படையாக விபச்சாரம் பெருகக் கூடாது என்பதற்காக அல்லாஹ் இப்படி கூறி இருக்கலாம்.
நூல் : முஹம்மத் சாலிஹ் அல்முனஜ்ஜித் எழுதிய மவ்கிவுல் இஸ்லாம்.
இமாம் இப்னு தைமியா அவர்களின் மரணம் ஹிஜ்ரி 728 ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் 728 ஆண்டுகளில் நான்கு சாட்சிகள் மூலம் விபச்சாரம் நிரூபிக்கப்பட்டு ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.
நாம் வாழும் 2018 வரை ஒரே ஒருவர் கூட நான்கு சாட்சிகள் மூலம் விபச்சாரம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை.
இவ்வசனம் அருளப்பட்ட காலம் முதல் இன்று வரை ஒருவர் கூட நான்கு சாட்சிகள் மூலம் விபச்சாரத்துக்காக தண்டிக்கப்பட்டதே இல்லை. இது கண் முன்னே தெரியும் உண்மையாகும். இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு தான் அல்லாஹ்வின் வசனத்தை நாம் விளங்க வேண்டும்.
ஒரு ஆணும் பெண்ணும் தனித்து இருப்பதை நால்வர் பார்த்து விபச்சாரம் செய்தார்கள் என்று சாட்சி கூறினால் அது குற்றமாகும். தனித்து இருந்ததைப் பார்த்தோம் என்று மட்டும் கூறினால் அது குற்றமில்லை. எதைப் பார்த்தார்களோ அதை மட்டும் கூறலாம்.
உண்மையில் அவர்கள் விபச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போது நான்கு பேர் கதவைத் தட்டி அவர்கள் கதவைத் திறந்தார்கள் என்றால் அப்போது கூட விபச்சாரம் செய்தார்கள் என்று சாட்சி கூற முடியாது. ஏனெனில் இவர்கள் பார்க்கும் போது விபச்சாரம் செய்து கொண்டு இருக்கவில்லை.
இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு தான் மேற்கண்ட அறிஞர்கள் இது சாத்தியமற்றது ஆனாலும் இதன் காரணத்தை அல்லாஹ்வே அறிவான் என்று முடிக்கின்றார்கள்.
இவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை மறுத்தவர்களாக மாட்டார்கள்.
யாரும் இந்த அடிப்படையில் தண்டிக்கப்பட்டதில்லை என்ற உண்மையைத் தான் சொல்கிறார்கள்.
ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்புக்குள் இருப்பதை நான்கு பேர் பார்ப்பது சாத்தியமற்றது என்று அவர்கள் சொல்வதும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துச் சொன்ன கருத்து தான்.
அதே நேரம் அல்லாஹ் தவறாகக் கூறிவிட்டான் என்று இந்த அறிஞர்கள் சொல்லவில்லை. நமது அறிவு குறைவானது. அல்லாஹ் சொன்னால் அதற்கு உரிய அர்த்தம் இருக்கத்தான் செய்யும். நமக்கு விளங்காத ஏதோ ஒரு நுணுக்கமான விஷயத்துக்காக அல்லாஹ் கூறியிருப்பான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் வசனங்களை இப்படித்தான் அணுக வேண்டும்.
தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் அவர்கள் விழ மாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 25:73) ➚
சில விஷயங்கள் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் விளங்க முடியாமல் இருந்தாலும் பிற்காலத்தில் அதன் உண்மை புரிந்து கொள்ளப்பட்டு இறை வேதம் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக அவை அமைந்து விட்டதை நாம் அறிவோம்.
உலக மக்கள் அனைவருமே சாத்தியமற்றதாகக் கருதும் ஒன்றை அல்லாஹ் சட்டமாக்கினால் அதற்கு உரிய விளக்கம் நிச்சயம் இருக்கும். அல்லாஹ் அதை வெளிப்படுத்தும் போது தெரிய வரும் என்று கூறுவது குர்ஆன் வசனத்தை மறுத்ததாக ஆகாது. குருடர்களாக செவிடர்களாக விழக்கூடாது என்பதில் இதுவும் அடங்கும்.
ஒரு இயக்கத்தின் பைலாவில் விபச்சாரத்துக்கு தண்டனை என்று சொல்லப்படாமல் விபச்சாரத்துக்கு வாய்ப்புள்ள வகையில் தனித்து இருந்தால் தண்டனை என்று ஏன் கூறப்பட்டுள்ளது என்பதை விளக்கும் போது தான் பீஜே இப்படிக் குறிப்பிட்டார்.
ஆனால் இப்னு தைமியா,
ஸாலிஹ் அல் உஸைமின்,
முஹம்மத் சாலிஹ் அல்முனஜ்ஜித்
ஆகிய அறிஞர்கள் இஸ்லாமியச் சட்டத்தை விளக்கும் போது இது அறவே சாத்தியமற்றது என்று கூறியுள்ளனர்.
இந்த அறிஞர்கள் அல்லாஹ்வின் சட்டத்தில் விளையாடி விட்டார்கள் என்று நடுநிலையாகச் சிந்திக்கும் யாரும் கூற மாட்டார்கள்.
எனவே சாத்தியமற்றது என்று பீஜே கூறியது குர்ஆனை மறுப்பதற்காக அல்ல. நமக்குத் தெரியவில்லை என்ற அறியாமையை ஒப்புக் கொண்டு அல்லாஹ் இதன் உண்மையை வெளிப்படுத்துவான் என்ற மற்றொரு உண்மையை உள்ளடக்கித் தான் கூறியுள்ளார். இப்படிக் கூறுவது குர்ஆனை மெய்ப்பிக்கும் வாதமேயாகும்.
ஒரு காலம் வரலாம். அப்பட்டமாக உலகமே பார்க்கும் படி விபச்சாரம் நடக்கலாம். அப்போது இது சாத்தியமாகும். அல்லாஹ்வின் கூற்று பொய்யாகாது.
மேலும் யாருக்கும் தெரியாமல் விபச்சாரம் செய்தாலும் நான்கு பேர் பார்த்து விட்டால் மரண தண்டனைக்கு உள்ளாக நேரும் என்று அஞ்சி விபச்சாரம் செய்வதை விட்டு விலகக்கூடும் என்பதற்காக அல்லாஹ் இச்சட்டத்தைக் கூறி இருக்கலாம். நமக்குத் தெரியாத வேறு காரணமும் இருக்கலாம்.