நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4
முன்னுரை

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். என்பது குர்ஆன் வசனம், அந்த மரணம் எப்போதும் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அவ்வாறு வருவதற்கு முன் நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மரணத்தருவாயில் நல்லோர்களுக்கு  நடக்கும் நிகழ்வுகளை, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு அழகிய முறையில் விளக்கியுள்ளார்கள். அந்த செய்திகளில் சிலவற்றை இந்த உரையில் கண்போம். 

சந்தோஷமான செய்தி கூறப்படும்

நல்லவர்கள் மரணிக்கும் போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தறுவாயில் வானவர்கள் கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.

அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக! எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்)

(அல்குர்ஆன்: 89:27)

நற்செய்தியை பெறுதல்

”எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி ”அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!” எனக் கூறுவார்கள்.

இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.

(அல்குர்ஆன்: 41:30)

நல்லவர் முந்துதல்! தீயவர் பிந்துதல்!

இன்பமான வாழ்வு உறுதி செய்யப்பட்டுவிட்டதால் விரைவாக தன்னை அடக்கம் செய்யுமாறு நல்லவர் விரும்புவார். ஆனால் தீயவரோ தனக்குக் கிடைத்த கொடூரமான வாழ்வை நினைத்து தன்னை மண்ணறைக்குள் அடக்கிவிட வேண்டாம் என்று அலறிக் கொண்டிருப்பார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின், ”என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருப்பின், ”கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?” என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதை செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ(ரலி)

(புகாரி: 1316)

அல்லாஹ்வை சந்திக்க விரும்புபவரும், வெறுப்பவரும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று சொன்னார்கள். அப்போது நான், ”அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்)? அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்?” என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(அல்லாஹ்வைச் சந்திப்பது என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறை நம்பிக்கையாளருக்கு, (மரண வேளையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும்.

அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புவார், அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு, (மரணவேளை நெருங்கும் போது) அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அவர் மீது  அல்லாஹ் கோபம் கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்” என்று (விளக்கம்) சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லீம்-5208)

நல்லவர்களுக்கு வானவர்களின் வரவேற்பு

நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்வில் அழகான வரவேற்வு வானவர்களால் கொடுக்கப்படுகிறது.

மதீனாவாசி ஒருவருடைய ஜனாஸாவைப் பின் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் சிறிய கம்பு ஒன்றினால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென தன் தலையை உயர்த்தி கப்ருடைய வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள் என்று மூன்று தடவை கூறினார்கள். பின்பு மரணத் தறுவாயிலுள்ள ஒரு இறை நம்பிக்கையாளனுடைய நிலை பற்றிக் கூறினார்கள்.

மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்து விட்டு மறுமையை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானி­ருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்துத் துணிகளையும், சுவர்க்கத்தின் நறுமணங்களையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள்.

நல்லவரின் உயிர் வெளியேறுதல்

அப்போது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே நீ இந்த உடலி­­ருந்து வெளியேறி அல்லாஹ்வின் மண்ணிப்பை நோக்கியும் அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல் என்று கூறுவார். தோல் பையொன்றிலி­ருந்து நீர் வழிந்துவிடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறிவிடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.

அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்துத் துணியிலும் நறுமணத்திலும் அதனை வைத்துவிடுவார்கள். அதி­லிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனைச் சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கிச் சென்று வானத்தைத் திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.

அம்மலக்குகள் வானத்தைத் திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும். ஏழாவது வானத்தைக் கடந்து சென்றதும் அல்லாஹ் ஆத்மாவைச் சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி எனது இந்த அடியானுடைய செயல்களை இல்­லியீனிலே (இறை நம்பிக்கையாளர்களின் உயிர்கள் இருக்குமிடம்) பதிவு செய்துவிட்டு பூமியிலுள்ள அவனது உட­ல் அவனுடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

(அஹ்மத்: 17803)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை நம்பிக்கையாளரின் உயிர் பிரியும் போது அதை இரு வானவர்கள் எடுத்துக் கொண்டு (வானுலகிற்கு) ஏறிச் செல்கிறார்கள்.

அப்போது வானுலகவாசிகள் (வானவர்கள்), ”ஒரு நல்ல ஆன்மா பூமியி­ரிருந்து வந்திருக்கிறது. அல்லாஹ் உனக்குப் பேரருள் புரிவானாக. நீ குடியிருந்துவந்த உடலுக்கும் பேரருள் புரிவானாக!” என்று பிரார்த்திப்பார்கள். பிறகு அந்த உயிர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு அல்லாஹ், ”இதை இறுதித் தஹ்ணை வரை (மறுமை நாள் வரை தங்க வைக்கப்பதற்காகக்) கொண்டு செல்லுங்கள்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லீம்-5510

இலேசான விசாரனை

அடக்கம் செய்யப்பட்டவுடன் மரணித்தவருக்கு விசாரணை ஆரம்பித்து விடுகிறது. வானவர்கள் மிகச் சில கேள்விகளை மட்டும் கேட்பார்கள். நல்லடியாராக இருந்தால் இலகுவாக கேள்விகளுக்கு பதில் கூறிவிடுவார். பிறகு அவருக்கு இன்பமான வாழ்வு ஆரம்பித்து விடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு வானவர்கள் இறந்தவரிடம் வந்து அவரை எழுந்திருக்கச் செய்து அமர வைப்பார்கள். அவர்கள் அந்த அடியானை நோக்கி உனது இறைவன் யார்? என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். பிறகு உனது மார்க்கம் என்ன? என்று கேட்பார்கள்.

அதற்கு அவர் எனது மார்க்கம் இஸ்லாம் என்று கூறுவார். உங்களிடத்தில் அனுப்பப்பட்ட இவர் யார்? என்று வானவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர் இவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார் என்று கூறுவார். இதை நீ எவ்வாறு அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதினேன். அதனை விசுவாசம் கொண்டேன். அதனை உண்மைப்படுத்தினேன் என்று கூறுவார்.

எனது அடியான் உண்மை கூறி விட்டான். அவனுக்காக சொர்க்கத்தின் விரிப்புகளை விரித்து விடுங்கள். சுவர்க்கத்தின் ஒரு கதவை அவனுக்காகத் திறந்து விடுங்கள் என்று ஒருவர் வானிலிருந்து அப்போது கூறுவார். அவனுடைய கண்பார்வை எட்டும் அளவிற்கு அவனுடைய கப்ரு விசாலமாக்கப்படும்.

நல்ல அமல்களின் உருவம்

அப்போது நறுமணம் கமழ அழகிய ஆடை அணிந்து வசீகரமான தோற்றத்துடன் ஒரு மனிதர் அவரிடத்தில் வருவார். அம்மனிதர் அவரை நோக்கி உனக்கு வாக்களிக்கப்பட்ட உனக்கு மகிழ்வூட்டக்கூடிய நன்னாள் இதுவாகும் என்று கூறுவார்.

அந்த இறைநம்பிக்கையாளர் அம்மனிதரை நோக்கி நீ யார்? என்று கேட்பார். அதற்கு அம்மனிதர் நான் தான் (நீ உலகில் செய்து வந்த) உனது நல்ல காரியங்கள் என்று கூறுவார். அப்பொழுது அந்த இறை நம்பிக்கையாளன் இறைவா நான் தேடி வைத்துள்ள செல்வமான (நன்மையையும்) எனது குடும்பத்தினர்களையும் சென்றடைய மறுமை நாளை இப்போதே ஏற்படுத்திவிடு என்று கூறுவார். மரண வேளையின் போது ஒரு இறை நம்பிக்கையாளரின் நிலை இதுவாகும்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

(அஹ்மத்: 17803)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து ‘முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர்.

அதற்கு ”இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்” என்பார். பிறகு ‘(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 1338)

இறை நம்பிக்கையாளரின் ஆத்மா சொர்க்கத்து மரத்தில் வாழும் பறவையாக (மாற்றப்படும்.) மறுமை நாளில் அவரது உடம்புடன் அல்லாஹ் அவரை எழுப்புகின்ற வரை (சொர்க்கத்துப் பறவையாகவே) இருப்பார்.

அறிவிப்பவர்: கஃப் பின் மா­க்(ரலி)

நூல்: நஸயீ-2046

நெருக்கத்திற்குப் பிறகு விசாலமாக்கப்படும்

நல்லவர்களாக இருந்தாலும் தீயவர்களாக இருந்தாலும் இறந்தவரை கப்ரில் வைத்தவுடன் மண்ணறை அவரை ஒரு முறை நெருக்கும். மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் விலா எலும்புகள் ஒன்றோடொன்று கோர்த்து கொள்கின்ற அளவிற்கு அது தொடர்ந்து நெருக்கிக் கொண்டே இருக்கும். நல்லவனாக இருந்தால் தொடர்ந்து நெருக்காமல் அவனை விட்டு விடுகிறது. பிறகு அவருடைய மண்ணறை விசாலமாக்கப்பட்டு அவர் நெருக்கடியில்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வை அனுபவிப்பார்.

சிறந்த நபித்தோழரான சஃத் பின் முஆத் என்ற நபித்தோழரையும் மண்ணறை நெருக்கியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மண்ணறை நெருக்கும் பண்புடையது. அதனுடைய நெருக்க­­ருந்து யாரேனும் ஒருவர் தப்பிப்பதாக இருந்தால் சஃத் பின் முஆத் அதி­ருந்து தப்பித்திருப்பார். (ஆனால் அவரையும் மண்ணறை நெருக்கியது.)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: தஹதீபுல் ஆஸார் (797)

உங்களுடன் இருந்த இந்த மனிதர் குறித்து நீ என்ன சொல்லி­க் கொண்டிருந்தாய் ? என்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி (நல்லவரிடம்) கேட்கப்படும். அதற்கு அவர் இறைவனின் தூதர் என்று நான் நம்பினேன். அவர் எங்களிடத்தில் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தார். அவர் உண்மையாளர் என்று கருதி அவரை நாங்கள் பின்பற்றினோம் என்று கூறுவார்.

அதற்கு நீ உண்மையே கூறினாய். இவ்வாறே நீ வாழ்ந்து மரணித்தாய். இதே நிலையிலே அல்லாஹ் நாடினால் நீ எழுப்பப்படுவாய் என்று அவரிடம் கூறப்படும். பிறகு அவருடைய பார்வை எட்டுகின்ற அளவிற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: தப்ரானி பாகம்: 3 பக்கம்-105

இருள் அகற்றப்பட்டு ஒளி பாய்ச்சப்படும்

பொதுவாக மண்ணறைகளில் இருள் சூழ்ந்திருக்கும். நல்லவர்களின் மண்ணறைகளில் இருள் அகற்றப்பட்டு தேவையான ஒளி கொடுக்கப்படும். எனவே நல்லவர்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வைக் கழிப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த ‘பெண்’ அல்லது ‘இளைஞர்’ ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘அவர் இறந்து விட்டார்’ என மக்கள் தெரிவித்தனர். ”நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள்.

பிறகு ”இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லீம்-1742

70 முழம் வரை விசாலமாக்கப்படும் கபுர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை நம்பிக்கையாளன் மண்ணறையில் பசுமையான தோட்டத்தில் இருப்பார். எழுபது முழம் வரைக்கும் அவருடைய மண்ணறை விசாலமாக்கப்படும். பௌர்ணமி இரவில் சந்திரனின் ஒளியைப் போல் அவருக்கு வெளிச்சம் தரப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்னத் அபீ யஃலா-6504

மரணித்தவரின் மண்ணறையில் விசாலமாக்குமாறும் ஒளிகொடுக்குமாறும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இதன் மூலம் நல்லவர்களுக்கு மண்ணறையில் ஒளி தரப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

நல்லதையே வேண்டுதல்

(என் முதல் கணவர்) அபூசலமாவின் (இறுதி நாளில் அவரது) பார்வை நிலைகுத்தி நின்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு, ”உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப் பின் தொடர்கிறது” என்று கூறினார்கள். அப்போது அபூசலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ‘ஆமீன்’ கூறுகின்றனர்” என்று கூறினார்கள்.

மேலும், ”இறைவா! அபூசலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்று) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)

நூல்: முஸ்லீம்-1678

அழகான மாளிகை

மண்ணறை வாழ்வு என்று சொல்லப்படுவதால் புதைக்கப்பட்ட இடத்தில் தான் இறந்தவர்கள் இருப்பதாக எண்ணிவிடக் கூடாது. மரணிக்கும் மக்களில் அதிகமானோரை மண்ணில் புதைப்பதால் மண்ணறை வாழ்க்கை என்று நாம் அழைக்கிறோம்.

கட­ல் மூழ்கி மீனிற்கு இரையாகியவர்கள், தீயில் கருகி சாம்பலானவர்கள், மிருகங்களால் வேட்டையாடப்பட்டு உண்ணப்பட்டவர்கள் இவர்களுக்கெல்லாம் கப்ரு என்பது கிடையாது. ஆனால் மண்ணில் புதைக்கப்பட்டவர்கள் சந்திக்கும் மறைமுகமான வாழ்வை இவர்களும் கண்டிப்பாகச் சந்திப்பார்கள்.

இறந்து விட்ட நல்லடியார்களுக்கு அற்புதமான அழகான வீடு தயார் செய்து தரப்படும். அங்கே அவர்கள் மண்ணறை வாழ்வு என்ற மறைமுகமான வாழ்வை இன்பமாகக் கழித்துக் கொண்டிருப்பார்கள். 

மிஃராஜ் பயணத்தில் காண்பிக்கப்பட்டவை

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவின் போது நல்லவர்களுக்கு இப்படிப்பட்ட பாக்கியம் இருப்பதை உணர்ந்து கொண்டார்கள்.பிறகு அவ்விருவரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள். நான் இது வரை அப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததேயில்லை.

அதில் சில ஆண்களும் வயோதிகர்களும், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதும் சிறப்பானதுமாக இருந்தது.

அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் இருவரிடமும் ”இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!” எனக் கேட்டேன்.

அதற்கு இருவரும் ”ஆம்,.. நீர் நுழைந்த முதல் மாளிகை சராசரி மூமின்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர்த் தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயீல்’ என்று கூறிவிட்டு, ‘இப்போது உமது தலையை உயர்த்தும்!’ என்றனர்.

நான் எனது தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது. அப்போது இருவரும் ‘இதுவே (மறுமையில்) உமது இருப்பிடம்’ என்றதும் நான் ”எனது இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்’ என்றேன்.

அதற்கு இருவரும் ‘உமது வாழ் நாள் இன்னும் மிச்சமிருக்கிறது; அதை நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உமது இருப்பிடம் வருவீர்’ என்றனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சமுரா பின்த் ஜன்துப் (ரலி)

(புகாரி: 1386)

சொர்க்கம் எடுத்துக் காட்டப்படும்

நல்லடியார் சந்தோஷமாக மண்ணறை வாழ்வைக் கழிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அவருக்கு சொர்க்கம் காட்டப்படும். அதைப் பார்த்து அவர் சந்தோஷம் அடைந்து கொண்டே இருப்பார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் இருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், ”அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்ற வரை இதுவே (கப்றே) உனது தங்குமிடம்” என்றும் கூறப்படும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

(புகாரி: 1379)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்லடியாருக்கு நரகத்தின் ஒரு வாசலைக் காட்டுங்கள் என்று கூறப்படும். நரகத்தின் ஒரு வாசல் அவருக்கு காண்பிக்கப்பட்டு நீ அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்திருந்தால் இது தான் உனது இடமாக ஆகியிருக்கும். (ஆனால் நீ மாறு செய்யவில்லை. எனவே இதிலி­ருந்து தப்பித்து விட்டாய்.) என்று கூறப்படும்.

அப்போது அவர் மிகவும் சந்தோஷமும், பரவசமும் அடைவார். பிறகு இவருக்கும் சொர்க்கத்தின் ஒரு வாசலைத் திறந்து விடுங்கள் என்று கூறப்படும். சொர்க்கத்தின் வாசல் அவருக்காக திறக்கப்பட்டு இது தான் அல்லாஹ் உனக்கு ஏற்படுத்திய உனது இடமாகும் என்று கூறப்படும். அப்போது அவர் சந்தோஷமும் பரவசமும் அடைவார்.

அறிவிப்பவர்: அபூஹரைரா (ரலி)

நூல்: தப்ரானி-2680

திருப்தியான வாழ்கை

உலக வாழ்வில் எவ்வளவு தான் இன்பங்களை மனிதன் அடைந்தாலும் திருப்தி அவனுக்குக் கிடைப்பதில்லை. இதனால் நிம்மதியின்றி செல்வத்தைத் தேடிக் கொண்டே வாழ் நாளைக் கழித்து விடுகிறான்.

ஆனால் நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்க்கை என்பது திருப்திக்குரியதாகவும், சந்தோஷத்திற்குரியதாகவும் இருக்கும். சத்தியத்திற்காக உயிர் நீத்த நபித்தோழர்கள் இப்படிப்பட்ட நிலையை அடைந்துள்ளார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

‘பிஃரு மஊனா’ (என்னுமிடத்தில் பிரசாரத்திற்காகச் சென்ற தமது) தோழர்களைக் கொன்றவர்களுக்குத் தீங்கு நேர அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூசுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த) ரிஅல், தக்வான் மற்றும் உஸய்யா ஆகிய குலத்தினருக்குக் கேடு நேர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முப்பது காலை (தொழுகை) நேரங்கலில் பிரார்த்தித்தார்கள்.

பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்று அருளப்பட்டது. அதை நாங்கள் ஓதி வந்தோம்; பின்னால் அது (இறைவனால்) நீக்கப்பட்டு விட்டது. ” ‘நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்து விட்டான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம்’ என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்” என்பதே அந்த வசனம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 2814)

மண்ணறை வெற்றிக்கான காரணங்கள்

இறை நம்பிக்கை வேண்டும்

அல்லாஹ்வை நம்புகின்ற விஷயத்தில் தவறிழைக்காமல் அவனை நம்ப வேண்டிய முறைப்படி நம்பியவர்களுக்கு வெற்றி கிடைப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அல்லாஹ்விற்கு யாரையும் இணையாக ஆக்காமல் அவனை மட்டுமே விசுவாசம் கொண்டு வணங்கி வர வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கப்றில் ஒரு இறை நம்பிக்கையாளர் (முஃமின்) எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரு வானவர்களைக்) கொண்டு வரப்ப(ட்டு கேள்வி கேட்கப்ப)டும்;

பிறகு (அவர்களிடத்தில்) அந்த இறை நம்பிக்கையாளர், ”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்” என சாட்சியம் கூறுவார். இதையே அல்லாஹ், ”எவர் நம்பிக்கை கொள்கிறாரோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்” (14:27) எனக் குறிப்பிடுகிறான்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

(புகாரி: 1369)

நற்காரியங்கள் செய்ய வேண்டும்

இறந்த பிறகு நாம் சம்பாதித்த செல்வமோ பெற்றெடுத்த குழந்தைகளோ நமக்குத் துணையாக வர மாட்டார்கள். மாறாக நாம் இந்த உலகில் செய்த நல்ல காரியங்கள் மட்டும் தான் நம்முடன் துணைக்கு வரும். எனவே நல்ல காரியங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும், செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 6514)

குறிப்பாக இறந்த பிறகும் நன்மைகளை பெற்றுத் தரக்கூடிய நல்லறங்களைச் செய்து கொள்ள வேண்டும்.

மரணித்தப்பின் தொடருபவை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன;

1. நிலையான அறக்கொடை

2. பயன்பெறப்படும் கல்வி.

3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லீம்-3084

சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்

மறுமையில் நிறைய பலன்களை அடைய வேண்டும் என்பதற்காக இந்த உலகத்தில் அல்லாஹ் நமக்கு நோய்களையும், சிரமங்களையும் தருகிறான். இதை சகித்துக் கொள்ளாதவர்கள் இறைவனை ஏசி நன்றி கெட்ட தனமாக நடந்து கொள்கிறார்கள். இது தவறாகும்.

எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு மருத்துவம் செய்பவர்களுக்கு இறைவனின் அன்பும், அருளும் கிடைக்கிறது. வயிற்று வலி­யால் இறந்தவர்கள் கப்ரில் வேதனை செய்யப்பட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

சுலைமான் பின் ஸரத் மற்றும் ஹா­த் பின் உர்ஃபுதா ஆகியோருடன் நான் அமர்ந்திருந்தேன். வயிற்று நோயால் இறந்து போன ஒருவருரை (புதைப்பதற்காக) பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்று அவ்விருவரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது வயிற்று நோயால் இறந்து விடுபவர் மண்ணறையில் வேதனை செய்யப்பட மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இல்லையா? என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார். அதற்கு ஆம் என்று இன்னொருவர் பதிலளித்தார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸார் (ரஹ்)

(அஹ்மத்: 17591)

அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தல்

அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு தனிச் சிறப்பு மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மரணத்திற்குப் பிறகு சந்தோஷமான வாழ்வு இவர்களுக்குக் கிடைக்கிறது. மண்ணறை வேதனையி­ருந்து இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். அவர்களுடன் (இது வரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

(அல்குர்ஆன்: 3:169),170)

இந்த வசனத்திற்குரிய விளக்கத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் எவ்வளவு இன்பமாக வாழ்கிறார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறியலாம்.

அல்லாஹ்வின் பாதையில் உயிர் திறந்தோரின் நிலை

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)  அவர்களிடம், ”(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர் ” (3:169) எனும் இந்த இறை வசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, ”நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், ”நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, ”இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)

நூல்: முஸ்லீம்-3834

ஷஹீத்தானவர்கள் பெரும் ஆறு சிறப்புகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஷஹீதிற்கு (உயிர் தியாகி) ஆறு சிறப்புகள் வழங்கப்படுகிறது. அவருடைய இரத்தத்தில் முதல் சொட்டு (பூமியில் விழும் போதே) அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது.

சொர்க்கத்தில் அவருக்குரிய இருப்பிடம் அவருக்குக் காட்டப்படுகிறது. ஹூருல் ஈன்களை அவருக்கு மணமுடித்து வைக்கப்படும். மாபெரும் திடுக்கத்திலி­ருந்து அவர் பாதுகாக்கப்படுகிறார். மண்ணறை வேதனையிலி­ருந்தும் பாதுகாக்கப்படுகிறார். ஈமான் என்ற ஆடை அவருக்கு அணியப்படுகிறது.

அறிவிப்பவர்: கைஸ் ஜதாமீ (ரலி)

(அஹ்மத்: 17115)

அல்லாஹ்வின் வழியில் உயிர் தியாகம் செய்தவர்கள் உலகிலேயே சிரமங்களை அனுபவித்துவிட்டதால் மண்ணறையில் அவர்கள் விசாரனை செய்யப்பட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே உயிர் தியாகியைத் தவிர மற்ற இறை நம்பிக்கையாளர்கள் மண்ணறைகளில் (விசாரனையின் மூலம்) சோதனை செய்யப்படுகிறார்களே ஏன்? என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (போரின் போது) மின்னுகின்ற வாட்கள் ஷஹீதுடைய தலையில் ஏற்படுத்திய சோதனையே போதுமானதாகும். (எனவே அவர் மண்ணறையில் சோதனை செய்யப்பட மாட்டார்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.      

நூல் : நஸயீ-2026

உயிர் தியாகம் செய்யாதவருக்கும் ஷஹீதுடைய அந்தஸ்து

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட வேண்டிய நிலை வந்தால் உயிரைத் தியாகம் செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அல்லாஹ்விற்காக போரிட்டு மரணிக்கும் பாக்கியத்தை மனப்பூர்வமாக இறைவனிடம் கேட்க வேண்டும்.

இதனால் போரிட்டு இறக்காமல் சாதாரணமாக இறந்தாலும் கூட அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகள் நமக்குக் கிடைக்கும். விசாரனை இல்லாமல் மண்ணறை வேதனையி­ருந்து ஷஹீதுகள் பாதுகாக்கப்படுவதைப் போல் நாமும் பாதுகாக்கப்படுவோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்து கொள்வார்; அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே!

அறிவிப்பவர்: அனஸ் பின் மா­ரிக் (ரலி)

நூல்: முஸ்லீம்-3869

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீர மரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!

அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஹனைஃப் (ரஹ்)

நூல்: முஸ்லீம்-3870

ஆக, நாம் அனைவரும் மரணத்தை எதிர் பார்த்தவர்களாக மறுமையை நோக்கி நன்மையை அதிகப்படுத்தி, மற்றவர்களையும் செய்யும் படி தூண்டி உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்போம். 

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.