நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமிய பாடல்கள்?-2
நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமிய பாடல்கள்?-2
அடுத்த தொகுப்பில் “நீ எங்கே எங்கே எங்கே நாகூர் மீரானே” என்ற பாடலின் அபத்தமான கருத்துக்களைப் பார்ப்போம்.
“நீ எங்கே எங்கே எங்கே நாகூர் மீரானே!
உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹே மீரானே!”
என்றோ இறந்து அடக்கம் செய்யப்பட்ட நாகூர் மீரானைத் தான் தேடி வந்ததாக இந்த வரியின் மூலம் தெரிவிக்கின்றார். இறந்தவர்களுக்கு இவ்வுலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லை, யார் அவரை தேடிச் சென்றாலும் அதை அவரால் அறியவும் முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அவரால் அறிய முடியும் என்று நம்பினால் அது அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதாகும்.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
அவரை எதற்காகத் தேடிச் சென்றார் என்ற காரணத்தை அடுத்தடுத்த வரிகளில் கூறுகின்றார்.
“தயை நாடி உருகும் நெஞ்சோடு உம்மை தேடி சிவந்த கண்ணோடு”
தயை என்றால் அருள் என்று பொருளாகும். அருளை நாகூர் மீரானிடம் தேடிச் சென்றதாகவும், கண்கள் சிவக்கும் அளவுக்கு இடைவிடாமல் அவரது தேடல் அமைந்திருந்ததாகவும் இந்த வரி கூறுகிறது.
அருள் அல்லாஹ்விடமே இருக்கிறது.
“அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்” என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
“மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை”.
மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களுக்கும் அருள் புரிபவன் அல்லாஹ் ஒருவன்தான். அது அவனுடைய அதிகாரத்திற்குட்பட்ட விஷயமாகும். அந்த அதிகாரம் மற்றவர்களுக்கு அணுவளவு இருக்கிறது என்று நம்பினாலும் அது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கின்ற பெரும்பாவமாகும். இந்தப் பாடல் வரிகளோ, நாகூர் மீரானும் அல்லாஹ்வைப் போன்று மனிதர்களுக்கு அருள் புரிகிறார் என்று கூறுகிறது. இது இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதே தவிர வேறு இல்லை.
மேலும், கண்கள் சிவக்கின்ற அளவுக்கு சிரமப்பட்டு நிரந்தர நரகத்திற்கான பாவத்தைச் செய்வது நகைப்பிற்குரியதாகவே இருக்கிறது. அருள் புரிவது அல்லாஹ் மட்டுமே என்பதையும், இறந்தவர்களால் எதையும் அறிய முடியாது என்பதையும் விரிவாகச் சென்ற தொகுப்பில் குறிப்பிட்டு இருக்கின்றோம்.
அவரைத் தேடிச் சென்றதற்கான முதல் காரணம் அருளைத் தேடுவது என்று குறிப்பிட்டார். அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று பார்த்து விட்டோம். மற்றொரு காரணத்தை அடுத்த வரியில் சொல்கின்றார்.
“தினம் ஏந்தும் இரண்டு கையோடு மனம் சாந்தி பெற வந்தோம் அன்போடு”
நாகூர் மீரானை நோக்கி இரண்டு கைகளையும் உயர்த்திப் பிரார்த்தனை செய்வதுடன் அவரிடம் வருகை தருவது மன அமைதியைத் தருகிறது என்று இந்த வரியின் கருத்து தெரிவிக்கின்றது.
பிராரத்தனை அல்லாஹ்விடமே
“அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்”.
பிரார்த்தனை அல்லாஹ்விடம் மட்டும்தான் செய்ய வேண்டும். அல்லாஹ் மட்டுமே நமது கோரிக்கைகளை செவியேற்பவன், அதற்குப் பதிலளிப்பவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை என்பதை திருக்குர்ஆனுடைய பல வசனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு மாற்றமாக இந்தப் பாடலில், தினம் தினம் நாகூர் மீரானிடம் கையேந்துவதாகச் சொல்கின்றார். இது இஸ்லாமியப் பாடலா (?) என்று சிந்திக்க வேண்டும்.
மன அமைதி அல்லாஹ்வின் நினைவாலே
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
அல்லாஹ்வின் நினைவால்தான் மனம் அமைதி பெறுகின்றது என்று இந்த வசனம் திட்டவட்டமாகக் கூறுகின்றது. பள்ளிவாசல்களில் நாம் இருக்கும் போதும், திருக்குர்ஆனை வாசிக்கும் போதும், இன்னும் இறைவனுடைய நினைவோடு இருக்கின்ற ஒவ்வொரு தருணத்திலும் நம்முடைய மனதிற்கு ஒரு நிம்மதியைத் தருகிறது. இதை நாம் உணர்கிறோம்.
ஆனால் நாகூர் மீரானைத் தரிசிப்பது மன அமைதியைத் தருகிறது என்று இவர் குறிப்பிடுகின்றார் உண்மையில் அவ்வாறு ஏற்படுகிறதா? என்றால் நிச்சயமாக ஏற்படாது.
தர்காக்களில் எழும் கூச்சல்கள், பாடல்களின் ஒலிபரப்பு, இசைக் கருவிகளின் அணிவகுப்பு, ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கலந்து நிற்கக்கூடிய மார்க்கத்திற்கு முரணான செயல்கள், அவர்கள் ஏற்றியிருக்கும் விளக்குகளின் எண்ணெய் வாடை, இன்னும் ஏராளமான விஷயங்கள் அமைதியாக இருக்கும் மனதைக்கூட கெடுக்கும் விதமாகத்தான் இருக்கிறது. மாற்று மதத்தவர்களின் கோயிலுக்குச் சென்ற அனுபவம்தான் தர்காக்களுக்கு சென்றால் கிடைக்குமே தவிர மன அமைதி கிடைக்காது.
“அந்த இறைவன் வழியில் சென்றவரே! மக்கள் இருளை அகற்றி வென்றவரே!
அருள் வடிவில் விளங்கும் நல்லவரே! வல்ல அல்லாஹ்வின் தியானத்தில் உள்ளவரே!
அருள் மழையை பொழிய வேண்டுமையா எங்கள் அல்லல் நீங்கிட வேண்டுமையா
உங்கள் கருணை எமக்கு வேண்டுமையா நாங்கள் கண்ட துயரங்கள் போதுமையா”
இந்த வரிகளில் நாகூர் மீரானை அழைத்து அருள் பொழிய வேண்டும் என்றும் அதன் மூலம் எங்களின் துன்பங்கள் நீங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றார். அருள் புரிபவன் அல்லாஹ் ஒருவனே. அவன்தான் நமக்கு ஏற்படும் துன்பங்களையும் நீக்குகிறான். அவனை விடுத்து வேறு யாரும் துன்பங்களை நீக்க சக்தி பெற மாட்டார்கள்.
“உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள்”.“பின்னர் அத்துன்பத்தை உங்களை விட்டும் அவன் நீக்கியதும் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு துரோகம் செய்து, உங்களில் ஒரு பிரிவினர் தமது இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்”.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக!
துன்பங்களை நீக்க அல்லாஹ் ஒருவன் மட்டுமே அற்றல் படைத்தவன் என்பதை இவ்வசனங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இன்னும், மக்கத்து காஃபிர்கள் கூட தங்களுக்குப் பெரும் துன்பங்கள் ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடம் முறையிடுவார்கள் என்றும், அந்தத் துன்பத்தை இறைவன் நீக்கிவிட்டவுடன் நன்றி மறந்து இணைகற்பிப்பார்கள் என்றும் இறைவன் கூறுகின்றான்.
“கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக் கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்”.
“மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்ற வனாகவோ நம்மிடம் பிரார்த் திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன”.
ஆனால், இந்தப் பாடலின் வரிகளோ துன்பத்தின் போது கூட அல்லாஹ்விடம் கையேந்துவது பற்றிக் கூறாமல் நாகூர் மீரானிடம் தான் கையேந்திப் பிராரத்திக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்த அடிப்படையில் மக்கத்து முஷ்ரிக்கீன்களுடைய கருத்தை விட மிகவும் மோசமான கருத்துக்களைத்தான் இந்தப் பாடல்வரிகள் எடுத்துரைத்து இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்க்கின்றது.
ஒரு உண்மையான மூஃமின் தனக்கு துன்பம் ஏற்படும் போது அல்லாஹ்வின் உதவியும், அருள் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்ப்பார்களே தவிர இறந்து மண்ணோடு மக்கிப் போனவர்களை அழைக்க மாட்டார்கள்.
“உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது”