09) நபி (ஸல்) அவர்களின் உணவு:

நூல்கள்: உணவு ஓர் இஸ்லாமிய பார்வை

உணவின்றி பசியில் வாடுவோருக்கும், உயர்தரமான உணவுகளை அன்றாடம் உண்டு மகிழ்வோருக்கும் ஓர் அருமையான வரலாற்றுப் பாடம் நபி (ஸல்) அவர்கள் உண்ட உணவு.
பசியில் வாடுவோர் நபியவர்களுக்கு எற்பட்ட பட்டினி நிலையை சிந்தித்தால் நமது நிலை அப்படியொன்றும் மோசமில்லை என தன்னிலை உணர்வதற்கும், உயர்தர உணவுகளை உண்டு களிப்போர் இறைவன் வழங்கிய பேற்றுக்கு நன்றி செலுத்திடவும் இது வழி வகுக்கும்.

எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிக்ஷா(ரழி) கூறினார் என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிக்ஷா (ரழி) பேரீச்சம் பழமும் தண்ணீரும் எங்கள் உணவாக இருந்தது. சில நேரங்களில் பக்கத்து வீட்டை சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் அதை அருந்துவோம் என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: உர்வா (ரழி) நூல்:   (புகாரி: 2567, 6459),   (முஸ்லிம்: 5282),   (அஹ்மத்: 23422).

ஹஜ்ஜ{ப் பெருநாளின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு எடுத்து வைப்போம். அதை நபியவர்கள் சாப்பிடுவார்கள் என ஆயிக்ஷா(ரழி) கூறினார்கள். இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள்
சிரித்து விட்டு குழம்புடன் கூடிய ரொட்டியை நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே! என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆபிஸ் பின் ரபீஆ (ரஹ்) நூல்:  (புகாரி: 5438)(நஸாயீ: 4356)(இப்னு மாஜா: 3304)  (அஹ்மத்: 23814, 24364).

நபி (ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து எனது வீட்டிலிருந்து கோதுமை ரொட்டியையும், வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். நபி (ஸல்) அவர்கள் தமது கவசத்தை மதீனாவில் உள்ள யூதரிடம் அடமானமாக வைத்து தமது குடும்பத்தாருக்காகத் தீட்டபடாத கோதுமையை வாங்கியிருந்தார்கள். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:  (புகாரி: 2069, 2508(திர்மிதீ: 1136)  (நஸாயீ: 4531)  (அஹ்மத்: 11910, 12692, 12954, 13010).

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரிடம் குழம்பு ஏதும் உள்ளதா? எனக் கேட்டார்கள். வினிகரை (சமையல் காடி)த் தவிர ஏதுமில்லை என்று குடும்பத்தினர் கூறினார்கள். அதைக் கொண்டு வரச் செய்து அதைத் தொட்டு சாப்பிட்டார்கள். வினிகர் சிறந்த குழம்பாக உள்ளதே என இருமுறை கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி)நூல்: (முஸ்லிம்: 3824, 3825, 3826). (திர்மிதீ: 1762, 1765(அபூதாவூத்: 3325)  (இப்னு மாஜா: 3308)  (அஹ்மத்: 13708, 13742, 14397, 14457, 14527, 14653, 14658, 14755)

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (வீட்டை விட்டு) வெளியே வந்தார்கள். அங்கே அபூபக்கர்(ரழி) உமர் (ரழி) ஆகியோரைக் கண்டார்கள். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபி (ஸல்) கேட்டார்கள், அதற்கு அவ்விருவரும் அல்லாஹ்வின்
தூதரே பசி என்றனர் என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக உங்களிருவரையும் எது வெளியேற்றியதோ அது தான் என்னையும் வெளியேற்றியது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல் :  (முஸ்லிம்: 3799)(திர்மிதீ: 2292)

ஸஹ்ல் பின் ஸஃது (ரழி) அவர்களிடம் தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதுண்டா? எனக் கேட்டேன். அவர்களை இறைவன் தன் தூதராக்கியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சலிக்கப்பட்ட மாவினாலான ரொட்டியை
சாப்பிட்டதேயில்லை என்றார்கள். ரசூல் (ஸல்) அவர்கள் அவர்கள் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா? எனக் கேட்டேன். நபியவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பியது முதல் அவர்களை
கைப்பற்றி கொள்ளும் வரை சல்லடையைப் பார்த்ததேயில்லை என்றார்கள்.

தோல் நீக்கப்படாத கோதுமை மாவை சலிக்காமல் எப்படிச் சாப்பிடுவீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் தீட்டப்படாத கோதுமையை திருகையில் அரைப்போம். பின்னர்(வாயால்) ஊதுவோம் உமிகள் பறந்து விடும் எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்து சாப்பிடுவோம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹாஸிம் (ரஹ்) நூல்:  (புகாரி: 5413, 5410),  (திர்மிதீ: 2287)(இப்னு மாஜா: 3326)(அஹ்மத்: 2178).