நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

சுத்தம்

“உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்துக்குள் அவர் மூச்சு விட வேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண்குறியைத் தமது வலது கரத்தால் தொடவோ தூய்மைப் படுத்தவோ வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி),

(புகாரி: 153)

“எச்சரிக்கை! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கின்றது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள், அதுதான் இதயம்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி),
(புகாரி: 52)

எண்ணம் போல் உயர்வு

“செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி),

(புகாரி: 1)

வெட்கம்

“இறை நம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 9)

உண்மை முஸ்லிம்

“பிற முஸ்லிம்கள் எவரது நாவு மற்றும் கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றார்களோ அவரே முஸ்லிம் ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
(புகாரி: 10)

நயவஞ்சகனின் அறிகுறிகள்

“நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று! பேசினால் பொய்யே பேசுவான். வாக்களித்தால் அதை மீறுவான். நம்பினால் துரோகம் செய்வான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 33)

மனைவி

“அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக உமக்குக் கூலி வழங்கப்படும். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி),
(புகாரி: 56)

அமானிதம்

“அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு ஒரு மனிதர், “அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?” என்று கேட்டார். அதற்கு, “எந்தக் காரியமாயினும் அது தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 59)

பிரச்சாரம் செய்யும் முறை

“இலகுவாக்குங்கள். சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடி விடுமாறு செய்து விடாதீர்கள். வெறுப்பூட்டாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
(புகாரி: 69)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(பசித்தோருக்கு) நீங்கள் உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவருக்கும்,அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
(புகாரி: 12)

குடும்பம்

“ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாக தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடுகின்றது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மஸ்ஊது (ரலி),
(புகாரி: 55)