நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது நமக்குள்ள கடமைகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

முன்னுரை

மனிதனைப் படைத்தப் பிறகு, அவன் மனம்போனப் போக்கிலே வாழ்ந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடாமல் அவனுக்கு முழுமையான வாழ்க்கைக் கலையைக் கற்றுத்தருவதற்காக, அல்லாஹ் தொடர்ச்சியாகப் பல தூதர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினான். அவர்களின் வரிசையில் இரட்சகனின் கிருபையால் நம்மை நிராகரிப்பெனும் காரிருள் பாதையிலிருந்து மீட்டெடுத்து, ஒளிமிக்க நேர்வழியில் அழைத்துச் செல்வதற்காக நபி (ஸல்) அவர்கள் அருட்கொடையாக அனுப்பப்பட்டார்கள்.

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

(அல்குர்ஆன்:)

குறிப்பிட்ட இனம், மதம், மொழி, குலம் மற்றும் கோத்திரம் சார்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, உலகமக்கள் அனைவருக்கும் சொர்க்கத்தை கொண்டு நற்செய்தி சொல்பவராகவும், நரகத்தை கொண்டு எச்சரிப்பவராகவும் நபி (ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டார்கள் என்பதை இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆகவே அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நம்மிடத்திலே சமர்ப்பித்துச் சென்றுள்ள ஓரிறைக் கொள்கையின் திருக்கலிமாவை முன்மொழிந்து, முஸ்லிம்களாக நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் ஈருலகிலும் வெற்றிபெறுகின்ற வகையில் நாம் வாழவேண்டுமெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும், அவர்கள் மீது நமக்குள்ள கடமைகள் என்ன? என்பதை பற்றியும் அறிந்து, அதனடிப்படையில் நமது வாழ்வை அமைத்து கொள்வது அவசியமாகும்.

நபிகளாரை நம்பிக்கைக் கொள்ளுதல்

இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்பவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளாளனாகிய அல்லாஹ்வின் அருமைத் தூதர் ஆவார்கள் என்று உறுதியாக நம்பவேண்டும். மேலும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கின்ற அருள்மறையான அல்குர்ஆனைக் கொடுத்து அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இம்மார்க்கத்தை மக்கள் மன்றத்தில் சுயமாகச் சிந்தித்து முன்வைக்க வில்லை. மாறாக தனக்கு வழங்கப்பட்ட வஹீயின் அடிப்படையில் தான் தனது தூதுத்துவப் பணியை அழகான முறையில் நிறைவேற்றினார்கள்.

அவர்களோடு தூதுத்துவம் முற்றுப்பெற்றுவிட்டது . இனிமேல் அவர்களுக்குப் பிறகு எந்த இறைத் தூதரும் வரப்போவதில்லை என்று நம்பிக்கைக் கொள்வதும் மிக முக்கியம். அப்போது தான் அவர்கள் முழுமையாக நம்பிக்கைக் கொண்டவர்களாக ஆக முடியும். இதைத் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்

உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழி காட்டினான்.

(அல்குர்ஆன்:)

எனவே அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நாம் அருளிய ஒளியையும் நம்புங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 64:8)

அவர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 53:4)

அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன்: 7:158)

இந்த வசனங்களை மெய்ப்பிக்கும் முகமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப் பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.
2. தொழுகையை நிலைநிறுத்துவது.
3. (கடமையானாவர்கள்) ஸகாத் வழங்குவது.
4. (இயன்றவர்கள் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.
5. ரமளானில் நோன்பு நோற்பது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புஹாரி (8)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்’ என உறுதி மொழியளித்து, (கடமையான) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத் (எனும் ஏழைகளின் உரிமையை) வழங்காதவரை (இணைவைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப் பட்டேன். இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால் தம் உயிரையும் உடைமை களையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர! மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலிலி)
நூல் : புஹாரி (25)

இதற்கு நேர்மாற்றமாக இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் காதியான் என்ற ஊரில் பிறந்த மிர்சாகுலாம் காதியான் என்பவனை இறைத்தூதர் எனக் குருட்டுத்தனமாகக் கொக்கரித்துக் கொண்டிருக்கின்ற காதியானிகள், அலீ (ரலி) அவர்களுக்கு வந்த வஹீயை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தட்டிப் பறித்துவிட்டார்கள் என்று கதைப் பேசித்திரிகின்ற ஷியாக்கள், இவர்களெல்லாம் முஸ்லிம்கள் கிடையாது. இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி வழிகேட்டிலே வீழ்ந்துவிட்ட இறைநிராகரிப்பாளர்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நபிகளாருக்கு முழுமையாகக் கட்டுப்படுதல்

மனித சமுதாயம் எப்படி வாழ வேண்டும்? எப்படியெல்லாம் வாழக் கூடாது? என்பதைத் தெளிவுபடுத்தி, அவர்களை வழி நடத்திச் செல்வதற்காக ஏக இறைவனால் நபி(ஸல்) அவர்கள் இறுதித் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதனடிப்படையில் முஃமின்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கடமைகள் என்ன? எல்லாக் காலகட்டத்திலும் எச்சரிக்கையாகத் தவிர்ந்து இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பதை நபி(ஸல்) நமக்கு சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அந்த மார்க்கச் சட்டங்களில் எதனையும் மறைக்கவோ, மாற்றவோ, மறுக்கவோ எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. இன்னும் அவற்றை அலட்சியப்படுத்தி வரம்புமீறாமல், அதற்கேற்ப முழுமையாகக் கட்டுப்பட்டு நாம் வாழவேண்டும். இவ்வாறு தான் அல்லாஹ் திருமறையில் கட்டளையிடுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!

(அல்குர்ஆன்:)

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(அல்குர்ஆன்:)

தனது கட்டளைகளுக்கு மக்கள் கட்டுப்பட்டு வாழவேண்டும். அப்போது தான் அவர்கள் இறையருளைப் பெற்று சொர்க்கம் செல்ல முடியும் என்பதை நபி (ஸல்) அவர்கள் பின்வருகின்ற ஹதீஸ்களில் எடுத்துறைக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவர் எனக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந் தவராவார். எவர் எனக்கு மாறு செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவராவார். எவர் தலைவருக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். எவர் தலைவருக்கு மாறுசெய்கிறாரோ அவர் எனக்கு மாறுசெய்தவராவார். தலைவர் ஒரு கேடயம். அவருக்குக் கீழிருந்து போரிடப்படும்; அவர் மூலம் பாதுகாப்பு பெறப்படும். அவர் (தன் தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறை(யச்ச) உணர்வைக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்து கொண்டால் அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதுவல்லாத(தீய)வற்றை அவர் கட்டளை யிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர் மீது(ம்) சாரும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)
நூல் : புஹாரி (2957)

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)

நூல் : புஹாரி (7280)

நுஅமான் பின் கவ்கல் (ரலிலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையான தொழுகையை நிறைவேற்றி, (மார்க்கத்தில்) விலக்கப்பட்டவற்றை விலக்கப்பட்டவை என்றும் அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்தால் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா? கூறுங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்’ என்றார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிலி)
நூல் : முஸ்லிம் (16)

இந்த இறைச்செய்திகளைச் சற்றுக் கவனித்துப் பார்த்தால், இன்று தங்களை முஸ்லிம் என்று அழைத்துக் கொண்டு, குர்ஆன் மட்டுமே போதும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரத்தில் நமக்கு வழிகாட்டுதல் இல்லை என்று வியாக்கியானங்கள் கூறி அலைந்து கொண்டிருப்பவர்கள் முஃமின்கள் இல்லை, அவர்கள் நிரந்தரமான நரக நெருப்பிற்கு தகுதியான இறைநிராகரிப்பாளர்கள் தான் என்பதை அறிந்து கொள்ளலாம். இன்னும் இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் படிப்படியாக இறக்கப்பட்டு 23 ஆண்டுகளில் தான் முழுமையடைந்தது. ஆதலால் தடைசெய்யப்பட்ட காரியங்களை விட்டும் தீவிரமாக மக்களைத் தடுக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அவர்களின் தவறுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்டித்தால் போதுமானது எனக் கூச்சலிடுபவர்கள், குர்ஆன் ஹதீஸுக்கு எதிராக செயல்படுபவர்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் தர்கா வழிபாடு, வட்டி, வரதட்சனை, விபச்சாரம், சூதாட்டம், நயவஞ்சகம், கலப்படம், சிசுக்கொலை, மது மற்றும் இலஞ்சம் இதுபோன்ற தடைசெய்யப்பட்டக் காரியங்களை அறிந்தும் அதிலே குதூகலித்துக் கொண்டிருப்பவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்பவர்கள். மறுமையில் ஈடேற்றம் பெறமுடியாதவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

தூதரின் தீர்ப்பின் பக்கம் திரும்புதல்

இந்தக் காரியத்தைச் செய்ய மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றதா? இல்லையா? இந்த விஷயங்களில் ஈடுபட மார்க்கத்தில் தடை உள்ளதா? இல்லையா? இந்த அமலை எப்படி செய்வது? இந்த அமலை இப்படிச் செய்தால் என்ன? இது போன்ற கேள்விகள், கருத்துவேறுபாடுகள், மற்றும் முரண்பாடுகள் பிரச்சனைகள் மறுமைநாள் வரை மக்கள் மத்தியில் முளைத்துக் கொண்டுதான் இருக்கும். அப்போதெல்லாம் மனோ இச்சைக்கு மயங்கி முன்னோர்கள், தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் கருத்துக்களுக்குக் கண்மூடித்தனமாகக் கட்டுப்பட்டுவிடக் கூடாது.

மாறாக அவற்றை நபிகளாரின் தூய்மையான வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து, ஆராய்ந்து அதிலிருந்து அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவல்லாத வேறு வழியைத்தேடிச் செல்பவர்கள் வழிகேட்டிலே விழுந்துவிடுவார்கள். இவ்வாறே அல்லாஹ் தனது திருமறையில் தீர்ப்பளிக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

(அல்குர்ஆன்: 4:59)

அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்:)

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன 4 : 65)

அல்லாஹ் தனது மார்க்கத்தை இறுதிதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மூலமாக முழுமைப்படுத்தி விட்டான். நபிகளாருக்கு பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட வழிமுறைகளுக்கும் மார்க்கத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. அந்தக் காரியங்களை பின்பற்றினால் அவைகளுக்கு மறுமையில் நன்மைகள் கிடைக்காததோடு, அவை நம்மை நிரந்தரமான நரகப்படுகுழியில் தள்ளிவிடும்.

இந்த எச்சரிக்கையை பின்வரும் மார்க்க ஆதாரங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்:)

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! இது எந்த நாள்?” எனக் கேட்ôர்கள். மக்கள் “புனிதமிக்க தினம்’ என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் “இது எந்த நகரம்?” எனக் கேட்டதும் மக்கள் “புனிதமிக்க நகரம்’ என்றனர். பிறகு அவர்கள் “இது எந்த மாதம்?” எனக் கேட்டதும் மக்கள் “புனிதமிக்க மாதம்!” என்றனர். பிறகு நபி (ஸல்) அவாகள், “நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!” எனப் பல தடவை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, “இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்துவிட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?” என்றும் கூறினார்கள்.
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(வ்விறை)வன் மீது சத்தியமாக! இது நபியவர்கள் தமது சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்.
பின்னர் “இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்! எனது இறப்புக்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலிலி)
நூல் : புஹாரி (1739),(1740)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் :
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரலி
நூல் : புகாரி (2697)

நம்முடைய கட்டளையின்றி எவரேனும் அமலைச் செய்தால் அது மறுக்கப்பட்டதாகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரலி
நூல் : முஸ்லிம் (3243)

செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மதின் வழியாகும். காரியங்களில் மிகக் கெட்டது புதிதாக ஏற்படுத்தப்பட்டதாகும். புதிதாக ஏற்படுத்தப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும். வழிகேடு அனைத்தும் நரகத்திற்குரியவையாகும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : நஸயீ (1560)

மேற்கண்ட குர்ஆன், ஹதீஸ்களை சிந்தித்துப் பார்த்தால் இன்று நமக்கு மத்தியில் நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு எதிராக, இது மார்க்கத்தின் ஆதாரம் தான் என்று மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்ற குப்பைகளில் புரண்டுக் கொண்டிருப்பவர்களும், நன்மைகள் கொட்டிக்கொடுப்படும் என்று நினைத்துக் கொண்டு தர்கா வழிபாடு, மீலாதுவிழா, கந்தூரி விழா, மவ்லூது, பாத்திஹா, ஜோதிடம், பால்கிதாபு பார்த்தல் போன்ற கேடுகெட்ட காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களும் மறுமையில் கைசேதப்பட்டு, நஷ்டவாளிகளாக நரகத்தில் நுழையக்ககூடியவர்கள் தான் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

நபிகளாரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளுதல்

தூதுத்துவதத்திற்கு முன்னும் பின்னும் பரிசுத்தமாக வாழ்ந்தார்கள், மாமனிதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். மாற்றார்களே போற்றுமளவிற்கு நற்பண்புகளின் உறைவிடமாக, ஒழுக்கச் சீலராகத் திகழ்ந்தார்கள். எந்தளவிற்கெனில், எதை ஓதிக்காட்டினர்களோ அந்த வேதவரிகளுக்கு விரிவுரையாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருந்தது. ஒரு அடியான், தனக்கு இறைவன் அளித்த அருட்கொடைகளைப் பயன்படுத்துவது எப்படி? தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தாரிடம் எத்தகைய அணுகுமுறையை அமைத்து கொள்ள வேண்டும்? இறையருளைப் பெறுதற்கேற்ப எவ்வாறு மார்க்கத்தில் பேணுதலாக இருப்பது? இன்பங்கள், துன்பங்களின் போது எவ்வாறு இருக்க வேண்டும்? சுருங்கக் கூறின் இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெறுகின்ற விதத்தில் வாழ்வது எப்படி? என்பதை நமக்கு பிரகடனப்படுத்தி, அதை அப்படியே தமது வாழ்விலும் நெறிதவறாமல் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள் நபி(ஸல்) அவர்கள். ஆதலால் தான் அல்லாஹ் ஈமான்கொண்டவர்களுக்கு இவ்வாறு திருமறையில் அறிவுரையைக் கூறுகிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(அல்குர்ஆன்: 33:21)

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.
(அல்குர்ஆன்:)

“அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்:)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை விதம் எவ்வாறு இருந்தது என்பதை, அவர்களுடைய அன்பு மனைவியான ஆயிஷா நாயகி அவர்களே இவ்வாறு விளக்குகிறார்கள்,

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், நபி(ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : சஃத் பின் ஹிஷாம்
நூல் : புஹாரி (24139)

நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத்தந்த வாழ்க்கை முறை தான், மனிதனை மனிதனாக மதிக்கக் கற்றுத்தருகிறது ; மனிதனிடத்தில் மறைந்துள்ள மிருகத்தன்மைகளைக் களைந்தெறிந்து அவனைப் தூய்மையானவனாக மாற்றுகிறது: மகத்துவமிக்க அறிவை மூடப்பழக்கவழங்களில் அடகுவைத்துத் திரிவதைத் தடுத்து, பகுத்தறிவுமிக்க பண்பாட்டைப் போதிக்கிறது ; மனிதனைத் தீண்டுகின்ற அனைத்துவிதமானப் பிரச்சனைகளுக்கும் அற்புதமான தீர்வையளிக்கின்றது என்பதை அறிந்து, இன்று இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணியணியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களில் பலர் மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களில் நபிகளாருக்கு மாறுசெய்வதோடு, அவர்களின் வழிகாட்டலுக்கு மாற்றமாக வதந்திகளைப் பரப்புதல், கோழைத்தனம், பொய்சத்தியம் செய்தல், குழப்பத்தைத் தோற்றுவித்தல், துருவித் துருவிவிசாரித்தல், பட்டப்பெயர் சூட்டுதல், கேலிகிண்டல் செய்தல், பெருமையடித்தல், முகஸ்துதி, வீண்விரையம் மற்றும் கஞ்சத்தனம் இதுபோன்ற தவறானப் பண்புகளைத் தாங்கியவர்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களை நம்பிக்கைக் கொள்கிறேன் என்று உதட்டளவில் மட்டும் கூறிவிட்டு, உலக ஆதாயங்களுக்காக அண்ணலாரின் போதனைகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு பெயர் தாங்கி முஸ்லிம்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனிமேலாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியாக நமக்கு கிடைத்துள்ள இஸ்லாத்தின் இரத்தினக் கருத்துக்களின் மகிமையை உணர்ந்து வணக்கவழிபாடுகள், திருமணம், பொருளாதாரம், நிர்வாகம் , இயற்கைத் தேவைகள் , பொறுப்புகள் இப்படி வாழ்வின் அனைத்து நொடிகளிலும் முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ நாம் முற்படவேண்டும். அப்போதுதான் நாம் படைத்தவனை நேசிப்பவர்களாக மாறி அவனது நேசத்தைப் பெறமுடியும்.

ஏனெனில் இவ்வாறே அருள்மறையில் அல்லாஹ் ஆணையிடுகிறான்.
(நபியே!) நீர் கூறுக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; மேலும், உங்கள் பாவங்களையும் உங்களுக்காக மன்னிப்பான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கருணை உடையவ னாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன்: 3:31)

நபிகளாரை நேசித்தல்

நமக்குப் பயனுள்ள வகையில் உதவிசெய்பவர்கள், ஆறுதல் கூறி மனஅமைதிக்கு வித்திடுபவர்கள், உற்சாகமூட்டி நமது வெற்றிக்கு அச்சாரம் போடுபவர்கள், கஷ்டப்படும் போது கைமாறுக் கருதாமல் கைகொடுப்பவர்கள், இப்படி அனைத்து விதத்திலும் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்க ஆதரவளிப்பவர்களை நாம் நேசிக்கின்றோம். அவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இத்தகையவர்களை நேசிப்பதை விட நமக்கு நேர்வழிகாட்ட வந்த நபி(ஸல்) அவர்களை நாம் பன்மடங்கு அதிகமாக நேசிக்க வேண்டும்.
ஏனெனில் அற்பமான நிலையற்ற இவ்வுலகத்தின் கவர்ச்சியால் கவர்ந்திழுக்கப்பட்டு, ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்கி சீரழிந்துவிடாமல், ஈடுஇணையற்ற இன்பங்களை தாங்கியிருக்கின்ற சொர்க்கத்தைச் சென்றடைவதற்குரிய மகத்தான வாழ்க்கைமுறையை நபி(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் அழைப்புப் பணியாற்றிய காலத்தின் சூழ்நிலைகளைச் சற்று நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். மக்களின் கேவலமான குற்றச்சாட்டுகள், மட்டமான வசைமொழிகள், அவதூறுகள், எதிர்ப்புகள் மற்றும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதளவிற்கு துன்பங்களையும் கொடுமைகளையும் சகித்துக்கொண்டு, தியாகத்தின் திருவடிவமாக இருந்து ஏகத்துவத்தை மக்கள் மன்றத்தில் தயங்காமல் தைரியமாக முன்வைத்தார்கள். எனவே முஹம்மத் நபி(ஸல்) அவர்களை நாம் மனிதர்கள் அனைவரையும் விட மிக அதிகமாக நேசிக்க வேண்டும். இவ்வாறு தான் நமக்கு மார்க்கத்தில் கட்டளையிடப்பட்டுள்ளது.
நம்பிக்கை கொண்டோருக்கு, தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.
(அல்குர்ஆன்:)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனை வரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)
நூல் : புஹாரி (15)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். (அவை:)
1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரி யோராவது.
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலிலி)
நூல் : புஹாரி (16)
நபிகளாரின் மீதான நேசத்தை வெளிப்படுத்துவது எப்படி? பாங்கு சொல்லப்படும் போது, அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்பதை செவியுற்றால் இரு கட்டைவிரல்களையும் கண்களில் ஒத்திக்கொள்ளுதல், முஹம்மது என்று அட்டையில் எழுதி வீட்டுமுற்றத்தில் மாட்டி வைத்தல் போன்றக்காரியங்கள் நபிகளாரை நேசிப்பதின் அடையாளமாக ஆகுமா ? நிச்சயமாக இல்லை. அண்ணலாரை நேசிக்கிறோம் என்றால், அவர்கள் எந்ததெந்தக் காரியங்களையெல்லாம் கண்டு வெறுத்தார்களோ, சமுதாயத்திலிருந்து அறுத்தெறிய அரும்பாடுபட்டார்களோ அவைகளை நாமும் வெறுத்து ஒதுக்கவேண்டும். அவைகளால் சமுதாயத்தில் தோன்றியிருக்கின்ற தீயவிளைவுகளைத் துடைத்தெறியத் துணியவேண்டும். இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நாம் நேசிப்பதின் உண்மையான அர்த்தமாக இருக்க முடியும்.
இன்னும் நமது வாழ்வின் அனைத்து அசைவுகளிலும் நபிகளாரின் போதனைகளை பிரதிபலிக்க வேண்டும். உலகமே எதிர்த்து நின்றாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வாழ்க்கைத் திட்டத்தைத் தயக்கமின்றி பின்பற்றவேண்டும். அப்போது தான் நபிகளாரை நாம் நேசித்தவர்களாக ஆக முடியும்.
“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன்:)
ஆனால் சிலர் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிக்கின்றோம்; அவர்களை புகழ்கின்றோம் எனக் கூறிக்கொண்டு, நன்மைகளை நாசமாக்குகின்ற நரகத்தில் நிரந்தரமாகத் தள்ளுகின்ற சொர்கத்தை ஹராமாக்குகின்ற இணைவைப்பிலே ஈடுபட்டு ஈமானைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தளவிற்கெனில் நபி(ஸல்) அவர்களுக்குப் பாவங்களை மன்னித்தல், நன்மைகளை வாரிவழங்குதல், குழந்தை பாக்கியத்தைத் தருதல், மறைவானஞானம், நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுகின்ற தன்மைகளெல்லாம் இருப்பதாக புத்தகங்களில் எழுதிவைத்து ஓதிக்கொண்டு, அதை மக்கள் மத்தியில் மார்க்கத்தின் பெயரால் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரை அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்விற்கு இணையாக வைத்து, ஷிர்க் எனும் பகிரங்கமான வழிகேட்டில் வீழ்ந்துகிடக்கிறார்கள். இவர்களின் கண்மூடித்தனமானக் கருத்துக்களைக் களைந்தெறிந்து, கடுமையாகக் கண்டிக்கின்ற வகையிலே திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்
அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக!
(அல்குர்ஆன்:)
“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன்: 18:110)
“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்க வில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மை களை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன்:)
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவ.
(அல்குர்ஆன்:)

நபிகளார் மீது ஸலவாத் கூறுதல்

இனத்திற்காகப் பேராடியவர்கள், தான தர்மங்களை வாரி வழங்கியவர்கள், சமூகக் கொடுமைகளை எதிர்த்துக் குரல்கொடுத்தவர்கள், தேசத்தின் விடுதலைக்காக இன்னுயிர் நீர்த்தவர்கள் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களை வெறுத்தவர்கள் இப்படி மக்களின் நலனில் அக்கறைக் காட்டியவர்களைப் பற்றி அவர்களின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே புகழ்மாலைகள் பாடுவதைப் பார்க்கின்றோம். அவர்களின் நினைவாக மணிமண்டபங்களையும் நிழற்குடைகளையும் எழுப்பி அவர்களைப் போற்றித் துதிப்பாடுவதையும் கண்கூடாகக் நாம் கண்டுவருகிறோம். ஆனால் இவர்களையெல்லாம் விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பன்மடங்கு மேன்மையானவர்கள் என்பதை அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தைத் தெரிந்துகொண்டவர்கள் நன்றாக உணர்ந்திருப்பார்கள். ஆதலால் தான் தூதர்(ஸல்) அவர்கள் மறைந்து 1400 வருடங்களுக்கும் அதிகமாக காலச்சக்கரம் சுழன்றிருந்தாலும், அவர்களின் வாழக்கையின் அடிச்சுவடுகளை வாழையடிவாழையாகப் பின்பற்றி வாழ்கின்ற சமுதாயம் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய மகத்தானத் தாக்கத்தை மாற்றத்தைத் மனிதசமுதாயத்தில் தோற்றுவித்த மாமனிதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மீது முஃமின்கள் அனைவரும் ஸலவாத் கூறி, அன்றாடம் அவருக்காகப் பிரார்த்தனை புரிந்து அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும்.
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங் கள்! ஸலாமும் கூறுங்கள்!
(அல்குர்ஆன்:)
நபி(ஸல்) அவர்கள், நாட்களில் மிகச்சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். எனவே அன்று என்மீது ஸலவாத் அதிகமாகக் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றது என்று கூறினாôகள். இறைத்தூதர் அவர்களே நீங்கள் மண்ணோடு மண்ணான நிலையில் எங்களின் ஸலவாத் எப்படி எடுத்துக் காண்பிக்கப்படும் என்று நபித்தோழர்கள் கேட்டனர். நிச்சயமாக நபிமார்களின் உடல்களை (சாப்பிட) பூமிக்கு அல்லாஹ் தடை விதித்துவிட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி)
நூல் : அபூதாவூத் (1047)
தன் மீது அதிகமதிகமாக ஸலவாத் சொல்லுங்கள் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள், அதை எப்படிச் சொல்லவேண்டும் என்பதையும் கற்றுத்தந்துள்ளார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லுவதின் மூலம், மறுமையில் அவர்களுடைய பரிந்துரையைப் பெறுகின்ற பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கüடம், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது “சலாம்’ கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். (தங்கள் மீது) “ஸலவாத்’ கூறுவது எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம ஸல்- அலா முஹம்மதின், வ அலா ஆ- முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆ- இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆ- முஹம்மதின், கமா பாரக்த்த அலா ஆ- இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்” என்று சொல்லுங்கள்!” என பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ர-)
நூல் : புஹாரி (4797)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும் போது “அல்லாஹ்ýம்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா (இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவி ருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரித்தான (சொர்க்கத்தின்) உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்கüத்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)” என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாüல் என் பரிந்துரை கிடைக்கும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர-)
நூல் : புஹாரி (614)
மாறாக தன்னுடைய பெயர் சொல்லப்பட்டும் தன்மீது ஸலவாத் கூறாமல் அலட்சியமாக இருப்பவர்களை நபி(ஸல்) அவர்களே கடுமையாக எச்சரித்துள்ளர்கள்.
யாரிடம் என் பெயர் கூறப்பட்டும், அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ, அவர் கஞ்சன் ஆவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ(ரலி)
நூல் : அஹ்மத் (1762)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது ஏறினாôகள். ஆமீன் ஆமீன் ஆமீன் என்றுக் கூறினாôகள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் எந்தவொரு அடியான் ரமலானை அடைந்தும் அவனது பாவம் மன்னிக்கப்படவில்லையோ அவனது மூக்கு மண்ணைக்கவ்வட்டும் என்று கூறினாôகள். அதற்கு நான் ஆமீன் என்றுக் கூறினேன். பிறகு எந்த அடியானிடத்தில் என்னைபற்றி சொல்லப்பட்டும் போது அவன் என் மீது ஸலாம் கூறவில்லையோ அவனுடைய மூக்கு மண்ணைக்கவ்வட்டும் என்று கூறினாôகள் அதற்கு ஆமீன் என்றுக்கூறினேன். எந்த அடியான் தனது தாய் தந்தையையோ அல்லது இருவரில் ஒருவரையோ பெற்றிருந்தும் சொôக்கம் செல்லவில்லையோ அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினாôகள். அதற்கு நான் ஆமீன் என்றுக் கூறினேன் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா(ரலி)
நூல் : பைஹகீ (8767)
அபூதாவூத் (1047) ஹதீஸிலுள்ள என் மீது ஸலவாத் சொல்லப்பட்டால் அது எனக்கு எடுத்துக்காட்டப்படும் என்ற நபிகளாரின் கூற்றைச் சற்று நாம் சிந்துத்துப் பார்க்கவேண்டும். இங்கு நீங்கள் சொல்லுகின்ற ஸலவாத்தை தானாகவே கேட்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறவேயில்லை. மாறாக அல்லாஹ்வின் அனுமதியோடு மலக்குமார்களின் மூலமாக தனக்கு எடுத்துக்காட்டப்படும் என்பதையே இங்கு கூறுகிறார்கள். ஆகவே அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் இறந்தபின்னால், அவர்களுக்கும் இந்த உலகத்திற்குமுள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும். இங்கு நிகழ்கின்ற விஷயங்களை அவர்களால் ஒருபோதும் அறிய முடியாது எனும் போது, இறைநேசர்கள் என்ற பெயரில் தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களால் இங்கு நிகழ்வதை எப்படி அறிந்து கொள்ளமுடியும்?. தர்காக்களில் மண்டியிட்டுக் கதறக்கூடியவர்களின் கோரிக்கைகள், பிரார்தனைகள் மற்றும் வேண்டுதல்களை எவ்வாறு அவர்களால் செவியேற்கமுடியும் ? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஆகவே குர்ஆன், ஹதீஸ்களில் கூறப்பட்டிருப்பதை போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சரியான முறையில் நம்பிக்கைக் கொண்டு, அவர்களை நமது வாழ்வின் முன்மாதிரியாக முழுமையாக ஏற்று, அவர்களின் அடிச்சுவடுகளை அப்படியே அழகானமுறையில் பின்பற்றி, உலகமக்கள்அனைவரைவிட அவர்களை அதிகமாக நேசித்து, அவர்கள் மீது ஸலவாத் கூறி ஈருலகிலும் வெற்றிபெறுவர்களாக அல்லாஹ் நம்மை மாற்றி அருள்புரிவானாக.