07) நபிகள் நாயகத்துக்கு சூனியம்

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்

புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களை தங்களின் கருத்தை நிரூபிக்கும் முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அந்த ஹதீஸ்கள் வருமாறு:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். எனக்கு நிவாரணம் கிடைக்கும் வழியை இறைவன் காட்டிவிட்டான் என்பது உனக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைப் பகுதியில் அமர்ந்து கொண்டார்.

மற்றொருவர் என் கால் பகுதியில் அமர்ந்து கொண்டார். இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன? என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் விடையளித்தார். இவருக்குச் சூனியம் செய்தவர் யார் என்று முதலாமவர் கேட்டார். லபீத் பின் அல் அஃஸம் என்பவன் சூனியம் வைத்துள்ளான் என்று இரண்டாமவர் கூறினார். எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று முதலாமவர் கேட்டார்.

அதற்கு இரண்டாமவர் சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று விடையளித்தார். எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று முதலாமவர் கேட்டார். தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது என்று இரண்டாமவர் கூறினார் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள்.

அங்கு உள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான் களின் தலைகளைப் போன்று இருந்தது என்று என்னி டம் கூறினார்கள். அதை அப்புறப்படுத்தி விட்டீர் களா? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லை. எனக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 3268)

தமது மனைவியருடன் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

(புகாரி: 5765)

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) ஆறு மாதங்கள் நீடித்ததாக முஸ்னத்(அஹ்மத்: 23211)வது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தன்னிலை மறந்து விடும் அளவுக்கு சூனியத்தால் ஆறு மாத காலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கருத்து போல தோன்றலாம். ஆனால் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவோ, அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்துக்குத் தான் வந்தாக வேண்டும்.