நபிகளார் எப்போது பிறந்தார்கள்?
இறைவனின் இறுதித் தூதுவராக அரபுலகத்தில் வருகை தந்து, மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி, அழகிய வாழ்க்கை முறையை இவ்வுலகத்திற்குத் தந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறப்பு தொடர்பாகப் பல மாறுபட்ட கருத்துக்கள் நபிமொழி மற்றும் வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ளன.
இஸ்லாமிய மார்க்கத்தில் எந்தவொரு தனிநபரின் பிறப்பு, இறப்பு அடிப்படையில் எந்தச் சிறப்பும் இல்லை என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். நபி (ஸல்) அவர்களின் பிறப்பை மையமாக வைத்து, மார்க்கத்திற்கு முரணான வகையில் மீலாது விழா கொண்டாடும் சில முஸ்லிம்களிடம், நபியவர்களின் பிறந்த நாள் எப்போது என்று கேட்டால் அதற்கு அவர்களால் சரியான பதிலைக் கூற முடியாது.
நபி (ஸல்) அவர்களின் பிறப்பு குறித்துப் பல்வேறு கருத்துக்கள் இருப்பதே இதற்குக் காரணம். இதுதொடர்பாக ஹதீஸ்கள் மற்றும் வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் எவை? அவற்றின் தரம் என்ன? அவற்றில் சரியான கருத்து எது என்பதைக் காண்போம்.
நபிகளார் பிறந்த காலத்தில் குறிப்பிட்ட வருடங்கள் தொடர்ச்சியாக இருந்து வரவில்லை. அவ்வப்போது நடந்த சில முக்கிய நிகழ்ச்சிகளைக் கொண்டே வருடங்களைக் குறிப்பிட்டு வந்துள்ளனர். நபிகளார் பிறந்த காலகட்டத்தில் நடந்த மிக முக்கியமான ஒரு அதிசய சம்பவம் அன்றைய காலத்தில் ஆண்டுக் கணக்கைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மக்காவில் உள்ள கஅபா ஆலயத்திற்கு, உலகின் பல பகுதிகளிலிருந்து மக்கள் திரளாக வந்து செல்வதைக் கண்டு பெறாமைப்பட்ட ஏமன் நாட்டு மன்னன் அப்ரஹா என்பவன் கஅபா ஆலயத்தை இடிப்பதற்கு யானைப்படையுடன் வந்தான். அவனை அல்லாஹ், அபாபீல் எனும் பறவைகள் மூலம் அழித்தான்.
இந்தச் சம்பவம் அன்றைய மக்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தது. எனவே இந்தக் கால கட்டத்தில் பிறந்தவர்களை யானை ஆண்டில் (ஆமுல் ஃபீல்) பிறந்தவர்கள் என்று குறிப்பிட்டு வந்தனர்.நபி (ஸல்) அவர்கள் இந்தக் காலகட்டத்தில் தான் பிறந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கைஸ் பின் மக்ரமா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), குபாஸ் பின் அஷ்யம் (ரலி) ஆகியோர் வழியாக சில செய்திகள் வந்துள்ளன.
கைஸ் பின் மக்ரமா (ரலி) அறிவிக்கும் செய்தி:
நானும் நபி (ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம்.
அறிவிப்பவர்: கைஸ் பின் மக்ரமா (ரலி)
(திர்மிதீ: 3552)
இதே செய்தி முஸ்னத் அஹ்மதிலும் இடம்பெற்றுள்ளது.
இதே செய்தி தப்ரானீ அவர்களின் முஃஜமுல் கபீரிலும் இடம்பெற்றுள்ளது.
இதே செய்தி ஹாகிமிலும் இடம்பெற்றுள்ளது.
قال ابن إسحاق : كان رسول الله صلى الله عليه و سلم عام عكاظ ابن عشرين سنة
هذا حديث صحيح على شرط مسلم و لم يخرجاه
கைஸ் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வழியாக வரும் அனைத்துச் செய்தியிலும் முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் கைஸ் என்பவர் இடம்பெறுகிறார்.
இவரின் நம்பதன்மை உறுதிசெய்யபடவில்லை. இவர் யாரென அறியப்படாதவர். எனவே இந்தச் செய்தி ஆதாரத்திற்கு ஏற்ற செய்தி அல்ல.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி:
وهذا الحديث لا نعلمه رواه عن يونس بن أبي إسحاق إلاَّ حجاج بن مُحَمد ، وَكان ثقة.
நபி (ஸல்) அவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்னத் பஸ்ஸார் (4762,5017)
ஹாகிமிலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக இடம்பெறுள்ளது.
هذا حديث صحيح على شرط الشيخين و لم يخرجاه
தப்ரானி அவர்களின் முஃஜமுல் கபீரிலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக இடம்பெறுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்தி பைஹகீ இமாம் அவர்களின் தலாயிலுந் நுப்வா என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
قال ولد النبي عام الفيل
இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்தி உறுதியான செய்தி என்று ஹைஸமீ உட்பட பலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் அனைத்துச் செய்திகளிலும் யூனுஸ் பின் இஸ்ஹாக் என்பவர் தம் தந்தை வழியாகவே அறிவிப்பதாக இடம்பெற்றுள்ளது.
யூனுஸ் பின் அபீஇஸ்ஹாக் இடத்தில் கடுமையான கவனக்குறைவு உள்ளது என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 11, பக்கம் 381
யூனுஸ், தம் தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை அஹ்மத் அவர்கள் பலவீனமானது என்று சொல்லியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 11, பக்கம்: 381
யூனுஸ் உடைய செய்திகள் குளறுபடி நிறைந்தவை என்று அஹ்மத் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 11, பக்கம்: 382
யூனுஸ் பின் அபீஇஸ்ஹாக் என்பவர் ஹதீஸ் துறையில் நடுத்தரத்தில் உள்ளவர். எனினும் (தம் தந்தை) அபூஇஸ்ஹாக் வழியாக அறிவிப்பவை குளறுபடிஉள்ளவை.
நூல்: ஷரஹ் இலல் திர்மிதீ, பக்கம்: 382
யூனுஸ் பின் அபீஇஸ்ஹாக் என்பவர் குறிப்பாகத் தம் தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகள் குளறுபடி நிறைந்தவை என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளதாலும் இந்தச் செய்தியில் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் என்பவர் தம் தந்தை வழியாக அறிவித்திருப்பதாலும் இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை.
சுவைத் பின் கஃப்லா (ரலி) அறிவிக்கும் செய்தி:
قال أنا لدة رسول الله ولدت عام الفيل
قال الشيخ وقد روى عن سويد بن غفلة أنه قال أنا أصغر من النبي بسنتين
நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே காலகட்டத்தில் பிறந்தவர்கள். நான் யானை ஆண்டில் பிறந்தேன்.
அறிவிப்பவர்: சுவைத் பின் கஃப்லா (ரலி)
நூல்: தலாயிலுந் நுபுவா – பைஹகீ,
பாகம்: 1, பக்கம்: 79
இந்தச் செய்தியில் நுஐம் பின் மைஸரா என்பவர், தமக்கு அவர்களில் சிலர் வழியாகக் கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் யார்? அவர்களின் நம்பகத்தன்மை என்ன? என்ற விவரங்கள் இல்லாததால் இந்தச் செய்தியும் பலவீனம் அடைகிறது.
குபாஸ் பின் அஷ்யம் (ரலி) அறிவிக்கும் செய்தி:
குபாஸ் பின் அஷ்யம் (ரலி) அவர்களிடம் “நீங்கள் பெரியவரா? அல்லது நபி (ஸல்) அவர்கள் பெரியவரா?” என்று அப்துல் மலிக் பின் மர்வான் அவர்கள் வினவினார்கள். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் என்னை விட (மதிப்பில்) பெரியவர்கள். ஆனால் நான் அவர்களைவிட வயதில் மூத்தவன். நபி (ஸல்) அவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள்.
நான் மாற்றம் அடைந்திருந்த யானையின் சாணத்திற்கு அருகில் என்னை என் தாயார் கொண்டு போய் நிறுத்தியது எனக்கு நினைவிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் நாற்பதாவது வயதில் நபித்துவம் வழங்கப்பட்டது.
அறிவிப்பவர்: அபுல் ஹுவைரிஸ்,
நூல்: தலாயிலுந் நுப்புவா – பைஹகீ,
பாகம்: 1, பக்கம்: 77
இதே செய்தி தப்ரானி அவர்களின் முஃஜமுல் கபீரிலும் இடம்பெற்றுள்ளது.
இந்த இரண்டு நூல்களில் அப்துல் அஸீஸ் பின் அபீ ஸாபித் என்பவர் இடம்பெற்றுள்ளார்.
இவர் நம்பகமானவர் இல்லை என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவருடைய ஹதீஸ்கள் எந்த மதிப்பும் இல்லாதவை என்ற யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியதாக ஹுஸைன் அவர்கள் குறிப்பிடுகிறார். இவர் ஹதீஸ்துறையில் மறுக்கப்படவேண்டியவர், இவருடைய ஹதீஸ்களை எழுதப்படாது என்று புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ்துறையில் விடப்பட்டவர் என்றும் ஒரு முறையும் இவருடைய செய்திகளை எழுதப்படாது என்று இன்னாரு முறையும் நஸாயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 6, பக்கம்: 313
இதே செய்தி ஹாகிமில் வேறு அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
مجمع الزوائد ومنبع الفوائد . محقق (5/ 82)
عن شيخه العباس بن الفضل الأسفاطي ولم أعرفه،
இந்தச் செய்தியில் இடம்பெறும் அப்பாஸ் பின் ஃபழ்ல் என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
நூல்: மஜ்மவுஸ் ஸவாயித், பாகம்: 5, பக்கம்: 82எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகும்.
நபிகளார் யானை ஆண்டில் பிறந்தார்கள் என்று வரும் செய்திகள் அனைத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கவே செய்கிறது. என்றாலும் பெரும்பாலான அறிஞர்கள் நபிகளார் பிறந்தது யானை ஆண்டில்தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள், அந்த ஆண்டிலிருந்து நாற்பதாவது வருடத்தில் இறைத்தூதரானார்கள் என்ற கருத்தில் நமது அறிஞர்களிடம் எந்தச் சந்தேகமும் இல்லை என அபூஇஸ்ஹாக் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நூல்: தலாயிலுந் நுப்வா – பைஹகீ,
பாகம்: 1, பக்கம்: 79
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து தற்போது சுமார் 1440 சந்திர வருடங்களாகிறது. இந்த கணக்கை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் நபிகளார் கி.பி.572ல் யானை ஆண்டில் பிறந்தார்கள் என்ற முடிவு செய்யலாம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு (வஹீ எனும்) வேத வெளிப்பாடு அருளப்பட்டது. அதன் பிறகு அவர்கள் மக்கா நகரில் பதின் மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள்.
பிறகு, (இறைமார்க்கத்திற்காகத் தாயகம் துறந்து) ஹிஜ்ரத் செய்து செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. ஆகவே, அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றார்கள்; அங்கே பத்தாண்டுகள் தங்கினார்கள்; பிறகு இறப்பெய்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நாற்பதாவது வயதில் நபித்துவம் வழங்கப்பட்டது. நபித்துவத்திற்குப் பிறகு மக்காவில் 13 வருடங்கள் இருக்கிறார்கள். அதன் பின் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்கிறார்கள்.
இந்தக் கணக்கின்படி நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் போது வயது 53.
தற்போது ஹிஜ்ரி 1440. இத்துடன் நபிகளாரின் 53 வயதை கூட்டினால் 1493 சந்திர வருடங்களாகிறது.
சந்திரக் கணக்கின்படி வருடத்திற்கு 354 நாட்கள். 1493 வருடத்தை 354 ஆல் பெருக்கினால் மொத்தம் 528522 நாட்கள். நபிகளார் பிறந்து 528522 நாட்கள் ஆகிறது.
இதை சூரிய வருடமாக மாற்ற 528522 நாட்களை, சூரிய வருட நாட்களான 365.25 நாட்களால் வகுத்தால் 1447 சூரிய வருடம் வருகிறது.
அதாவது, நபிகளார் பிறந்து 1447 சூரிய வருடமாகிறது. தற்போதைய வருடம் கி.பி. 2019. இதில் 1447ஐக் கழித்தால் கி.பி. 572.
நபிகளார் எந்த மாதம் பிறந்தார்கள் என்பதிலும் அறிஞர்களிடம் கருத்துவேறுபாடு உள்ளது.
ரபீவுல் அவ்வல் மாதம் 2ஆம் நாள் பிறந்தார்கள்.
ரபீவுல் அவ்வல் மாதம் 8ஆம் நாள் பிறந்தார்கள்.
ரபீவுல் அவ்வல் மாதம் 10ஆம் நாள் பிறந்தார்கள்.
ரபீவுல் அவ்வல் மாதம் 12ஆம் நாள் பிறந்தார்கள்.
ரபீவுல் அவ்வல் மாதம் 17ஆம் நாள் பிறந்தார்கள்.
ரமலான் மாதத்தில் பிறந்தார்கள்.
ஆதாரம்: அல்பிதாயா வந்நிஹாயா,
பாகம்: 2, பக்கம்: 320
இதில் ரபீவுல் அவ்வல் மாதம் 12ஆம் தேதி என்பது அறிஞர்களிடம் பிரபலமானதாகும்.
எனினும் சில வரலாற்று ஆசிரியர்கள் ரபீவுல் அவ்வல் 8ஆம் நாள் என்பதே சரியென்று சொல்லியுள்ளார்கள்.
ரபீவுல் அவ்வல் 8ஆம் நாள் என்பதையே வரலாற்று ஆசிரியர்கள் சரி காணுகிறார்கள் என்று இப்னு அப்துல் பர் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல்பிதாயா வந்நிஹாயா,
பாகம்: 2, பக்கம்: 320
நபி (ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை பிறந்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: தாரீக் திமிஷ்க், பாகம்: 3, பக்கம்: 344
இந்தச் செய்தியில் இடம்பெறும் அல்முஅல்லா பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பலவீனமானவராவார்.(16/ 351)
شيخ يروي عن عبد الحميد بن جعفر المقلوبات، لا يجوز الاحتجاج به إذا انفرد.
இவர் அப்துல் ஹுமைத் பின் ஜஅஃபர் வழியாக செய்திகளை அறிவிப்பவர். இவர் மட்டும் அறிவித்தால் ஆதாரமாக எடுப்பது அனுமதியில்லை என்று இப்னுஹிப்பான் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: மஜ்ரூஹீன், பாகம் 16, பக்கம் 351
இவர் இந்தச் செய்தியை அப்துல் ஹுமைத் பின் ஜஅஃபர் வழியாகவே அறிவித்துள்ளார்.
எனவே நபி (ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள் என்பதற்கும், அதில் 12ஆம் நாள் தான் பிறந்தார்கள் என்பதற்கும் தெளிவான, ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை.
நபிகளார் எந்தக் கிழமையில் பிறந்தார்கள்? என்பதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.
திங்கட்கிழமையன்று நோன்பு நோற்பது பற்றி நபிகளாரிடம் கேட்கப்பட்டதற்கு, “அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன்; அன்றுதான் ‘நான் நபியாக நியமிக்கப்பட்டேன்’ அல்லது ‘எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நபிகளார் யானை ஆண்டில் பிறந்தார்கள் என்பதும், ரபீவுல் அவ்வல், பிறை 12ல் பிறந்தார்கள் என்பதும் வரலாற்று அறிஞர்களிடம் பிரபலமான செய்தியே தவிர ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் உள்ள செய்திகள் அல்ல. நபிகளார் திங்கள்கிழமை பிறந்தார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.
உண்மை சம்பவங்களை அறிந்தும், புரிந்தும், வாழும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!