நபிகளாரும் மனிதரே!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

முன்னுரை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி அருளப்படும் போது அவருக்கு வயது 40. அவர் மரணிக்கும் போது அவருக்கு 63 வயது. அல்லாஹ்வின் தூதராக 23 ஆண்டுகள் ஏகத்துவத்தை எடுத்துரைத்தார்கள். ஆனால் மனிதன் என்ற அடிப்படையில் சில இயல்பான விஷயங்களை செய்துள்ளார். ஏனென்றால், அல்லாஹ்வின் தூதர் என்றாலும் அவரும் ஒரு மனிதர் தானே!

அவ்வாறு மனிதர் என்ற அடிப்படையில், நபிகளார் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும், குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிட்ட விஷயங்களை பற்றியும், இந்த உரையில் தெரிந்துக் காண்போம்.

முதல் இறைச்செய்தி

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகைக்குள் தங்கியிருக்கும் போது தான் அவர்களுக்கு ஜிப்ரீல் மூலம் இறைச்செய்தி அருளப்பட்டது. அதனை செவியுற்றதும் ஒரு சராசரி மனிதனான முஹம்மது அவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டு மிகுந்த அச்சமுற்றார். தனது மனைவி கதீஜாவிடம்   ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்’ என்று நபியவர்கள் சொன்னார்கள்.

அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. அப்போது, ‘கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.

அப்போது கதீஜா(ரலி) அவர்கள், ‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள்.  அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்;

விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்’ என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின் புதல்வர் ‘வரக்கா’விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.

‘வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை(ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்’ என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் ‘என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள்.

(அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் ‘அவர்தாம் நபி மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!’ என்று கூறினார்.

மறுமையில் நபிகளாருக்கு மனிதரைப் போன்று கேள்விகள் கேட்கப்படும்

இவ்வுலகம் அழைக்கப்பட்டதும் நியாயத் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அனைவரையும் ஒன்று சேர்ப்பான். அந்நாளில் அல்லாஹ்வின் தூதராகிய நபி (ஸல்) அவர்களையும் அல்லாஹ் கேள்வி கேட்பான். அவர் தூதுத்துவ செய்தியை எவ்வாறு கொண்டு போய் சேர்த்தார் என்று.

(நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் “(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: “அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்” என்று கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 5:109)

நபிகள் நாயகமும் மனிதரே!

நபிகள் நாயகம் மனிதரே! அவர் இறைவனின் செய்தியை கொண்டு சேர்க்கும் ஒரு தூதர் மட்டும் தான் என்பதை அல்லாஹ் தன திறமையில் கூறுகிறான். ஒருவேளை முஹமது நபி அவர்கள் தடம் புரண்டு விட்டால் நீங்களும் அவர் பின்னே ஓடுவீர்களா என்று அல்லாஹ் தன் அடியார்களை நோக்கி கேட்கின்றான்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

(அல்குர்ஆன்: 3:144)

“இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.

(அல்குர்ஆன்: 11:12)

“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 18:110)

“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடுதான் இருக்கிறது” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 41:6)

இறைவனின் ஆற்றலில் எந்த ஒன்றும்நபிகள் நாயத்துக்கு இல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே! பிரகடனப்படுத்திவிட்டார, தனக்கு எந்த ஒரு வல்லமையும், ஆற்றலும் இல்லை என்று. தானும் ஒரு மனிதரே! மனிதரை விட ஒரு சிறப்பு என்னவென்றால் வஹீ என்று சொல்லக்கூடிய இறைச்செய்து அவருக்கு வரும். அதனை மக்களுக்கு எடுத்துரைத்து தானும் அதனை பின்பற்ற வேண்டும்.

“அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 6:50)

ஆயிஷா(ரலி) அவர்கள் மீது சொன்ன அவதூறு

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் என்பதாலே ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சொன்ன அவதூறை பற்றி தனது இன்னொரு மனைவியான ஜைனப் (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா பற்றி என்ன நினைக்கிறீர் என்று விசாரித்துள்ளார். ஜைனப் அவர்களோ! அழகிலும், அன்பிலும் எனக்கு போட்டியாக இருந்தாலும் அவர்கள் மிகுந்த இறையச்சமுடையவர் என்றார்.

(திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்; ‘ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்’ என்று பதிலளித்தார்கள். ஸைனப்(ரலி) தாம் எனக்கு (அழகிலும் நபி(ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய, பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி-2661

நபிகளாரிடம் செய்த சூழ்ச்சி

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் என்பதாலே அவர்களை ஏமாற்ற நினைத்தனர். தானாகவே முன் வந்து உதவி கேட்டு அதனை அழகிய முறையில் இஸ்லாத்திற்கு வருவதாக வாக்களித்து வேண்டிய தேவைகளை பெற்ற பின்னர் நன்றி மறந்து நபி (ஸல்) அவர்களுக்கே சூழ்ச்சமம் செய்தனர்.

‘உக்ல்’ மற்றும் ‘உரைனா’ குலங்களைச் சேர்ந்த சிலர் (ஹிஜ்ரி ஆறாமாண்டு) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, தாம் இஸ்லாத்தை ஏற்பதாகத் தெரிவித்தனர். மேலும், ‘அல்லாஹ்வின் நபியே! நாங்கள் பால் தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள்;

நாங்கள் விளைநிலங்கள் உடையவர்கள் அல்லர்’ என்று கூறி மதீனா(வின் தட்ப வெப்பம்) தமக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனக் கருதினர். எனவே, அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பத்துக்குட்பட்ட) ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கிடும்படி உத்தரவிட்டார்கள்.

மேலும், அவர்கள் குணமடைவதற்காக (மதீனாவுக்கு) வெளியே சென்று (தங்கி) அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றனர்.)

இறுதியில் அவர்கள் ‘அல்ஹர்ரா’ எனும் இடத்தின் பக்கம் சென்றபோது இஸ்லாத்திலிருந்து விலகி இறைமறுப்பாளர்களாக (மதம்) மாறிவிட்டனர். அத்துடன் (நில்லாது), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அனுப்பிவைத்த மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களைத் தம்முடன் ஓட்டிச் சென்றுவிட்டனர்.

நபி(ஸல்) அவர்களுக்கு இந்த விஷயம் எட்டியதும் (கொடுஞ் செயல் புரிந்த) அவர்களைப் பின்தொடர்ந்து (அவர்களைத் தேடிப் பிடித்து வர) ஆள் அனுப்பினார்கள். அவர்களைத் தண்டிக்கும் படி உத்தரவிட அவ்வாறே (மக்கள்) அவர்களின் கண்களில் சூடிட்டு, அவர்களின் கை(கால்)களைத் துண்டித்துவிட்டார்கள். அவர்கள் ‘அல்ஹர்ரா’ (எனும் பாறைகள் நிறைந்த) பகுதியின் ஒரு மூலையில் அப்படியே விடப்பட்டு அதே நிலையில் இறந்துபோய்விட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)

நூல்: புஹாரி-5727

மனிதன் என்ற அடிப்படையில்நபிகளார் செய்த தவறுகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மனைவியின் கோபத்தால் அல்லாஹ் ஹலாலாக்கிய தேனை ஹராம் செய்தார்கள். அப்போது, நபிகளாரை அல்லாஹ் கண்டிக்கிறான். மனிதன் என்ற முறையில் தான் அவர் அவ்வாறு செய்துவிட்டார்.

நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் ‘நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்’ என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்.

எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன்.

(அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்’ என்று கூறினார்கள். எனவே, ‘நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?’ என்று தொடங்கி ‘நீங்கள் இருவரும் – இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)’ என முடியும் (அல்குர்ஆன்: 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

(இந்த 66:4 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) ‘நீங்கள் இருவரும்’ என்பது ஆயிஷா(ரலி) அவர்களையும், ஹஃப்ஸா(ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (அல்குர்ஆன்: 66:3)வது வசனத்தில்) ‘நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்’ என்பது ‘இல்லை. நான் தேன்தான் அருந்தினேன்.

(சத்தியமாக இனி நான் அதனை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)’ என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதையே குறிக்கிறது.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புஹாரி-5267

கடுகடுத்தார்

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஒரு உயர்ந்த குலத்தவரிடம் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் போது ஒரு தாழ்ந்த நிலையில் உள்ள ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் முகமன் கூறும்போது அந்த உயர்ந்த குலத்தவரை கருத்தில் கொண்டு முகமன் கூறிய தாழ்ந்த குலத்தவருக்கு பதிலுரைக்கவில்லை. இதனையும் மனிதன் என்ற அடிப்படையில் அவர்கள் செய்த பிழை தான். இதையும் அல்லாஹ் கண்டித்தான்.

தன்னிடம் அந்த குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படி தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அறிவுரை பெறலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.

(அல்குர்ஆன்: 80:1-6)

நபி (ஸல்) அவர்கfள் வெளியில் ஒரு பெண்ணை பார்த்து அந்த பெண்ணின் மூலம் ஏற்பட்ட இச்சையை போக்க தனது மனைவிகளிடம் சென்று இச்சையை தீர்த்துக் கொண்டார். இவை யாவும், ஒரு சராசரி மனிதனாக செய்தவையாகும். அல்லாஹ்வின் தூதர் என்ற அடிப்படையில் அவருக்கு இறைவன் புறத்தில் இருந்து இறைச்சிச் செய்தி வருவது உண்மைதான் என்றாலும் அவரும் மனிதரே!

நபிகளாரின் இறுதி நாட்கள்

இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ்வின் தூதர் என்று அறிவிக்கப்பட்டது முதல் அவர் பட்ட கஷ்டம் இவ்வுலகில் வேறு யாரும் படாத அளவிற்கு இருந்தது. மூன்று நாட்கள் அடுப்பு ஏறிமால் தன வாழ்க்கையை களித்தனர். இறைச்செய்தி வருவதற்கு முன்னர் அவர் செல்வ சீமாட்டியாகவும், தன் வாழ்க்கையை செம்மையாகவும், சீராகவும் வாழ்ந்தார். நபி பட்டம் பெற்றதும் ஏகத்துவத்தை எடுத்துரைக்கும் போது உயிருக்கு கூட ஆபத்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

யூதப்பென்மணி ஒருத்தி அல்லாஹ்வின் தூதரை விருந்திற்கு அழைத்து அதில் விஷம் கலந்து கொடுத்தால். அதனை உட்கொண்டு பெரும் நோயிக்கு ஆளானார். நபி (ஸல்) அவர்கள் மரண வேளையில் நோய் வாய்ப்பட்டு வழியால் துடிதுடித்துப் போனார். இரண்டு பேர் பெற வேண்டிய வழியை ஒருவர் பெற்று பொறுமையுடன் இருந்தார்.

இப்ராஹிம் என்ற தனது பதினெட்டு மாத குழந்தை இறந்து போகும் போது அவர்கள் கண்ணில் வழிந்தபடியே இருந்தது. மனிதன் என்ற முறையில் அவரும் இந்த வழியை தாங்கத்தான் செய்தது

பதினெட்டு மாதக் குழந்தையான நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இறந்த போது, நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்கு தொழுவிக்கவில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்:(அபூதாவூத்: 2772),(அஹ்மத்: 25101)

முடியுரை
மேற்க்கூறப்பட்ட விஷயங்களில்  நபிகள் நாயகம் மனிதரே! அவர் இறைவனின் செய்தியை கொண்டு சேர்க்கும் ஒரு தூதர் மட்டும் தான். என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.

அதே போன்று இறைதூதர் என்ற அடிப்படையில் நபிகளார் கூறிய அணைத்து விஷயங்களையும் நம்முடைய வாழ்க்கையில் கடைபிடிப்போமாக! வல்ல அல்லாஹ் அப்படிப்பட்ட நன்மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.