நன்மையையும் தீமையையும் தீர்மானிப்பது நம் கையிலே
நாம் வாழுகின்ற இந்த உலகத்திலே ஒரு மனிதனுக்கு பல விதமான சோதனைகள் வந்தடையும். அதில் நன்மையான காரியம் நடந்தாலும் தீமை நடந்தாலும் அது விதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பது இஸ்லாத்தின் அடிப்படையாக இருந்தாலும் ஒரு தீமையான விஷயத்தை சந்தோஷமாக ஒரு நல்லதாக மாற்றக்கூடிய அதிகாரத்தை அல்லாஹ் நம் கரத்திலே வழங்கியுள்ளான்.
இதனால் தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார்;
மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயும்(கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை!
ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் பூமியில் அவனது எல்லை அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிக: உடரில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.
அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர்(ரலி)
நம்முடைய உள்ளத்தை சரியாக வைத்து பக்குவப்படுத்திக் கொண்டால் நமக்கேற்பட்ட தீமையையும் நல்லதாக மாறிவிடும். இன்ப துன்பங்கள் ஏற்படும் போது முஃமின் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நபி(ஸல்) அவர்கள் கூறும் போது…
முஃமினின் செயலால் நான் ஆச்சரியப்படுகிறேன்.அவனது அனைத்து விஷயங்களும் நன்மையாக ஆகின்றது.இது முஃமினைத் தவிர வேறு எவருக்கும் ஏற்படாது. அவனுக்கு ஏதாவது மகிழ்ச்சி ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான். அவனுக்கு அது நன்மையாக ஆகின்றது.அவனை துன்பம் அடைந்தால் அதற்கு பொறுமையாக இருக்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது.
அறிவிப்பவர்: ஸூஹைப்(ரலி)
இன்பத்தையும் துன்பத்தையும் நன்மையாக மாற்றும் அருட்கொடையை அல்லாஹ் தன்னை நம்பியருக்கும் மட்டும் கொடுத்திருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் வருத்தப்பட்டுக் கொண்டும் புலம்பிக் கொண்டும் இருப்பது தான் மனித இயல்பு. ஆனால் அல்லாஹ் உறுதியாக நம்பிய ஒரு முஃமின் எந்த பிரச்சனை வந்தாலும் மனம் தளராமல் நம்பிக்கை இழக்கமால் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற மனக்கட்டுப்பாட்டை நபி(ஸல்) அவர்கள் சொல்த்தருகிறார்கள் .இந்த மனக்கட்டுபாட்டு தான் நம் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகின்றது.
ஒருவன் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருந்தால் அதற்கு மேலே இருப்பவனைப் பார்த்து ஆதங்கப்பட்டு அல்லாஹ் நம்மை இப்படி வைத்திருக்கிறான். நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் நமக்கு ஒரு நல்ல சம்பாத்தியம் கிடைக்காமல் போகின்றது.ஆனால் சிலர் கஷ்டப்படாமலேயே லட்ச லட்சமாக பணம் சம்பாதிக்கின்றார்கள். என்று புலம்பித்தள்ளுபவர்களும் இருக்கின்றார்கள். இத்தகையவர்களுக்கு அல்லாஹ் கூறுகிறான்.
அதன் (உள்ளத்தின்) நன்மையையும் தீமையையும் அதற்கு அறிவித்தான். அதை தூய்மைப்படுத்தியர் வெற்றி பெற்றார். அதை களங்கப்டுத்தியவர் நஷ்டப்பட்டார்.
சந்தோஷத்தையும் அதற்கெதிரான துன்பத்தையும் எடுப்பது நம் கையில் தான் உள்ளது. என்பதை வளங்கிக் கொள்ளவேண்டும். பொருளாதார விஷயத்தில் இல்லையே,இல்லையே என்று நினைக்கிறவர்களும் , இல்லாததையெல்லாம் நினைத்துக் கொண்டு இருப்பதை வைத்து திருப்திகொள்ளதவர்களும் ஏராளம். இதனால் தான் கணவன் மனைவிக்கிடையிலும் மாமியார் மருமகளுக்கிடையிலும் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றது.
ஆனால் நபி(ஸல்) அவர்கள் செல்வம் வாழ்க்கை வசதிகள் நம்மிடத்தில் இருப்பதிற்குரிய நிலையை வளங்கும் போது…
(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று ; மாறாக போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி)
ஒருவனிடத்தில் 10 கோடி இருக்கின்றது.ஆனால் அதை போதும் என்று நினைக்காமல் அவன் இன்னொரு 10 கோடி வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் 1000 ரூபாய் வைத்திருப்பவன் இது தன்னுடைய வாழ்க்கைத் தேவைக்கு போதும் என்று நினைக்கிறான். இதில் யார் பணத்தேவையற்ற செல்வந்தன் சிந்திக்க வேண்டும்.
எவ்வளவு பெரிய வசதி உள்ளவர்களாக இருந்தாலும் நாம் வசதியாக இருக்கின்றோம்; நாம் சிறந்த வாழ்க்கையில் இருக்கின்றோம்;நம்மை விட எவ்வளவு பேர் கீழ் நிலையில் இருக்கின்றார்கள்; அல்லாஹ் மற்றவர்களைவிட நம்மை மேல்நிலையில் வைத்திருக்கிறான் என்று நினைப்பவர்கள் மிகக் குறைவு.
ஆனால் இந்த விஷயத்தில் ஒரு நபியினுடைய மனைவியின் நிலைமையை பாருங்கள்……நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
…இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீலின் மனைவியிடம் இஸ்மாயீலைக் குறித்து விசாரித்தார்கள்.
அதற்கு அவர், “எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலை பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர், “நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்” என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.
உடனே, இப்ராஹீம் (அலை) அவர்கள், “உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரைத்து அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல்” என்று சொன்னாகள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள்.
ஆகவே, “எவரேனும் உங்களிடம் வந்தார்களா?” என்று கேட்டார்கள். அவருடைய மனைவி, “ஆம்; இப்படிப்பட்ட (அடையாளங்கள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார்; எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விபரம்) தெரிவித்தேன். என்னிடம், ‘உங்கள் வாழ்க்கை நிலை எப்படியுள்ளது?’ என்று கேட்டார். நான் அவரிடம், ‘நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம்’ என்று சொன்னேன்” என்று பதிலளித்தார்.
அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், “உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா?” என்று கேட்க, அதற்கு அவர், “ஆம்; உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும் படி எனக்கு உத்திரவிட்டு, ‘உன் நிலைப் படியை மாற்றிவிடு’ என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார்” என்று பதிலளித்தார்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள், “அவர் என் தந்தை தான். உன்னை விட்டுப் பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய்ச் சேர்ந்துகொள்” என்று சொல்லிவிட்டு, உடனே அவரை விவாகரத்து செய்து விட்டார்.
இருப்பதை வைத்து போதுமாக்காமல் மனதை கட்டுப்படுத்தாமல் இருக்கின்ற வீட்டின் நிலைப்படியாக விளங்கவேண்டிய மனைவியை தலாக்விடும்படி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு இப்றாஹீம் (அலை) கட்டளையிட்டு அதை இஸ்மாயீல்(அலை) அவர்களும் நிறைவேற்றியிருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையே இருப்பதை வைத்து மனதை போதுமாக்குதல் என்பது விளங்குகின்றது. இஸ்மாயீல்(அலை) அவர்களின் இன்னொரு மனைவியின் நிலையை பாருங்கள்..
பின்னர், ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவன் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழந்தார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார்.
ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்கள் ( இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர், “எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள், “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா)?” என்று கேட்டார்கள் மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார்.
அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், “நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமான அல்லாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், “உங்கள் உணவு எது?” என்று கேட்க அவர், “இறைச்சி” என்று பதிலளித்தார். அவர்கள், “உங்கள் பானம் எது?” என்று கேட்க, “தண்ணீர்” என்று பதிலளித்தார்.
இப்ராஹீம் (அலை) அவர்கள், “இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள்வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள்.
ஆகவே தான், மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாகப் பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக் கொள்வதேயில்லை” என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், “உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்” என்று சொன்னார்கள்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது, “உங்களிடம் எவரேனும் வந்தார்களா?” என்று கேட்க, அவருடைய மனைவி, “ஆம்; எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்” என்று (சொல்லிவிட்டு) அவரைப் புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) “என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படியுள்ளது என்று கேட்டார்.
நான், ‘நாங்கள் நலமுடன் இருக்கிறோம்’ என்று தெரிவித்தேன்” என்று பதில் சொன்னார். “அவர், உனக்கு அறிவுரை ஏதும் சொன்னாரா?” என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்; உங்களுக்கு சலாம் உரைக்கிறார்; உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும் படி உங்களுக்குக் கட்டளையிடுகின்றார்” என்று சொன்னார்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள், “அவர் என் தந்தை; நீ தான் அந்த நிலைப்படி. உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே (மனைவியாக) வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
இப்றாஹீம்(அலை) அவர்களிடம் தங்களின் சிரமங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கூறாமல் தங்களக்கு அல்லாஹ் அருள்புரிந்திருக்கின்ற வசதிக வாய்ப்புகளை மட்டும் எடுத்துக் கூறிய இஸ்மாயீல் (அலை) அவர்களின் இன்னொரு மனைவியை வீட்டுக்கு அவசியமான நிலைப்படி போன்று பிரியாமல் சேர்ந்து வாழுமாறு கட்டளையிடுகிறார்கள்.
பெரும்பாலோனோர் பணக்கஷ்டங்களுக்கு அடுத்தபடியாக நோய் துன்பம் இவைகளுக்கு மனதைக் கட்டுப்படுத்தி பொறுமையாக இருப்பதில்லை. இதற்கும் நல்ல வழிகாட்டுதலை நபி(ஸல்) அவர்கள் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவிகோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?” என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத் தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலைமீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.
(பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்துவிடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ‘ஸன்ஆ’விலிருந்து ‘ஹளர மவ்த்’ வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத்(ரலி)
நூல :(புகாரி: 3612)
நபி(ஸல்) அவர்கள் கட்டாயமாக அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக துஆ செய்திருக்கலாம். செய்யாத காரணமென்னவென்றால் அவர்களுக்கு முன் இவர்களைவிட படுமோசமான கொடுமைகளையும் கஷ்டங்களையும் பெற்றுள்ளார்கள்.
அதை சிந்தித்து பார்த்தால் நம் உள்ளம் அமைதிபெறும் என்பதற்காகவும் அது நம் உள்ளத்தில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதற்காகவும் தான் நபி(ஸல்) அவர்கள் முன்னால் வாழ்ந்த கொடுமைப்படுத்தப்பட்டவர்களின் நிலைமையை எடுத்துக் கூறி நபித்தோழர்களை ஆறுதல்படுத்துகிறார்கள்.
எனவே வறுமை நோய் துன்பம் போன்றவற்றால் நம் மனதை தளரவிடமால் மனதை திருப்திபடுத்திக் கொண்டால் எல்லாமே நன்மையானதாக அமையும். இல்லையெனில் தீமை நம்மை வந்தடையும் இவை இரண்டுமே நமது கரத்தில் தான் உள்ளது. எனவே அனைத்தையும் நன்மையானதாக எடுத்துக் கொண்டு ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!