தொழுகை இல்லையேல் தடாகம் இல்லை
மக்கள் விசாரணைக்காக ஒன்று திரட்டப்படும் அந்நாளின் கொடூரத்தைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம்.
கடும் தாகத்தால் மக்கள் துடிக்கக் கூடிய அந்நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் தாகம் தீர்ப்பதற்குத் தனி ஏற்பாட்டை அல்லாஹ் செய்வான்.
இதுபற்றி திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது.
(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்
“கவ்ஸர் என்றால் என்ன?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அது அல்லாஹ் எனக்கு வழங்கிய நதியாகும்” என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: திர்மிதீ
அதன் சுவை பற்றியெல்லாம் நபி (ஸல்) அவர்கள் விளக்கமாகக் கூறியுள்ளார்கள்.
எனது தடாகம் ஒரு மாதப் பயணத் தொலைவு அகலமாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)
(புகாரி: 6579), முஸ்லிம்
அம்மான், ஐலா ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அளவு அதன் நீளம் இருக்கும். அதன் அகலமும் அவ்வாறே என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
(முஸ்லிம்: 4608), அபூதாவூத்
எமன் நாட்டின் ஸன்ஆ மற்றும் மதீனா ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அளவு அந்தத் தடாகம் அமைந்திருக்கும் என்பது நபிமொழி
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(புகாரி: 6592), முஸ்லிம்
இந்த நபிமொழிகளிலிருந்து அந்தக் தடாகம் மிகவும் பிரம்மாண்டமான அளவுடையதாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.
அதன் தண்ணீர் பாலை விட வெண்மையாகவும் அதன் சுவை தேனை விட இனிமையாகவும் இருக்கும்.
(புகாரி: 6579), முஸ்லிம்
அதன் நறுமணம் கஸ்தூரியை விடச் சிறந்ததாக இருக்கும்.
(புகாரி: 6579), முஸ்லிம்
அதன் தண்ணீர் வெள்ளியை விட வெண்மையானதாகும்.
(புகாரி: 6579),(முஸ்லிம்: 4599)
அந்தத் தடாகத்தில் உள்ள தண்ணீர் சொர்க்கத்தில் உள்ள தண்ணீராகும். சொர்க்கத்திலிருந்து இரண்டு குழாய்கள் மூலமாக அதற்குத் தண்ணீர் வரும்.
தங்கக் குழாய், வெள்ளிக் குழாய் ஆகிய இரு குழாய்களின் வழியாக அந்தத் தடாகத்திற்குத் தண்ணீர் வரும்.
மக்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்கு முன் சொர்க்கத்து நீரை தடாகத்தின் வழியாக அருந்துவார்கள் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து நாம் அறியலாம்.
பல கோடி மக்கள் திரண்டுள்ள அந்த மன்றத்தில் நெருக்கடியின்றி மக்கள் தண்ணீர் அருந்துவதற்காக ஏராளமான பாத்திரங்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாத்திரங்களும் சொர்கத்தில் பயன்படுத்தவுள்ள பாத்திரங்களாகும்.
எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணைமாக அதன் பாத்திரங்கள் வானத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். அவை சொர்க்கத்தின் பாத்திரங்களாகும்.
(முஸ்லிம்: 416),(திர்மிதீ: 2369)
அந்தத் தண்ணீரின் பயன் யாது? அதை அருந்தியவர்க்கு தாகமே ஏற்படாது என்பது இதன் பயனாகும். விசாரணை என்பது ஒருநாளில் நடந்து முடிந்து விடும் என்றாலும் அந்த ஒரு நாள் ஆயிரம் வருடங்களுக்கு நிகரானதாகும்.
ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமான அந்நாளில் ஒரு தடவை அத்தடாகத்திலிருந்து அருந்தி விட்டால் அதன் பின்னர் தாகமே ஏற்படாது.
அதில் அருந்தியவர்களுக்கு தாகம் ஏற்படாது.
(புகாரி: 7051), முஸ்லிம், திர்மிதீ
கவ்ஸர் எனும் அத்தடாகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கும் தனிச்சிறப்பாகும். நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு வழங்குவார்கள்.
நான் ஹவ்லுக்கருகில் உங்களுக்காகக் காத்திருப்பேன்.
(புகாரி: 6589), முஸ்லிம்
“எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக ஒரு மனிதன் தனது தடாகத்தை விட்டும் தனக்குச் சொந்தமில்லாத ஒட்டகங்களை விரட்டுவானோ அதுபோல் மற்ற மனிதர்களை நான் தடாகத்தை விட்டும் விரட்டுவேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! எங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்களா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! உளூச் செய்ததன் காரணமாக கைகள், கால்கள், முகங்கள் வெண்மையானவர்களாக என்னிடம் நீங்கள் வருவீர்கள்” என்று விடையளித்தனர்.
ஹவ்ல் அல் கவ்ஸர் எனும் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தினருக்கு மட்டும் உரியது என்பதையும் இந்த உம்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தொழாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிட்டாது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் புதிதாக வணக்க வழிபாடுகளை ஏற்படுத்தியவர்கள் அவர்கள் நபித் தோழர்களாக இருந்தாலும் அந்தத் தடாகத்திற்கு வராதவாறு தடுக்கப் படுவார்கள்.
நான் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்திருப்பேன். சில மக்கள் என்னிடம் வருவார்கள். அவர்களுக்கு தண்ணீர் ஊற்ற நான் குனியும் போது அவர்கள் தடுக்கப்படுவார்கள். “இறைவா இவர்கள் என் தோழர்களாயிற்றே” என நான் கூறுவேன். “உமக்குப் பின்னால் இவர்கள் (மார்க்கத்தின் பெயரால்) எவற்றை உருவாக்கினார்கள் என்பதை நீர் அறிய மாட்டீர்” என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(புகாரி: 7049), முஸ்லிம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்” என்று சொல்வான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 6585), முஸ்லிம்
அந்தத் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியம் ஏழு கோடிக்கும் அதிகமான மக்களுக்குக் கிடைக்கும்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இடத்தில் தங்கியிருந்தோம். “என்னிடம் லட்சத்தில் ஒரு பகுதியாகக் கூட நீங்கள் இருக்கவில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் எவ்வளவு நபர்கள் அப்போது இருந்தீர்கள்?” என்று ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. “எழுநூறு அல்லது எண்ணூறு நபர்கள் இருந்தோம்” என விடையளித்தார்கள்.
அந்தத் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் நமக்கும் வழங்குவானாக!