தூய்மை – 2
தூய்மை – 2
வாரத்திற்கு ஒரு முறையாவது குளித்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக (பருவமடைந்த) ஒவ்வொரு முஸ்லிமும் செய்யவேண்டிய கடமையாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
வியர்வையுடன் இருப்பவர்கள் குளித்துத் தூய்மையாகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு துர்வாடையை ஏற்படுத்தும். இதனால் அவர்களை விட்டும் மக்கள் விலகிச்செல்லும் நிலை ஏற்படுகின்றது.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் ஜுமுஆ நாளில் (மதீனா அருகிலுள்ள) தங்கள் குடியிருப்புகளிலிருந்தும் மேட்டுப்புற கிராமங்களிலிருந்தும் முறைவைத்து (ஜுமுஆத் தொழுகைக்கு) வந்து கொண்டிருந்தனர். புழுதிகளில் அவர்கள் நடந்துவருவதால் அவர்கள் மீதும் புழுதியும் வியர்வையும் காணப்படும். அவர்களி(ன் உடலி)லிருந்து வியர்வை வழியும். (இந்த நிலையில்)- என் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்துகொண்டிருக்கும்போது- அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையுடன் இருக்கக்கூடாதா?” என்று கேட்டார்கள்.
உளூ செய்தல்
இஸ்லாமிய கடமைகளில் முதன்மையாக உள்ள தொழுகைக்கு முன்னர் குறிப்பிட்ட உறுப்புகளை கழுவி தூய்மையாகிக் கொள்ள இஸ்லாம் கட்டளையிடுகிறது. வணக்கங்கள் மூலமும் இஸ்லாம் தூய்மை வலியுறுத்தியுள்ளது என்பதை விளங்கலாம்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்!
இச்சை நீர் ஏற்பட்டால்
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: இச்சைக் கசிவு நீர் (“மதீ’) அதிகமாக வெளியேறும் ஆடவனாக நான் இருந்தேன். நபி (ஸல்) அவர்களின் புதல்வி (ஃபாத்திமா என் மண பந்தத்தில்) இருந்ததால் இது பற்றிக் கேட்குமாறு (வேறு) ஒருவரை நான் பணித்தேன். அவர் (அது குறித்துக்) கேட்டபோது, “(அவ்வாறு இச்சைக் கசிவு நீர் வெளியேறினால்) உளூ செய்துகொள்வீராக! (குளிக்க வேண்டியதில்லை. ஆனால்,) பிறவி உறுப்பைக் கழுவிக்கொள்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உறங்கும் முன் உளு செய்தல்
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள்.
நூல் : புகாரி ;247
மர்ம உறுப்பின் முடிகளை களைதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களை(ந்து கொள்வதற்காகச் சவரக் கத்தியைப் பயன்படுத்து)வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றிக்கொள்வது ஆகியவைதாம் அவை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
40 நாட்களுக்கு மேல் தாமதம் கூடாது
மர்ம உறுப்பின் முடிகளை அகற்றுவதை 40 நாட்களுக்கு மேல் தாமதிக்கக் கூடாது
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக்கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.
நூல் : முஸ்லிம் ;431
வலது கையை பயன்படுத்துதல்
நாம் எந்தப் பொருளை சாப்பிடுவதாக குடிப்பதாக இருந்தாலும் வலது கையையே பயன்படுத்த வேண்டும், சிலர் வலது கையின் மூலம் ஏதாவது வேலை பார்த்துக்கொண்டிருந்தால் இடது கையை பயன்படுத்தி சாப்பிடுவதையும் குடிப்பதையும் வழக்கமாக்கியுள்ளனர். இதுவும் நாகரீகமற்றதாகும். இஸ்லாம் வலது புறத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கியுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக் கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக் கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தாம் அங்கசுத்தி (உளூ) செய்யும்போதும், தலைவாரிக்கொள்ளும் போதும், காலணி அணிந்துகொள்ளும் போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகியன உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!” என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
தலைவாருதல்
அதிகமான வேலை பழுவின் காரணமாக பலர் தலைமுடிகளை சீர்செய்வதில்லை. பெரும்பாலும் பெண்கள் குழந்தைகளை கவனத்தில் கொண்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வரை பரட்டை தலையுடனே காணப்படுகின்றனர். அதன் பிறகும் மற்ற மற்ற வீட்டு வேலைகளின் காரணமாக தலைவிரிக்கோலமாகவே உள்ளனர். மேலும் தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் இருப்பதை நாகரீகமாகும் கருதுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் பரட்டைத் தலையுடயவராக ஒரு மனிதரைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) இவர் தனது முடியைப் படிய வைக்கக்கூடிய ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : நஸயீ 5141
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக்கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக்கொள்கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.
நூல் ;(புகாரி: 883)
கணவன் முன் ஒரு பெண் நிற்கும் போது அலங்காரத்துடன் இருக்க வேண்டும். தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் மிக முக்கியமானது தலைவாருதலாகும்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் ஒரு போரில் (தபூக்கில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக் கொண்டிருந்தபோது, மெதுவாகச் செல்லக் கூடிய ஒட்டகத்தின் மீது இருந்தவாறு நான் அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனமொன்றில் வந்து சேர்ந்தார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்,) “உமக்கு என்ன அவசரம்?” என்று கேட்டார்கள். “நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்தாயா. அல்லது கன்னி கழிந்த பெண்ணை மணந்தாயா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை. கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணமுடித்துக்கொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக் குலாவி மகிழ்ந்திருக்கலாமே!” என்றார்கள். பிறகு நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்து (ஊருக்குள்) நுழையப் போனபோது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இஷா நேரம் வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலை வாரிக்கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம், “புத்திசாலித்தனமாக நடந்துகொள்” என்றார்கள். அதாவது “குழந்தையைத் தேடிக்கொள்” என்றார்கள் என நம்பத் தகுந்த (அறிவிப்பாளர்) ஒருவர் என்னிடம் கூறினார்.