தூய்மை – 4

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

தூய்மை – 4

இடங்களை தூய்மையாக வைத்தல் :

நாம் பயன்படுத்தக்கூடிய இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சிலர் தாம் பயன்படுத்தக்கூடிய பாலிதின் கவர்களையும் வாழைப் பழத் தோல்களையும் கண்ட இடங்களில் எறிந்துவிடுகின்றனர். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விபத்துக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மேலும் சாலையோரங்கள் மருத்துவமனைகள் போன்ற எல்லோரும் பயன்படுத்தக்கூடிய பொது இடங்கள் சுகாதாரமற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றது. மேலும் மக்கள் நடமாடக்கூடிய ஒய்வெடுக்கக்கூடிய இடங்களில் பல ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

1. பொது இடங்களில் எல்லோரும் பார்க்கும் வகையில் சிறுநீர் கழிப்பது.

2. பொது கட்டணகழிப்பிடங்களை மற்றவர்கள் பயன்படுத்த முடியாதவாறு அசுத்தப்படுத்துவது.

3. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தெரு ஓரங்களில் தங்கள் குழந்தைகளை மலம் ஜலம் கழிக்க வைப்பது.

4. தங்கள் வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளை கார்ப்பரேஷன் வண்டியில் கொட்டாமல் தெரு ஒரங்களில் ஒதுக்கிவைப்பது.

பொது இடங்களில் எவ்வாறு நாகரீகமாக நடக்க வேண்டும் என்ற முறையை இஸ்லாம் மக்களுக்கு உபதேசிக்கின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள் அதற்கு, “மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்

(முஸ்லிம்: 448)

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரு சவக்குழிகளைக் கடந்து சென்றார்கள். அப்போது “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை; இவ்விருவரில் ஒருவரோ, சிறுநீரிரிருந்து (தம் உடலையும் உடையையும்) மறைக் காமலிருந்தார்; மற்றவரோ, கோள் சொல்லிரித் திரிந்துகொண்டிருந்தார்” என்று கூறினார்கள். பிறகு ஒரு பச்சை பேரீச்ச மட்டையைப் பெற்று அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின்மீதும் ஒன்றை ஊன்றினார்கள். அது பற்றி மக்கள், “ஏன் இவ்வாறு செய்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(புகாரி: 218)

 

இறையில்லங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

“எனக்கு எதையும் இணை கற்பிக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!” என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!

அல்(அல்குர்ஆன்: 22:26)

அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்! “தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!” என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

(அல்குர்ஆன்: 2:125)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசரில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளி வாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் “நிறுத்து! நிறுத்து!’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து “இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகிய வற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்” என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர்மீது ஊற்றச் செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் (480)

பாதையில் உள்ள தொல்லை தரும் பொருட்களை அகற்றுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி ; 2989

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்(டு அதை எடுத்து அப்புறப்படுத்திவிட்)டார். அ(தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த)து, அவரைத் (தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழவிடாமல்) தாமதப் படுத்திவிட்டது. அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

நூல் : புகாரி ; 652

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்து தான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆக வேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

மக்கள், “சாலையின் உரிமை என்ன?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமரிருப்பதும், முகமனுக்கு (சலாம்) பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிரிருந்து தடுப்பதும் (அதன் உரிமை) ஆகும்” என்று பதிலளித் தார்கள்.

(புகாரி: 2465)

செருப்பை பயன்படுத்துதல்

நாம் வெளியே செல்லும் போது பல அசுத்தங்களை காலில் மிதிக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது . மேலும் நம்முடைய வீட்டிலேயே கழிவறை, சமையல் அறைகளுக்கு அதற்கென்றே தனி செருப்புகளை பயன்படுத்துவதின் மூலம் கிருமிகளிலிருந்து காலை பாதுகாக்கலாம். நபி (ஸல்) அவர்கள் காலணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

முடிகளையப்பட்ட செருப்புகளைப் பொறுத்த வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத செருப்புகளை அணிவதையும் அதனுடன் (காலைக் கழுவி) உளூ செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதை அணிவதை விரும்புகிறேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

(புகாரி: 166)

மீதமுள்ளவை இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில்…