தீயவர்களின் மண்ணறை வாழ்வு
அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். அவ்வாறு மரணத்தை அடைந்தப் பின்பு முதலில் நாம் சந்திக்கயிருப்பது மண்ணறைரை வாழ்க்கை. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் ஒருவரின் மண்ணறை முடிவு கெட்டதாகயிருப்பின் மறுமை வாழ்வும் கெட்டதாகவே அமையும். மாறாக, மன்னரை வாழ்க்கை நல்ல விசாலமானதாக அமைந்தால் மறுமை வாழ்வும் நன்றாகவே அமையும்.
கெட்ட மனிதன் விசாரணைக்குச் செல்லும் போது அவனுக்குப் பதட்டம் ஏற்படும். வானவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு அவன் சரியான எந்த பதிலையும் சொல்ல மாட்டான். பரிட்சையில் தோற்று விடுவான்.
கெட்ட மனிதன் நடுக்கத்துடனும், திடுக்கத்துடனும் மண்ணறையில் உட்கார வைக்கப்படுவான். எந்தக் கொள்கையில் நீ இருந்தாய்! என்று அவனிடத்தில் வினவப்படும். அதற்கு அவன் எனக்குத் தெரியாது என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து ‘முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர்.
நிராகரிப்பவனாகவோ! நயவஞ்சகனாகவோ! இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ”’எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே! நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்பான். அப்போது அவனிடம், ” நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதிலைக் கூறாதவனுக்கு சுத்தியலால் பலத்த அடி அவனுடைய பிடரியில் கொடுக்கப்படும். நெருப்பில் புரட்டப்படுவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (கேள்வி கேட்ட) பிறகு இரும்பாலான சுத்தியால் (சரியான பதில் கூறாத) அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவனுக்கு நெருப்பால் ஆன ஆடையை அணியக் கொடுங்கள். நெருப்பாலான விரிப்பைக் கொடுங்கள். நரகத்தின் வாசலை இவனை நோக்கி திறந்து விடுங்கள் என்று வானிலிருந்து ஒருவர் கூறுவார். நரகத்தின் சூடும், ஜவாலையும் அவனிடத்தில் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்ளும் அளவிற்கு மண்ணறை அவனை நெருக்கும்.
பிறகு கண்பார்வையற்ற வாய் பேசாத ஒருவர் அவனை (வேதனை செய்வதற்காக) நியமிக்கப்படுவார். அவருடன் இரும்பாலான சுத்தியல் இருக்கும். அதைக் கொண்டு மலையை அடித்தால் மலை கூட மண்ணாகிவிடும். ஜின்களையும், மனிதர்களையும் தவிர கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியில் உள்ள அனைத்தும் செவியேற்குமளவுக்கு அந்த சுத்தியலால் அவனை ஒரு அடி அடிப்பார். அவன் மண்ணாகிவிடுவான். மீண்டும் அவனுக்கு ஆன்மா வழங்கப்படும்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல்: அபூதாவுத்-4127
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கெட்ட வாடையுடன் அசிங்கமான ஆடையுடன் கோரமான முகத்துடன் ஒருவர் (இறந்துவிட்ட கெட்ட) மனிதனிடம் வருவார். உனக்குத் தீங்கு தரக்கூடியதை நற்செய்தியாகப் பெற்றுக்கொள். உனக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இது தான் என்று கூறுவார். அதற்கு அவன் உன் முகமே! மீண்டும் மீண்டும் தீய செய்தியைக் கொண்டு வருகிறதே நீ யார்? என்று கேட்பான். அதற்கு அவர் நான் தான் நீ செய்து வந்த தீமையான காரியங்கள் என்று கூறுவார். அவன் என் இறைவா மறுமை நாளை வரவழைத்து விடாதே! என்று கூறுவான்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
இறந்தவனிடத்தில் நன்மை ஏதும் இருக்கிறதா என்று பார்க்கப்படும். அவனிடத்தில் எந்த நன்மையும் இல்லாமல் நல்லுபதேசங்களை மறுத்தவனாக அவன் இருந்தால் பயத்தால் நடுங்கிக் கொண்டிருப்பான். மண்ணறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் ஏதும் கூறமாட்டான். இதனால் அவனுடைய எழும்புகள் உடையும் அளவிற்கு அவனுக்கு மண்ணறையில் நெருக்கடி தரப்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மண்ணறையில் இறை மறுப்பாளனின் தலைப்புறமாக வந்து (நன்மை ஏதும் இருக்கிறதா? என்று) பார்க்கப்படும். ஆனால் (அங்கு) எதுவும் இருக்காது. அவனுடைய இரு கால்களிடத்தில் (நன்மை இருக்கிறதா? என்று) பார்க்கப்படும். ஆனால் (அங்கும்) எதுவும் இருக்காது. எனவே அவன் திடுக்கிட்டுப் பயந்தவனாக எழுந்து அமருவான். உங்களுடன் இருந்த இந்த மனிதர் குறித்து நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? என்று அவனிடம் வினவப்படும்.
அதற்கு அவன் மக்கள் எதையோ கூறிக் கொண்டிருப்பதை நான் கேட்டேன். அவர்கள் கூறியது போல் நானும் கூறிக் கொண்டிருந்தேன் என்று கூறுவான். நீ உண்மை கூறினாய். இப்படித் தான் நீ வாழ்ந்தாய். இப்படியே மரணித்தாய். இவ்வாறு அல்லாஹ் நாடினால் நீ எழுபப்படுவாய்! என்று அவனிடம் கூறப்படும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடொன்று பிண்ணிக் கொள்ளும் அளவிற்கு மண்ணறை அவனை நெருக்கும். இதைப் பற்றித் தான் அல்லாஹ் (இந்த வசனத்தில்) கூறுகிறான். எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20 : 124)
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: தப்ரானி பாகம் : 3 பக்கம் : 105
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20 : 124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்குத் தெரியுமா? நெருக்கடியான வாழ்கை என்றால் எது என்றும் உங்களுக்குத் தெரியுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும், அவனது தூதருமே! மிக அறிந்தவர்கள் என்று கூறினார்கள்.
இறை மறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யப்படுவதை (இவ்வசனம் குறிப்பிடுகிறது). எனது உயிர் எவனது கைவசத்தில் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக அவனுக்கெதிராக தொண்ணூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். அந்தப் பாம்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. அவை தொண்ணூற்று ஒன்பது பாம்புகளாகும். ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள் வரை அவனுடைய உடம்பில் (விஷக்காற்றை) அவை ஊதிக்கொண்டும், அவனை தீண்டிக்கொண்டும் உராய்ந்து கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்னது அபீ யஃலா 6504
நபி (ஸல்) அவர்களுக்கு எதிரிகள் அதிகமான இடஞ்சல்களைக் கொடுத்தார்கள். இவர்களின் மண்ணறைகளை அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக என்று இவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். தீயவர்களுக்கு மண்ணறையில் இப்படி ஒரு தண்டனையும் தரப்படலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
அகழ்ப் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அல்லாஹ் (எதிரிகளான) அவர்களுடைய வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவானாக! அவர்கள் சூரியன் மறையும் வரை நடுத் தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிரிருந்து நம்மைத் தடுத்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் அவனுடைய கண்ணிற்கு முன்னால் நரகம் கொண்டு வந்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். அவன் செல்லவிருக்கும் நரகத்தைப் பார்த்து பயந்து கொண்டே நிம்மதியின்றி மண்ணறை வாழ்கையை அனுபவிப்பான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :’உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், ”அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்ற வரை இதுவே (கப்றே) உனது தங்குமிடம்” என்றும் கூறப்படும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
கெட்டவன் கைசேதம் அடைய வேண்டும் என்பதற்காக சொர்க்கம் அவனுக்கு முன்னால் காட்டப்படும். அதைப் பார்த்து பார்த்து கைசேதப்பட்டுக் கொண்டே மண்ணறை வாழ்வைக் கழிப்பான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தின் வாசலை இவனுக்கு திறந்து காட்டுங்கள் என்று கூறப்படும். சொர்க்கத்தின் வாசல் அவனை நோக்கித் திறக்கப்படும். அப்போது அல்லாஹ்விற்கு நீ கட்டுப்பட்டு நடந்திருந்தால் இது தான் அல்லாஹ் உனக்குத் தயார் செய்த இடமாக ஆகியிருக்கும் என்று கூறப்படும். அவன் மேலும் கைசேதத்தையும், நஷ்டத்தையும் உணருவான்.
பிறகு இவனுக்கு நரகத்தின் வாசலை திறந்து விடுங்கள் என்று கூறப்படும். அவனை நோக்கி நரகத்தின் வாயில் திறக்கப்படும். இது தான் உனது இடம். அல்லாஹ் உனக்குத் தயார் செய்ததும் இது தான் என்று அவனிடம் சொல்லப்படும். அப்போது அவன் மென்மேலும் கைசேதத்தையும், நஷ்டத்தையும் உணருவான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: தப்ரானி பாகம் : 3 பக்கம் : 105
இந்த உலகத்தில் யாரும் அனுபவித்திருக்க முடியாத அளவிற்கு மண்ணறையின் வேதனை மிகக் கடுமையானதாகும். மண்ணறை வாழ்க்கை என்பது மறுமை வாழ்வின் முதல் நிலையாகும். மறுமை வாழ்வில் தீயவர்களுக்குக் கிடைக்கும் வேதனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதைக் குர்ஆன் விவரிக்கிறது.
அவர்களுக்கு (தீயவர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனை உண்டு. மறுமையின் வேதனை கடுமையானது. அவர்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவன் எவனும் இல்லை.
எனது வேதனை தான் துன்புறுத்தும் வேதனை.
அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.
மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.
மறுமையின் வேதனை மிகவும் இழிவு படுத்தக் கூடியது.
மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?
வேதனையால் அலறுகிறார்கள்
தீயவர்கள் மண்ணறையில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேதனை தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறுக் கழுதையின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது அவர்களது கோவேறு கழுதை அவர்களைத் தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது.
அங்கு ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு மண்ணறைகள் இருந்தன. (இவ்வாறு தான் சயீத் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் அறிவித்து வந்ததாக இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், ”இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களைப் பற்றி யார் அறிவார்?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர், ”நான் (அறிவேன்)” என்றார்.
நபி (ஸல்) அவர்கள், ”இவர்கள் எப்போது இறந்தார்கள்?” என்று கேட்டார்கள். அவர், ”இணைவைப்பு (கோலோச்சியிருந்த அறியாமை)க் காலத்தில் இறந்தனர்” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”இந்தச் சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்” என்று கூறினார்கள்.
பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, ”நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், ”நரக நெருப்பின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினர்.
பிறகு ”மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், ”மண்ணறையின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினர்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் போது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, ”யூதர்கள் அவர்களது கப்றுகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளியில் சென்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறையைக் கடந்து சென்றார்கள். அப்போது பிலாலே! நான் கேட்டுக் கொண்டிருப்பதை நீ கேட்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள் எனக்கு எதுவும் கேட்கவில்லையே என்று கூறினார்கள். இந்தக் கப்ரில் உள்ளவர் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நபரைப் பற்றி விசாரிக்கப்பட்டது. அவர் ஒரு யூதனாக இருந்தார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
மண்ணறையில் பாவிகள் வேதனை செய்யப்படும் போது அவர்கள் எழுப்பும் அலறலை மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் செவியேற்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவனிடம் ” நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அவர்களுக்கு நல்ல வாழ்வையே! அல்லாஹ் தருவான் என்பது உறுதியான விஷயம். நன்மையான காரியங்களை நபி (ஸல்) அவர்கள் நம்மை விட பன்மடங்கு நிறையவே செய்து வந்தார்கள்.
என்றாலும் மண்ணறை வேதனை குறித்து அவர்கள் அச்சப்படாத நாள் இல்லை. தினந்தோறும் அல்லாஹ்விடம் மண்ணறை வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுபவராக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ”இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், புதைகுழியின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று பிரார்த்திப்பது வழக்கம்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் அடக்கவிட (கப்று) வேதனையை விட்டுப் பாதுகாப்புக் கோரியதைத் தாம் செவியுற்றதாக காரிரித் பின் சயீத் (ரலி) அவர்களுடைய ஒரு புதல்வி கூறுகிறார்.
அறிவிப்பவர்: மூசா பின் உக்பா (ரஹ்)
கப்ரு வாழ்வில் தீயவனுக்கு கிடைக்கும் கடுமையான தண்டனைகளை நாம் அறிந்து கொண்டோம். இப்படிப்பட்ட படுமோசமான வாழ்வு நமக்கு அமைந்து விடாமல் இருப்பதற்காக நாம் அனைவரும் முயற்சி செய்வதுடன் கப்ரு வேதனையிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு கேட்க வேண்டும். ஏனென்றால், மண்ணறை வேதனையை விட்டு பாதுகாப்புத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
ஒரு யூதப் பெண் என்னிடம் யாசித்தபடி வந்தாள். அப்போது அவள் என்னிடம், ”அடக்கக் குழியின் (கப்று) வேதனையிலிருந்து அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவானாக!” என்று கூறினாள். ஆகவே, நான் இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி, ”மனிதர்கள் தம் அடக்கவிடங்களில் வேதனை செய்யப்படுவார்களா?” என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அ(டக்கவிடத்தின் துன்பத்)திலிருந்து நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு அடக்கக்குழியின் (கப்று) வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு மக்களைப் பணித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். சவக்குழியின் வேதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்பின் சோதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், ”இறைவா! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தந்தை அபூசுஃப்யான், என் சகோதரர் முஆவியா ஆகியோர் (நீண்ட நாட்கள் வாழ்வதன்) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நீ (ஏற்கெனவே) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளையும், குறிக்கப்பட்டுவிட்ட (வாழ்)நாட்களையும், பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரத்தையும் அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறாய். அல்லாஹ் அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்திற்கு முன்பே ஒரு போதும் கொண்டு வந்துவிட மாட்டான்; அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தவும் மாட்டான். நரக நெருப்பின் வேதனையிலிருந்தோ, அல்லது மண்ணறையின் வேதனையிலிருந்தோ உன்னைக் காக்கும்படி நீ அல்லாஹ்விடம் வேண்டியிருந்தால் நன்றாகவும், சிறந்ததாகவும் இருந்திருக்கும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் போதும், தொழுது முடித்த பிறகும் மண்ணறை வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். எனவே, இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மறவாமல் பாதுகாப்புத் தேட வேண்டும்.
ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்;
நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற தொழுகைகளில் அடக்கவிட (கப்று) வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததேயில்லை.
அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)
ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின் வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்:
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி லி ”இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; புதை குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” என்று கூறிவிட்டு, ”இந்த விஷயங்களிலிருந்தெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்” என்றும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் மைமூன் அல் அவ்தீ (ரஹ்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபி ஜஹன்னம, வ மின் அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, வ மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.
(பொருள்: இறைவா, உன்னிடம் நான் நரகத்தின் வேதனையிலிருந்தும், சவக் குழியின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்பின் சோதனையிலிருந்தும், (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
உயிருடன் இருக்கும் போது செய்த பாவங்களுக்காக மண்ணறையில் தண்டனை தரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பாவமான காரியங்களை மனிதன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாவங்களை மன்னித்து அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம்மால் முடிந்த அளவு பாவமான காரியங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றம் புரிந்து விட்டால் மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டிட வேண்டும்.
உலகில் புரிந்த குற்றங்களுக்கு மண்ணறையில் வேதனை தரப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
”குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், ”நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. ‘இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)
பாவமான காரியங்கள் அனைத்தும் தண்டனையைப் பெற்றுத் தரக் கூடியதாக இருந்தாலும் குறிப்பிட்ட சில பாவங்களினால் மண்ணறையில் கிடைக்கும் தண்டனையை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்தப் பாவங்கள் நம்மிடத்தில் ஏற்படாதவாறு நாம் நடந்து கொண்டால் மண்ணறை தண்டனையிலிருந்து அல்லாஹ் நாடினால் தப்பித்துக் கொள்ளலாம்.
இன்றைக்கு சமுதாயத்தில் பல வழிகெட்ட கொள்கைகள் தோன்றியிருக்கிறது. நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. குர்ஆன் மட்டும் போதும் என்று கூறி ஒரு சாரார் இஸ்லாத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். தர்ஹா வழிபாடு, தனிமனிதர் வழிபாடு போன்றவைகளால் ஒரு சாரார் அல்லாஹ்விற்கு இணை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களைப் போன்று மிர்ஸா குலாம் என்பவனும் நபி என்று நம்பி ஒரு சாரார் இஸ்லாத்தை விட்டு தடம் புரண்டு விட்டார்கள். மேலும், குர்ஆன் ஹதீஸ் இந்த இரண்டை மட்டும் மூல ஆதாரமாகக் கொள்ளாமல் மற்றவர்களின் கருத்துக்களையும், புதுமையான விஷயங்களையும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுத்துவதும் மக்களிடையே இருந்து வருகிறது.
குர்ஆனையும், ஹதீஸையும் மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற நேரான கொள்கையை ஏற்று இதைத் தவிர உள்ள அனைத்து வழிகெட்ட கொள்கைகளையும், கோட்பாடுகளையும் புறக்கணித்தால் மண்ணறை வாழ்கையில் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். இல்லையென்றால் மண்ணறை வாழ்க்கை நரக வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையைப் பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து ‘முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர்.
நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ”எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்பான். அப்போது அவனிடம் ” நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும்.
பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
யூதர்களாக மரணித்ததால் மண்றையில் யூதர்கள் வேதனை செய்யப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்தபின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு ”யூதர்கள், அவர்களின் கல்லறைகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
இஸ்லாம் என்பது மக்களுக்கு அற்புதமான வழிகாட்டல்களைப் போதிக்கின்ற தூய்மையான மார்க்கமாகும். நம் உயிர் பிரிகின்ற வரை இந்த மார்க்கத்திலே நிலையாக நிற்க வேண்டும். தடம்புரண்டு வேறொரு மதத்தைத் தேர்வு செய்தால் அவர்களின் மண்ணறை வாழ்வும், மறுமை வாழ்வும் பாலாகிவிடும்.
ஒரு மனிதர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். ‘அல்பகரா’ மற்றும் ‘ஆலு இம்ரான்’ அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே! மாறி விட்டார். அவர் (மக்களிடம்) ”முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்ததைத் தவிர வேறெதுவும் தெரியாது” என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தையளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரைப் பூமி துப்பிவிட்டிருந்தது.
உடனே (கிறிஸ்தவர்கள்), ” இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடி வந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள்” என்று கூறினர். ஆகவே, அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு புதை குழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது. அப்போதும், ”இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களுடைய வேலை தான்.
நம் தோழர் அவர்களை விட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டு விட்டனர்” என்று கூறினர். மீண்டும் அவர்களால் முடிந்த அளவிற்கு மிக ஆழமான குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போது தான் அது மனிதர்களின் வேலையல்ல (இறைவனின் தண்டனை தான்) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டு விட்டனர்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
இறைவன் வகுத்த சட்டதிட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் வாழ வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆனையும், இறைத் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்கையையும் தந்துள்ளான். இவ்விரண்டின் அடிப்படையில் வாழ்ந்தவர் மண்ணறையிலும், மறுமையிலும் வெற்றி பெறுவார். ஆனால் இந்த உபதேசத்தைக் காதில் வாங்காமல் அலட்சியப்படுத்தி மரணிப்பவருக்கு மண்ணறையில் நெருக்கடியான வாழ்க்கை கொடுக்கப்படுகிறது.
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20 : 124) என்ற வசனத்தில் (சொல்லப்பட்ட தண்டனை) மண்ணறை வேதனையைப் பற்றியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20 : 124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்குத் தெரியுமா? நெருக்கடியான வாழ்க்கை என்றால் எது என்றும் உங்களுக்குத் தெரியுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே! மிக அறிந்தவர்கள் என்று கூறினார்கள்.
இறை மறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யப்படுவதை (இவ்வசனம் குறிப்பிடுகிறது). எனது உயிர் எவனது கைவசத்தில் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக அவனுக்கெதிராக தொண்ணூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். அந்தப் பாம்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. அவை தொண்ணூற்று ஒன்பது பாம்புகளாகும். ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள் வரை அவனுடைய உடம்பில் (விஷக்காற்றை) அவை ஊதிக்கொண்டும் அவனை தீண்டிக் கொண்டும் உராய்ந்து கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்னது அபீ யஃலா 6504
இன்றைக்கு பாவம் என்று உணரப்பட்டு அதிகமானோரால் செய்யப்பட்டு வரும் குற்றம் புறம் பேசுவதாகும். புறம் பேசியதற்காக ஒருவன் மண்ணறையில் தண்டிக்கப்படுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்ற போது, ”இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லி திரிந்தவர்” எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?” என்று கேட்டதும், ”இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
மலமும், சிறுநீரும் மனிதனின் உடம்பிலிருந்து வெளிப்படும் அசுத்தங்களாகும். ஆனால் மலம் கழித்தால் மக்கள் சுத்தம் செய்கிறார்கள். சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள்.
சிறுநீரை தூய்மையான தண்ணீரைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு நீர் கிடைத்தாலும் நீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்கின்ற அளவிற்கு சிறுநீர் ஒன்றும் பெரிய அசுத்தமில்லை என்று கருதுகிறார்கள்.
ஆனால் உண்மையில் மலத்திலிருந்து துர்வாடை கிளம்புவது போல் சிறுநீரிலிருந்தும் துர்வாடை கிளம்புகிறது. மலத்தில் நோய்க்கிருமிகள் இருப்பது போல் சிறுநீரிலும் நோய்க்கிருமிகள் இருக்கிறது.
எனவே தான் இவ்விரண்டு அசுத்தங்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. சுத்தம் செய்யாவிட்டால் மண்ணறையில் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிக்கிறது. சிறுநீர் விஷயத்தில் மட்டுமில்லாமல் எல்லாக் காரியங்களிலும் நாம் சுத்தத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றார்கள். அப்போது (கப்ரில் உள்ள) இவ்விருவரும் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பாவத்திற்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. இவர்களில் ஒருவர் சிறுநீர் கழித்துவிட்டு தூய்மை செய்து கொள்ளாதவராக இருந்தார். மற்றவர் கோள் சொல்லி நடப்பவராக இருந்தார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: நஸயீ-2042
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறை வேதைனையில் அதிகமானது சிறுநீர் (கழித்து விட்டு சுத்தம் செய்யாமல்) இருப்பதால் ஏற்படுகிறது.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதில் அழகான ஒழுங்கு முறைகளைப் பேண வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத் தருகிறது. மலம், ஜலம் கழிக்கும் போது பிறர் நமது மறைவிடத்தைப் பார்க்காதவாறு இயற்கைத் தேவையை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
ஆனால் இன்றைக்கு பலர் இந்த ஒழுங்கு முறையைக் கடைபிடிக்காமல் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கும் தெருக்களில் எந்த மறைப்பும் இல்லாமல் எல்லோரும் பார்க்கும் விதத்தில் சிறுநீர் கழிக்கிறார்கள். இவ்வாறு செய்வது குற்றமாகும். இப்படி நடந்து கொள்பவர்களுக்கு மண்ணறையில் தண்டனை கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோது, ”இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லி திரிந்தவர்” எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?” என்று கேட்டதும், ”இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
திருடப்படுகின்ற பொருள் திருடியவனுக்கு நெருப்பாக மாறும் என்று நபி (ஸல்) பின்வரும் சம்பவத்தில் உணர்த்தியுள்ளார்கள்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘கைபர்’ தினத்தன்று (வெற்றி கண்டு) புறப்பட்டோம். நாங்கள் (அந்தப் போரில்) பொன்னையோ, வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. (அவையல்லாத கால்நடைச்) செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருட்கள் ஆகியவற்றையே பெற்றோம். ‘பனுள்ளுபைப்’ எனும் குலத்தாரில் ரிஃபாஆ பின் ஸைத் என்ற ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘மித்அம்’ எனப்படும் ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘வாதில் குரா’ எனும் இடத்தை நோக்கிச் சென்று, அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த போது ‘மித்அம்’ என்ற அந்த அடிமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று மித்அமை(த் தாக்கி)க் கொன்று விட்டது. இதைக் கண்ட மக்கள் ”அவருக்குச் சொர்க்கம் கிடைத்து விட்டது; வாழ்த்துக்கள்” என்றனர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அப்படிச் சொல்லாதீர்கள்.
என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவற்றிலிருந்து கைபர் அன்று அவர் எடுத்துக் கொண்டுவிட்ட போர்வை அவர் மீது நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்கள். இதை மக்கள் செவியேற்ற போது, ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘ஒரு செருப்பு வாரை’ அல்லது ‘இரு வார்களைக்’ கொண்டு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ”(இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இது சாதாரண செருப்பு வாராக இருந்திராது. மாறாக,) ‘நெருப்பு வாராக’ அல்லது ‘இரு நெருப்பு வார்களாக’ மாறியிருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
அவதூறு கூறுதல் குர்ஆனைப் புறக்கணித்தல் விபச்சாரம் செய்தல் வட்டி வாங்குதல் போன்ற குற்றங்களுக்கும் மண்ணறையில் தண்டனை தரப்படுவதாக நபி (ஸல்) அவர்களுக்கு கனவின் மூலம் காட்டப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி ‘இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?’ என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். யாராவது கனவு கண்டு அதைக் கூறினால், ‘அல்லாஹ் நாடியது நடக்கும்’ எனக் கூறுவார்கள்.
இவ்வாறே ஒரு நாள், ”உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?” என்று கேட்டதும் நாங்கள் ‘இல்லை’ என்றோம். அவர்கள், ”நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்று கொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன.
அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒரு புறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காகி விட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் ‘இது என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ என்றனர்.
அப்படியே நடந்த போது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலை மாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும் போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே ‘இவர் யார்?’ என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ என்றனர். எனவே நடந்தோம்.
அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும், அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும் போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்து விட்டார்கள். அதில் ஆண்களும், பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் ‘இவர்கள் யார்?’ எனக் கேட்டேன். அதற்கும் அவர்கள் ‘நடங்கள்’ எனக் கூறிவிடவே!
மேலும் நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்று கொண்ருந்தார். அவருக்கு முன்பாகக் கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்று கொண்டிருந்தார். அந்த மனிதர் ஆற்றை விட்டு வெளியேற முயலும் போது இவர் அவரது வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
இவ்வாறே அவர் வெளியேற முயலும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றார். அப்போது நான் ‘என்ன இது?’ எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ எனக் கூறிடவே நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம்.
நான் இருவரிடமும் ”இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு இருவரும் ”ஆம், முதலில் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.
அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி)
மேலுள்ள குற்றங்களை செய்தவர்களுக்கு மறுமை நாள் வரை தண்டனை தரப்படும் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. மறுமை நாளிற்கு முன்னால் உள்ள மண்ணறை வாழ்க்கையைப் பற்றித் தான் இச்சம்பவம் விவரிக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வாங்கிய கடனை உரியவரிடத்தில் முறையாக ஒப்படைக்காவிட்டால் அது பெரும் குற்றமாகும். கடனை அடைக்காமல் இறந்துவிட்டால் இறந்தவரின் உறவினர்கள் அக்கடனை அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் மரணத்திற்குப் பிறகு கிடைக்கும் பாக்கியங்களை மரணித்தவரால் அனுபவிக்க முடியாத துர்பாக்கியமான நிலை ஏற்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை நம்பிக்கையாளரின் ஆத்மா அவர் வாங்கிய கடன் காரணத்தினால் அவர் சார்பில் அது நிறைவேற்றப்படுகின்ற வரை (அந்தரத்தில்) தொங்கவிடப்படுகிறது.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி 999
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு இங்கே இன்னாருடைய கூட்டத்தாரில் யாராவது (புதைக்கப்பட்டார்களா?) என்று மூன்று முறை கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு யாருமே பதில் கூறவில்லை. இறந்துவிட்ட இந்த மனிதர் தன் மீதிருந்த கடன் காரணத்தினால் சொர்க்கத்தை விட்டும் தடுக்கப்பட்டு விட்டார். நீங்கள் விரும்பினால் அவருக்குப் பதிலாக நீங்கள் அவரது கடனை நிறைவேற்றுங்கள். இல்லையென்றால் அல்லாஹ்வின் வேதனையின் பால் அவரை ஒப்படைத்துவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: சமுரா பின் ஜ‚ன்துப் (ரலி)
நூல்: மஸானீது ஃபிராஸ் 16
இதுவரை கெட்ட குணங்கொண்டவருக்கு ஏற்படும் கப்ருடைய அதாபுகளையும், அவரவர் செய்த தீமைகளுக்கு தகுந்தார் போல் தண்டனைகளையும் வழங்குவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவையெல்லாம் மனதில் பதிய வைத்து வாழ்வில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் நாம் செய்யும் காரியங்களில் நினைத்து நன்மைகளை அதிகதிகம் செய்து தீமையை முற்றிலும் புறக்கணித்தவர்களாக நாம் ஆக வேண்டும் என்று வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.