திரும்ப வரமுடியாத மறுமைப் பயணம்! திரும்பிப் பார்க்க வைத்த ரமலான் மாதம்!

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

அல்லும் பகலும் மனிதன் போடும் மனக் கணக்கு எல்லாமே பணக் கணக்கு தான். உலகத்தில் மனிதன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கால் அடிக்கும், கடக்கும் ஒவ்வொரு கால நொடிக்கும் அவன் பார்ப்பது காசு தான்.
அப்படிப்பட்ட உலக வாழ்வில் கால நேரத்தை ஒதுக்கி ஐவேளை தொழுகைகளில் மக்கள் பள்ளிகளில் பொங்கி வழிந்தது எதற்கு? இரவுத் தொழுகைகளில் பொங்கும் வெள்ளமாய் பெருக்கெடுத்தது எதற்கு? அதிலும் பிந்திய பத்துகளில் லைலத்துல் கத்ரு எனும் முத்தைத் தேடி கண் விழித்தது எதற்கு? முத்துக் குளித்தது எதற்கு? இஃதிகாஃப் எனும் வலை விரித்து பிந்திய ரமலானில் நிலையாய் பள்ளியில் தவம் கிடந்தது எதற்கு? பகல் பூராவும் நோன்பு நோற்றது எதற்கு?

நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயை விட இன்றைக்கு கிடைக்கும் களாக் காய் பெரிது என்று கணக்கு போடும் மனித இயல்பைத் தாண்டி, இத்தனையையும் செய்வதற்குரிய ஒரே காரணம் கண்ணில் காணாத மறுமையைத் தேடித் தான்! மறுமையில் விளையும் நன்மையை நாடித் தான் என்பதைத் தவிர்த்து இதற்கு வேறு பதில் கிடையாது. ஆமாம்! மனிதனின் திரும்பி வர முடியாத மறுமைப் பயணத்தை மனக்கண் முன் கொண்டு வந்து இம்மாதம் நிறுத்தியது.

மரண வேளையில் மனிதனின் புலம்பல்

இறுதியாக, அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது “என் இறைவனே! நான் விட்டு விட்டதில் நற்செயலைச் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறல்ல! இது அவன் கூறக் கூடிய (வெற்றுச்) சொற்களே! அவர்கள் (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாள்வரை அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பு உள்ளது. (அல்குர்ஆன்: 23:99-100)➚

உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பே உங்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து செலவிடுங்கள்! (மரணவேளை வந்து விட்டால்) “என் இறைவனே! சிறிது காலம் எனக்கு நீ அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தர்மம் செய்து, நல்லோர்களில் ஆகிவிடுவேனே!” என்று அப்போது அவன் கூறுவான்.
(அல்குர்ஆன்: 63:10)➚

இது தீய அடியான் உலகத்தை விட்டுப் பிரியும் போது புலம்பும் புலம்பல்! தனக்கு அவகாசம் அளித்தால், ஆயுள் பிச்சை அளித்தால் அமல் செய்து விட்டுத் திரும்ப வருவேன் என்று மரண வேளையில், மரண வேதனையில் மனிதன் கெஞ்சுவான். அப்போது இறைவனின் பதில்…
எவருக்கும் அவரது தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்றிந்தவன்.
(அல்குர்ஆன்: 63:11)➚

இதன் பின்னால் நாளை நரகத்தில் அவன் வீழ்ந்த பிறகு, அப்போதும் தன்னை நரகத்தை விட்டு வெளியேற்றி உலகத்திற்குத் திரும்பச் செய்யுமாறு கேட்பான்; கெஞ்சுவான்.

நரகில் கிடந்தவாறு மனிதனின் புலம்பல்

“எங்கள் இறைவனே! எங்களை, எங்கள் துர்பாக்கியம் மிகைத்து விட்டது. நாங்கள் வழிகெட்ட கூட்டத்தினராக இருந்தோம். எங்கள் இறைவனே! எங்களை இங்கிருந்து வெளியேற்றுவாயாக! நாங்கள் மீண்டும் (பாவம் செய்யத்) திரும்பினால் அப்போது நாங்களே அநியாயக்காரர்கள்” என அவர்கள் கூறுவார்கள்.
(அல்குர்ஆன்: 23:106-107)➚

அப்போது இறைவன் அவனுக்கு சொல்லும் பதில் இதோ:
(அதற்கு இறைவன்,) “இதிலேயே இழிவடைந்திருங்கள்! என்னிடம் பேசாதீர்கள்!” எனக் கூறுவான்.
என் அடியார்களில் ஒரு பிரிவினர், ‘எங்கள் இறைவனே! நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை மன்னிப்பாயாக! எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே கருணையாளர்களில் மிக்க மேலானவன்’ என்று கூறிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் (மீதான பகைமை) என் நினைவையே உங்களுக்கு மறக்கச் செய்யும் அளவுக்கு அவர்களைக் கேலியாகக் கருதினீர்கள். நீங்கள் அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டும் இருந்தீர்கள்.
அவர்கள் பொறுமையை மேற்கொண்டதால் இன்று அவர்களுக்குக் கூலி வழங்கி விட்டேன். அவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன்: 23:108-111)➚

மனிதன் நரகத்திலிருந்து தப்பித்து உலகுக்கு வர முடியாது என்று எல்லாம் வல்ல இறைவன் ஆணித்தரமாகப் பதில் அளித்து விடுகின்றான். அதாவது மறுமை உலகப் பயணம் தொடங்கி விட்டால், தொடர்ந்து விட்டால் உலகுக்குத் திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என்று அல்லாஹ் விதியாக்கி விட்டான். இதைத் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக புனித ரமலான் அமைந்து விட்டது.
“ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)(புகாரி: 1899)

இந்த ஹதீஸின் அடிப்படையில் மக்கள் திறந்திருக்கும் சொர்க்கத்தில் நுழைய தங்களை தகுதியுள்ளவர்களாகவும் பூட்டிக்கிடக்கும் நரகத்தை விட்டும் விலகி, வெருண்டோடும் பயிற்சியை தகவமைத்துக் கொள்பவர்களாகவும் ஆகி விடுகின்றார்கள். இத்தனைக்கும் அவர்கள் சொர்க்கத்தைப் பார்த்ததில்லை. நரகத்தையும் அவர்கள் கண்டதில்லை; அப்படியிருந்தும் இப்படி உழைக்கக் காரணமென்ன? கண் விழிக்கக் காரணமென்ன?

அல்லாஹ் அளித்திருக்கும் அளவிலா பரிசு மழைகள்

‘நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)(புகாரி: 38)
இது பகலில் நோன்பு நோற்றவருக்கு அல்லாஹ் அளித்திருக்கும் பரிசாகும்.
‘நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)(புகாரி: 37)

இது இறைவில் நின்று தொழுபவருக்குரிய பரிசாகும்.
‘லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)(புகாரி: 1901)

இது ரமலான் மாதத்தின் அதி முக்கியத்துவம் வாய்ந்த லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குபவருக்குரிய பரிசாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் எல்லையற்ற, எண்ணற்ற பரிசு மழைகள் தான், அதாவது மறுமை என்ற ஒற்றை லாபம் மட்டுமே மக்களை ரமலான் மாதத்தில் இயங்க வைத்தது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்’ என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் ‘என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்’ என்று வானவர்கள் கூறுகின்றனர்.

அதற்கு இறைவன், ‘அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்’ என்று பதிலளிப்பார்கள்.
அதற்கு இறைவன், ‘என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?’ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ‘அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்’ என்பார்கள். அதற்கு இறைவன், ‘அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்’ என்று பதிலளிப்பார்கள்.

இறைவன், ‘அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?’ என்று வினவுவான். வானவர்கள், ‘நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)’ என்று பதிலளிப்பார். இறைவன், ‘அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?’ என்று கேட்பான் வானவர்கள், ‘நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்’ என்பர்.

அப்போது இறைவன், ‘எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்’ என்று கூறுவான். அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ‘(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்’ என்பார். அதற்கு இறைவன், ‘அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்’ என்று கூறுவான்.(புகாரி: 6408)

இந்த ஹதீஸ் அடிப்படையில் தான் மக்கள் ரமலானில் தங்கள் வணக்கங்களை மறுமைக்காகச் செய்திருக்கின்றார்கள். அவர்களுடைய நோக்கம் உலக லாபமல்ல; மறுமை லாபம் தான். அவர்களுடைய எதிர்பார்ப்பு உலக ஆதாயமல்ல; மறுமை ஆதாயம் தான். இந்த வகையில் புனிதக் குர்ஆன் இறங்கிய புனித மாதம், திரும்ப முடியாத மறுமை பயணத்தை மக்களிடம் திரும்பிப் பார்க்க வைக்கின்றது.
கடந்த காலத்தில் வாழ்ந்த யூத, கிறிஸ்தவர்கள் தத்தமது வேதத்தின் பிடியிலிருந்து விலகிச் சென்றது போன்று குர்ஆன் எனும் வேதத்தைப் பெற்ற முஸ்லிம்கள் அதன் பிடியிலிருந்து விலகிச் செல்லாதவாறு தனது ஈர்ப்பு விசை, இழுப்பு விசை மூலம் மக்களைக் கட்டிப் போட்டு, கெட்டியாகப் பாதுகாக்கின்றது. இது எல்லாம் வல்ல இறைவனின் சிறந்த ஏற்பாடாகும். அவனுக்கே புகழ் அனைத்தும்!