தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு காலம்?
தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு காலம்?
கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் முடியும் வரையில் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் இத்தா எனப் படுகின்றது.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (2 : 234)
மேலுள்ள வசனம் கணவனை இழந்த பெண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இத்தா இருக்க வேண்டும் எனப் பொதுவாகக் கூறுகிறது. மாதவிடாய் நின்ற பெண்கள், கற்பப்பை நீக்கப்பட்ட பெண்கள், குழந்தை பேறு அற்ற பெண்கள் ஆகியோருக்கு இச்சட்டத்தில் விதிவிலக்கு இருப்பதாக குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. எனவே இந்தப் பொதுவான சட்டத்தின் அடிப்படையில் இவர்களும் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருப்பது கட்டாயம்.
இவர்கள் கணவனின் கருவை சுமந்திருக்க முடியாது என்பதால் இத்தா தேவை இல்லை என்று நமக்கு சந்தேகம் எழலாம். ஆனாலும் இறைவன் இவர்களுக்கு விதிவிலக்கு தேவை என்று கருதினால் அவனே அதை அளித்திருப்பான். அவன் விதி விலக்கு அளிக்காத போது இறைவன் சொன்னதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று எண்ணி இறைக் கட்டளைக்கு கட்டுப்பட வேண்டும்.